Announcement

Collapse
No announcement yet.

வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுக&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!! மனம் உருகுக&



    வெண்ணெய் வீசுகிறாள் தாயார்....!!!
    மனம் உருகுகிறார் அரங்கன்.............!!!
    (பங்குனி உத்திரம் 9.4.17)

    வருடத்தின் 365 நாட்களில், 322 நாட்களும் உத்ஸவம் காணும் பெருமாள், ஸ்ரீரங்கத்து அரங்கன்தான்!

    காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுக்கு நடுவே பிரமாண்டமான ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீஅரங்கனுக்கு விழாக்களும் பிரமாண்டமாக நடைபெறுகின்றன.

    அவற்றில் மிக முக்கியமான பெருவிழா, பங்குனி உத்திரத் திருவிழாதான்!

    அட... வைகுண்ட ஏகாதசி முதலான எண்ணற்ற விழாக்கள் சிறப்புற நடைபெறும் ஸ்ரீரங்கம் ஆலயத்தில், பங்குனி உத்திர நன்னாள்தான் முத்தாய்ப்பான விழாவா என ஆச்சரியம் மேலிடுகிறதுதானே?!

    ஸ்ரீபிரம்மாவே கொண்டாடிய முதல் உத்ஸவம், பங்குனி உத்திரத் திருவிழா என்கிறது ஸ்தல புராணம். அதனால்தான், இந்த விழாவை, ஆதிபிரம்மோத்ஸவம் எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர், ஸ்ரீரங்கம் வாழ் பக்தர்கள்.

    பங்குனி உத்திர விழாவின் இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா? பெருமாளுக்கும் தாயாருக்கும் இடையே ஊடல் நிகழ்ந்து, பிறகு இருவரும் இணைந்தது ஒரு பங்குனி உத்திர நன்னாளில்தான்! அதுமட்டுமா? ஸ்ரீராமானுஜர், பெருமாளின் திருவடியை அடைவதற்காகத் தேர்வு செய்ததும் இந்தப் புண்ணிய நாளைத்தான்.

    பெருமாளுக்கும் தாயாருக்கும் ஊடல் என்பதை ஏதோ கணவன்-மனைவி சண்டையாகப் பார்க்கக்கூடாது. அது, ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே நடைபெறுகிற பாசப் போராட்டம் என்பார்கள், ஆன்மிகச் சான்றோர். அதாவது, மனைவி என்பவள் ஜீவாத்மா. ஜீவாத்மாவைத் திருப்திப்படுத்துதல் என்பது இயலாத காரியம்.

    எனவே, ஜீவாத்மாவான மனைவியும், பரமாத்மாவான கணவனும் தங்களுக்குள் நிகழ்கிற ஊடல்களைப் பெரிதுபடுத்தாமல், அனைத்தையும் மறந்து, அனுசரித்து இணைந்து வாழ்ந்தால்தான் பேரின்பத்தை அடைய முடியும் எனும் உயரிய தத்துவத்தை விளக்குகிறது இது.

    திருச்சியில் உள்ள உறையூர் நகரைத் தலைமை யிடமாகக் கொண்டு ஆட்சி செய்தான் சோழ மன்னன் ஒருவன். அவனுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அந்தக் குறையைப் போக்க, ஸ்ரீமகாலட்சுமி கமல மலரில் அவதரித்த தலம், உறையூர் திருத்தலம்.

    இங்கே உறையூரில், கமலவல்லி நாச்சியார் எனும் திருநாமத்தில் அவளுக்குக் கோயிலே அமைந்துள்ளது. தாயாரின் திருநட்சத்திரம்- ஆயில்யம். எனவே, பங்குனியின் ஆயில்ய நட்சத்திர நன்னாளில், ஸ்ரீரங்கநாதர் உறையூ ருக்கு வருவார்; அவருடன் கமலவல்லி நாச்சியார், ஏக சிம்மாசனத்தில் திருக்காட்சி தருவதைக் காணக் கண் கோடி வேண்டும்!

