Announcement

Collapse
No announcement yet.

Thirumazhapadi Vaithyanatar temple

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thirumazhapadi Vaithyanatar temple

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *(11)*
    *சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர்.*
    நேரில் சென்று தரிச்சித்தது போல.......
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■


    *திருமழபாடி*
    ___________________________________________


    *இறைவன்:*வைத்தியநாதர், மழுவாடீசர், வைரத்தூண் நாதர், வச்சிரதம்பேஸ்வரர்.


    *இறைவி:* சுந்தராம்பிகை, அழகம்மை, பாலாம்பிகை.


    *தலமரம்:* பனை மரம்.


    *தீர்த்தம்:* இலக்குமி தீர்த்தம் (அம்பாள் சந்நிதிக்கு எதிர்புறத்தில் உள்ளன.) , கொள்ளிடம்.


    சோழ நாட்டின் காவிரி வடகரையில் அமைந்துள்ள 63 தலங்களுள் 54 வது தலமாகப் போற்றப் பெறுகின்றது.


    *இருப்பிடம்:*
    அரியலூரிலிருந்தும், திருவையாற்றிலிருந்தும், திருச்சியிலிருந்தும் இத்தலத்திற்கு பேருந்துகள் வசதியாக இயங்குகிறது.


    *பெயர்க்காரணம்:*
    முற்காலத்தில் மழவர் என்னும் பிரிவினர் ஆண்டு வந்தனர்.


    மழவர்கள் வாழ்ந்த பகுதியானதால் மழவர்பாடி என்ற பெயராகி, பின்பு மருகி மழபாடி ஆயிற்று.


    பாடி- படைகள் தங்குமிடம்.


    கொல்லிமழவன் என்பவன் இப்பகுதியை ஆண்டு வந்தபோது, அவனுடைய படைகள்- மழவர் சேனை தங்கியிருந்த இடமாதலால் மழவர்பாடி என்றாகிப் பின்பு, மழபாடி ஆயிற்று என்கின்றனர்.


    மார்க்கண்டேயரின் பொருட்டு இறைவன் மழுவேந்தி நடனமாடிக் காட்சி தந்தமையால் இத்தலம் *மழுவாடி* என்று பெயர் பெற்றது.


    இதுவே பிற்காலத்தில் மருகி மழபாடி ஆயிற்று என்று தலபுராணத்தில் இருந்து தெரிய வருகிறது.


    *தேவாரம் பாடியவர்கள்:*
    மொத்தம் இத்தலத்திற்கு கிடைத்த பதிகங்கள் ஆறு பதிகங்களாகும்.


    *சம்பந்தர்* 2-ல் ஒரு பதிகமும், 3-ல் இரண்டு பதிகங்களும்,


    *அப்பர்* 6-ல் இரண்டு பதிகங்களும்,


    *சுந்தரர்* 7-ல் ஒரு பதிகமும், ஆக மொத்தம் ஆறு பதிகங்கள் பாடப்பெற்றத் தலமாகும்.


    *கோவில் அமைப்பு:*
    கிழக்குப் பார்த்த வண்ணம் பெரியளவிலான கோவில் இது.


    ஏழு நிலைகளைக் கொண்ட கோபுரம் இருக்கின்றது.


    உள் புகுந்ததும், கொடிமரம், பலிபீடம், நந்தி இருக்கிறது.


    நாம் இரண்டாம் பிரகாரத்தைக் கடந்து செல்லுகையில், மிகப் பெரிய அலங்கார மண்டபம் காணக்கிடைக்கிறது.


    இந்த அலங்கார மண்டபத்திலே இரண்டு நந்திகள் இருக்கிறார்கள்.


    அதற்கடுத்து உள்பிரகாரத்தில், அகோரவீரபத்திர், விநாயகர் முருகர் ஆகியோர் காட்சியருள் தருகின்றார்கள்.


    மூன்றாம் வாயிலைக் கடந்ததும், மகா மண்டபத்தை அடைகிறோம்.


    அங்கே, கருவறையும், சோமாஸ்கந்தர் கோயிலும் இணைந்து பெரிய கோவிலாகக் காட்சியளிக்கின்றன.


    ஜ்வரஹரேசுவரர் சந்நிதியுள்ளது.


    உற்சவ மூர்த்தங்கள் மிக பாதுகாப்பதானதாக வைக்கப்பட்டிருக்கின்றன.


