Announcement

Collapse
No announcement yet.

Vallalar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Vallalar

    courtesy: Sri.JK.Sivan


    பசி தீர்த்த டாக்டர் j.k. sivan
    இன்று தைப்பூசம். என்றோ நிகழ்ந்த ஒரு ஆச்சர்ய அதிசய சம்பவம் நினைவுக்கு வருகிறது..
    ஒரு ஆச்சர்யமான மனிதர் அவர்.
    மனிதர் என்று எப்படி சொல்வது? தெய்வம் மானிடனாக வந்த உரு என்பது தான் பொருத்தமாகும்.
    அவர் எவரிடமும் தீட்சை பெறவில்லை. ஆனால் அவருக்கோ பல சிஷ்யர்கள். ஒன்பது வயசிலேயே வித்யாசமின்றி அனைவராலும் ஏற்கப்பட்டவர். ஒரு பார்வையிலேயே மாமிசம் உண்பவர்கள் கூட அடியோடு அதை விட்டனர். அவர் பார்வை எக்ஸ்ரே,ஸ்கேன் தன்மை கொண்டதோ என்னவோ. பிறர் மனத்தில் தோன்றும் எண்ணங்களை எல்லாம் அவரால் உணர முடிந்தது. எங்கிருக்கிறார் என்று அறியமுடியாதபடி திடீரென்று காணாமல் போய்விடுவார்.
    பார்ப்பதற்கு, மாநிறம், ஒல்லி, நிமிர்ந்த உருவம், எலும்பெல்லாம் தெரியும். நீண்ட மெல்லிய மூக்கு. விசாலமான நெற்றி. கண்களில் ஏதோ ஒரு காந்த சக்தி. முகத்தில் ஏதோ, எதையோ பற்றி
    எப்போதும் கவலைப் பட்டுக்கொண்டெ யிருக்கிற மாதிரி ஒரு தோற்றம். நீண்ட கூந்தல் மாதிரி தலை முடி. காலில் பாத ரக்ஷை. (அந்த காலத்தில் ஆற்காடு ஜோடு என்று அதற்குப் பெயர்) .
    உடம்பை மூட ஒரு வெள்ளைத் துணி. வேட்டியோடு சேர்ந்து உடலின் மேலும் போர்த்தப்பட்டிருக்கும். ஆகார விஷயம் சொல்பம். ஒன்றிரண்டு கவளம். அதுவும் ரெண்டு மூன்று நாளைக்கொரு தரம். உபவாசம் என்று இருந்தால் அது ரெண்டு மூன்று மாசம் வரை கூட தொடரும். வெந்நீரில் கொஞ்சம் வெல்லம் கரைத்து
    அது தான் ஆகாரம். சிறுவயதிலே குழந்தையாக அப்பாவின் தோளில் இருந்தபோதே சிதம்பரத்தில் ''ரகசியம்'' (ஆனந்த வெளி, பரமஆகாசம்) புரிந்துவிட்டது. பல பாடல்களில் அது வெளிப்பட்டது.
    சந்நியாசியாய் இருந்தும் உலக இயல் பிடிக்கவில்லை, படமுடியவில்லையே இந்த துயரம் என்று கதறல். போதும் போதும் பட்டதெல்லாம்.
    ''படமுடியாதினித் துயரம் பட முடியாதரசே
    பட்டதெல்லாம் போதும் இந்த பயம் தீர்ந்து இப்பொழுதே என்
    உடல் உயிராதிய எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன்
    உடல் உயிராதிய எல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்
    வடலூரு சிற்றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள்
    மணியே, குரு மணியே, மாணிக்க மணியே
    நடன சிகாமணியே என் நவமணியே, ஞான
    நன் மணியே, பொன் மணியே, நடராஜ மணியே
    இந்தப்பாட்டில் கண்டபடி தானே இறைவனின் உடல் உயிர் ஆவியானவர் அந்த மா மனிதர். சித்தர். ஞானி.
    ஒரு ஆடு மாடு, பறவை, பூச்சி கத்தினாலும் ''ஆண்டவா, அதற்கு என்ன துன்பமோ, என்னால் அதை போக்க முடியுமோ, என்று கலங்குவார், பாவம் அதற்கு என்ன ஆச்சோ என்று பயந்துபோவார். என் அப்பா, இறைவனே அவற்றின் துன்பம் உடனே போக்கிடுவாய். இது கொடிய விஷ நாகத்திற்கும் கூட. அவருக்குத்தான் எல்லா உயிரும் சமமாயிற்றே.
    '' காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின்
    கடுங்குரல் கேட்டு உளம் குலைந்தேன்
    தாக்கிய ஆந்தை குரல் செயப் பயந்தேன்
    சாக்குரல் பறவையால் தளர்ந்தேன்
    வீக்கிய வேறு கொடுஞ் சகுனம் செய்
    வீக்களால் மயங்கினேன் விடத்தில்
    ஊக்கிய பாம்பைக் கண்ட போது உள்ளம்
    ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய் ''


