Announcement

Collapse
No announcement yet.

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • #31
    Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

    கருணைப் பெருங்கடல்! 29

    பேரமைதி. படபடவென சிறகடித்து மாடம் மாறி அமரும் கோபுரத்துப் புறாக்களும் அசையாது அமர்ந்திருந்தன. உற்சவ களேபரத்தில் இருந்த கோயிலும் சட்டென்று அமைதி கொண்டது. அத்தனை பேரும் கோபுர வாசலுக்கு வந்து குழுமி விட்டார்கள். கோபுரத்தின் மீது மோதி திசை நகர்ந்த காற்றின் மெல்லிய ஓசை தவிர ஒன்றுமில்லை. என்ன சொல்லப் போகிறார் ராமானுஜர்?

    "ஓம் நமோ நாராயணாய ! அவர் ஆரம்பித்தார். சில நிமிடங்களுக்கு முன்னர் திருக்கோட்டியூர் நம்பி தன்னை எதிரே அமர வைத்து ரகசியமாகச் சொல்லிக் கொடுத்த மூலமந்திரத்தின் பொருள் விளக்கம் முழுவதையும், வீட்டுக்கு வந்து நினைத்துப் பார்த்து சொல்லிப் பார்க்கிற மாணவனைப் போல கடகடவென உச்சரிக்கத் தொடங்கினார்.'கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள்! ரகசியம் ரகசியம் என்று சொல்லி யுகம் யுகமாகப் பூட்டி வைத்த பெருங்கதவு இது. புனிதம் என்பது ரகசியத்தில் இல்லை. புனிதம் என்பது புரிந்து கொள்வதில் உள்ளது. இதனை அறிந்தால் மோட்சம் நிச்சயம் என்றால், மக்கள் அத்தனை பேருக்கும் இதனை அறியும் உரிமை இருக்கிறது. இதில் சாதி முக்கியமில்லை. அந்தஸ்து முக்கியமில்லை. பரமனின் பாதாரவிந்தங்களே கதியென்று எண்ணக்கூடிய அனைவரும் வாருங்கள். எது அனைவருக்கும் நலம் தருமோ, அது அனைவருக்கும் பொதுவானது. அதை நான் இப்போது உங்களுக்குத் தருகிறேன்."

    'நாராயணா! நாராயணா!' என்று மக்கள் உணர்ச்சி வயப்பட்டு உரக்கச் சொன்னார்கள்.

    பாற்கடல் பெருக்கெடுத்தாற்போல அவரது வாய் திறந்து திருமந்திர உட்பொருள் வெளிப்படத் தொடங்கியது. எதையெல்லாம் குருகைப் பிரான் அவருக்குத் தந்தாரோ, அதெல்லாம். எதையெல்லாம் வெளியே சொல்லக்கூடாது என்று அவர் நிபந்தனை விதித்தாரோ, அதுவெல்லாம். எதைச் செய்தால் உனக்கு நரகம் நிச்சயம் என்று எச்சரித்தாரோ அது.

    சொல்லி முடித்து ராமானுஜர் கோபுரத்தின் மீதிருந்து கீழே இறங்கி வந்தபோது கோபம் தகிக்க நம்பியின் சீடர் ஒருவர் எதிரே வந்து நின்றார். 'ஆசாரியர் உம்மை அழைத்து வரச் சொன்னார்.

    ''அப்படியா? இதோ வருகிறேன்.'திருக்கோட்டியூர் நம்பியின் மாளிகைக்கு ராமானுஜர் மீண்டும் சென்றபோது வாசலிலேயே நம்பிகள் வெடித்தார்.

    'நில் நீசனே! ஆசாரிய அபசாரம் செய்தவன் வாழத் தகுதியற்றவன்.உன்னை நம்பி உனக்கு ரகஸ்யார்த்தங்களை நான் போதித்தது பெரும் பிழையாகிவிட்டது. இப்படியா ஊரைக்கூட்டி அதைப் பொதுவில் உரக்கச் சொல்லுவாய்? மதிப்புத் தெரியாதவனுக்கு போதித்து விட்டேன். உன் அகம்பாவம் அறியாமல் பெரும்பிழை செய்துவிட்டேன்.'

    ''மன்னித்துவிடுங்கள் ஆசாரியரே. இதனை அறிந்தால் இதற்குமேல் ஒன்றுமில்லை என்று தாங்கள் சொன்னீர்கள். திருமந்திர உட்பொருள் தெரிந்தவனுக்கு மோட்சம் நிச்சயம் என்றீர்கள். மோட்சத்தின் கதவு திறக்கும் சாவி இதுதான் என்றால், இது மக்கள் அத்தனைபேர் கையிலும் இருக்கவேண்டிய சாவியல்லவா? பசியிலும், ஏழைமையிலும் ஒதுங்க ஓர் இடமற்ற வெறுமையிலும் அவதிப்படுபவர்கள், மரணத்துக்குப் பிறகாவது நிம்மதியையும் சந்தோஷத்தையும் அனுபவிக்க வேண்டாமா?''

    'இது தர்க்கமா? இது அபத்தம். வெறும் அபத்தம். தராதரம் என்ற ஒன்றில்லையா? ஓட்டைப் பாத்திரங்களில் அமிர்தம் கொடுத்தனுப்ப விரும்பியிருக்கிறீர். தகுதி பாராமல் தருகிற தானமே தரமற்றது. மக்கள் கூட்டம் என்பது நீசர்களை உள்ளடக்கியது. நாத்திகர்களை உள்ளடக்கியது. பிரித்தறியத் தெரியாத மூடரா நீர்?''

    "நீசர்களும் நாத்திகர்களும்கூட நற்கதி பெற வழி செய்வது நல்லது என்றே நினைத்தேன். பிறக்கும்போது யார் நீசன்? காலம் அப்படி உருமாற்றுகிறது. சந்தர்ப்ப சூழல் ஒருவனைத் தடம் மாறிப் போகச் செய்கிறது. நம்மிடம் மருந்து இருக்கிறபோது நோயுற்றவனுக்கு அதை வழங்குவதில் என்ன பிழை?''

    'நீர் செய்தது குரு துரோகம்.'

    ''ஆம் ஆசாரியரே. அதில் சந்தேகமில்லை. உமது சொல்லில் நான் நின்றிருந்தால் நீங்கள் உவக்கும் மாணவனாக இருந்திருப்பேன். ஆனால் உலகம் உய்ய இதுவே வழி என்று கருதியதால் குரு துரோகப் பிழையை அறிந்தேதான் செய்தேன்.''இதற்கு என்ன தண்டனை தெரியுமா உமக்கு?''அறிவேன் சுவாமி. நான் கற்ற திருமந்திரப் பொருள் எனக்கு உதவாது போகும். நான் நரகம் புகுவேன். இதில் எனக்கு சந்தேகமில்லை.'

    'முட்டாள்! இது தெரிந்துமா அதை பகிரங்கப்படுத்தினாய்?''

    "ஆம். நான் ஒருவன் நரகம் போனாலும் நாடு நகரமெல்லாம் சொர்க்கம் போகுமல்லவா? அத்தனைப் பெருங்கூட்டமும் அரங்கனுக்குள் அடைக்கலமாவதற்காக நான் ஒருத்தன் நரகத்தை ஏற்பதில் பிழையில்லை என்று நினைத்தேன். அதனால்தான் இப்படிச் செய்தேன். இது பாவமென்றால் அது என்னைச் சேரட்டும். இது துரோகமென்றால் நான் துரோகிப்பட்டம் சுமக்கிறேன். இதற்குத் தண்டனை நரகம்தான் என்றால் மகிழ்ச்சியோடு நான் அங்கு செல்ல இப்போதே தயாராகிறேன்!' என்று சொல்லி அவரது பாதம் பணிந்தார்.

    திகைத்துவிட்டார் திருக்கோட்டியூர் நம்பி.பல நிமிடங்கள் அவருக்குப் பேச்சே வரவில்லை. எப்பேர்ப்பட்ட மனிதர் இவர்! எம்மாதிரியான மன அமைப்பு இது! தன்னலத்தின் சிறு சாயல்கூட இல்லாத படைப்பு என்று ஒன்று உண்டா! இது கருணைப் பெருங்கடல். கட்டுப்படுத்த இயலாதது. நியாய தருமம் என்று வழி வழியாக வகுத்து வைத்திருந்த இலக்கணச் சட்டங்கள் எதுவும் இவருக்குப் பொருந்தாது என்பது புரிந்துவிட்டது.

    'ராமானுஜரே! இப்படி வாரும்!' கண்ணீர்த் திரை தெரிய அவர் இருகரம் நீட்டி அழைத்தார்.ஊர் கூடி வேடிக்கை பார்க்க, ராமானுஜர் மெல்ல அவரை நெருங்கினார். அப்படியே அவரைக் கட்டியணைத்துக் கதறி விட்டார் திருக்கோட்டியூர் நம்பி.'எம்பெருமானைக் கருணைக்கடல் என்போம். நான் உம்மைச் சொல்வேன் இனிமேல். அவன் எம்பெருமான். நீர் இனி எம்பெருமானார்! வைணவம் என்னும் வாழ்வியல் இதுவரை வைணவ தரிசனம் என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. நான் சொல்கிறேன்,இனி இது எம்பெருமானார் தரிசனம் என்று சொல்லப்படும்.