    மூலவர்--சிவலிங்கத் திருமேனியாக காட்சி தந்தருளுகிறார்.


    இத்திருமேனியை புருஷாமிருகத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.


    மேலும் இங்கு இரு அம்பாள் சந்நிதிகள் உள்ளன.


    பாலாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கி ப் பார்த்த வண்ணம் அருளாட்சி புரிகின்றனர்.


    சுவாமி சந்நிதியில், மூன்று குழிகள் இருக்கின்றன.


    இங்கு வந்து தரிசனம் செய்யும் பக்தர்கள், சுவாமி சந்நிதிக்குள் இருக்கும் மூன்று குழிகளை நவக்கிரகமாக எண்ணிக் கொண்டு வழிபடுகின்றனர்.


    *தல அருமை:*
    திருமால், இந்திரன் ஆகியோர் வழிபட்ட தலமிது.


    நந்திதேவர் திருமணம் கொண்டதுமான சிறப்புப்பெற்ற தலம்.


    சுந்தரர் கனவில் இறைவன், *மழபாடி வர மறந்தனையோ* என்று உணர்த்திட, உடனே அவர் மழபாடி சென்று வழிபட்டத் தலம்.


    சந்திரனுக்கு ஏற்பட்டிருந்த களங்கத்தை ஈசன் போக்கியருளியதால் இறைவனை, வைத்தியநாதர் என்றும் பெயர் பெற்றார்.


    பிரமனின் சத்தியலோகத்திலிருந்து புருஷா மிருகம் லிங்கத்தை எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டது.


    இதை அறிந்த பிரமன் லிங்கத்தை மீண்டும் எடுக்க முயன்றான்.


    பிரமன் அந்த லிங்கத்தை எடுக்க முயல, அது அவனின் கைக்கு வர மறுத்து அது முடியாது போகவே இது, வைரத்தூணோ என்று கூறினான்.


    பிரமன், *வைரத்தூணானவனோ* எனக் கூறியதால், இவ்விறைவனை வைரத்தூண் நாதர் என்றும், வச்சிரதம்பேஸ்வரர் என்றும் ஈசனுக்கு பெயர்கள் ஏற்பட்டது.


    அப்பர் பெருமான் தம் பதிகத்தில், *மழபாடி வைரத்தூணே* என்று பதிகத்தைப் பாடிப் பரவியிருக்கின்றார்.


    வைத்தியநாத சுவாமி சந்நிதி இராஜேந்திரன் காலத்தாளானவை.


    பாலாம்பிகை கோவில் இராசராசன் காலத்தாளானவை.


    நூற்றுக்கால் மண்டபம், சோமாஸ்கந்த மண்டபம் ஆகியவை பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும்.


    கோயிலுக்கு வெளியில், எதிர்புறத்தில் உள்ள மண்டபத்தை, கோனேரிராயன் மண்டபம் என்றழைக்கப்படுகிறது.


    இத்தலத்தில் பாய்வது கொள்ளிட நதியாகும்.


    இந்நதி உத்தரவாகினியாக-- வடக்கு நோக்கிப் பாய்ந்தோடுகிறது. இது மிக அரிதான சிறப்பு.


    இங்கிருக்கும் சோமாஸ்கந்தர் ஒரே கல்லினால் ஆனவர். இவரை தரிசிப்பது மிகவும் சிறப்புக்குரியது.


    *தல பெருமை:*
    திருவையாறில் வசித்து வந்த சிலாத முனிவர் குழந்தை பாக்கியம் வேண்டி சிவனை நோக்கித் தவமிருந்தார்.


    தவத்திலிருந்த அச்சமயத்தில் ஒரு அசரீரி கேட்டன. புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் குழந்தைப் பேறு கிட்டும். நீர் யாகம் மேற்கொண்டிருக்கும் நிலத்தை உழவு செய்தால், பூமிக்குள்ளிருந்து ஒரு பெட்டி ஏர்க்கலப்பைக்குத் தட்டுப்படும்.
    அப்பெட்டியைத் திறந்து அதனுள்ளிருக்கும் குழந்தையை எடுத்து வளர்த்து வாழவும். ஆனால், அக்குழந்தைக்கு பதினாறு ஆண்டுகள்தான் ஆயுள் என்றது அசரீரி.


