"வள்ளல் பெருமானின்" மனுமுறை கண்ட வாசகம்
நல்லோர் மனத்தை - நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு - மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் - தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் - கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு - வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி யுயர்த்திக் - கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு - எரியச் செய்தேனோ!
தருமம் பாராது - தண்டஞ் செய்தேனோ!
மண்ணோரம் பேசி - வாழ்வழித் தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்கு - உபகாரஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு - உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் - பொய் சொன்னேனோ!
ஆசை காட்டி - மோசம் செய்தேனோ!
வரவுபோக் கொழிய - வழியடைத் தேனோ!
வேலையிட்டுக் கூலி - குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் - பாரா திருந்தேனோ!
இரப்போர்க்குப் பிச்சை - இல்லை யென்றேனோ!
கோள் சொல்லிக் - குடும்பங் கலைத்தேனோ!
நட்டாற்றில் கையை - நழுவ விட்டேனோ!
கலங்கி யொளிந்தோரைக் - காட்டிக் கொடுத்தேனோ!
கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த - கன்னியை யழித்தேனோ!
கணவன் வழி நிற்போரைக் - கற்பழித் தேனோ!
கருப்ப மழித்துக் - களித்திருந் தேனோ!
குருவை வணங்கக் - கூசி நின்றேனோ!
குருவின் காணிக்கை - கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் - கடுகடுத் தேனோ!
பெரியோர் பாட்டிற் - பிழை சொன்னேனோ!
பட்சியைக் கூண்டில் - பதைக்க அடைத்தேனோ!
கன்றுக்குப் பாலுட்டாது - கட்டி வைத்தேனோ!
ஊன்சுவை உண்டு - உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லுங் - கலந்து விற்றேனோ!
அன்புடை யவர்க்குத் - துன்பஞ் செய்தேனோ!
குடிக்கின்ற நீருள்ள - குளந் தூர்த்தேனோ!
வெய்யிலுக் கொதுங்கும் - விருஷ மழித்தேனோ!
பகைகொண்டு அயலோர் - பயிரழித்தேனோ!
பொது மண்டபத்தைப் - போயிடித்தேனோ!
ஆலயக் கதவை - அடைத்து வைத்தேனோ!
சிவனடி யாரைச் - சீறி வைத்தேனோ!
தவஞ் செய்வோரைத் - தாழ்வு சொன்னேனோ!
சுத்த ஞானிகளைத் - தூஷணஞ் செய்தேனோ!
தந்தை தாய் மொழியைத் - தள்ளி நடந்தேனோ!
தெய்வம் இகழ்ந்து - செருக்கடைந் தேனோ!
என்ன பாவம் செய்தேனோ இன்னதென்றறியேனே!.


"ஓம் ஸ்ரீ வள்ளலார் சித்தர் சுவாமியே போற்றி"

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends