Announcement

Collapse
No announcement yet.

Vegetables for Sraardham /Devasam அருந்ததியின் மேதா விலாஸம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Vegetables for Sraardham /Devasam அருந்ததியின் மேதா விலாஸம்

    விஶ்வாமித்ரர் புகழ் பெற்ற ராஜரிஷி. ராஜ வம்ஸத்தைச் சேர்ந்தவர். ஆனால் கடுமையான தபஸ்ஸால் ப்ரஹ்மரிஷியாக உயர்ந்தவர்.


    அதுவும் "வஶிஷ்டர் வாயால் ப்ரஹ்ம ரிஷி" பட்டம் பெற்றவர்.


    ஆனால் இப்படிப் பட்டம் பெறுவதற்கு முன் அவருக்கும் வஶிஷ்டருக்கும் எப்போதும் மோதல்தான். வஶிஷ்டரிடமிருந்து காமதேனுவைப் பறிக்க முயன்ற காலம் முதல் நடந்த பல மோதல்களில் கீழ்கண்ட மோதலும் ஒன்று.


    இது ஒரு சுவையான கதை.


    ஒருமுறை தன் முன்னோர் ஶ்ராத்தத்துக்கு [திவஸம்] தன் குடிலுக்குச் சாப்பிட வருமாறு விஶ்வாமித்ரரை வஶிஷ்டர் அழைத்தார்.


    "அதற்கென்ன வந்தால் போச்சு! ஆனால் 1008 வகை காய்கறி செய்து படைக்க வேண்டும்" என்றார்.


    உலகில் 1008 வகையான காய்கறிகள் உண்டா? அப்படியே இருந்தாலும் இத்தனை கறிகாய்களைச் சமைத்து யாராவது உணவு படைக்க முடியுமா? அப்படியே சமைத்துப் போட்டாலும் அதைச் சாப்பிட யாரால் முடியும்?


    விஶ்வாமித்ரர் தன்னை வேண்டுமென்றே சிக்கலில் மாட்டிவைக்கவோ அல்லது அவமானப்படுத்தவோ இப்படிச் செய்கிறார் என்பது வஶிஷ்டருக்குத் தெரியாதா என்ன ?.


    இருந்த போதிலும் விட்டுக் கொடுக்காமல், " ஆஹா! 1008 வகை கறியமுது வேண்டுமா? அதற்கென்ன அருந்ததியிடம் சொல்லி விடுகிறேன்" என்றார்.


    வஶிஷ்டரின் மனைவியான அருந்ததி கற்பின் சின்னம். ஒவ்வொரு ஹிந்துவும் திருமணமான முதலிரவில் அருந்ததி நக்ஷத்ரத்தைப் பார்க்கவேண்டும். வஶிஷ்டரும் அருந்ததியும் இணைபிரியாமல் இருப்பதுபோல நீங்கள் இருவரும் இணைபிரியாமல் வாழுங்கள் என்று புரோகிதர்களும் வாழ்த்துவர்.


    அருந்ததி கீழ்ஜாதிப் பெண்ணாக இருந்தபோதிலும் அவள் கற்பினால் உயர்ந்தவள் என்பதால் எல்லோருக்கும் அவளே தெய்வம்.


    சங்கத் தமிழ் நூல்களில் ஐந்தாறு இடங்களில் அவள் வாழ்த்தப் படுகிறாள். தமிழ்ப் புலவர்கள் ஈராயிரம் ஆண்டுகளாக அவள் புகழ் பாடுகின்றனர்.


    ஶ்ராத்தச் சாப்பாடு நாளும் வந்தது.


    விஶ்வாமித்திரர் இலையில் அமர்ந்தார்.


    பாகற்காய் கறி, பலாப்பழம், பிரண்டைத் துவையல் இவைகளோடு, ஒரு வாழை இலையில் எவ்வளவு காய்கறிகள் படைக்கமுடியுமோ அவ்வளவு மட்டுந்தான் இலையில் இருந்தன.


    1008 காய்கறிகள் இல்லை.


    விஶ்வாமித்திரர் கோபத்துடன் " என்ன இது? 1008 வகை காய்கள் எங்கே?" என்று வஶிஷ்டரை வினவினார்.


    அவரோ "நான் அருந்ததியிடம் சொல்லிவிட்டேனே! அவளையே கேட்டுக்கொள்ளுங்கள்" என்றார்.


    இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த உலகம் போற்றும் உத்தமி அருந்ததி, தானே முன்வந்து ஒரு ஸ்லோகத்தைக் கூறினாள்.


    கூறிவிட்டு, "இதுதானே ஶ்ராத்தகால விதி? உங்களுக்குத் தெரிந்திருக்குமே!" என்றாள்.


    விஶ்வாமித்ரர் வாயடைத்துப் போனார். பேசாமல் சாப்பிட்டுவிட்டு வாழ்த்திவிட்டுப் போனார்.


    அருந்ததி கூறிய அந்த ஸ்லோகம் என்ன?


    காரவல்லி ஶதம் சைவ வஜ்ரவல்லி ஶதத்ரயம்
    பனஸம் ஷட் ஶதம்சைவ ஶ்ரார்த்தகாலே விதீயதே


    कारवल्लि शांत चैव वज्र वल्लि शतत्रयं
    पनसं षट् शतंचैव श्रार्धकाले विधीयते


    "ஒரு ஶ்ராத்தத் திதியன்று சமைக்கப்படும் சமையலில், பாகற்காய் கறி 100 காய்களுக்குச் ஸமம், பிரண்டைத் துவையல் 300 காய்களுக்குச் ஸமம், பலா 600 காய்களுக்குச் ஸமம் என்று பாடல் கூறுகிறது.


    ஆயிரம் காய்கள் ஆயிற்றா? மீதி இலையில் எண்ணிப் பாருங்கள், எட்டு காய் கறிகள் வைத்திருக்கிறேன். ஆக மொத்தம் 1008! " என்றாள்.


    ஶாஸ்த்ரப்படி விளக்கம் சொன்ன அருந்ததியின் பதில் ஞாயம் தானே?


    ஸமயோசித புத்தியும், இல்லற தர்மமும் அறிந்தவர்களாக, நம் பாரதத்தில் அன்றைய பெண்கள் இருந்திருக்கிறார்கள்!
Working...
X