Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    Courtesy: http://thiruppugazhamirutham.blogspo...012/09/80.html
    5 முத்தைத்தரு
    முத்தைத்தரு பத்தித் திருநகை
    அத்திக்கிறை சத்திச் சரவண
    முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
    முக்கட்பர மற்குச் சுருதியின்
    முற்பட்டது கற்பித் திருவரும்
    முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்
    பத்துத்தலை தத்தக் கணைதொடு
    ஒற்றைக் கிரிமத்தைப் பொருதொரு
    பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
    பத்தற்கிர தத்தைக் கடவிய
    பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
    பட்சத்தொடு ரட்சித் தருள்வது மொருநாளே
    தித்தித்தெய ஒத்தப் பரிபுர
    நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
    திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாட
    திக்குப்பரி அட்டப் பயிரவர்
    தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
    சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்
    கொத்துப்பறை கொட்டக் களமிசை
    குக்குக்குகு குக்குக் குகுகுகு
    குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
    கொட்புற்றெழ நட்பற் றவுணரை
    வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
    குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே.


    பதம் பிரித்தல்


    முத்தை தரு பத்தி திரு நகை
    அத்திக்கு இறை சத்தி சரவண
    முத்திக்கு ஒரு வித்து குருபர என ஓதும்


    முக்கண் பரமற்கு சுருதியின்
    முற்பட்டது கற்பித்து இருவரும்
    முப்பத்து மூ வர்க்கத்து அமரரும் அடி பேண


    பத்து தலை தத்த கணை தொடு
    ஒற்றை கிரி மத்தை பொருது ஒரு
    பட்ட பகல் வட்ட திகிரியில் இரவாக


    பத்தற்கு இரதத்தை கடவிய
    பச்சை புயல் மெச்ச தகு பொருள்
    பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு நாளே ?


    தித்தித்தெய ஒத்த பரிபுர
    நிர்த்த பதம் வைத்து பயிரவி
    திக்கு ஒட்க நடிக்க கழுகொடு கழுது ஆட


    திக்கு பரி அட்ட பயிரவர்
    தொக்கு தொகு தொக்கு தொகுதொகு
    சித்ர பவுரிக்கு த்ரி கடக என ஓத


    கொத்து பறை கொட்ட களம் மிசை
    குக்கு குகு குக்கு குகுகுகு
    குத்தி புதை புக்கு பிடி என முது கூகை


    கொட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை
    வெட்டி பலி இட்டு குலகிரி
    குத்துப்பட ஒத்து பொர வ(ல்)ல பெருமாளே.


    பத உரை




    சுருக்க உரை
    வீட்டுப்பேற்றை அளிக்கும், வரிசையாகப் பற்களை உடையவளும்,
    யானையால் வளர்க்கப்பட்டவளுமாகிய தேவசேனைக்கு இறைவனே,
    சத்தி வேலைத் தாங்கிய சரவணனே, முத்திக்கு ஒரு வித்தே, ஞான
    குருவே என்று துதித்து நின்ற, முக்கண் பரமனாகிய சிவ
    பெருமானுக்குப் பிரணவப் பொருளைக் கற்பித்தவரே. பிரமன்,
    திருமால் ஆகிய இருவரும், முப்பத்து மூன்று தேவர்களும் உனது
    திருவடியைப் போற்றி விரும்ப அவுணருடன் போர் செய்தவரே.


    இராவணனுடைய பத்துத் தலைகளைச் சிதறும்படி அம்பைச்
    செலுத்தியவரும், மந்தர மலையை மத்தாகநட்டு கடலைக் கடைந்த வரும்,
    பகலைத் தனது சக்கரத்தால் இரவாக்கியவரும், அருச்சனனுடைய தேரைச்ஓட்டியவரும் பச்சை நிறமுடையவரும் ஆகிய திருமால் மெச்சிய மருகனே. என்மீது அன்பு வைத்து என்னைக் காத்து அருளுவதும் ஒரு நாள் ஆகுமோ?தாளத்துக்கு ஒத்தவாறு பதத்தை வைத்து, பயிரவி சுழன்று நடிக்கவும் கழுகுகள், பேய்கள் ஆடவும், எட்டுத் திக்குப் பயிரவர்கள் மண்டலக் கூத்து ஆடவும், பறைகள் முழங்க போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள்ஓலமிடவும், அசுரர்களைவெட்டி, கிரௌஞ்ச மலை பொடி ஆகும்படி போர் செய்த பெருமாளே. என்னைக்காத்தருளுவதும் ஒருநாள் உண்டாகுமோ?



