Courtesy:Sri.JK.Sivan

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
குணாதிசயம் J.K. SIVAN
குப்பண்ணாவுக்கு மூக்கு மேல் கோவம். தொட்டால் சிணுங்கி மாதிரி எப்பவும், எதற்கெடுத்தாலும் வள் வள் என்று எரிந்து விழுவார். இருவது வருஷ தாம்பத்திய வாழ்வில் அவர் மனைவிக்கு இது இடைவிடாமல் அனுபவப்பட்டு மறத்துப்போனது என்று கூட சொல்லலாம்.
''இதை ஏன் இங்கே வைத்தே? ''
சரி என்று அந்த பாத்திரத்தை எடுத்தால், '' நான் சொன்னால் தான் எடுப்பது என்ற திமிரா?''
எடுக்க கொஞ்சம் நேரம் ஆகிவிட்டால், ''நான் என்ன மடையனா. சொல்லச் சொல்ல எருமை மாட்டின் மீது மழை பெய்தால் போல, காது என்ன செவிடா உனக்கு?''
உடனே ஓடி வந்து எடுத்தால், ''இந்த வேஷம் எல்லாம் உன் அப்பன் வீட்டிலேயே வைத்துக்கோ, இங்கே டான்ஸ் ஆடவேண்டாம். நான் சொல்லலை என்றால் வருஷம்
\
ரெண்டு ஆனாலும் இது இங்கேயே தான் இருக்கும் இல்லையா?''
''மன்னிச்சுக்குங்கோ மறந்துபோச்சு'' என்றால், ''எப்படி மறக்கும், உப்பு போட்டு சோறு தின்னா மறக்குமாடி உனக்கு?'' எல்லாம் உன் அம்மா கொடுக்கிற தைர்யம். ''
''அவாளை எல்லாம் எதுக்கு இப்போ ஒண்ணும் இல்லாத விஷயத்துக்கு இழுக்கறேள் ?''
''பொசுக் குனு உன் மனிஷாளைப் பத்தி ஒரு வார்த்தை சொன்னாலும் ரோஷமா? எங்களை எல்லாம் கிள்ளுக்கீரை என்று நினைக்கிறீர்களா எல்லாருமே?''
''சரி இனிமே இங்கே இதை வைக்கலே '' - இப்படி சொன்னால் விட்டு விடமாட்டான்.
''இந்த ஞானம் மின்னாடியே தோணி இருக்கணும். நான் ஒருத்தன் ஒண்ணு ஒண்ணையும் அப்பப்போ பார்த்து பார்த்து சொல்லணுமா?''
கை தவறி அந்த பாத்திரம் அவள் எடுக்கும்போது கீழே விழுந்தது என்றால் அவ்வளவு தான்...
''நினைச்சேன், நீ உன் ஆத்திரம் ஆங்காரத்தை இப்படி தான் காட்டுவேன்னு. எல்லாத்தையும் போட்டு உடை. யார் வீட்டு பணம்?. ராவும் பகலும் உயிரைகொடுத்து, ரத்தத்தை சிந்தி உழைச்சு சம்பாதிக்கிறேன்னு கொஞ்சமாவது நன்றி , மரியாதை துளியூண்டாவது இருக்கா?''
.. இன்னும் மேலே மேலே நிறைய
நான் இப்படி எழுதிக் கொண்டே போனால் அதற்கு எங்கே முடிவு. ??
ஆனால் குப்பண்ணா ஒவ்வொரு நாளும் ஆபீஸிலோ, சைக்கிளில் போகும்போதோ தனக்குள் வருந்துவான். ''ச்சே. பாவம் நான் ஏன் இப்படி பேசினேன். கோவப்பட்டேன். இனிமே இப்படியெல்லாம் நடக்க மாட்டேன் என்று சத்தியம் செய்வான். ஆனால் எந்த சின்ன சம்பவமும் அவனை மறுபடியும் பழைய ஒரிஜினல் குப்பண்ணாவாகவே மாற்றிவிடும். அவன் மனைவி அமிர்தம் அழுது அழுது
கண்ணீர் வறண்டு, வற்றி,
சஹாரா பாலைவனமாகி விட்டாள் .
அவன் நண்பன் கோபால் ராவ் இதெல்லாம் அறிவான். அவன் ஒரு நாள் குப்பண்ணாவை தனது குரு வேதானந்தாவிடம் அழைத்து சென்றான். நடந்ததை எல்லாம் கேட்ட குரு.
''குப்பண்ணா சின்ன சின்ன விஷயம் கூட உன்னுள் ஆத்திரத்தையும் கோவத்தையும் ஏன் கிளப்புகிறது தெரியுமா? காரணமில்லாமல் நீ எரிந்து விழவில்லை. நீ புண் பட்டிருக்கிறாய்.''
''சுவாமி என் மனைவி பெற்றோர் குழந்தைகள் எல்லாமே நல்லவர்கள். யாரும் என்னை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. நான் தான் அடிக்கடி பிசாசு பிடித்தவனாகி விடுகிறேன். என்னை யாரும் புண் படுத்தியதில்லையே.''
