சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பதியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(12)*
*திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் தொடர்.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
இந்திரன் முசுகுந்தனிடம் உன்னாலே இவ்வுலக வாழ்வு எனக்கு நிலைத்தது என்று சொல்லி அதற்கு கைமாறு செய்ய என்னவென்று தோன்றவில்லையே என மொழிந்தான்.


பின் விடைபெற்றுச் சென்று நீராடிப் பூஜைகளை முடித்தான். புகழ்மாலைகளால் போற்றிப் புகழ்ந்து வணங்கினான்.


அச்சமயம் முசுகுந்தனும் தனது கடன்களை முடித்துக் கொண்டு சென்று தியாகவிநோதரை அவரக்கிண்கிணிக்கா லரசரைக் கண்டு ஆனந்த பரவசனாய்த் தன்னை மறந்து சிவமேயாய்த் திளைத்து நின்றான்.


அன்புவலப்பட தியாகப் பெருமான் இந்திரன் அறியாத படியும் இவன் மட்டும் காணும் வண்ணமும் காட்சியளித்தனர்.


முசுகுந்தனுக்கு முற்பிறவியின் எண்ணங்களும் செயல்களும் முறையே நினைவிற்கு வந்தன. இன்ப வெள்ளத்தில் மூழ்கினான்.


இறைவன் அவன் காதிற்கு மட்டும் கேட்க, என்னைத் திருவாரூர்க்கு கொண்டு செல். பூசனை செய் என்று ஆணை தந்தார்.


அரசன் வழிபாடு முடித்து இந்திரனோடு அமுதருந்தியபின் விடைபெற விரும்பினான்.


இந்திரன் என்னிடம் வேண்டியது என்ன? அதைக் கேள் தருகிறேன் என்றான். அப்படியாயின் நீர் வழிபடும் தியாகப் பெருமானை எனக்கு அளித்திடுக! என்று அரசன் வேண்டினான்.


இந்திரன் இம்மூர்த்தி என்னுடையதல்ல!. திருமால் வழிபட்ட மூர்த்தி. அவரது அனுமதி கேட்டுத்தான் தருதல் வேண்டும் என்றான்.


முசுகுந்தனோ, திருமாலைக் கேட்டேயாயினும் கொடுக்க வேண்டுகிறேன். மூர்த்தியைப் பெற்றுக் கொள்ளாது செல்ல மாட்டேன் என்று உறுதியாக கூறினான்.


இந்திரனும் உடனே பாற்கடல் சென்று திருமாலிடம் அனுமதியும் பெற்றுக் கொண்டவன்.....ஆன்மார்த்த மூர்த்தியை அகல.மனமில்லாதவனாய் அம்மூர்த்தியைப் போன்று ஆறு மூர்த்திகளைச் செய்வித்து அரசனுக்குக் காட்டினான்.


முசுகுந்தனோ...திருவருள் துணையுடன் உண்மை உருவைக் காட்டியருள்க என தியானித்துக் கேட்டுக் கொண்டான்.


இந்திரன் செய்வதொன்றறியாது திகைத்துச் சிவப்பெருமூர்த்தியை அளித்தான்.


முசுகுந்தன் அம்மூர்த்தியைத் திருவாரூர்க்கு எழுந்தருளச் செய்தான்.


வன்மீகர் திருக்கோயிலுக்குத் தென்பால் திருக்கோயில் அமைத்து அதில் அமர்த்தியருளினான்.


அங்ஙனம் அவன் எழுந்தருள்வித்த நாள் அத்த நக்ஷத்திரம். ஆதலால் அன்று கொடியேற்றுவித்து விழாக் கொண்டாடினான்.


பங்குனி உத்திரத் திருநாளில் நீர்விழா நிகழ்த்தினான். முதலில் திருமால் மார்பில் அசைந்தாடிய பெருமானாக இருந்ததை *"பைஞ்சுடர் விடுநாகப்பள்ளி கொள்வான் உள்ளத்தானும்"* என்று அப்பரடிகள் அறிவிக்கின்றார்கள்.


மேலும், *"தேங்காவி நாறும் திருவாரூர்த் தொன்னகரில் பூங்கோயிலுள் மகிழ்ந்து போகாதிருந்தாரே"* என்று தேவாரத்தில் கண்கண்ட தெய்வமாக தியாகர் விளங்குவதை தெரிந்து கொள்ளலாம்.


இன்னும் தியாகர் செல்வத் தியாகரான சிறப்பு அடிக்காயிரம் பொன் கொடுத்தார் என்னும் வரலாற்றானும் பெறப்படும் பொன் பரப்பிய திருவீதியென ஒரு வீதிக்குப் பெயர் வழங்கியதே இதற்கு ஒரு தக்கச் சான்று. இந்நிகழ்ச்சி உற்சவத்தில் தியாகப் பெருமான் தேருக்கு எழுந்தருளும்போது பொன்பூ, வெள்ளிப்பூ இறைப்பதாக நிகழ்ந்து வருகிறது.


அடிக்கோராயிரம் பொன் சின்னங்கள் கூற அளிப்பார் எனத் திருவாரூர்க் கோலையினும் அடி ஒன்றுக்கு உய்யும்படி பசும்பொனோராயிர முகந்து பெய்யந் தியாகப் பெருமானே என திருவாரூர் உலாவினும் சிறப்பிக்கப் பெறுதலைக் காணலாம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
*திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் தொடர் நாளையுடன் மகிழ்ந்து நிறைவாகும்.*

திருச்சிற்றம்பலம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*