    விரிவுரை குகஸ்ரீ ரசபதி
    குரு வடிவாய் நின்ற குமரா, வழிபடும் முறையை வகை பெறக் காட்ட விசனார்உம்மை வலம் வந்தார். இந்த கிரியைக் கண்ட கிரியாசக்தி புனித ஒலி எழபுன்னகை செய்தனள். அரிய அவ்வொலி தொந்த பந்தங்களை தொலைப்பது, அன்பு வாழ்வை அதுளுவது பயனாக அருளைப் பாலிப்பது. அருமையான இந்தஉதவியை அறிந்து, முத்தை தரு பத்தி திரு நகை அத்தி என்று முன்னுரைகூறினார் சிவனார்.
    முத்தம் முத்தி இரண்டும் விடுதலை எனும் பொருள் உள. அம்முத்திக்கு வழிஅன்பு. அந்த அன்பை அளiப்பது பேரருள். நலமெல்லாம் விளைவிக்கும் அந் நகைநலத்தை இப்படி பாடி மகிழ்ந்தார் பரமேசர். திரு தரும் நகை, பத்தி தரும் நகை, முத்தி தரும் நகை என்று கொண்டு கூட்டி பொருள் கொள்ளப் பெற்றது.
    பத்தி - வரிசை, திரு - அழகு, நகை - பல் எனக் கொண்டு முத்துக்களைவரிசையாகக் கோர்த்து வைத்தது போன்று பற்களை உடைய தேவகுஞ்சரிமணவாளா எனப் பொருள் கொளல் பொது நிலை. இது சிவனார் திருவாசகம். ஆதலின் அருளும், அன்பும், வீடும் தரும் நகை புரி தேவி மணவாளா என்றுபொருள் சிறப்பு நிலை.
    குருவான உன் திருவுருவில் கரந்து கலந்து இருக்கிறார் யோக தேவியார். - தேவியோடு இருந்தே யோகம் செய்வானை - எனகிறது தேவாரம். உமதுஇடத்தில் இருப்பது கிரியா சக்தி. வலத்தில் இருப்பது இச்சா சக்தி. கரத்தில்இருப்பது ஞானா சக்தி.
    ச - மங்களம், ர - ஈகை, வ - அறம், ண - மறம். இந்த அனுபவ ரூபம். சத்திச்சரவண எனப் பெறுகிறது. முத்தி தரும் முதலாளiயாதலின் உம்மை முத்திக்கு ஒருவித்து என்று பாடுவது தான் முறை.
    பரம் - மேலிடம், கு - அஞ்ஞானம், ரு - மெய் ஒளி. இருள் தவிர்த்து மேலிடம் காட்டிஅருள் ஒளiயில் அளவளாவச் செய்யும் குறிப்பான ரூபம் குரு மூர்த்தம். அந்தஅருமையை உலகு அறிய குருபரா என்று சிறக்க விளiத்தார சிவபிரான் வரன்முறையாக ஓதி வலம் வந்த பின் பின் தாழ் முன் தாழ் சடையாக வணங்கிநின்றார் முக்கணர்.
    வேத முதலான ஞான உயிர்ப்பை ஓதாது ஓதுவதன் மூலம் கருணையோடுஅவருக்குக் கற்பித்தீர். சுருதியின் முற்பட்டது கற்பித்த அக்கல்வியே கல்விஎனப்பெறும்.
    தனக்குத் தானே மகனாகியதத்துவன் தனக்குத் தானே ஒரு தாவரும்குருவுமாய் தனக்குத் தானே உயர் தத்துவம்கேட்டலும் தனக்குத் தானே நிகரிலான் தழங்கு நின்று ஆடினான் என்று இவ்வரலாற்றை கூறுகிறது தணிகை புராணம்.