    உமது பாதை புதிதானதுதான். ஆனால் புதிர்களற்றது. பூட்டுகளற்றது. புனிதம் நிரம்பியது. உலகை உம் வீடாகக் கருதும் நீரே உலகம் உய்ய வழி காண்பீர்!'நெகிழ்ந்து போய்த் தாள் பணிந்தார் ராமானுஜர். சுற்றியிருந்த அனைவரும் பக்திப் பரவசத்தில் நாராயணா, நாராயணா என்று கூக்குரலிட்டார்கள். வைணவ சித்தாந்தமே அதன்பின் ராமானுஜ சித்தாந்தம் என்று ஆகிப் போனது.

    தொடரும்...
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment


    • #32
      Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

      'இவர் நமக்கு வேண்டாம்!'30

      வைணவத்தில் மந்திரோபதேசம் என்பது மூன்று உபதேசங்களை உள்ளடக்கியது. அதாவது மூன்று முக்கியமான மந்திரங்களும் அவற்றின் பொருள்களும்.

      முதலாவது, எட்டெழுத்து மூல மந்திரமான

      ஓம் நமோ நாராயணாய!

      அடுத்தது,

      ஸ்ரீமன் நாராயண சரனௌ சரணம் பிரப்த்யே -- ஸ்ரீமதே நாராயணாய நம:

      என்கிற த்வய மந்திரம்.

      மூன்றாவது மந்திரம் சரம சுலோகம் என்று சொல்லப்படும். இது கீதையில் ஜகத்குரு கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்குச் சொன்னது. மோட்ச சன்னியாச யோகத்தில் அறுபத்தி ஆறாவது சுலோகமாக வருவது.

      ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச:

      இந்த மூன்றில் முதலிரண்டின் பொருளும் உட்பொருளும் ராமானுஜருக்கு திருக்கோட்டியூர் நம்பி மற்றும் பெரிய நம்பி மூலம் உபதேசிக்கப்பட்டிருந்தது. மூன்றாவதான சரம சுலோகம் மிச்சம் இருந்தது. அதற்கொரு நாள் வரும்; அதற்கொரு ஆசாரியர் அமைவார் என்று ராமானுஜர் காத்திருந்த கணத்தில் திருக்கோட்டியூர் நம்பியே திருவாய் மலர்ந்தார்.

      'அடடா, இதிலேயே திருப்தியடைந்து விட்டீரே ராமானுஜரே! உமக்கு சரமத்தின் ரகஸ்யார்த்தத்தையும் சொல்லி வைக்கலாம் என்று இருந்தேனே!'ஒரு கணம் யோசித்த ராமானுஜர் சட்டென்று பதில் சொன்னார், 'சுவாமி! நீங்கள் இன்று எனக்குச் சொன்ன அர்த்தத்துக்கு மேல் இன்னொன்று இருக்க முடியும் என்று நான் எப்படி நினைப்பேன்? முழுமையை தரிசித்து விட்டதாகவே எனக்குத் தோன்றிவிட்டது.'குருகைப் பிரான் புன்னகை செய்தார். 'சரி பரவாயில்லை. சரம சுலோகத்தை அதன் ரகஸ்யார்த்தங்களுடன் நீர் அறியவேண்டியது முக்கியம்.

      ஆனால் இப்போது வேண்டாம். திருவரங்கத்துக்குச் சென்று சில காலம் கழித்துத் திரும்பி வாருங்கள். ஆனால் கண்டிப்பாக இம்முறை தனியாகத்தான் வரவேண்டும். உமது தண்டுக்கும் பவித்திரத்துக்கும் சேர்த்து போதிப்பதாயில்லை.'குருகைப் பிரான் சிரித்தபடி சொன்னார். ராமானுஜருக்கும் புன்னகை வந்தது.விடைபெற்று, திருவரங்கம் திரும்பியவர், பெரிய நம்பியிடமும் பிறரிடமும் நடந்ததை விளக்க, அத்தனை பேரும் புல்லரித்துப் போனார்கள்.

      உண்மையில், ராமானுஜர் திருவரங்கம் வந்து சேர்வதற்கு முன்னதாகவே திருக்கோட்டியூரில் நடைபெற்ற சம்பவம் திருவரங்கத்தின் செவிகளை வந்து சேர்ந்திருந்தது. குருகைப் பிரானே ராமானுஜரை 'எம்பெருமானார்' என்று அழைத்ததைச் சொல்லிச் சொல்லி வியந்து கொண்டிருந்தது பக்தர் சமூகம்.'ஆனால் ராமானுஜரின் அணுகுமுறை புதிராக உள்ளதே. புனிதங்களைப் பொதுமைப்படுத்துவது ஆபத்தில் முடியுமல்லவா?

      அவற்றின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் உணராதவர்களுக்கு அவற்றைத் தெரியப்படுத்துவது வீணான செயல் அல்லவா?''மந்திரங்கள் விஷயத்தில் மட்டுமா அவர் புரட்சி செய்கிறார்? கோயில் நிர்வாகத்தை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகிறார் என்று பாரும் ஓய். திருக்கோயில் கைங்கர்யத்தில் மெல்ல மெல்ல எல்லா சாதிக்காரர்களும் நுழைய ஆரம்பித்து விட்டார்கள். கேட்டால் வைணவனுக்கு சாதி கிடையாது. வைணவன் என்கிற அடையாளம் மட்டுமே உண்டு என்கிறாராம்.

      ''இதுவும் புனிதங்களைப் புறந்தள்ளும் காரியம்தான். இதெல்லாம் எங்கே போய் முடியப் போகிறதோ தெரியவில்லை.''ஆளவந்தாரின் சீடர்கள் எப்படி இதையெல்லாம் பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லையே ஐயா. ஒரு எதிர்ப்புக்குரலும் வரவில்லையே இன்னும்?''எப்படி வரும்? அந்த மனிதரிடம் என்னவோ மாய சக்தி இருக்கிறது. எதிரே வருகிற அத்தனை பேரையும் எப்படியோ மயக்கி உட்கார வைத்துவிடுகிறார். விவாதங்களுக்கோ, விசாரணைகளுக்கோ இடமே இருப்பதில்லை.

      ''எல்லாம் பேச்சு ஜாலம். காலட்சேபம் கேட்கப் போகிறவர்கள் திரும்பி வருகிறபோது கவனியும் ஓய். கள்ளுக்கடைக்குப் போய் வருகிறவர்களைப் போல் தள்ளாடிக்கொண்டு வருகிறார்கள். இதெல்லாம் நல்லதுக்கே இல்லை.''அதுசரி, ஆனானப்பட்ட திருக்கோட்டியூர் நம்பியையே தன் வலையில் வீழ்த்தி விட்டாரே. வெறும் மக்கள் எம்மாத்திரம்?'அது மெல்ல மெல்லத் திரண்டு எழுந்து கொண்டிருந்தது. பொறாமைப் புயல். சில மனங்களுக்குள் மட்டும் தகித்துக் கொண்டிருந்த விரோதக் கங்கு.

      என்னவாவது செய்து ராமானுஜரின் பிடியில் இருந்து திருக்கோயில் நிர்வாகத்தைப் பிடுங்கிவிட முடியாதா என்று ஒரு கூட்டம் யோசிக்கத் தொடங்கியிருந்தது. காலகாலமாக நடைமுறையில் இருந்து வந்த வைதிகமான முறைப்படி கோயில் சடங்கு சம்பிரதாயங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள் அவர்கள்.ஆகமம் என்பார்கள். திருவரங்கத்தில் மட்டுமல்ல.ராமானுஜர் வருவதற்கு முன்னர் அனைத்து வைணவ ஆலயங்களிலுமே அதுதான் நடைமுறை.

      வைகானசம் என்று பேர். விகனச முனிவரால் உருவாக்கப்பட்ட வழிபாட்டு நெறி அது. ஆழ்வார்களின் காலத்துக்கு முன்பிருந்து நடைமுறையில் இருந்து வந்த நெறி. அந்த வழியில் பஞ்ச சம்ஸ்காரம் என்கிற ஐந்து விதமான துாய்மைச் சடங்குகள் அவசியமில்லை. என்னை வைணவன் என்று இன்னொருவர் முத்திரை குத்த என்ன அவசியம்? தாயின் கருவிலேயே நான் வைணவன்தான். அதற்காக ஒரு சடங்கு அவசியமில்லை.

      ராமானுஜர் அடிப்படையிலேயே அதனை மறுத்தார்.'பிறப்பில் ஒருவருக்கு எந்த அடையாளமும் கிடையாது. அனைத்து உயிர்களும் சமம். உயர்வும் தாழ்வும் நடத்தையில் இருக்கிறது. வாழும் விதத்தில் இருக்கிறது. பரம பாகவதரான திருக்கச்சி நம்பி அந்தணர் அல்லர். திருப்பாணாழ்வார் அந்தணரா? வேதம் தமிழ் செய்த நம்மாழ்வார் தொடங்கி எத்தனை ஆழ்வார்கள் அந்தண குலத்தில் பிறந்தவர்கள்?