''எப்போதோ உன் வாழ்க்கையில் நீ கண்டிப்பாக புண் பட்டிருக்கிறாய். அது காலம் செல்லச் செல்ல கிடைத்த சந்தர்பத்தில் மேலெழும்பி உன்னை ஆட்டிப்படைக்கிறது.''
''சுவாமி அப்படியிருந்தால், நான் எப்போதோ அனுபவித்த புண் இன்னும் ஆற
வில்லையா?''
''இல்லையப்பனே. ஆறுவது மட்டுமில்லை. அதன் வலி உன்னை சக்தியற்றவனாக்கி விட்டது. எவ்வளவு சந்தோஷமாக இருக்க நீ முயற்சித்தாலும் அந்த வலி தலை தூக்கி உன் சந்தோஷத்தை அழிக்கிறது. வெறியனாக்கிவிடுகிறது.''
''சுவாமி எனக்கு நினைவு தெரிந்து எனக்கு அப்படிப்பட்ட வலியோ துன்பமோ இல்லையே. எதனால் இது?''
குரு பதில் சொல்லவில்லை. உள்ளே சென்றார் அவனிடம் ஒரு தண்ணீர் நிறைந்த செம்பை நீட்டினார்.
''இந்தா , கையை நீட்டி இதை வாங்கி கையில் வைத்துக்கொள்.''
குப்பண்ணாவின் நீட்டிய வலக்கரத்தில் தண்ணீர் செம்பு.
''கனமாகவா இருக்கிறது. வைத்துக்கொள்ள முடிகிறதா அப்பா?''
''' கனமாக இல்லை சுவாமி வைஹ்துக்கொள்ள முடிகிறது''
'' உண்மையைச சொல்''
''உணமையாகவே இந்த செம்பு கனமாக இல்லை சுவாமி''
சில நிமிஷங்கள் ஓடின.
''இன்னும் எத்தனை நேரம் இதை கையில் வைத்திருக்க வேண்டும் சுவாமி.?''
''ஏன் அப்பா?''
''கை வலிக்கிறது சுவாமி.''
செம்பை வாங்கிக்கொண்டார் வேதானந்தா
''புரிகிறதா குப்பண்ணா. செம்பு கனமாக இல்லை. நேரம் செல்லச் செல்ல அந்த சின்ன தண்ணீர் செம்பின் கனம் உனக்கு
கை வலி உண்டாக்கியதல்லவா. செம்பு எத்தனை கனம் என்பது முக்கியம் இல்லை. கொஞ்சம் கனமாக இருந்தாலும் எத்தனை நேரம் நீ அதை தாங்கினாய் என்பது தான் முக்கியம். நேரம் ஆக ஆக அதன் எடை உனக்கு அதிகமாகி உனக்கு கையில் பலம் இழந்து வலி உண்டாகியது. எது தாங்கமுடிந்ததோ அதுவே தாங்க முடியாததாகி விட்டது. ''
+++
நான் நிறைய வயதானவர்களை பார்க்கிறேன். பழங்கதைகள் சொல்வார்கள். சின்ன சின்ன சம்பவங்கள் கூட இன்னும் நினைவில் வைத்திருப்பார்கள். கல்யாணத்தில் தனக்கு அவமரியாதை செய்ததை, சரியாக உபச்சரிக்காததை, கவுரப்படுத்தாததை, ஜான்வாசாவில் போட்டோ எடுக்காததை, குடையை பிடிக்காததை, தூக்கி எரிந்ததை, அசிரத்தையாக வரவேற்றதை, எத்தனை யுகங்கள் ஆகியிருந்தும் நேற்று நடந்ததுபோல் இன்னமும் குறை சொல்வார்கள். அதில் என்ன தப்பு ஒன்றுமில்லையே என்று பதில் கேள்வி தன்னையே கேட்டுக்கொண்டு அடிக்கடி இந்த எண்ணம் நேராமல் பார்த்துக்கொள்ள தவறுகிறார்கள்.....
எதுவுமே நாம் எதிர்பார்த்தது போல் வாழ்வில் நடப்பதில்லை. நம் உணர்ச்சிகள் சில நேரங்களில் மதிக்கப்படுவதில்லை. புரிந்து கொள்ளப்படுவதில்லை. இது சகஜம். எல்லாருக்கும் வாழ்வில் நடப்பது தான். நாம் எதையெல்லாம் உள் வாங்கி
க்கொள்கிறோம் என்பது தான் முக்கியம். சிலவற்றை உடனே மறந்து விட பழக வேண்டும். எல்லாமே விருப்பம்போல் இருக்க முடியாது என்று ஆணித்தரமாக மனதில் நிலை நிறுத்திக்கொள்ளவேண்டும். ரொம்ப காலம் தண்ணீர் செம்பை சுமக்க வேண்டாமே. வலியில்லாமல் இருப்போமே. பலூன் எவ்வளவு காற்று ஊதுகிறோம் என்பதைப் பொறுத்துத் தானே அழகாக காற்றில் மிதக்க முடியும். இன்னும் ஊதிக்கொண்டேயிருந்தால் டபார் என்று வெடித்து விடுமே. அப்பறம் எங்கே அழகாக பறப்பது? போனதெல்லாம் போகட்டும். அடுத்த பக்கத்தைப் புரட்டுவோமே. பழசை அழிக்க முடியாவிட்டாலும் மறக்க முடியுமே.