    ஐந்தெழுத்துப் பரம்பரை சிவம் என்று அறிந்திருந்த உலகம் இந்த உபதேசத்தின்பின் ஓரெழுத்துப் பரம்பரையையும் உணர்ந்து கொண்டது. இது ஒரு திரேதா யுகசெய்தி.
    ஒரு சமயம் அரக்கர் கொடுமை உலகில் அதிகரித்தது. அதனால் அமரர்அலறினர். நாவரண்டு உலகம் நடுங்கியது. இந்திரனும் பிரமனும் வைகுண்டம்சென்றனர். முகுந்தா அபயம் என முறையிட்டனர். உடனே திருமால்அயோத்தியில் இராமனாக அவதரித்தார். அரக்கர் பூண்டைக் கருவறுத்தார். இராவணனது தலைகள் பத்தையும் அறுத்துத் தள்ளiனார். உலகம் அதன் பின்உய்தி கண்டது. பத்துத் தகை தத்தக் கணை தொட்ட இது திரேதா யுக வரலாறு.
    மற்றொரு சமயம் அசுரர் பலம் அதிகரிக்க இமையவர் வாழ்வு இடிந்து சரிந்தது. ககன உலகர் கதறினர். அது கண்ட அச்சுதர் மந்திர மலையைத் தூக்கினார். இனிய பாற்கடலில் இட்டார். அம்மலை கடலில் அழுந்தி போகாமல் இருக்ககூர்மாவதாரம் கொண்டார். முன்னேறி வந்தார். மலையை முதுகால்தாங்கினார். கடைந்த பின் தௌiந்த அமுதம் திரண்டது. வானவர்களுக்குவழங்கி வாழ்நாளும் வல்லமையும் பெருகுமாறு அவர்கட்கு வாழ்வைஅளiத்தார். ஒற்றைக்கிரி மத்தைப் பொருது இது ஒரு யுகத்தின் இறுதிச் செய்தி.
    துவாபர யுக காலம் தோன்றியது. அதன் இறுதியில் தர்மம் அதர்மத்தைத்தாக்கியது பாண்டவர் பக்கம் தர்மம். கௌரவர் பக்கம் அதர்மம்.அதுகாரணமாக பாரதத்தில் நிகழ்ந்தது பயங்கர யுத்தம். 13 ம் நாள் சண்டையில்சூழ்ச்சி பயங்கரமாக சுழித்தது. வீர அபிமன்யுவை ஜெயத்திரதன் கோர யுத்தம்செய்து கொன்றான். அதை அறிந்த அர்ச்சுனன் நாளைய போரில் சூரியன்அஸ்தமிப்பதற்கு முன் ஜெயத்திரதனைக் கொல்வேன் இல்லையேல் பெரும்நெருப்பில் வீழ்வேன் என பிரதிக்ஞை செய்தான். அதைக் கேள்வியுற்றகௌரவர்கள் மறுநாள் போரில் ஜெயத்திரதனை பாதாள அறையில் பதுக்கினர். அன்று இரு தரப்பிலும் கோடிக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். மாலை மணி4. உருமியது வானம். விருவிரு என்று பொழுது விரைந்தது. அஸ்தமித்தான்சூரியன். எங்கும் இருள் எழுற்தது. பிரதிக்ஞை தவறியது. இனி ஆயுதம் தொடேன்என்றான் தனஞ்சயன்.
    அவன் இட்ட கட்டளையின் படி வானளாவி நெருப்பு வளர்ந்தது. நீராடினான், ஈரத்துணியுடன் அண்ணனை வணங்கினான், கண்ணனைப் பார்த்து கைதொழுதான். அது கண்டு தர்மன் அழுதான். பீமன் குமரினான். பாண்டவரின்படை பதறி கதறி கலங்கியது. வாக்குத் தவறியவர்கள் உலகில் வாழ்வதுபாவம். அதனால் விரைந்து தீயில் விழப் போகிறேன். அதனால் எவரும் வருந்தவேண்டா என்று கூடி குமுறுவாரைக் கும்பிட்டான். தீயை வலம் வரலாயினன்.