      குலப்பெருமையாலா அவர்கள் நிலைத்திருக்கிறார்கள்? பக்தியும் மானுடத் தொண்டுமல்லவா அவர்கள் புகழ் தழைக்கச் செய்திருக்கிறது? இது ஏன் உங்களுக்குப் புரிவதில்லை?' என்று கேட்டார்.சனாதனவாதிகளால் இதைத் தாங்க முடியாமல் போனது.'அவர் எக்கேடோ கெட்டுப் போகட்டும். திருக்கோயில் கைங்கர்யத்தை மாசு படுத்தாதிருந்தால் போதும்' என்றார்கள். மாசென்று அவர்கள் கருதியது, மறுமலர்ச்சியை! மகத்தான சீர்திருத்தங்களை.

      சமஸ்கிருதம் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்த சன்னிதிகளில் ஆழ்வார்களின் தமிழ்ப் பாசுரங்களை ராமானுஜர் ஒலிக்கச் செய்தது அவர்களுக்குப் பெரிய இம்சையாக இருந்தது. பரமாத்மாவின் அர்ச்சாவதார சொரூபத்தை (சிலை ரூபம்) மட்டுமே வணங்கினால் போதும் என்பது அவர்கள் நிலைபாடு. ராமானுஜரோ, பரத்துவம் (வைகுண்டத்தில் உள்ள நிலை), வியூகம் (பாற்கடலில் சயன கோலத்தில் உள்ள நிலை), விபவம் (அவதார நிலை), அந்தர்யாமி (உள்ளுக்குள் உணரும் நிலை) என எந்த நிலையிலும் பரமனைக் கருதலாம், வணங்கலாம் என்று சொன்னார்.

      'ம்ஹும். இவரோடு ஒத்துப் போக முடியாது.வெகு விரைவில் திருவரங்கத்தையே இவர் சர்வநாசமாக்கிவிடுவார். உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும்!'என்ன செய்யலாம் என்று அவர்கள் தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருந்தபோது ராமானுஜர் மீண்டும் திருக்கோட்டியூருக்குப் புறப்பட்டார்.

      சரம சுலோகத்தின் உட்பொருளை போதிக்கிறேன் என்று குருகைப் பிரான் சொல்லியிருக்கிறாரே.'சுவாமி... அடியேன் தங்களுடன்...'கூரத்தாழ்வான் தயங்கினான்.'வேண்டாம்!' என்று சொல்லிவிட்டுத் தனியே புறப்பட்டார்.

      தொடரும்...


      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment


      • #33
        Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

        ஒரே ஒரு நிபந்தனை!31

        தையின் மோட்ச சன்னியாச யோகத்தில் இடம்பெறும் 'சர்வ தர்மான் பரித்யஜ்ய, மாம் ஏகம் சரணம் வ்ரஜ | அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோட்ச இஷ்யாமி மாஸுச:' என்னும் வரி மிக மிக நுணுக்கமானது. மேலோட்டமாக இதன் பொருளை இப்படிச் சொல்லலாம்:

        அனைத்து தருமங்களையும் விடுத்து என்னைச் சரணடைந்தால், உன் பாவங்கள் அனைத்தையும் நான் தீர்ப்பேன்; அனைத்துக் கட்டுகளில் இருந்தும் உன்னை நான் விடுதலை செய்வேன்.

        இந்த வரி இடம் பெறுவதற்கு முந்தைய சுலோகம் வரை, அதாவது பதினேழு அத்தியாயங்களிலும் பகவான் கிருஷ்ணர் தர்மத்தைப் பற்றித்தான் பேசுகிறார். அவரவர் தருமங்களும் உலகப் பொதுவான தருமங்களும். தருமங்களைத் தழைக்க வைக்கும் உபாயங்களாகப் பலவித யோகங்களை அறிமுகப்படுத்து கிறார். கர்ம யோகம். ஞான யோகம். பக்தி யோகம். இன்னபிற யோகங்கள். ஒவ்வொன்றுக்குமான செயல்முறை விளக்கங்கள். தரும நெறி தவறாத வாழ்வுக்கான வழிமுறைகள்.

        அனைத்தையும் விளக்கிச் சொல்லிவிட்டு இந்த இடத்துக்கு வருகிறார். சர்வ தர்மான் பரித்யஜ.
        எல்லா தருமங்களையும் அவற்றை எட்டிப் பிடிக்க உதவுகிற யோகங்களையும் விட்டு விடுதலையாகி சரணாகதியைப் பற்றிக்கொள்; அதுவே பரிபூரண விடுதலை நிலைக்கான உபாயம்.

        என்றால், இதை ஏன் முதலிலேயே சொல்லியிருக்கக் கூடாது? வேலை மெனக்கெட்டு எனக்குரிய உபாயத்தைத் தேடிப் பிடித்து, எனது தருமத்தைக் காக்கிற வெட்டி வேலை எதற்கு? அனைத்தையும் தூக்கிக் கடாசி விட்டு நீயே சரணம் என்று முதல் வரியிலேயே வந்து விழுந்து விட்டிருப்பேனே?

        என்றால், அங்குதான் இருக்கிறது சூட்சுமம். கீதை, ஒரு சிமிழில் அடைக்கப்பட்ட பாற்கடல். சிமிழைத் திறக்கத்தான் தருமங்களும் யோகங்களும். திறந்ததும் குதிக்கச் சொல்லுவதே இந்த சரம சுலோகம். ஒரு வரியில் விளக்கிவிடக்கூடிய விஷயமல்ல. தவம் வேண்டும். தியானம் வேண்டும். பக்தி வேண்டும். மேலாக வேண்டுவது சரணாகதி.

        ராமானுஜருக்கு இது தெரியும். திருக்கோட்டியூர் நம்பி தாமே முன்வந்து சரம சுலோகத்தின் உட்பொருளை உனக்கு விளக்குகிறேன் என்று சொன்னபோது நெகிழ்ந்து போய் விட்டார். என்ன கற்கிறோம் என்பதைக் காட்டிலும் யாரிடம் அதைக் கற்கிறோம் என்பதும் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது.

        கோட்டியூருக்குப் போகிற வழியில் ராமானுஜருக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. ஒரு சமயம் திருக்கோட்டியூர் நம்பியிடம் சீடரொருவர் கேட்டார், 'சுவாமி, நீங்கள் தினமும் தியானம் செய்கிறீர்கள். எதை நினைத்து தியானம் செய்வீர்கள்? உங்களுடைய தியான மந்திரத்தை எங்களுக்கும் சொல்லிக் கொடுக்கலாமே?'

        நம்பிகள் சிரித்தார். 'அப்பனே, என் ஆசாரியர் ஆளவந்தார் அடிக்கடி காவிரியில் குளிக்கப் போவார். அவருக்கு ரொம்பப் பிடித்த விஷயம் அது. நீரில் அமிழ்ந்து அவர் நீந்திச் செல்லும்போது அவரது முதுகு மட்டும் வெளியே தெரியும். நதிப்பரப்பில் ஒரு திடல் நகர்ந்து செல்வது போல இருக்கும். சம்சாரக் கடலில் மனித குலம் அப்படித்தான் ஒரு தக்கை போல மிதந்து நகர்ந்து கொண்டிருக்கிறது என்று சட்டெனத் தோன்றும். எனக்கு அந்த முதுகுத் திடலை நதிப்பரப்பில் பார்த்துக் கொண்டிருப்பது என்றால் ரொம்ப இஷ்டம். அதைத்தான் நான் தியானத்தின் போது நினைத்துக் கொள்வேன். தியான மந்திரமென்பது எனது ஆசாரியரின் திருப்பெயர்தான்!'

        எப்பேர்ப்பட்ட குரு! எக்காலத்துக்கும், எத்தலைமுறைக்குமான பேரனுபவமல்லவா இது! குருட்சேத்திரத்தில் அர்ஜுனனுக்குக் கிடைத்தது, ஆசாரியரின் வெற்று முதுகில் குருகைப் பிரானுக்கு வாய்த்திருக்கிறது! இங்கே தேரோட்டி இல்லை. தெளிய வைப்பவன் இல்லை. விஸ்வரூபம் காட்டி வியப்பூட்ட ஆள் இல்லை. சட்டென்று பொறி தட்டிய ஞானம். சிப்பிக்குள் உதித்த முத்தொன்று தானே உவந்து வெளிவந்து தனது பேரெழில் காட்டி நிற்கிற பரவசத் தருணம்.

        'நான் கொடுத்து வைத்தவன்!' என்று ராமானுஜர் தனக்குள் எண்ணிக் கொண்டார். நம்பிகளின் வீட்டை நோக்கி வேகவேகமாக நடந்தார்.
        வீட்டில் அவரது மகள் தேவகி இருந்தாள்.
        'அடியேன் ராமானுஜன் வந்திருக்கிறேன். நம்பிகளைச் சேவிக்க வேணும்.'

        'அப்பா மச்சில் தியானத்தில் இருக்கிறார். சற்றுப் பொறுங்கள். கேட்டு வருகிறேன்' என்று சொல்லிவிட்டு அவள் உள்ளே போனாள். சில நிமிடங்களில் திரும்பி வந்து, 'தங்களை அங்கே வரச் சொல்கிறார்!'

