Announcement

Collapse
No announcement yet.

Vajpeya yagam - Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Vajpeya yagam - Periyavaa

    Vajpeya yagam - Periyavaa
    அண்மையில் குளித்தலை அருகே ஒரு வாஜபேய யாகம் நடந்தது. அனுஷ்டித்தவர் மாத்வ ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த ருக்வேத வித்வான் ப்ரஹ்மஶ்ரீ ராமக்ருஷ்ண ஆச்சார். அவரது யாக பூர்த்தி தினத்தன்று மாத்வ ஸம்ப்ரதாய பாலிமாரு மடத்தைச் சேர்ந்த ஸ்வாமிகள் இருவர் வந்திருந்தனர். அவர்கள் முன்னிலையில் யாகம் செய்தவரின் தம்பி ருக்வேத வித்வான் ப்ரஹ்மஶ்ரீ தாமோதர ஆச்சார் பொதுசபையில் கூறியது மற்றும் அவர்கள் வெளியிட்டுள்ள புஸ்தகத்திலிருந்து கிடைத்த தகவல்கள் -


    இன்று மாத்வ ஸம்ப்ரதாயத்தில் ருக்வேதத்திற்கு மக்கள் இருக்கிறார்களென்றால் அதற்குக் காரணம் காஞ்சீ காமகோடி பீடத்தின் 68வது ஆசார்யர் ஶ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதீ ஶ்ரீசரணர். முன்பொருமுறை வேத பாராயணம் ஒன்று நடந்துகொண்டிருந்த பொழுது அநேக ஸ்மார்த்த வித்வான்கள், சில வைஷ்ணவ வித்வான்கள், தவிர ஒரே ஒரு மாத்வ வித்வான்தான் அமர்ந்திருந்து பாராயணம் செய்துகொண்டிருந்தார். அவர் பெயர் பத்மநாப ஆச்சார்.


    எல்லோருக்கும் சம்பாவனை செய்யும்பொழுது பெரியவா அவரை அழைத்து "யாரிடம் அத்யயனம் செய்தீர்" முதலிய விவரத்தைக் கேட்டார். அவரது வேத குரு திருவானைக்காவல் மடத்தில் இருந்த ஒரு ஸ்மார்த்த கனபாடிகள். விவரங்களைக் கேட்டு பாராட்டி இருமடங்கு சம்பாவனை கொடுத்து அனுப்பினார்கள். அது ஆச்சார் அவர்கள் மிகவும் வறுமையில் இருந்த சமயம். இருப்பினும் வீட்டிற்கு வந்து மிகவும் மன உறுத்தலில் சரியாக தூக்கம் வராமலிருந்து மறுநாள் பெரியவாளிடம் சென்று கொடுத்த இருமடங்கு சம்பாவனையைத் திருப்பி ஸமர்ப்பித்து "எனக்கு இதற்குத் தகுதியில்லை. வேதம் போதுமான அளவு எனக்கு மனப்பாடமாக இல்லை." என்று கூறியிருக்கிறார்.


    பெரியவா சிரித்து "கவலைப்படாதே" என்று சொல்லி வேறிரண்டு வித்வான்களைக் குறிப்பிட்டு "அவர்களுடன் ஆவர்த்தி செய்து வா, வேதம் உனக்கு சித்திக்கும்" என்று சொல்லி ஆசீர்வதித்து அனுப்பினார்கள். மேலும் "மாத்வ ஸம்ப்ரதாயத்தில் அத்யயனம் செய்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. ஆகவே பாடம் சொல்வதற்கு முக்கியத்துவம் கொடு. உனது மூன்று ஆண் பிள்ளைகளையும் வேதத்திற்கே சேர்ப்பி" என்று. அவரும் அவ்வாறே செய்தார். அவரது பிள்ளைகள் ராமக்ருஷ்ண ஆச்சார், பரசுராம ஆச்சார், தாமோதர ஆச்சார் மூவரும் ருக்வேத அத்யயனம் செய்தனர்.


    அப்பொழுதே பெரியவா வேத ரக்ஷண நிதி ட்ரஸ்டை ஏற்படுபத்தும்பொழுது "இது சங்கர மடத்துடையது மட்டும் என்று யாரும் எண்ணக்கூடாது. வேதம் என்பது ஸ்மார்த்தர்கள், வைஷ்ணவர்கள், மாத்வர்கள் எல்லோருக்கும் பொதுவானது." என்று சொல்லி மாத்வ குழந்தைகள் வேதம் கற்பதற்கும் இப்படி தனி கவனம் கொடுத்து ஊக்குவித்திருக்கிறார்கள் பெரியவா.


    பிறகு பத்மநாப ஆச்சாரிடம் பெரியவா "மாத்வ ஸம்ப்ரதாயத்தில் அக்னிஹோத்ரிகள் யாரும் இல்லை. ஆகவே அக்னிஹோத்ரம் எடுத்துக்கொள்." என்று ஊக்குவித்தார். சில காலம் பிறகு ஸோம யாகம் செய்யவும், பிறகு அதிலும் குறிப்பாக வாஜபேய யாகம் செய்யவும் பெரியவா தான் ஊக்குவித்திருக்கிறார். 1980களில் இந்த யாகம் நடந்திருக்கிறது.