    ஐயோ எனும் அலறல். திடுக்கிட்டான். திரும்பி நோக்கினான். தாரை தாரையாககண்ணீர் ஒழுக ஓடி வந்து கண்ணன் காண்டடீபனைக் கட்டி தழுவி கதறினான். தனஞ்சயா, நேற்று மகனை இழந்த சுபத்திரை இன்று மணாளனை இழக்கப்போகிறாள். அவளுக்கும் என் மகளுக்கும் எப்படியடா ஆறுதல் சொல்லப்போகிறேன். சொன்னால் நீ கேட்க மாட்டாய். ப்ரதிக்ஞை உனக்குப் பெரிது. உன்போலும் வீரர்களை இனி உலகில் பார்க்க முடியாது.
    தேரில் ஏறு. காண்டடீபத்தை எடு. கணைனைத் தொடு. நாணியைக் காதளவில்இழு. மைத்துனா, அப்பா, கம்பீரமான உன் வீரக் கோலத்தை கடைசியாகஒருதரம் என் கண்கள் காணக் காட்டு. அதன் பின் நீ தீ குளி என்று கதறுகிறார்கண்ணபிரான்.
    ஆதி மாரவனின் அலறல் விஜயனின் மனதில் இரக்கத்தை விளைவித்தது. மலர்முக நகை புரியும் மாமா, அழுகை என்றும் நீர் அறியாதவர். எனக்காகவாஅழுகிறீர். சரி, முதலில் உமது கருத்தை நிறைவேற்றுகிறேன். அதன் பின் என்ப்ரதிக்ஞை நிறைவேறும் என சொல்லிக் கொண்டே தேரில் ஏறினான். கண்ணன்எண்ணிய படி காண்டடீபத்தை எடுத்தான். கணையைத் தொடுத்தான் வில்லைவளைத்து வீராவேசம் காட்டினான்.
    உரும் ரும் ம் என்று விண் அதிர்ந்தது. அதிர்ச்சிக்குக் காரணம் ஆரம்பத்தில்தெரியவில்லை. என்ன அதிசயம். பளiச் சென்று வானத்தில் வெளiச்சம்எழுந்தது. இருள் அழிந்தது. பட்டப் பகலாய் பிரகாசித்தது பருதி மண்டலம். கனவா நனவா நாம் காண்பது என்று யாவரும் அதிசயத்தனர்.
    அர்ச்சுனன் மரணம் காண ஆவலுற்று இருந்த கூட்டம் அது கண்டு அஞ்சியது. எங்கும் கலகலப்பு எழுந்தது. விஜயா , இன்னும் சூரியன் அஸ்தமிக்கவில்லை. தெரிகிறதா. ஒளiந்திருந்த ஜெயத்திரதன் நீ தியில் விழுவதைக் கண்டு களiக்கவீராப்புடன் யானை மேல் அதோ விளங்குகிறான் பார். வீழ்த்து அவன் தலையைஎன்று கோர ஆவேசம் காட்டி கொக்கரித்தான் கோபாலன்.
    உடனே காண்டடீபன் விட்ட கணை ஜெயத்திரதன் தலையை அறுத்தது. உருண்டுவிண்ணில் அத்தலை எங்கேயோ ஜெபம் செய்து கொண்டிருந்த விருத்தசேத்ரன்மடியில் வீழ்ந்தது. அவன் திடுக்கிட்டு எழுந்தான். தடம் புரண்டு நிலத்தில்விழுந்தது தலை. அப்போதே அவன் தலையும் வெடித்தது. என்ன சேதி இது?. என்மகன் தலையை நிலத்தில் உருள விடுபவன் எவனோ அவன் தலைவெடிக்கட்டும் என்று ஜெபம் செய்து கொண்டிருந்தான் பிதா. அவ்வினைக்குஇவ்வினை