        ராமானுஜர் படியேறி மாடிக்குச் சென்றார்.
        'வாரும் ராமானுஜரே! சரம சுலோகப் பொருள் கேட்க வந்தீரா?'

        'ஆம் சுவாமி! தாங்கள் அன்று சொன்னதில் இருந்து வேறு நினைவே இல்லாதிருக்கிறேன்.'
        குருகைப் பிரான் கண்மூடி ஒரு நிமிடம் தியானத்தில் ஆழ்ந்தார். பிறகு எழுந்து சென்று அறைக்கதவைத் தாளிட்டார். ஜன்னல்களை மூடினார். எதிரே வந்து
        அமர்ந்து...

        'இது மூல மந்திரத்தைக் காட்டிலும் பரம ரகசியமானது. தயவுசெய்து கோபுரத்தில் ஏறி அறிவித்து விடாதீர்கள்!'

        'இல்லை சுவாமி, மாட்டேன்.

        'உம்மை நம்புகிறேன்!' என்று சொல்லிவிட்டு சரம சுலோகத்தின் ஆழ்ந்த உட்பொருள்களை ராமானுஜருக்கு விளக்கத் தொடங்கினார். கண்மூடிக் கரம் கூப்பிக் கேட்டுக் கொண்டிருந்த ராமானுஜரின் விழிகளில் இருந்து கரகரவென நீர் வழிந்தபடியே இருந்தது.

        பரமாத்ம சொரூபம் என்பது சிலைகளில் தென்படுவதல்ல. மனத்துக்குள் உணர்வது அல்ல. கற்பனை எல்லைகளுக்குள் அகப்படுவதல்ல.

        தத்துவ ஞானத் தேடல்களில் சிக்குவதல்ல. அது உருவமுள்ள காற்று. மை மறைத்த பெருவெளிச்சம். அண்டப் பெருவெளியெங்கும் தங்குதடையின்றிப் பொங்கிப் பரவுகிற பேரானந்தத்தின் ஊற்றுக்கண். உணர்வல்ல; அதற்கும் மேலே.

        அந்த சொரூபத்தின் பேரெழிலைத்தான் திருக்கோட்டியூர் நம்பி ராமானுஜருக்குக் காண்பித்தார். இந்தா எடுத்து விழுங்கு. இதனை நினை. இதனை மட்டுமே நினை. உன் நினைவில் நீ அடையும் சரணாகதி உன்னை அந்தச் சொரூபத்திடம் கொண்டு சேர்க்கும். பெறற்கரிய பேரானந்தம் என்பது அதுதான். உடலும் மனமும் உதிர்த்த நிலையில் உதிப்பது சரணாகதி. அது மட்டும்தான் உய்ய வழி.

        கரம் கூப்பி எழுந்து நின்றார் ராமானுஜர். 'சுவாமி, எப்பேர்ப்பட்ட அனுபவத்தை எனக்கு வழங்கி விட்டீர்கள்! என்னை நீர் ஏற்றது என் பேறு. ஆனால்...'

        'சொல்லும் ராமானுஜரே!'

        'கோபித்துக் கொள்ளாதீர்கள். இந்த அற்புதத்தை ஒரே ஒருவருக்காவது நான் சொல்லித்தர எனக்கு அனுமதி வேண்டும். பாகவத உத்தமனான கூரத்தாழ்வானுக்கு மட்டுமாவது...'
        ஒரு கணம் அவரை உற்றுப் பார்த்த குருகைப் பிரான் சட்டென்று சிரித்து விட்டார்.
        'உம்மைத் திருத்த முடியாது ராமானுஜரே! சரி, ஒரே ஒரு நிபந்தனை!' என்றார்.

        தொடரும்...
        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

        http://eegarai.org/apps/Kitchen4All.apk

        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

        Dont work hard, work smart

        Comment


        • #34
          Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

          மூன்று கர்வங்கள் ! 32

          திகைத்து விட்டான் கூரத்தாழ்வான். பேச்செழ வழியில்லாத திடுக்கிடல். நெடுநேரம் பிரமை பிடித்தாற்போல் எங்கோ பார்த்தபடி அப்படியே உறைந்து போய் நின்றிருந்தான்.

          'இதில் வருத்தப்பட ஏதுமில்லை கூரேசா! ஆசாரியர் நியமனம் என்னவோ அதைத்தான் நாம் கடைப்பிடித்தாக வேண்டும். மீறுவதற்கான நியாயம் இதில் சற்றும் இல்லை.'

          'புரிகிறது சுவாமி. ஆனால் ஒரு வருடம் என்றல்லவா சொல்லி விட்டார்!'

          ராமானுஜர் புன்னகை செய்தார். ஆம். ஒரு வருடம்தான். அப்படித்தான் குருகைப் பிரான் சொன்னார். கூரேசனுக்கு மட்டுமாவது சரம சுலோகத்தின் ஆழ்ந்த உட்பொருள்களைச் சொல்லி வைக்கிறேன் என்று அனுமதி கேட்டதற்கு அவர் விதித்த நிபந்தனைக் காலம் அது.

          ஒரு முழு வருடத்துக்குக் கூரேசன் ஆசாரிய சேவை புரியவேண்டும். இம்மியளவும் பிசகாத, இடைவிடாத சேவை. சரம சுலோகத்தின் அருமை புரிய மனம் ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பக்குவப்பட வேண்டும். தொண்டால் மட்டுமே அது சாத்தியம். ஊருக்குச் செய்ய வேண்டாம், வேறு யாருக்கும் செய்ய வேண்டாம். உமக்குச் செய்தால் போதுமானது என்றார் குருகைப் பிரான்.

          ஒரு வருடத் தொண்டு கூரேசனுக்கு ஒரு பெரிய விஷயமில்லைதான். தனது வாழ்வையே ராமானுஜரின் பாதங்களில் சமர்ப்பித்தவனுக்கு ஒரு வருடம் என்பது ஒன்றுமேயில்லைதான். ஆனால் ஓர் அற்புதத்தின் வாசல் திறக்க அந்த ஒரு வருட காலக் காத்திருப்பு கட்டாயம் என்னும்போதுதான் சங்கடமாகிப் போகிறது.

          'வேறு வழியில்லை கூரேசா. அதுதான் அவர் சொன்னது. அதைத்தான் நான் கடைப்பிடித்தாக வேண்டும். இந்த உபாயம்கூட இன்னும் முதலியாண்டானுக்குக் கிட்டவில்லை என்பதை எண்ணிப் பார்!'
          'இல்லை சுவாமி. நான் அதையெல்லாம் எண்ணவில்லை. ஆனால் நீங்கள் நினைத்தால் இதற்கொரு மாற்று வழி காண முடியாதா?'

          'அப்படி ஒன்று இருக்குமானால் முயற்சி செய்திருக்க மாட்டேனா?'

          கூரேசன் சற்றுத் தயங்கினான். 'உங்களுக்குத் தெரியாததல்ல. ஆசாரியர் இருப்பிடத்தின் வாயிலில் ஒரு மாத காலம் உபவாசமிருப்பது ஒரு வருடம் சிசுருஷை செய்ததற்குச் சமம் என்று நமது சாஸ்திரம் சொல்கிறது...'

          கூரேசன் பெரும் பண்டிதன். அவன் பயிலாத சாத்திரங்கள் இல்லை. எந்தத் தருணத்துக்கும் பொருத்தமான சாத்திர உதாரணங்களை அவனால் சட்டென்று எடுத்துக் காட்ட முடியும். இது ராமானுஜருக்கு நன்றாகத் தெரியும். எனவே குருகைப் பிரான் சொன்ன ஓராண்டு ஆசாரிய சேவைக்கு மாற்றாகக் கூரேசன் முன் வைத்த ஒரு மாத உபவாச யோசனை அவருக்குச் சரியாகப் பட்டது.

          'ஆனால் நான் பொறுமையின்மையால் இதனைக் கோரவில்லை சுவாமி! ஒரு வருடம் காத்திரு என்று நீங்கள் சொல்வீரானால் ஒரு வருட காலத்துக்கு இந்த உயிர் ஜீவித்திருக்கும் என்று நாமே நம்புவது போலாகிவிடும். நிச்சயமற்ற மனித வாழ்வில் ஒரு வருடத்துக்கு ஒன்றைத் தள்ளிப்போடுவது தங்களுக்கு உவப்பானதாக இருக்க முடியாது என்றே கருதுகிறேன்.'

          கூரேசன் குடும்பஸ்தன்தான். ஆனால் அவனது மனத்தூய்மையும் பற்றற்ற பெருவழிப் பாதைப் பயணமும் ராமானுஜர் அறியாததல்ல. பரமாத்ம சொரூபத்தை அறிவதிலும் அதிலேயே லயித்துக் கிடப்பதிலும் அவனுக்கிருந்த கட்டற்ற பேரவா ஒப்பீடற்றது. தமக்குக் கிட்டிய சரம சுலோக ரகஸ்யார்த்தங்கள் தனது சீடர்களில் ஒருவருக்காவது கிடைத்துவிட வேண்டும் என்று ராமானுஜர் எண்ணியபோது சட்டென்று கூரேசனின் நினைவு வந்தது அதனால்தான்.

