Announcement

Collapse
No announcement yet.

Perur temple part40

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Perur temple part40

    சிவாயநம.திருச்சிற்றம்பலம். *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *(40)*
    *கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்.*
    ---------------------------------------------------------------------
    *திருநீற்று மேட்டுப் படலம்.*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    செந்தமிழ் விளங்கும் பாண்டிவள நாட்டிலே, கசேந்திரமோக்க நகரத்தில், தான்மிக பாண்டிய ராசன் செங்கோல் செழுத்தி, வித்துருலதை என்னும் பெயருடைய கற்பினிற் சிறந்த மாதேவியோடு வாழ்ந்திருந்தான்.


    அம்மாதேவி முத்தமிழ்க் கல்வியும் முற்றக் கற்று, அழகினிற் சிறந்துள்ளவளாதலால் செந்தமிழ் கல்வியிற் பயின்ற மகளிர் சூழாஞ் சூழச்.சபையில் வதிந்தும், அக்குழாத்தோடு பூக் கொய்தல், புனல் விளையாடல், பொழில் விளையாடல் முதலாகியவற்றைப் புறநகரிற் புகுந்து, மகிழ்ந்து செய்தும் வந்தாள்.


    ஒரு நாள் காலையில், கொங்கண தேசத்தில் நான்கு வேதங்களிலும் வல்ல ஓர் அந்தணன், மகாராட்டிர நாட்டை ஆளும் பிரதாப மகுடராஜன் கங்காநதி தீரத்திலே, துலாபாரந் தூக்கச் செல்லுஞ் செய்தி தெரிந்து, அங்கே போய் வேத சோதனை கொடுத்து துலாபாரப் பொருளைத் தானம் வாங்கிய பின், *"வேதங்களை ஓதி யுணர்ந்தும், அதன் பயனாகிய அறிவொழுக்கச்களிலே செல்லாது தானம் ஏற்றுப் பாவவழியில் ஒழுகுதல் முறையல்ல"* என்று நைந்துருகிச் சிந்தனை செய்து தன்னகர் சேர்ந்து, தானம் ஏற்ற பொருளையெல்லாம் அறவழியிற் செலவிட்டுத் தாமிரபரணி நதியிற் குளித்துப் பாவத்தைப் போக்கக் கருதி, மனைவியோடு புறப்பட்டுக் கசேந்திர மோக்க நகரத்திற் சேர்ந்து, தாமிரபரணி நதித்துறையிலேயுள்ள அரசமர நிழலிலே தங்கிச் சிரம பரிகாரமாகும் போதே இறுதிக்காலம் வந்து மரணம் அடைந்து அரக்கனாய், அவ்வரச மரத்தில் வசித்தான்.


    மனைவியும் வருந்தி, அப்பொருள் முழுவதையும் அம் மரத்தின் பொந்திலே சேமித்து வைத்துப் பின்பு நாயகன் உடம்பை அக்கினியினாலே தகித்து, அன்று முழுவதும் அழுதழுது மயங்கி, மறுநாள் நிலத்தில் விழுந்து இறந்தாள்.


    தவத்தொடர்பு இல்லாமையால், பொருளிருந்தும் புண்ணியம் கைகூடப் பெறாது அப் பொந்தின் பொருளையுங் காத்து, அம்மரத்தில் அரக்கன் இருந்தான்.


    இப்படியானொருநாளில், வித்துருலதையும், தாமிரபரணி நதியிற் குளித்து வர எண்ணி அவ்வரசடியிலே வந்து தங்கிக் கல்லுங் கசிந்துருக வீணாகானஞ் செய்தனள்.


    உடனே அரக்கன் மாதேவி அழகையும்,தருக்கையும் யாழ்பாடும், வல்லமையையும் நோக்கி, இவளை அடைவோம் என்று கருதி, அரசன் கொம்பினை விட்டு அப்பெண் கொம்பினைப் பற்றினான்.


    அப்போது வித்துருலதை மயங்கி உணர்விழந்து பிதற்றினாள்.


    அதனை அறிந்த அரசன் மணிமந்திர ஒளடதங்கள் இயற்றியுந் தீராது வருந்துங்கால், நாரதமுனிவர் வந்து அரக்கன் பற்றிய வியல்பை அரசனுக்கு விரித்துரைத்துத் *"திருப்பேரூர் சேர்ந்து* *உன் மனைவி காஞ்சி நதியில் மூழ்கிப் பிரமகுண்ட நீற்றை அணிந்து, பிரமதீர்த்தம் தெளிக்கப் படுவாளாயின் அரக்கன் விலகுவான்"* என்று அருளிச் செய்து மறைந்தனர்.


    அங்ஙனமே தான்மிக பாண்டியன் மாதேவியை அழைத்துக் கொண்டு மேலைச் சிதம்பரஞ் சேர்ந்து, காஞ்சிமா நதியில் மூழ்கி, மனைவியையும் மூழ்குவித்துப் பிரமதீர்த்தத்தையும் ஆட்டி, பிரமகுண்டமாகிய திருநீற்று மேட்டின் விபூதியை அள்ளிக் காஞ்சிமா நதியித் தீர்த்தமும் பிரம தீர்த்தமும் செய்து குழைத்து, மனைவி வடிவ முழுவதும் பூசிய மாத்திரத்தில், அவளைப் பற்றிய அரக்கன் வெளிப்பட்டு, அரக்கவுரு நீங்கி,தேவவுருப் பெற்று, விமானம் ஏறி, அரசனை நோக்கி, *"தீயேனையுந் தூயனாக்கினை"* என்று கூறிச் சுவர்க்கலோகஞ் சேர்ந்தான்.


    வித்துருலதையும் பண்டை யுணர்வு பெற்றனள். அப்பொழுது அரசன் மகிழ்ந்து, திரும்பவும் காஞ்சிமா நதியில் விதிப்படி மாதேவியோடு குளித்துப் பல தானங்கள் கொடுத்து சுவாமி தரிசனஞ் செய்து, விடை பெற்று, மாதேவியுடன் பாண்டிநாடு சேர்ந்து வாழ்ந்திருந்தான்.


    திருநீற்றுமேட்டு விபூதி தரித்தவர்க்குப் பிரமராக்ஷசமின்றி, மலடும்,நோயும், பாவ முதலியவுந் தீரும். பல பொருளும் சுவர்க்கமும் முத்தியுஞ் சித்திக்கும்.


    திருச்சிற்றம்பலம்.


    *கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர் நாளையும் வ(ள)ரும்.*


    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X