என்று மாண்டு இருவரும் மண்ணாயினர். இதுவரை வரலாற்றைஎவரும் அறிந்துளர். உயர்ந்த மேலோர் மற்றொரு செய்தியையும்உணர்ந்திருந்தனர். துரியன் சதி உணர்ந்த கண்ணன் மாபெரும் பருதியைமறைக்க நினைத்தான். அதைf உணர்ந்தான் ஆதித்தன். கண்ணா, என்னை நீசிறையில் இட்டால் உன் மனைவி, மகனை, மருமகனை சிறையில் இடுவேன்நான் என்று சீறினான். தர்ம சங்கடமான சூழ்நிலை தான். வருவது வருக. மயிருக்கு மிஞ்சிய கருப்பில்லை. மாச்சானுக்கு மிஞ்சிய உறவில்லை என்றுஎண்ணிய மாதவன் சக்கரத்தை ஏவினான். விண்ணில் விரைந்து அது மாபெரும்சூரிய மண்டலத்தை மறைத்தது. ஆத்திரம் கொண்டு ஆதித்தன் மேற்சொன்னதிருமகளுக்கும், கலைமகளுக்கும், பிரம்ம தேவருக்கும் உரித தாமரைமாளிகையை மூடி தாளிட்டான்.
    சூரியனுக்கு விடுதலை கிடைத்தது. வெளிப்பட்ட அவன் மாளிகைகளானகமலங்களை மலரச் செய்தான் என்று பாவலர்கள் இவ்வரலாற்றைப் பாடியுளர். அகில உலகிற்கும் ஆக்கம் அளiக்க 10 அவதாரங்களைச் செய்த பக்தவச்சலர்அருளே உருவானவர் என்பதை அவர் கார் மேகத் திருமேனியே காட்டுகின்றது. பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப் பத்தற்கிரதத்தைக் கடவியபச்சைப்புயல் ஆன திருமால் உம்மை என்றும் ஊன்றி உணர்பவர். அண்டத்தும்பிண்டத்தும் உமது அருள் ஆடல்கள் பலப் பல. பிண்டத்துள் மும்மலங்கள், காமக்குரோதங்கள் ஆகிய களங்கங்கள், அண்டத்தில் அவைகள் அசுரப் பெருக்கமாகிஆர்ப்பரிக்கும். 1008 அண்டங்களை அடக்கி 108 யுகங்கள் வரையிலும் சூரனும்சிங்கனும் தாருகனும் அவுணர்களுடன் உலகத்தை படாத பாடு படுத்தினர்.
    அதுகண்டு சொரூப நிலையிலிருந்து உதயமானீர். உத்தமர்களைதாழ்த்தியவர்கள் வாழ்வதில்லை. அதை அறிவுறுத்த தூது போக்கினீர். இணங்காத அவுணர்களை எதிர்த்தீர். அழித்தீர். அண்டத்தில் ஆர்ப்பரித்தஅகங்காரக் கண்டனம் இது. புறம் தூய்மையானால் போதுமா? அகம் தூய்மைஆக வேண்டாமா?
    பிண்டத்தில் இருக்கும் உயிர்கள் முருகா, குமரா, குகா என்று கூவிமுறையிட்டால், ஜெபித்தால், தியானித்தால் அரிய உபதேச வழியால்ஆணவத்தை அடக்கி மாயையை மடக்கி கன்மத்தை எரித்து ஆன்மாக்களைக்காப்பாற்றும் உம்மை காப்புக்கடவுளான திருமால் மகிழ்ந்து பாராட்டிப்போற்றுகிறார். அப் பச்சைப்புயல் மெச்சத் தகு பரம் பொருளே, சற்கருமஉயிர்களை என்றும் காக்கும். அது போல அடியேனையும் ஆட்க்கொண்டுகாக்கும் நாள் என்றேயோ என்று அலறியபடி.