          'சரி சுவாமி! நான் இன்று முதலே எனது உபவாசத்தைத் தொடங்கி விடுகிறேன். ஒரு மாத காலம் என் நாவில் நீரும் படாது. உமது திருமாளிகை வாசலில் இச்சென்மம் பழி கிடக்கும்.'
          வணங்கி எழுந்து வாசலுக்குப் போய்விட்டான் கூரேசன்.

          மடத்தில் இருந்த அத்தனை பேரும் இதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். முதலியாண்டானுக்குப் பெரும் வருத்தமாகிப் போய்விட்டது.

          'சுவாமி, எனக்கு சரம சுலோகத்தின் ஆழ்பொருள் அறியும் யோக்கியதை இல்லையா? நான் அத்தனை பெரிய பாவியா?'

          'அப்படி இல்லை தாசரதி! நீ என் உறவுக்காரன். அந்தப் பாசத் தடுப்பு நம் இருவருக்குமே இருந்துவிடக் கூடாது. சரம சுலோகம் அறிய அபாரமான நிஷ்டை நியமங்கள் தேவையென்று திருக்கோட்டியூர் நம்பி கருதுகிறார். என் உறவினன் என்ற ஒரே காரணம் பற்றி உனக்கு நான் இதனை இப்போது போதித்து
          விட்டால் அதன் மதிப்பு அர்த்தம் இழந்து போய்விடும்.'

          'புரிகிறது சுவாமி.'

          'என்னைக் கேட்டால் நீ திருக்கோட்டியூர் நம்பியிடம் தனியே செல். அவரது தாள் பணிந்து அவரையே உனக்கு போதிக்கச் சொல்லுவதுதான் சரி. அவர் உன்னை ஒப்புக்கொண்டுவிட்டால் அதற்குமேல் ஒன்றுமே இல்லை.'

          'அப்படியே ஆகட்டும் சுவாமி!' என்று அன்றே புறப்பட்டான் முதலியாண்டான்.

          இதற்குள் ராமானுஜர் திருக்கோட்டியூர் நம்பியிடம் கேட்ட சரம சுலோக ரகஸ்யார்த்தங்களைத் தாமும் பெறுவதற்காகக் கூரேசனும் முதலியாண்டானும் மேற்கொண்டிருக்கும் முயற்சி ஊரெல்லாம் பரவிவிட்டது. திருவரங்கத்தில் ராமானுஜர் தங்கியிருந்த மடத்தின் வாசலில் கூரேசன் அன்ன ஆகா
          ரமின்றித் தவமிருப்பதைப் பார்க்க மக்கள் வந்தபடி இருந்தனர்.

          அது திருவரங்கம் அதுவரை காணாத காட்சி. எப்படிப்பட்ட குரு! எப்பேர்ப்பட்ட சீடர்! ஒழுக்கத்தின் உயர்கல்வி என்பதை இவர்களிடம் அல்லவா பயில வேண்டும்! பரவசப்பட்டுப் போனார்கள்.

          ராமானுஜரின் எதிர்ப்பாளர்களுக்கு இது இன்னும் ஆத்திரத்தைக் கிளப்பியது. என்ன பெரிய சரம சுலோகம், என்ன பெரிய உபவாசம்! வழி வழியாக வந்த நடைமுறைகளை மதிக்கத் தெரியாத கூட்டத்துக்கு இதிலென்ன ஒழுக்க வேஷம்?

          இங்கே அவர்கள் பொருமிக்கொண்டிருந்தபோது அங்கே திருக்கோட்டியூரில் முதலியாண்டான் நம்பியின் வீட்டைச் சென்றடைந்தான்.

          'வாரும். என்ன சேதி?'

          'சரம சுலோக ரகஸ்யார்த்தங்களைத் தங்களிடம் அறிய வந்திருக்கிறேன் சுவாமி! கருணைகூர்ந்து என்னைக் கடாட்சித்து அருள வேண்டும்.'ஒரு கணம் அவனை ஏற இறங்கப் பார்த்தார் திருக்கோட்டியூர் நம்பி.

          'மூன்று கர்வங்கள் உனக்கு இருக்கின்றன. குலம், கல்வி, செல்வம் சார்ந்த கர்வங்கள். இந்த மூன்றையும் உதறித் தள்ளிவிட்டு எம்பெருமானைச் சரணடைகிற வழியைப் பார். அவரே உனக்கு வழி காட்டுவார்.' என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார். உடல் நடுங்க, கூப்பிய கரங்களை எடுக்கவும் தோன்றாமல் முதலியாண்டான் அங்கேயே ஆணியடித்தாற்போல நின்றிருந்தான். அவன் கண்கள் மட்டும் கதறிக் கொட்டிக் கொண்டிருந்தன.

          தொடரும்...


          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

          http://eegarai.org/apps/Kitchen4All.apk

          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

          Dont work hard, work smart

          Comment


          • #35
            Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

            தொண்டில் தோய்ந்தவன் !33

            நேரே போய்க் கதவைத் தட்டி என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கைகூப்பி நின்றிருந்தால் விஷயம் வேறு. முடியாது என்றவரின் நியாயங்களை எண்ணி மனத்தைத் தேற்றிக் கொண்டிருக்கலாம்.

            முதலியாண்டான் அப்படிச் செய்யவில்லை. அவனுக்கு முறை தெரியும். தனது விருப்பமும் அதன் அசாத்தியத்தன்மையும் எப்பேர்ப்பட்டவை என்பதை வெகு நன்றாக அறிந்தவன் அவன். போராடித்தான் திருக்கோட்டியூர் நம்பியின் மனத்தைக் கவர வேண்டும் என்பதை உணர்ந்தேதான் திருவரங்கத்தில் இருந்து கிளம்பிச் சென்றிருந்தான்.

            கோயில் மண்டபத்தில் தங்கிக் கொண்டான். தினமும் காலை குளித்தெழுந்து சௌமிய நாராயணப் பெருமாளைச் சேவித்துவிட்டு நேரே ஆசாரியரின் வீட்டுக்குப் போய்விட வேண்டியது. அவர் ஒன்றும் கேட்கவும் மாட்டார், சொல்லவும் மாட்டார். அங்கேயே ஒரு ஓரமாக நின்றுகொள்ள வேண்டியது. எடுபிடி வேலைகளுக்கு இதோ நான் இருக்கிறேன் என்று முந்திக்கொண்டு ஓடுவான். தொண்டைக் காட்டிலும் உளத்துாய்மைக்குச் சிறந்த உபாயமில்லை என்பது அவனுக்குத் தெரியும்.

            இந்நாள்களில் திருக்கோட்டியூர் நம்பியின் சீடர்கள் அனைவருக்கும் அவன் நெருங்கியவனாகிப் போனான். அவரது குடும்பத்து உறுப்பினர்களுக்கு முதலியாண்டான் வேண்டப்பட்டவனானான். ஊரில் இப்போது அவனைத் தெரியாதவர்கள் கிடையாது. நம்பியின் சீடர்களுள் ஒருவன் என்றே அவர்கள் எண்ணத் தொடங்கிவிட்டார்கள்.

            ஒருநாள் இருநாள் அல்ல. ஆறு மாதங்கள். ஒரு தவமே போல நம்பிக்கு சிசுருஷை செய்து கொண்டிருந்த முதலியாண்டானிடம் அதன் பிறகுதான் நம்பி வாய் திறந்தார். 'யாரப்பா நீ? என்ன வேண்டும் உனக்கு?' முடியாது என்று ஒரே சொல்லில் குருகைப் பிரான் மறுத்திருந்தால் அதோடு முடிந்திருக்கும். அவரது சுபாவம் அதுதான்.

            திருமந்திர விளக்கம் கேட்கப் போன ராமானுஜருக்கே பதினேழு முறை அதுதான் அவரது பதிலாக இருந்தது. 'இன்னொரு சமயம் பார்ப்போம்.' இதற்கெல்லாம் காரணமே கேட்க முடியாது. அவர் அப்படித்தான்.ஆனால், முதலியாண்டானை அவர் மறுத்தபோது அதனைச் சொன்னார். 'உமக்கு மூன்று கர்வங்கள் இருக்கின்றன. கல்வி சார்ந்த கர்வம்.

            செல்வம் குறித்த கர்வம். குலத்தைப் பற்றிய கர்வம். இதனை முதலில் ஒழித்துவிட்டு உட்காரும். எம்பெருமானே நல்ல வழி காட்டுவான்.'ஒருவகையில் முதலியாண்டானின் ஞானக் கண் திறந்த தருணம் அது. ஆறு மாத சேவைக்குக் கிடைத்த மாபெரும் பரிசு அந்த போதனைதான். சரம சுலோக விளக்கமல்ல. வேறு எதுவுமல்ல. கர்வம் களையச் சொன்ன உபாயம்.எனக்கு அந்த கர்வங்கள் இருக்கிறதா என்ன?