    பத்மநாப ஆச்சாரின் மகன்கள் ஒவ்வொருவரும் ருக்வேத மூலம் முடித்த பிறகு மேலும் பதம் க்ரமம் முதலியவையைக் கற்கவும் பிறகு ஷடங்கம் கற்கவும் ஊக்குவித்தார் பெரியவா. மேலும் அவர்களது ஸம்ப்ரதாயப்படி மாத்வ வேதாந்தம் கற்பதற்கு பம்பாயில் மாத்வ பண்டிதர் ஒருவரிடம் ஏற்பாடு செய்து அங்கு தங்குமிடம் மற்றும் ஊக்குவிப்புத் தொகை மாதாந்தரம் ௹ 200 ஏற்பாடு செய்தார்கள் பெரியவா.


    நடுவில் ஒருசமயம் பெரியவா தரிசனத்திற்கு அவர்கள் வந்த பொழுது பெரியவா என்ன பாடம் ஆகிக்கொண்டிருக்கிறது என்று கேட்டார்கள். அதற்கு பதில் சொல்ல இவர்கள் தயங்கினார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஆகிக்கொண்டிருந்த பாடம் மாயா வாத கண்டனம், அதாவது அத்வைதத்தைத் தவறு என்று சொல்வது. அத்வைத பீடாதிபதியான பெரியவாளிடம் எப்படி இதைச் சொல்வது என்று தயங்கினார்கள். அவர்களது தயக்கத்தைப் புரிந்துகொண்டு "பாதகமில்லை, சொல்லு" என்று ஊக்குவித்து நடந்த பாடத்தைச் சொல்லிக்காட்டும்படியும் தூண்டி கேட்டு மகிழ்ந்து சால்வை போர்த்தி ௹ 300 சம்பாவனையும் செய்து அனுப்பினார்கள்!


    அத்வைதமென்றால் அதில் த்வைதத்திற்கும் இடம் உண்டு. ஏனெனில் நாமும் வ்யவஹார காலத்தில் த்வைதமாகத் தானே (அதாவது நீ வேறு நான் வேறு என்றுதானே) இருந்துகொண்டிருக்கிறோம். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒருவர் பேரிலும் த்வேஷமின்றி அவரவர்கள் ஸம்ப்ரதாயப்படி அனைவரும் இருக்கவேண்டும் என்பதே பெரியவாளின் கருத்து.


    தந்தை அக்னிஹோத்ரம் எடுத்துக்கொண்டதற்கு சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு அவரது மகன்கள் மூவரும் மந்த்ராலயத்தில் அக்னிஹோத்ரம் செய்துகொண்டனர். அதிலும் மூத்த மகனை மந்த்ராலயத்தில் இருந்து மாத்வர்களிடையே வேதாத்யயனம் செய்தவர்கள் எண்ணிக்கை மேலும் பெருக ருக்வேத அத்யாபனம் செய்துவரும்படி ஆஜ்ஞாபித்தததும் பெரியவாளே. மூன்று மகன்களும் நமது இன்றைய பெரியவா நடத்தும் ஶ்ரீமடத்து அக்னிஹோத்ர ஸதஸ்ஸில் பங்கேற்றுள்ளனர். மூத்தவரும் நடுவரும் ஸோம யாகம் செய்துள்ளார்கள். (நடுவர் தற்சமயம் இல்லை. அவர் காலகதி அடைந்து அக்னிஹோத்ரிகளுக்கான சிறப்பு விதிப்படி அவரது சடங்குகள் நடந்தேறின.)


    மூத்தவர் தற்சமயம் வாஜபேய யாகம் செய்திருக்கிறார். இளையவரும் ஸோம யாகம் செய்யவிருக்கிறார். அவரவர்கள் இருக்குமிடத்தில் மாத்வ ஸம்ப்ரதாய மாணவர்களுக்கு ருக்வேதம் சொல்லிவைத்து அவர்களது ஸம்ப்ரதாய ஆசாரங்கள் மற்றும் பூஜை முதலியவற்றையும் அக்னிஹோத்ரத்தையும் அனுசரித்து வருகிறார்கள். இன்றும் எங்கள் ஸம்ப்ரதாயத்தில் இவ்வாறு வேதம் அக்னிஹோத்ரம் ஸோம யாகம் முதலியவை தொடர்ந்து வந்து இத்தனை வித்யார்த்திகள் வேதம் கற்றிருப்பதற்குக் காரணம் பெரியவாளே என்றும் அவர்களது குடும்பங்களுக்கு பல வகையிலும் பெரியவா செய்த அனுக்ரஹத்தையும் சொல்லி மகிழ்கிறார்கள் பத்மநாப ஆச்சார் குடும்பத்தினர்.


    From Shriramana Sharma
Working...
X