11 அந்தகன்

Courtesy: http://thiruppugazhamirutham.blogspo...012/09/80.html
அந்தகன்வ ருத்தினம் பிறகிடச்
சந்ததமும் வந்துகண் டரிவையர்க்
கன்புருகு சங்கதந் தவிரமுக் குணமாள
அந்திபக லென்றிரண் டையுமொழித்
திந்திரிய சஞ்சலங் களையறுத்
தம்புய பதங்களின் பெருமையைக் கவிபாடிச்
செந்திலை யுணர்ந்துணர்ந் துணர்வுறக்
கந்தனை யறிந்தறிந் தறிவினிற்
சென்றுசெரு குந்தடந் தெளிதரத் தணியாத
சிந்தையு மவிழ்ந்தவிழ்ந் துரையொழித்
தென்செய லழிந்தழிந் தழியமெய்ச்
சிந்தைவர என்றுநின் தெரிசனைப் படுவேனோ
கொந்தவிழ் சரண்சரண் சரணெனக்
கும்பிடு புரந்தரன் பதிபெறக்
குஞ்சரி குயம்புயம் பெறஅரக் கருமாளக்
குன்றிடிய அம்பொனின் திருவரைக்
கிண்கிணி கிணின்கிணின் கிணினெனக்
குண்டல மசைந்திளங் குழைகளிற் ப்ரபைவீசத்
தந்தன தனந்தனந் தனவெனச்
செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித்
தண்டைகள் கலின்கலின் கலினெனத் திருவான
சங்கரி மனங்குழைந் துருகமுத்
தந்தர வருஞ்செழுந் தளர்நடைச்
சந்ததி சகந்தொழுஞ் சரவணப் பெருமாளே.

- திருச்செந்துர்சுருக்க உரை

நமன் என்னைக் கொண்டு போகும் அந்த நாள் பின்னிட்டு விலக,பெண்ணாசை விலக, முக்குணங்கள் அழிய, இரவு பகல் என்னும் இரண்டு நிலைகள் அழிய, ஐம்புலன்களால் வரும் துன்பங்களை அறுத்து, உன் தாமரைத் திருவடிகளின் பெருமையைக் கவிகளால் பாடி, திருச்செந்தூரைக் கருதி, உணர்ந்து ஞானம் பிறக்க, அறிவின் வழியே சென்று , தெளிவு பெற்று, மனம் உருகி, என் செயலும் அழிந்து, உண்மை அறிவு வர, எப்போது உன்னைக் காணப் பெறுவேனோ?
உன் திருவடிகளே சரணம் என்று கும்பிடும் இந்திரன் தனது பொன்னுலகைப் பெறவும், தேவசேனையின் கொங்கைகள் உனது திருப் புயங்களில் பொருந்தவும், அசுரர்கள் மாளவும், கிரௌவஞ்சம் பொடிபடவும், திருவரைக் கிண்கிணிகள் ஒலிக்கவும், சங்கரி மனம் குழைந்து உருக, முத்தம் தர எழுந்தருளும் பிள்ளையே. சரவணப் பெருமாளே. என்று நான் உன் தரிசனம் பெறுவேன்?விளக்கக் குறிப்புகள்
அ. செந்திலை உணர்ந்து உணர்ந்து.....
(செந்திலென் றவிழவுள முருகிவரும் அன்பிலன்....) - திருப்புகழ்
(கொடியனைய)
(திருச்செந்திலை யுரைத்துய்ந்திட அறியாரே)--- திருப்புகழ்( தரிக்குங்கலை)
(செகம்புர வாமுரல் செந்தூர வென்னத் தெளிதருமே)-கந்தர் அந்தாதி
சேதனந் தந்துறை யல்லிமன் வாவிச் செந்தூர்கருத
சேதனந் தந்துறை யென்றறி யார்திற நீங்கிநெஞ்சே.. - கந்தர் அந்தாதி

சகம் - ஜகம்
ஆ. கந்தனை அறிந்து அறிந்து

இறைவனுக்குச் சொரூபநிலை, தடஸ்த நிலை என்று இரண்டு நிலைகள் உண்டு. சொரூபநிலை என்பது குணம், குறிகளுக்கு எட்டாத நிலை. உருவமற்ற நிலை. அருவத்திரு நிலை. அதுவே இறைவனின் உண்மையான நிலை. தடஸ்த நிலை என்பது, ஆன்மாக்களுக்கு அருள்புரியவேண்டி இறைவன் சொரூபநிலையினின்றும் இறங்கி நிற்கும் உருவம் பெற்ற நிலை. மனிதர்கள் விரும்பிய உருவில் தோன்றி அருள்புரிகின்ற நிலை.
தடஸ்த என்ற லக்ஷ்ணம் என்பதின் மூலம் ( உபநிஷத்துகளில் உள்ள ஒரு கருத்து . தடஸ்தர் என்றால் குளத்தில் இறங்காமல், கரையிலேயே நின்று கைகளை நீட்டுபவர் என்பதாகும்). இதன் உணர்த்தப்படுவது என்னயென்றால் யார் ஒருவர் பரப்ரஹமத்தை அறிந்து கொண்டு விட்டோம் என்று நினைக்கிறார்களோ அவர்களுக்குப் ப்ரஹ்மம் தெரிவது இல்லை; யார் ஒருவர் பரப்ரஹ்மத்தை அறிய இயலாது என்று நினைக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே பரப்ரஹ்மம் புலப்படும்
இலக்கியக் குறிப்புகள்


சொல் வளம் அடுக்குச் சொற்கள்
- உணர்ந்து உணர்ந்து உணர்வுற
- அறிந்து அறிந்து அறிவினில்
- சரண் சரண் சரண் என
- கிண்கிணி கிணின்கிணின் கிணின் என்றிட