            முதலியாண்டானுக்குச் சற்று வியப்பாகத்தான் இருந்தது. உண்மையில் கிடையாது. அவன் மனத்தில் மிச்சம் இருந்த ஒரே பெருமிதம், தாம் ராமானுஜரின் உறவினன் என்பது மட்டுமே. உடையவரின் மிக நெருங்கிய சீடன் என்னும் பெருமிதம்தான் அவனது கல்வி, செல்வ, குல கர்வங்களாக மூன்று வடிவங்களில் உருண்டு திரண்டிருந்தன.

            திருக்கோட்டியூர் நம்பி எடுத்துச் சொல்லாவிட்டால் கடைசி வரை அது புரியாமலே போயிருக்கும். நல்லது. ஆறு மாத சேவையின் பலன் ரகஸ்யார்த்தங்கள் அல்ல. ஒரு சுட்டிக்காட்டல். பெரிதுதான். ஒரு விதத்தில் ரகஸ்யார்த்தங்களை விடவுமே.இல்லை என்று தெரிந்த கணத்தில் முதலியாண்டானுக்குக் கண்ணில் நீர் கோத்துவிட்டது என்றாலும் அவன் அதைத் தோல்வியாக உணரவில்லை.

            அது ஒரு தருணம். ஞானத்தின் வாசல் திறந்த தருணம். உள்ளுக்குள் அமைதி கண்டு ஒடுங்கி நிற்கிற தருணம். அடைய நினைக்கிற அனைத்தையும் அடைவதற்கு, விலகி நிற்கப் பயில வேண்டுமென்ற பெரும் பாடம் புரிந்த தருணம். சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான் முதலியாண்டான்.

            அதற்குமேல் ஒன்றும் பேசாமல் திருக்கோட்டியூர் நம்பியின் வீட்டில் இருந்து கிளம்பி விட்டான்.இப்போது அவன் மாறியிருந்தான். மகத்தான பெரும் மாற்றம். தனது பிழை புரிந்த மாணவன் அதைக் களைவதிலேயே கவனம் காட்டுவான். முதலியாண்டான் ஒரு மிகச் சிறந்த மாணவன். உள்ளுக்குள் மறைந்திருந்த ஒரு பெரும் ஊற்றின் கண்ணியை நம்பிகள் சுட்டிக்காட்டி விட்டார். இனிக் குடைந்து வெளியே தள்ள வேண்டியதுதான்.

            திருவரங்கம் வந்து சேர்ந்த முதலியாண்டான் நடந்த கதையை ராமானுஜரிடம் விவரித்தான்.'எனக்கு ரகஸ்யார்த்தம் கேட்கத் தகுதி வரவில்லை சுவாமி! தகுதியை வளர்த்துக்கொண்டு உங்களிடமே மீண்டும் கேட்பேன்.''என்னிடமா! ஆனால் எம்பெருமானே உனக்கு வழி காட்டுவான் என்றல்லவா குருகைப் பிரான் சொல்லியனுப்பியிருக்கிறார்?

            'முதலியாண்டான் புன்னகை செய்தான். 'உங்களை அவர் எம்பெருமானாரே என்று அழைத்ததை மறந்துவிட்டீர்களா சுவாமி? எனக்கு நீங்கள்தான் அவன்!' என்று தாள் பணிந்தான்.வெளியே ஏதோ சத்தம் கேட்டது. யாரோ அழுகிற சத்தம். நாலைந்து பேர் சமாதானப்படுத்துகிற சத்தம்.'யார் அங்கே?' என்றார் ராமானுஜர். அத்துழாய் கண்ணைக் கசக்கிக்கொண்டு உள்ளே வந்தாள்.

            'அட, வா அத்துழாய்! எப்படி இருக்கிறாய்? உன் புருஷன் சுகமா? புகுந்த வீட்டுப் பெரியவர்கள் நலமா?' பாசம் பொங்கக் கேட்டார் ராமானுஜர். அத்துழாயை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். அவள் பெரிய நம்பியின் மகள். துறுதுறுவென்று ஓரிடத்தில் கால் பொருந்தாமல் ஓடிக் களித்துக் கொண்டிருந்த குழந்தை. சட்டென்று ஒருநாள் மணமாகிப் புகுந்த வீடு போய்விட்டவள்.

            இதோ இன்று மீண்டும் வந்து நிற்கிறாள். ஆனால் கண்ணில் எதற்கு நீர்?'அழாமல் என்ன செய்வேன் அண்ணா? என் திருமணத்துக்கு அப்பா உரிய சீர் செய்யவில்லையாம். அவரால் என்ன முடியும் என்று தெரிந்துதானே சம்பந்தம் செய்தார்கள்? அதை அவர்கள் நினைத்துப் பார்ப்பதே இல்லை.

            தினமும் என் மாமியார் எதையாவது சொல்லி குத்திக்காட்டிக் கொண்டே இருக்கிறார்!''அடடா..!''நேற்றைக்கு ஆற்றுக்குக் குளிக்கப் போகும்போது துணைக்கு வருகிறீர்களா என்று சாதாரணமாகத்தான் கேட்டேன். அதற்குப் போய் நான் என்ன உன் வேலைக்காரியா என்று சத்தம் போட்டு விட்டார்.

            ''அட நாராயணா!''அப்பாவை எப்படியெல்லாம் இழித்தும் பழித்தும் பேசுகிறார்கள் தெரியுமா? என்னால் தாங்க முடியவில்லை. உனக்குத் துணைக்கு ஆள் வேண்டுமென்றால் உன் அப்பனை ஒரு வேலைக்காரி பார்த்து அனுப்பி வைக்கச் சொல் என்று சொல்கிறார்கள்.'சீதன வெள்ளாட்டி என்பார்கள். பெண்ணுக்கு மணம் முடித்து அனுப்புகிறபோது உதவிக்கு ஒரு வேலைக்காரியைச் சேர்த்து அனுப்புகிற வழக்கம் இருந்த காலம்.'இது ஒரு பிரச்னையா? நீ கிளம்பு அத்துழாய். உன் சீதன வெள்ளாட்டியாக இந்த முதலியாண்டான் உன்னோடு வருவார்!' என்றார் ராமானுஜர்.

            தொடரும்...
            என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

            http://eegarai.org/apps/Kitchen4All.apk

            http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

            Dont work hard, work smart

            Comment


            • #36
              Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

              பந்தார் விரலி! 34

              மடத்தில் இருந்தவர்கள் திகைத்து விட்டார்கள். முதலியாண்டான், அத்துழாய்க்கு சீதன வெள்ளாட்டியா? பெரிய நம்பியே இதனை ஒப்புக்கொள்ள மாட்டாரே?

              'இல்லை ஓய். அத்துழாய் சின்னப் பெண். அவளை சமாதானப்படுத்துவதற்காக ஜீயர் சுவாமிகள் அப்படிச் சொல்லியிருக்கிறார். வேறு ஏதாவது ஏற்பாடு செய்வார், பொறுத்திருந்து பாரும்!''பாவம், சின்னப் பெண் என்று பாராமல் மாமியார் வீட்டில் படுத்துகிறார்கள் போலிருக்கிறது. பெரிய நம்பிக்குத் தெரிந்தால் ரொம்ப வருத்தப்படுவார்.'அவர்கள் பேசிக்கொண்டிருந்த இடத்துக்கு சட்டென்று அத்துழாய் வந்து நின்றாள்.

              'நான் ஊருக்கு வந்தது இன்னும் அப்பாவுக்குத் தெரியாது. வீட்டுக்கே இன்னும் நான் போகவில்லை. அண்ணாவைப் பார்த்து விவரத்தைச் சொல்லிவிட்டு அதன்பின் தேவைப்பட்டால் அப்பாவைப் பார்க்கப் போகலாம் என்றிருந்தேன். வந்த காரியம் முடிந்து விட்டதால் இப்படியே ஊருக்குத் திரும்பி விடலாம் என்று பார்க்கிறேன்.' என்று சொன்னாள்.

              அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பதிலேதும் சொல்லாமல் முதலியாண்டானை நெருங்கி, 'என்ன நடக்கிறது இங்கே? நீங்களா இந்தப் பெண்ணுடன் வேலைக்காரனாகப் போகப் போகிறீர்கள்?''ஏன், அதிலென்ன பிழை? இது என் ஆசாரியர் உத்தரவு. யோசிக்க என்ன இருக்கிறது?

              ''அதில்லை சுவாமி... தாங்கள் போய் இந்தச் சிறுமிக்கு…''இவள் சாதாரண சிறுமி இல்லை ஐயா. ராமானுஜருக்கு ஒரு சமயம் கோதைப் பிராட்டியாகவே காட்சி கொடுத்தவள். பெரிய நம்பியைக் கேட்டுப் பாருங்கள். கதை கதையாகச் சொல்லுவார்!'அவர்களுக்கு அப்போதும் ஒன்றும் புரியவில்லை. அத்துழாய், கோதையானாளா? அது எப்போது? 'ஓய், வேஷமிட்டிருப்பாள் குழந்தை. அதைச் சொல்கிறார் இவர்.'