    செடி கொடி தண்ணீரின்றி எங்காவது வாடி வதங்கி தலை சாய்ந்ததைப் பார்த்து பதறுவார். ஐயோ என்ன துன்பம் அதன் பசியை போக்க யாருமில்லையா என்று உலகில் எந்த உயிரும் துன்பமுருவதைக் காண சகிக்காத ஜீவா காருண்யர் அவர். ''வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடிய நெஞ்சம்'' அவருக்கு. நமக்கும் கொஞ்சமாவது அவர் வழியில் போக கொடுத்து வைத்திருக்க வேண்டாமா? ஜீவ காருணி யத்தைப்பற்றி அவர் கையாலேயே எழுதிய ஒரு சில வரிகள் நம் மனதைத் தொடவில்லையானால் நமது நெஞ்சம் அம்மா அப்பா மனைவி குழந்தைகள் எந்த உயிரைப் பற்றியும் கவலையே கொள்ளாது.
    இரும்போ, பிளாஸ்டிக்கோ.
    '' உள்ளபடி பசியால் வருந்துகின்ற சீவர்களுக்கு ஆகாரங்கொடுக்க நினைத்தபோது, நினைத்த புண்ணியரது மனம் வேறு பற்றுக்களை விட்டுச் சுத்தக் கரணமாகி நினைத்தபடியால், அந்தப் புண்ணியர்களை
    யோகிகளென்றே உண்மையாக அறியவேண்டும். ஆகாரங் கொடுக்க நினைத்தபடி உபசரித்துக் கொடுக்கும்போது, அவருண்ணுவது தாமுண்ணுவதாக அறிந்து களிக்கின்ற படியால், ஞானிகளென்றே உண்மையாக அறியவேண்டும். ஆகாரங்கொடுக்க உண்டு பசி தீர்ந்தவர்களுக்கு அத்தருணத்தில் ஆன்மாவின் உள்ளும் புறத்தும் கீழும் மேலும் நடுவும் பக்கமும் நிறைந்து கரண முதலிய தத்துவங்களெல்லாம் குளிர்வித்துத் தேகமுழுதும் சில்லென்று தழைய முகத்தினிடமாகப் பூரித்து விளங்குகின்ற கடவுள்விளக்கத்தையும் திருப்தியின்பமாகிய கடவுளின் இன்பத்தையும் பிரத்தியட்சத்தில் தரிசித்து அனுபவிக்கின்றார்க ளாதலால், அந்தப் புண்ணியர்கள் கடவுளைக் கண்டவர்களென்றும் கடவுளின்பத்தை அனுபவிக்கின்ற முத்தரென்றும் அறியவேண்டும். பசி நீங்க உண்டு சந்தோஷ'த்தவர்கள் இந்தப் புண்ணியர்களைத் தெய்வமாகப் பாவிக்கின்றார்களாதலால், இவர்களே தெய்வமுமென்று உண்மையாக அறியவேண்டும்.''
    இது அவர் எழுத்து.
    அந்த மாமனிதர் ஒரு ம்ருது பாஷி . உரக்கவே பேசமாட்டார். நம்மை மாதிரி எதையாவது சாப்பிட்டுவிட்டு இடுப்பு வேஷ்டியில் கைகளைத் துடைத்துக்கொள்ளும் ரகமல்ல. ஒரு கைக்குட்டை எப்போதும் இடுப்பில். கைககளை வீசி நடக்கவே மாட்டார். யாருமே அவர் கைகளைத் தொங்கவிட்டுக்கொண்டு நடந்துபோனதை
    பார்த்ததில்லை. எப்போதும் கை கட்டியே காணப்படுவார். காலும் தலையும் எப்போதும் மறைத்தே வைத்திருக்க வேண்டும் என்ற கொள்கை. ஒரே துணி உடம்பைச் சுற்றி தலையையும் சுற்றி இருக்கும். அதுவும் வெள்ளைத்துணி. காலுக்கு ஒரு செருப்பு இல்லாமல் நடக்க மாட்டார். எதிரே வரும் யாரையும் முகமோ, நிறமோ உருவமோ எதையுமே பார்க்கமாட்டார். அப்படி அவர்கள் உருவம் கண்ணில் பட்டுவிட்டால் என்னால் அவர்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்து விட்டதோ என்ற பயமும் கவலையும் அவரைத் தின்று விடும்.
    அவர் பற்றி அவரே சொல்வது:
    கையற வீசி நடப்பதை நாணிக்
    கைகளை கட்டியே நடந்தேன்
    மெய்யுற காட்ட வெருவி வெண் துகிலால்
    மெய்யெலாம் அய்யகோ மறைத்தேன்.
    வையமேல் பிறர் தம் கோலமும் நடையும்
    வண்ணமும் அண்ணலே சிறிதும்
    பைய நான் ஊன்றிப்பார்த்ததே இல்லை.
    பார்ப்பனேல் பயமிகப் படைப்பேன்
    அர்த்தம் தான் மேலே சொல்லியிருக்கிறேனே .
    இவர் மீது கோர்ட்டில் ஒரு கேஸ். ''ஏமாற்று வித்தைக்காரர், மக்களை தனது பக்கம் வசப்படுத்தி துன்பப் படுத்தக் கூடியவர். இவர் பாடல்களை வெளியே வராமல் தடை போடவேண்டும்'' என்று அந்த கேஸ். கோர்ட்டில் அவர் ஆஜராக உத்தரவு. அந்த கோர்ட் பண்ணின பாக்கியம் அவர் கோர்ட்டில் தனது வெள்ளை மேலாடை போர்த்தியவாறு வந்து நீதிபதி முன் நின்றார். என்ன தோன்றியதோ அந்த ஆங்கிலேய நீதிபதிக்கு. அவர் வந்து நின்ற உடனேயே கோர்ட்டில் அத்தனை பெரும் எழுந்து நின்றதைப் பார்த்துவிட்டு தானே தனது இருக்கையில் இருந்து தன்னிச்சையாக எழுந்து நின்று அவரை வணங்கினார். ஒரே வரி தீர்ப்பு. 'இந்த கேஸ் தள்ளுபடி செய்யப்பட்டது'' அவர் வேறு யாருமில்லை. நம்மோடு அண்மையில் வாழ்ந்த சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்கிற வள்ளலார் சுவாமிகள்.
    '''நான் உன் மூத்த பிள்ளை. என் கையில் கருணை நீதி ச்செங்கோல் தரப்பட்டிருக்கிறது. ஜீவ காருண்யம் செய்வதற்கு. என் தெய்வமே, இன்று நீ உன்னை என்னில் காட்டி உன்னில் என்னை ஏற்றுக் கொண்டாய். இனி எனக்கு துயர் இல்லை. நல்லதே செயதாய். என் அன்னையே, அரசே, தந்தையே, எல்லாமும் நீயே, என் மனத்திலுருந்த திரையை நீக்கிவிட்டாய் உன் ஒளி இனி என்னுள்ளே, உன்னை சரணடைந்தேன்'' என்ற பொருளில் பாடியிருக்கிறார்.