    திரு நடராஜன் அவர்களின் கருத்து.
    அருணகிரி, பாடு எம்மை என்றான் குமார பரமன். பாடிப் பழக்கம் இல்லையேஎன பதை பதைத்தார் முனிவர்.
    முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொருவித்துக் குருபர என ஓதும் முக்கட் பரமர் என்று அடி எடுத்துக் கொடுத்தார்ஆறுமுகப் பரமன்.அதன் பின் ஞான வாணி நாவில் நடனமிட பாடித் தொடர்ந்துபாட்டை முடித்தார் பாவாணர் என்று வரலாறு கூறுபவர் பலர் உளர்.
    இவ்வரலாறு மெய்யாமேல், முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச்சரவண முத்திக்கொரு வித்துக் குருபர என்பது வரை சிவ வாசகம். முத்தைத்தருபத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபரஎன ஓதும் முக்கட் பரமர் வரை முருகன் திருவாசகம். பின்னைய பகுதிகள்அருணகிரியாரின் சிந்தனைச் செய்திகள். இச் செய்தியின்படி மூவர் திருவாக்கே இம் முதல் பாடல் என்று ஆழ்ந்து ஓதி இத்திருப்புகழை எவரும்அனுபவிக்கலாம் அல்லவா



    எங்கள் கோணத்திலிருந்து

    குருவருளின் மகிமை சொல்லில் அடங்காதது. குருவானவர் மௌனத்தினால் மானஸ தீட்சையும், கண்களால் நயன தீட்சையும், திருவடியால் ஸ்பரிச தீட்சையும் தருகிறார் என்று ஆன்றோர்கள் கூறுவார்கள். மானஸ தீட்சையின் போது குருவாகவும், நயன தீட்சையின் போது தேசிகனாகவும், திருவடி தீட்சையின் போது ஆசார்யனாவாகும் விளங்குகிறார் என்றும் கூறுவது உண்டு. முத்தைப் போன்ற இந்த திருப்புகழில் சரவணபவன் அருணகிரிக்கு எல்லாமாகவும் இருக்கிறார், ‘முத்தைத்தரு’ என்ற சொல்லை உபதேசித்து, பின்னாளில் ‘வாக்குக்கோர் அருணகிரி’ என்று பெயரும் புகழும் நிலை பெறச் செய்யப் போகிறவர்.
    இது ஒரு உபதேசத் திருப்புகழ் ஆதலால், சிவபெருமான் தனயனிடம் உபதேசம் பெற்ற நிகழ்வையே முதன் முதலாக பாடுகிறார். ‘உ’ பிரவண மந்திரத்தின் ஒரு எழுத்தின் காக்கும் எழுத்தாகும். ‘ம’ என்ற மெய்யெழுத்துடன் ‘உ’ என்ற பிரவண மந்திரத்தின் ஒரு பகுதியை இணத்து, உலகையெல்லாம் காக்கும் கடவுள் (பெருமாள்) என்று குறிப்பால் உணர்த்துகிறார். மேலும் ‘தாயின் சிறந்ததொரு கோயிலுமில்லை’ என்ற செம்மொழிக்கேற்ப ‘முத்தம்மை’ என்ற தன் தாயின் பெயரையும் வைத்து ஆரம்பிக்கிறார். காக்கும் கடவுள் ஆனதால், கிரியா சக்தியின் மகத்துவம் விளங்க வேண்டும். ஆகையால் கிரியா சக்தியான தெய்வயானை அம்மையின் சிறப்புடன் முன் மொழிகிறார் என்றும் சொல்லலாம்.
    முத்தைப் போன்று ஒளிகின்ற அளவான பல்வரிசை தெரிய இள நகை புரியும் தெய்வயானை அம்மையின் தலைவனே, சக்தி வேலாயுதம் தாங்கிய சரவணபவனே, மோட்சமாகிய வீட்டை அடைய மூலமாகி விளங்கும் குருபரனே என்று அழைக்கப்படுகிறார் பாட்டின் அடி எடுத்துக் கொடுத்தவர்.
    அழைப்பவர் வேறு யாருமல்ல. சூரியன், சந்திரன், அக்கினியை மூன்று கண்களாகக் கொண்ட முக்கட் பரமன்தான். பரமசிவனுக்கு சரவணபவன் சுருதியின் முற்பட்டதும் வேதங்கட்கும் முன்பானதாக இருக்கும் ஒன்றை உபதேசிக்கிறார். மந்திர உபதேசம் என்பது குருவுக்கும் சாதகனுக்கும் இடையே இரகசியமாக இருப்பதாகும். அதனால் பிரவணத்தைச் சுருதியின் முற்பட்டது என்கிறார் (மற்றவர்களால் கேட்க முடியாதது என்றும் அர்த்தம் கொள்ளலாம்) அப்பேற்பட்ட ஒரு கடவுளை புகழாதவர்களும் உண்டோ?. பிரமனும், விஷ்ணுவும், முப்பத்து முக்கோடி தேவர்களும் கூட அடி பணிகின்றனர்.


    அடுத்து வரும் சில அடிகளில் சூர ஸம்ஹாரத்தை லயமிக்க சந்தத்துடன் விவரிக்கிறார். சூரன் என்ற தத்துவம் இங்கே ஒர் உருவகம் மட்டுமே. கந்த புராணத்தில் மட்டுமில்லாது, பதினெண் புராணங்களிலும் பொதுவானதொரு அம்சம் தெய்வீக சக்தி அசுர சக்தியை வெல்வதுதான். அசுர சக்தி என்பது மனிதனை அவனிருக்கும் நிலையை விட கீழே கொண்டு செல்கிறது. அதை அழித்தால் மனிதன் தெய்வத் தன்மை அடைகிறான். இங்கு சூரன் என்ற அரக்கன் “நான்-எனது” என்ற மலங்களுக்குத் துணை செல்பவன். அவனைப் போன்ற அவுணகர்கள் நட்பு அற்றவர்கள். அன்பு என்றால் என்னது என்பதே தெரியாதவர்கள். க்ரௌஞ்ச மலையைப் போல் இறுகியவர்கள். உக்ர காளிக்கும், பேய்களுக்கும், கழுகளுக்கும் உணவாகப் போகிறவர்கள். அவர்களை அழித்தால்தான் மும்மலங்கள் நீங்கிய மனத்தில் இறைவனின் உபதேசம் என்கின்ற மந்திரம் மனத்தை தூய்மையாக்கி தெய்வம் குடி கொள்ள ஏற்ற இடமாக மாறும்.