              'இல்லை ஐயா. அது வேடமில்லை. தோற்றமோ, தோற்ற மயக்கமோ இல்லை. அது ஒரு நிலை. எனது ஆசாரியரின் பரம பக்தியின் உச்ச நிலை ஒருநாள் அத்துழாயைக் கோதையாக்கிவிட்டது.''சுத்தம். ஒன்றுமே புரியவில்லை ஐயா!'முதலியாண்டானுக்குப் புன்னகை வந்தது. எண்ணிப் பார்க்கும்தோறும் சிலிர்ப்பூட்டுகிற நினைவுகள் எத்தனை எத்தனை!அப்போது ராமானுஜர் திருவரங்கத்துக்கு வந்து சேர்ந்திருந்த புதிது.

              பெரிய நம்பி அவருக்குப் பாடம் சொல்ல ஆரம்பித்திருந்த சமயம். ஆளவந்தாரின் நுால்களில் இருந்துதான் அவர் ஆரம்பித்திருந்தார். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகப் பிரபந்தப் பாசுரங்கள்.துறவு இலக்கணப்படி ராமானுஜர் வீடு வீடாகச் சென்று பிட்சை எடுத்தே உண்பார். அப்படிப் பிட்சைக்குச் செல்கிற நேரம், உண்ணுகிற நேரம் தவிர மற்றப் பொழுதனைத்தும் பெரிய நம்பியுடனேயேதான் இருந்தார்.

              நம்பியின் மகன் புண்டரீகாட்சனுக்கும், மகள் அத்துழாய்க்கும் அவர் பிரியத்துக்குரிய அண்ணா. ஜீயர் அண்ணா. ராமானுஜர் வீட்டுக்கு வரும்போதெல்லாம் அத்துழாய்க்கு சந்தோஷம் பிடிபடாது. மணிக்கணக்கில் அவரோடு பேசிக் கொண்டிருப்பாள். ஒரு ஞானத் திருவிளக்கு தன் வீடு தேடி வந்திருக்கிறது என்பது அவளுக்குத் தெரியாது. அவரது ஆளுமையின் பிரம்மாண்டம் தெரியாது. அவரது பக்தியின் ஆழம் தெரியாது.

              அவரது அறிவின் வீச்சு தெரியாது. ஒன்றும் தெரியாது. ராமானுஜர் அவளது அண்ணா. சமத்து அண்ணா. நல்ல பேச்சுத்துணை. சிரிக்கச் சிரிக்கப் பேசி மகிழ வைக்கிற அண்ணா. என்னமோ காரணத்தால் வீடு வீடாகப் போய் பிட்சை எடுத்துச் சாப்பிடுகிறார். ஆனால் ஊரே அவரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடுகிறது. எனவே அண்ணா ரொம்பப் பெரிய ஆள்தான் என்று எண்ணிக் கொண்டிருந்தாள். அன்றைக்கும் ராமானுஜர் பிட்சைக்குக் கிளம்பினார்.

              நாளுக்கொரு வீதி. வீதிக்கொரு பாசுரம். உதடுகள் உச்சரித்துக் கொண்டே இருந்தாலும் உள்ளம் அரங்கனின் பாதாரவிந்தங்களில் மட்டுமே நிலைத்திருக்கும். பிட்சைக்குக் கிளம்பி, பாட ஆரம்பித்துவிட்டால் ராமானுஜருக்கு உலகம் மறந்து விடும். பாசுரங்களின் பொருளோடு இரண்டறக் கலந்து தன்னை இழந்து விடுவார்.அன்று அவர் பாடியபடி நடந்தபோது, குறுக்கே பந்தோடு ஓடி வந்தது ஒரு விளையாட்டு குழந்தை.

              அது அத்துழாய். அது பெரிய நம்பியின் வீடிருந்த வீதியேதான்.திருப்பாவையின் பதினெட்டாவது பாசுரமான 'உந்துமதகளிற்றன்' அவரது உதடு திறந்து உதித்துக் கொண்டிருந்தது. அதிலே ஒரு வரி, 'பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாட' என்று வரும். 'செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய்' என்று முடித்திருப்பாள் ஆண்டாள்.

              ராமானுஜர் பந்தார் விரலியைப் பாடி வந்த சமயம் செந்தாமரைக் கையில் சீரார் வளையொலிக்க அத்துழாய் பந்தோடு குறுக்கே ஓடி வந்ததும் அவருக்குப் புல்லரித்துப் போய்விட்டது. அவர் கண்ணுக்கு அவள் அத்துழாயாகத் தெரியவில்லை. ஆண்டாளாகவேதான் தெரிந்தாள்.

              'ஆஹா, என்ன தவம் செய்துவிட்டேன்! உன்னைத்தானே அம்மா எண்ணிக்கொண்டே வருகிறேன். என்னைப் பார்க்க நீயே வீதிக்கு வந்துவிட்டாயா? இச்சிறியவன்மீது அப்படியொரு கருணையா?'பரவசத்தில் கண்கள் நீர் சொரிய, நடுச்சாலையில் அவள் பாதங்களைத் தொட்டு அப்படியே விழுந்து சேவித்தார். மயக்கமாகிப் போனார்.

              திகைத்து விட்டாள் அத்துழாய். 'ஐயோ அண்ணா, என்ன காரியம் இதெல்லாம்? அப்பா... அப்பா...' என்று அழைத்தபடியே வீட்டுக்குள் ஓடினாள்.'என்ன அத்துழாய்?''பிட்சைக்குப் போய்க் கொண்டிருந்த ஜீயர் அண்ணா என் காலில் போய் விழுந்து விட்டார் அப்பா. என்ன ஆகிவிட்டது அவருக்கு? ஓடி வந்து பாருங்களேன்!'

              பெரிய நம்பி அவள் கையில் வைத்திருந்த பந்தைப் பார்த்தார். ஒரு கணம் கண்மூடி யோசித்தார்.'ம்ம்... ராமானுஜர் உந்துமத களிற்றன் பாடிக்கொண்டு வந்தாரோ?''ஆமாம் அப்பா. உங்களுக்கு எப்படித் தெரியும்?'புன்னகையுடன் எழுந்து வீதிக்கு வந்தார் பெரிய நம்பி.

              மயக்கமுற்றிருந்த ராமானுஜரைத் தெளிவித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்று அமர வைத்தார்.'உம்மைப் போல் திருப்பாவையில் கரைந்து போகிற பாக்கியம் எனக்கென்று இல்லை; யாருக்குமே வாய்க்கவில்லை ராமானுஜரே. ஓதுவதும் உணர்வதுமா பக்தி? வரிகளின் வீரியத்தில் தன் வசமிழந்து போகிறீர் பாரும். அதுதான் ஐயா பக்தி! நீர் வெறும் ஜீயரல்லர். இன்றுமுதல் நீர் திருப்பாவை ஜீயர்! என்றார் 'கரம் கூப்பி நின்றார் ராமானுஜர்.

              'நீர் பிட்சைக்குச் சென்று கொண்டிருக்கிறீர். வழியில் நான் உள்ளே இழுத்து வந்துவிட்டபடியால் வெறும் கையுடன் அனுப்ப முடியாது. ஒரு நிமிடம் பொறுங்கள்' என்றவர் தன் மகன் புண்டரீகாட்சனையும் அத்துழாயையும் அழைத்து ராமானுஜரின் கரங்களில் ஒப்படைத்தார்.

              'உம்மைக்காட்டிலும் ஓர் உயர்ந்த ஆசாரியர் எனது குழந்தைகளுக்கு வாய்க்க மாட்டார். இனி இவர்கள் உம் பொறுப்பு!' என்றார்.முதலியாண்டான் இச்சம்பவத்தை நினைவு கூர்ந்து அவர்களிடம் சொன்னபோது அவர்கள் வாயடைத்துப் போனார்கள். 'ஐயா, ஆண்டாளாகவே என் ஆசாரியருக்குத் தோன்றியவளுக்கு சீதன வெள்ளாட்டியாகப் போவது என் பாக்கியமல்லவா?' என்று கேட்டான்.

              தொடரும்...


              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

              http://eegarai.org/apps/Kitchen4All.apk

              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

              Dont work hard, work smart

              Comment


              • #37
                Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

                சமையல்காரன்!35

                காலை எழுந்தவுடன் வாசல் பெருக்க வேண்டும். பிறகு ஆற்றுக்குச் சென்று நீர் எடுத்து வருதல். வீடு பெருக்கிச் சுத்தமாக்கிய பிறகு துணிமணிகளைத் துவைத்துப் போட வேண்டும். சமையலறை சார்ந்த நானாவித காரியங்கள். மழைக்குக் குடை. பசி நேரத்துக்கு உணவு. வாழ்வினுக்கு எம்பெருமானாரின் திவ்ய நினைவுகள்.

                முதலியாண்டான் அத்துழாயின் புகுந்த வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து மாதங்கள் ஓடிவிட்டன.
                அவளது மாமியாருக்குப் பெரிய திருப்தி. அப்படி வா வழிக்கு. சொல்லிக் காட்டினால்தானே காரியம் நடக்கிறது? இல்லாவிட்டால் அந்தப் பெரிய நம்பியிடம் இருந்து எதைப் பெற முடிகிறது?அவர்களுக்கு முதலியாண்டான் யார் என்று தெரியாது. அவனது புலமை தெரியாது. தெளிவுகளும் தீர்மானங்களும் தெரியாது. ஒரு தவமாக ஏற்று அவன் அத்துழாயின் இல்லத்தில் சேவைபுரிய வந்ததன் பின்னணி தெரியாது.