    இவ்வாறெல்லாம் பாடிக்கொண்டே ஒரு நாள் உள்ளேயிருந்து ஒரு தீபத்தை கொண்டுவந்து அனைவருக்கும் காட்டி வெளியே வைத்தார். ''இது தான் அருட்சோதி தெய்வம், ஆண்டருளும் தெய்வம்.'' என்று வழி காட்டினார். அன்பே தெய்வம், ஆருயிர்க்கெல்லாம் அருள் செய்க. கருணை செய்வீர் என்று உபதேசித்தார்.
    ''நான் இந்த அறைக்குள் செல்கிறேன். யாரும் கதவைத் திறக்க முயற்சிக்கவேண்டாம். அரசாங்கம் என் விருப்பை மீறி கதவை உடைத்து திறந்தாலும் உள்ளே நான் இருக்கமாட்டேன். எல்லா உயிரிலும் கலந்திருப்பேன் அவர்கள் எல்லா உயிரிடத்தும் காருண்யம் புரிய செய்வேன். இது என் முடிவு.
    இது நடந்தது 30.1.1874 நள்ளிரவு. உள்ளே சென்றவர் வெளியே வரவில்லை என சேதி கேட்டு தென்னாற்காடு வெள்ளைக்கார கலெக்டர் டாக்டர்கள் புடை சூழ கதவை திறந்து உள்ளேசென்றபோது அங்கே அழுகிய பிண நாற்றத்தை எதிர்பார்த்தவர்களுக்கு பச்சை கல்பூர வாசனை மணத்தது.
    அருளாளர் சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்ற இயற்பெயர் மறந்துபோய் உலகமுழுதும் வள்ளலார் எனும் புகழ்பெற்று வாழும் அடிகளார் 1874-ஆம் ஆண்டு தைப்பூச நன்னாளில் இறைவனுடன் கலந்தார். அவர் ஏற்றி வைத்த அடுப்பு இன்னும் எரிந்து கொடிக்கனக்காக எத்தனையோ பேர் பல வருஷங்களாக இன்றுவரை வடலூரில் அவர் நிர்மாணித்த சித்தி வளாகம், சத்ய ஞான சபையில் பசிப்பிணி தீர்ந்து மகிழ்கிறார்கள். யார்போனாலும் சாப்பிடாமல் உள்ளே போகக்கூடாது. நானும் சாப்பிட்டு இருக்கிறேன்.
Working...
X