    அவுணர்களை போர் செய்து அழித்த முருகன் மாமனாகிய ஸ்ரீமன் நாராயாணனுக்கு மிகப்பிரியமானவன். ( மெச்சத்தகு பொருள்). திருமாலின் மூன்று அவதாரங்களை மூன்றே வரிகளில் மிக அழகாகக் கூறுகிறார்.
    பத்துத்தலை தத்தக்கணை தொடு – இது ஒரு வில்லால் இராவணனை வதைத்த இராமவதாரம்: வட இந்தியர்களால் “மரியாதா புருஷோத்தம்” என்று மிக்க மரியாதையுடன் அழைக்கப் படும் இராமனை “ஒரு இல், ஒரு வில் ஒரு சொல்” உடையவன் என்று கம்பன் விளித்தார். அருணகிரிநாதரும் ‘கணைகள்’ என்றல்லாமல் கணை என்று குறிப்பிடுகிறார். அதாவது ஒரே கணையால் பத்துத் தலைகளையும் கொய்தவன் என்று பொருள்.
    ஒற்றைக் கிரி மத்தைப் பொருதொரு - ஒப்பற்ற மந்தர மலையை மத்தாக்கிப் பாற்கடலைக் கடைந்த கூர்மாவதாரம்.
    பட்டப்பகல் வட்டத்திகிரியில் இரவாக பத்தற்கிரதத்தைக் கடவிய - பகல் பொழுதை (சூரியனை) மறைத்து, இரவு ஆகச் செய்து, தன் பக்தனாகிய அருச்சுனனைக் காப்பாற்றி அவனுக்கு தேரையும் ஓட்டிய கிருஷ்ணாவதாரம். அந்த அவதாரம் செய்தவர் பச்சைபுயல் மரகத வண்ணனான கண்ணன். இது ஒரு உபதேசத் திருப்புகழ் என்பதற்கேற்ப கண்ணனின் அவதாரத்தைப் பாடுகையில், அருணகிரிநாதர் நமக்கு உணர்த்தும் (மிக ஆழமாகப் பொதிந்துள்ள) பொருளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த புருஷோத்தமன்‘பத்தற்கு’ (அர்ச்சுனனுக்கு) இரதத்தைக் கடவிய போதுதான் பகவத் கீதை என்னும் பரம உபதேசத்தையும் அருளினான். வேதத்தை மறை என்றும் கூறுவார்கள். கண்ணன் அர்ச்சுனனுக்கு உபநிடத்தின் சாரமான கீதையை எடுத்துக் கூறினான் என்பதை இந்த வரியில் வெளிப்படையாகக் கூறாமல் மறைத்துக் கூறியுள்ள அருணகிரிநாதரின் கவித்துவத்தை என்னவென்று சொல்வது.!


    திருமாலின் திருமருகனாம் முருகன் அன்புடன் ‘என் பக்கம் ( பட்சத்துடன்) என்னை காத்து அருளும் நாளும் உளதோ?’ என இவ்வழகிய திருப்புகழை முடிக்கிறார்.
    இவ்வழகிய திருப்புகழை நாம் வேறொரு கோணத்திலும் காணலாம். நினைந்து நினைந்து அகமகிழ வேண்டிய கருத்தாகும்.
    கோயில்களில் எல்லாம், பிரதான கடவுளை விளிக்கும் பொழுது, தேவியின் பெயரை முதலில் சொல்லி அவளுடனுறை என்று தமிழிலோ அல்லது இன்னார் ஸமேத என்று ஸம்ஸ்க்ருதத்திலோ சொல்லக் கேட்டிருக்கிறோம். கேட்டிருக்கிறோம் என்ன, அதுதான் முறை, வழக்கமும் கூட. அருணகிரியார் இவ்வழக்கத்தை முறை பிறழாமல், “முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கு இறையே” என்று, தெய்வயானை முன் வைத்து முருகனை அழைக்கிறார். அவள்தான் அவனுடைய சக்தி. அதாவது க்ரியா சக்தி.


