சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை. கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(9)*
☘ *திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் தொடர்.* ☘
__________________________________________
☘ *மனுநீதிச் சோழனின் மாகாவியம்.* ☘
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சேக்கிழார் தம் திருத்தொண்டர் மாக்கதையில் குறிப்பிடும் மனுச்சோழனின் காவியம் சற்று விரிவாக புதிய செய்திகள் பலசுமந்து ஆரூரில் கல்வெட்டாகத் திகழ்கின்றது.


சேக்கிழாரின் காவியத்திற்கும் காலத்தில் முற்பட்ட ஆக்கல்வெட்டு விக்கிரம சோழன் காலத்தியது. இதில் மனுச்சோழனின் மகனது பெயர் பிரியவருத்தன் என்றும் மனுவின் அமைச்சரின் பெயர் பாலையூரினன் உபயகுலாமலன் என்றும் குறிக்கப்பெற்றுள்ளது.


மேலும் உபயகுலாமலனின் வமிசத்தினனான பாலையூர் உடையான் சந்திரசேகரன் ஆதிவிடங்களான குலோத்துங்க சோழமாபலிவானாதிராயன் என்பவருக்கு விக்கிரச்சோழன் அளித்த பரிசில்கள் பற்றி விளக்குகின்றது கல்வெட்டு.


*இரண்டாம் குலோத்துங்கனின் மனநிலை.*
ஆரூர் திருக்கோயிலில் உள்ள இரண்டாம் குலோத்துங்கனது கல்வெட்டுக்களைப் பார்க்கும்போது இம்மன்னவன் சைவத்தின்பாலும் சேக்கிழார் திருத்தொண்டர் மாக்கதையிலும் செலுத்திய ஈடுபாடு நன்கு விளங்குகின்றது.


இவனது துவக்க கால மெய்க்கீர்த்திகள் பொற்கோட்டிமையப் பாவையும் சிவனும் போல் என்று கூறி தன்னையும் தந்தேவியையும் நேராகவே சிவனுக்கும் உமையவளுக்கும் ஒப்பிடுகிறான்.


சேக்கிழாரால் சிவநெறியூட்டப்பட்டு சற்று மன முதிர்வு எய்திய நிலை வந்தவுடன் இவனது கல்வெட்டுக்கள் பொற்கோட்டு இமயப்பாவையுடன் வீற்றிருக்கும் சிவனருளால் சோழநாட்டைத்தான் தன் தேவியுடன் ஆட்சி புரிவதாகச் சொல்லிக் கொள்கிறான்.


பின்னர் சேக்கிழாரின் திருத்தொண்டர் மாக்கதை தில்லையில் இயற்றப்படுகிறது. கி.பி. 1139--40- ல் இம்மாக்கதையாக்கப் பெறும்போது சேக்கிழாரால் பெரிதும் மனமாற்றம் கொண்ட இம்மன்னவன் உடன் ஆரூர் சென்று மூவர் முதலியர்க்கு கோயில் எடுத்து அனபாயநல்லூர் என்னும் ஊரைக் காணிக்கையாக்குகின்றான். இதனைச் சொல்லும் கல்வெட்டில் தன்னை திருநடம்புரியும் சபாபதியின் திருவடிகளாகிய தாமரை மலரை மொய்க்கும் வண்டு என்று தன்னைக் கூறிக்கொள்கிறான்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
முதலில் சிவனுக்கு நிகரென கூறிக்கொண்டவன் பின்னர் அருளால் ஆள்வதாகக் கூறி இறுதியில் வண்டாகிய எளிய நிலைக்கு தன்னை கருதிக் கொள்ளும் மனப்பாங்கை ஆரூர் கல்வெட்டுக்கள் சிறப்பாகக் கூறுகின்றன.


*சோழர் நீதி --.*
மனுநீதிச் சோழனின் மாக்கதை சோழர்தம் நீதிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தபோதும் பிற்காலச் சோழர்கள் காலத்தில் நிகழ்ந்த ஓர் நிகழ்ச்சி குறிப்பிடத்தக்கதாகும்.


விக்கிரமசோழன் காலத்தில் திருக்கோயில் ஊழியர்களுக்கு வீட்டுமனைகள் அளிக்கப்பட்டன. இரண்டாம் இராஜராஜன் காலத்தில் நகரத்து செட்டிகளாலும், செக்கார்களாலும் கைக்கொள்ளப்பட்டு அவர்களே அனுபவித்தனர்.


ஆலய ஊழியர்கள் தங்கள் மனைகளை இழந்து இரண்டாம் இராஜராஜன் காலத்தில் அம்மையப்பன் பல்லவராயன் என்ற அமைச்சரால் கண்டுபிடிக்கப்பட்டு, மன்னனது கவனத்திற்கு வந்தது.


இதனை ஆராய்ந்த மன்னனும், அமைச்சரும் முன்னர் விக்கிர சோழன் காலத்தில அளிக்கப்பட்ட மனைகளை மீண்டும் ஊழியர்களுக்கு மீட்டுத்தந்ததோடு அவர்கள் இதுவரை அனுபவிக்காமல் இருந்ததற்காக சட்டவிரோதமாய் அனுபவித்தவர்களிடமிருந்து தண்டம் பெற்று அதனை ஈட்டுத் தொகையாக ஆலய ஊழியர்களுக்கு அளித்தனன்.


மேலும் அவ்விடத்தை அனுபவித்து வந்த நகரத்தார்க்கும், செக்கார்க்கும் வேறு இடமும் உதவிகளும் செய்தது சோழர்களின் நீதி, சிறந்த எடுத்துக்காட்டு.
திருச்சிற்றம்பலம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*