    உறையூரில் நாச்சியாருடன் திருவீதியுலா வந்துவிட்டு, பின்பு ஸ்ரீரங்கத்தின் சித்திரை மற்றும் உத்திர வீதிகளில் திருவலம் வந்து, ஆர்யபட்டா நுழைவாயிலின் வழியே ஆலயத்துக்கு வருவார் அரங்கன். 'பெருமாளைக் காணோமே...’ என்று வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கும் ஸ்ரீரங்கநாயகித் தாயார், இவரின் வருகையைப் பார்க்காமல் விடுவாளா?!

    எங்கு சென்றுவிட்டு வருகிறார் என்பதை அறிந்து, கடும் ஆத்திரமானாள், தாயார். கண்கள் சிவக்க, தோள்கள் புடைக்க, புருவம் நெளிய, மொத்தக் கோபமும் தலைக்கேறியபடி, புளித்த தயிர், வெண்ணெய், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அள்ளி யெடுத்துப் பெருமாளின் மீது வீசியெறிந்தாள்.

    அதையடுத்து நிகழ்கிற அவர்களின் சம்பாஷணைகள்தான், சுவாரஸ்யம்! 'உமது ஆடைகள் கசங்கியிருக்கின்றன; உங்களின் திருவாபரணங்கள் கலைந்து கிடக்கின்றன; உடலெங்கும் இப்படி வியர்த்துக் கொட்டுகிறதே!’ என்று அரங்கனை அணுஅணுவாக அளந்து, ஆராய்ந்து, கோபக் கணைகளை கேள்விக்கணைகளாக்கினாள், தாயார்.
    வீடுகளில் ஏதேனும் பிரச்னை என்றால், 'உனக்காக என் உயிரை யும் தரச் சித்தமாக உள்ளேன்’ என்போம், அல்லவா?!

    இதை நமக்குச் சொல்லிக் கொடுத்த குருநாதரே அரங்கன்தான்! 'என்ன... என்னையா சந்தேகப்படு கிறாய்? உனக்காக, சமுத்திரத்திலே மூழ்கிவிடட்டுமா? எரிகின்ற தீயில் குதித்துவிடட்டுமா? அல்லது, பாம்புக் குடத்தில் கையை விடட்டுமா?'' என, தன் இனிய மனைவியைச் சமாதானப்படுத்தும் நோக்கில் ஏதேதோ சொன்னார் ஸ்ரீஅரங்கன். பிறகென்ன... புயலுக்குப் பின் அமைதி; ஊடலுக்குப் பின் கூடல் என்பதற்கேற்ப, முட்டிக்கொண்ட பெருமாளும் தாயாரும் ஒட்டிக்கொண்டனர். தாயாரும் கோபத்தை மறந்தாள்; வெள்ளைக் கொடி காட்டிப் புன்னகைத்தாள்.

    இந்த நன்னாள்... பங்குனி உத்திரத் திருநாள்!

    பங்குனி உத்திரப் பெருவிழாவன்று காலையில் நடைபெறும் இந்த வைபவத்தைக் கண்ணாரத் தரிசித்தால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவர் என்பது ஐதீகம்! இணைந்து வாழ்ந்து வருகிற தம்பதி, மேலும் ஒருவரையருவர் நன்கு புரிந்துகொண்டு, கருத்தொற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

    ஸ்ரீரங்கம் கோயிலில், பங்குனி உத்திர மண்டபம் என்றே உள்ளது. இந்த நாளில், பெருமாளும் தாயாரும் திருக்காட்சி தருவது இந்த மண்டபத்தில்தான். எனவே, மண்டபத்துக்கு இந்தத் திருநாமம் உண்டான தாம்.

    இந்த நாளில், சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடைபெறும். அதேபோல், ஸ்ரீஅரங்கனுக்கு, ஸ்ரீராமானுஜர் அருளிய 'சரணாகதி ஸ்ரீவைகுண்ட கத்யங்கள்’ சொல்லி ஸேவிக்கப்படுவதும் வழக்கத்தில் உள்ளது! அன்று இரவில், பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    பங்குனி உத்திர நாளில், ஸ்ரீஅரங்கனையும் ஸ்ரீரங்கநாச்சியாரையும் தரிசிப்போம்; பூமியில் வாழ்கிற தம்பதியர் யாவரும் கருத்தொருமித்து, ஒரு குறையுமின்றி வாழ்வோம்!

    நன்றி வாட்ஸுப்!

    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart
Working...
X