    மஹாவிஷ்ணுவின் கண்களிலிருந்து ஸுந்தரவல்லியுடன் தோன்றிய அமிர்தவல்லி, பெயருக்கேற்ப, அமுதமுண்ட தேவர்கள் உறையும் இந்த்ரலோகத்தில் இந்திரனாலும் அவனுடைய யானையாகிய ஐராவதத்தாலும் முறையாக வளர்க்கப் பட்டவள். அவள் தேவ கன்னிகை. ஆக, சூரப்த்மனால் தேவர்கள் பட்ட கொடுமையை பக்கத்திலிருந்து பார்த்தவள். அதே சமயம் அத்தை மகன் ரத்தினத்தின் (வேறு யார்? நம் முருகன் தான்) மீது ஆராத காதல் கொண்டாள். அரசிளங்குமரி அல்லவா? அவளுக்கென்று ஒரு கவுரவம் அல்லது PROTOCAL உண்டே! ஆகவே சட்டென்று தன் காதலை வெளியிட முடியவில்லை. அத்தையின் சிபாரிசால், வேலாயுத்தில் தன் சக்தியெல்லாம் திரட்டி அவனிடம் கொடுக்கச் செய்தாள். சூரனைக் கொல்வதற்கு திரையின் பின்னால் இருந்து கொண்டு அவனுக்கு கிரியா ஊக்கி ஆனாள். அவுணரை ஸம்ஹரித்த பின்னர் முறையாக, இந்திரனால் தாரை வாக்கப்பட்டு வேத மந்த்ர கோஷங்களுடன் ஊரறிய உலகறிய ஸுப்ரஹ்மண்யனுக்கு தர்மபத்தினியானாள். எங்கேயும் எதிலும் அவள் பேசி நாம் கண்டதில்லை, கேட்டதில்லை. வட்டார வழக்கில் சொல்வதென்றால், “ இந்த சிறுக்கி (சிறுவனுக்குப் பெண்பால்) அமுக்கமாக இருந்து, என்ன காரியம் பண்ணியது பாத்தீயகளா? அந்த ஆண்டிப் பயலையே வளைச்சு போட்டுகிடுச்சே” என்றுதான் கூற வேண்டும்.


    ஹாஸ்யத்தை விட்டு மீண்டும் அருணகிரிக்கு வருவோம். முத்தைப் போன்ற பல்வரிசையில் நகையொளியை பரப்பும், அத்தி(யானை)யால் வளர்க்கப்பட்ட தேவயானையின் தலைவனே என்று முதலடியில் முருகனை அழைக்கிறார். யானை என்று சொல்லும்போதே அண்ணனான யானைமுகனையும் நாம் நினைவு கொள்கிறோம். எனினும் நம் ஒருமுனைப்பாடெல்லாம் தேவயானையிலேயே இருக்கிறது.
    அவள் பல்வரிசை வெண்மையாக இருப்பது என்பது சத்வ குணத்தைக் குறிக்கிறது. முக்தியை விரும்பும் சாதகன் ஒருவன் மற்ற குணங்களை ஒழித்து சத்வகுணத்தில் நிலை கொள்ள வேண்டும்.
    அவளுடை புன்முறுவல் பளீரென ஒளிவிடுகிறது. ஒளி உள்ள இடத்தில் இருளாகிய அஞ்ஞானத்திற்கு என்ன வேலை? ஆக, அவள் நம்மை சத்வகுணமுள்ளவர்களாக்கி அஞ்ஞானத்தை அகற்றுகிறாள் என்று கூறலாமா?
    ஏனெனில், “முத்தைத் தரு பத்தித் திருநகை” என்பதற்கு முக்தியைத் தருவதான பக்தி நிறைந்த திருநகை என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா? அப்படிப்பட்ட பக்தியை, அன்பை, காதலை நமக்கும் அருளும் திருநகை என்று கூட விரித்துக் கொள்ளலாம். இவ்வாறு நாங்கள் கூறவில்லை, ரா. கணபதி கூறுகிறார்.





    விளக்கக் குறிப்புகள்
    முத்தைத்தரு.... தேவசேனையை முத்தி தரு மாது என்பர்.
    வித்துக் குருபர என ஓதும்.... இப்பாடல் அருணகிரிநாதருக்கு முருக வேள் அடிஎடுத்துக் கொடுத்து, ...வித்துக் குருபர என்று ஓதுவாயாக என்றுகூறியதாகவும் பொருள் கொள்ளலாம்.
    அட்டப் பயிரவர்.... அசிதாங்கன், காபாலி, சண்டன், உருகு, குரோதன், சங்காரன், பீடணன், உன்மத்தன் என்போர்.
    Last edited by soundararajan50; 09-04-17, 05:56.
Working...
X