                அவனுக்கென்ன அதனால்? பணியில் இழிவென்று எதுவும் இல்லை. தவிரவும் அது குரு உத்தரவு. குருகைப் பிரான் சொன்னதை அடிக்கடி எண்ணிப் பார்த்துக் கொள்வான். மூன்று ஆணவங்கள். பிறப்பால், கல்வியால், செல்வத்தால் வருகிற சிக்கல்கள். எண்ணிப் பார்த்தால் ராமானுஜர் மிகச் சரியான பணியைத்தான் கொடுத்திருக்கிறார் என்று தோன்றியது.

                மூன்றையும் மொத்தமாகக் களைய இது ஓர் உபாயமல்லவா? மகா பண்டிதனானாலும் மடைப்பள்ளி உத்தியோகத்துக்குக் கைப்பக்குவமே முக்கியம். அள்ளிப் போடுகிற உப்புக்கும் மிளகுக்கும், கிள்ளிச் சேர்க்கிற வாசனாதி திரவியங்களுக்கும் அவனது படிப்பு முக்கியமல்ல. பதமே பிரதானம். நிதானம் அதனினும் முக்கியம்.அத்துழாய்க்கு ஒரு கவலை விட்டது.

                மாமியாரின் வாயை அடைத்தாகிவிட்டது. இனி அவளால் என்ன பேச முடியும்? முதலியாண்டானின் பணி செய்யும் வேகம் எண்ணிப் பார்க்க இயலாததாக இருந்தது. எதையும் சொல்லி முடிப்பதற்குள் செய்து முடிக்கிற வித்தகன் அவன். தவிரவும் ஓய்வுப் பொழுதில் எத்தனையோ நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கிற ஆசிரியராகவும் விளங்குகிறவர்.

                ஜீயர் அண்ணா அனுப்பிய ஆள் என்றால் சும்மாவா? ஒருநாள் வீட்டுக்குச் சில பண்டிதர்கள் வந்திருந்தார்கள். அத்துழாயின் மாமனாருக்கு வேண்டப்பட்டவர்கள். வால்மீகி ராமாயணத்தில் கரை கண்டவர்கள் என்று வீட்டில் பேசிக் கொண்டார்கள்.'ஓய் தாசரதி! விருந்து தடபுடலாக இருக்கவேண்டும். வந்திருக்கிறவர்கள் மகா பண்டிதர்கள். காலட்சேபம் முடிந்ததும் இலை போட்டாக வேண்டும்!' என்று சொல்லிவிட்டு அவர்களோடு உட்கார்ந்து விட்டார் அத்துழாயின் மாமனார்.

                குடும்பமே கூடத்தில் இருந்தது. வந்த பண்டிதர்கள் ராமாயணம் சொல்ல ஆரம்பித்தார்கள்.சமையலறையில் முதலியாண்டான் வேலையை ஆரம்பித்தான். காது மட்டும் வெளியே இருந்தது. உபன்னியாசத்தைக் கேட்டுக்கொண்டே வந்தவனுக்கு ஓரிடத்தில் சுருக்கென்றது. பண்டிதரானவர் வால்மீகி முனிவரின் ஒரு குறிப்பிட்ட பாடலுக்குத் தவறான பொருள் சொல்லிக் கொண்டிருந்தார்.

                அது ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் பெருமைக்குக் களங்கம் சேர்க்கும் விதமான பொருளாக இருந்தது. தாங்க முடியவில்லை அவனால். கதவோரம் வந்து நின்று கவனிக்க ஆரம்பித்தான். உதடு துடித்தது. ஆனால் அவர்களிடம் எப்படிச் சொல்லுவது? இது அபசாரம். மிகப்பெரிய பாவம். ஒரு தவறான பொருள் நாலு பேருக்குப் பரவினால் அது அவ்வண்ணமே நாநுாறு பேருக்குப் போய்ச் சேரும். நாநுாறு நாலாயிரமாகும்.

                மேலும் பரவும்.தாங்க முடியாமல் மெல்ல விசும்பினான்.சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த அத்துழாயின் மாமனாருக்கு ஒன்றும் புரியவில்லை. 'என்ன ஆயிற்று தாசரதி? ஏன் அழுகிறீர்?''தாங்க முடியவில்லை சுவாமி. மகாகவி வால்மீகியின் சுலோகங்களுக்கு இச்சபையில் மிகத் தவறான பொருள் தரப்பட்டுக் கொண்டிருக்கிறது.'அதிர்ந்து விட்டார்கள் வந்திருந்த பண்டிதர்கள். 'ஓஹோ. சமையல்காரனுக்கு சாஸ்திரம் தெரியுமோ? எங்கள் விளக்கத்தில் குற்றம் கண்டுபிடிக்கும் அளவுக்கு நீர் தேர்ச்சி பெற்றவரோ?

                ''நான் அற்பன் ஐயா. ஆனால் எனது ஆசாரியர் ஓர் ஞானக்கடல். அதன் ஓரத்தில் நின்று கால் நனைத்தவன் அடியேன். அதனால்தான் பிழை பார்த்தபோது பதைத்துவிட்டது. தவறாக எண்ணாதீர்கள்.''எங்கே, சொல்லுங்கள் பார்ப்போம்! நீர் சொல்லும் விளக்கத்தை நாமும் கேட்போம்!'

                முதலியாண்டான் ராமானுஜரை மனத்தில் வேண்டிக்கொண்டு குறிப்பிட்ட சுலோகத்தின் பொருளைத் தாம் அறிந்தவாறு எடுத்துச் சொன்னான். திகைத்துப் போனது கூட்டம். பண்டிதர்களுக்குப் பேச்செழவில்லை. 'இது மகாபாவம் ஐயா. இப்பேர்ப்பட்ட ஞானஸ்தனை நீர் உமது சமையற்காரனாக வைத்திருப்பது பெரும்பிழை. நரகத்தில்கூட உம்மை நுழையவிட மாட்டார்கள் பார்த்துக் கொள்ளுங்கள்!' என்று சொல்லிவிட்டு எழுந்து போய் விட்டார்கள்.

                திகைத்துப் போனது அத்துழாயின் குடும்பம்.'ஐயா, உண்மையைச் சொல்லும். நீங்கள் யார்?' அப்போதுதான் முதல் முறையாகக் கேட்டார் அத்துழாயின் மாமனார்.'அவர் பெயர் முதலியாண்டான். என் ஜீயர் அண்ணாவின் சீடர்!' என்றாள் அத்துழாய்.கலவரமாகிப் போய் தடாலெனக் காலில் விழுந்தார் அந்த மனிதர்.

                'மன்னித்து விடுங்கள் சுவாமி! உங்கள் தகுதி தெரியாமல் நடந்துகொண்டு விட்டோம். நீங்கள் கிளம்பி விடுங்கள். இனியும் எங்கள் இல்லத்தில் நீங்கள் சமைத்துக் கொண்டிருப்பது தகாது.

                ''சாத்தியமில்லை ஐயா. இது என் குருவின் உத்தரவு. அவர் சொல்லாமல் நான் இங்கிருந்து நகர மாட்டேன். தவிர, ஒரு சீதன வெள்ளாட்டி வராத காரணத்தால்தானே பெரிய நம்பியின் குழந்தை இங்கே சீண்டப்பட்டது? அத்துழாயின் நிம்மதியும் மகிழ்ச்சியும் எனக்கு முக்கியமானது. நான் பண்டிதனானால் என்ன? என் சமையல் ருசிக்கிறதல்லவா? அதை மட்டும் பாருங்கள்.'

                'முடியவே முடியாது. இது எங்களது பாவக்கணக்கைக் கூட்டும் ஐயா. நீங்கள் இந்தப் பணியைச் செய்ய வேண்டாம்.''என் குரு சொல்லாமல் நான் நிறுத்த மாட்டேன்' என்று முதலியாண்டான் சொல்லி விட்டதால் அந்த மனிதர் தலைதெறிக்க திருவரங்கத்துக்கு ஓடினார்.

                ராமானுஜரைக் கண்டு நெடுஞ்சாண்கிடையாக விழுந்தெழுந்தார். 'பெரிய மனசு பண்ணுங்கள் சுவாமி! முதலியாண்டானைத் திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள்!

                இனி பெரிய நம்பியின் மகளுக்கு எமது இல்லத்தில் எந்தக் குறையும் இராது. அதற்கு நான் உத்தரவாதம்.'ராமானுஜர் புன்னகை செய்தார். 'என்ன அத்துழாய், முதலியாண்டானை நானே திரும்ப அழைத்துக் கொள்ளட்டுமா?'

                'ஓ! நீங்கள் என்ன செய்தாலும் சரிதான் அண்ணா' என்றாள் அத்துழாய்.தமது மூன்று கர்வங்களும் அழியப்பெற்ற முதலியாண்டானுக்கு அதன்பிறகு ராமானுஜரே ரகஸ்யார்த்தங்களை போதித்தார்.

                தொடரும்...


                என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                http://eegarai.org/apps/Kitchen4All.apk

                http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                Dont work hard, work smart

                Comment

                Working...
                X