    சிலாதரும் அவ்வாறே அவ்விடத்தை உழ, ஏர்கலப்பைக்குத் தட்டுப்பட்டு பெட்டி கிடைத்தது. உடனே அந்த பெட்டியை வெளியே எடுத்துத் திறந்து பார்த்தார்.


    பெட்டியைத் திறந்து பார்த்த சிலாதர் வியந்து போனார். அக்குழந்தைக்கு மூன்று கண்களும், நான்கு தோள்களும், சந்திரப்பிறையையும் அணிந்த முடியுடன் குழந்தை காணப்பட்டன.


    மேலும் வியந்து அதிர்ச்சியாகிப் போன சிலாதர், உடனே அந்த பெட்டியை மூடினார். பின்பு மீண்டும் பெட்டியைத் திறக்க, பழைய அடையாளங்கள் மறைந்து அழகான குழந்தையாக மாறியிருந்தன.


    பின்பு குழந்தையை எடுத்துச் சென்று ஜபேசர் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்.


    குழந்தைக்கு பதினான்கு வயது பூர்த்தியாயிருந்த சமயம்.


    இன்னும் இரண்டே ஆண்டுகள்தான் குழந்தை உயிரோடிருக்கும் என்பதை நினைத்து, சிலாத முனிவர் வருத்தம் கொண்டார்.


    இதனைத் தெரிந்த பதினாங்கு வருடங்கழிந்த ஜபேசர், திருவையாறிலுள்ள அயனகிரி தீர்த்தக் குளத்தில் ஒற்றைக் காலில் நின்று தவமேற்க் கொண்டார்.


    நீரில் நின்று தவம் புரிந்த ஜபேசரை, நீர்வாழ் உயிரிணங்கள், ஜபேச சிறுவனை, நீரினுள் அமிழ்ந்திருந்த ஜபேசனின் கால் விரல்கள், கால்களை சிறிது சிறிதாக உண்ணத் தின்றன.


    ஆயினும் ஜபேசர், தன் உறுப்புகள் நொறிங்கி குறைவதைக்கூட உணரப் பெறாமல், ஈசனை நினைத்து கடும் தவத்தைத் தொடர்ந்தார். தவத்தை விடவேயில்லை.


    ஜபேசரின் கடுந்தவத்திற்கு மெச்சிய ஈசன், ஜபேசரின் உடலைக் குணப்படுத்தி பூரண ஆயுளும் தந்தார்.


    ஜபேசருக்கும், சுயசாம்பிகைக்கும் திருமழபாடியில் திருமணம் நடந்தேறியது.


    திருமணத்திற்குப் பின்னும் சிவனை நோக்கி கடுந்தவம் மேற்க்கொண்டு சிவகணங்களின் தலைமைப் பதவியையும், கயிலாயத்தின் முதல் வாயிற் காவலராகவும், நந்தி தேவர் என்ற பெயரையும் பெற்றார்.


    *திருவிழாக்கள்:*
    பங்குனி மாதம் புணர்பூச நாளில் நந்தி திருமணம் பெரும் விழாவாக நடைபெறும்.


    விழாவில் இருபத்து ஏழாவது நாளில் திருவையாற்றில் நிகழும் சப்த ஸ்தான விழாவிற்கு நந்தி எழுந்தருள்வார்.


    *கல்வெட்டுக்கள்:*
    சோழர், பாண்டியர், ஹொய்சளர் ஆகியோரது முப்பது கல்வெட்டுக்களில் கோயில் வளர்ச்சிப் பணி பற்றி குறிக்கப் பெற்றுள்ளது.


    *பூஜை:*
    காமீக, ஆகம முறையில் நான்கு கால பூசை.


    காலை 6-30 மணி முதல் பகல் 12-30 மணி வரை.


    மாலை 4.00 மணி முதல் இரவு 8-00 மணி வரை.


    *அஞ்சல் முகவரி:*
    அருள்மிகு. வச்சிரதம்பேசுவரர் திருக்கோயில்.
    திருமழபாடி- அஞ்சல், 621 851
    அரியலூர் வட்டம்,மாவட்டம்.


    *தொடர்புக்கு:*
    சிவசுப்பிரமணியன், வெங்கட் சுப்பிரமணியன்.
    04329-292890...97862 05278.


    திருச்சிற்றம்பலம்.


    *நாளை.....திருப்பழுவூர்.*


    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*


    *அடியார்கள் கூட்டம் பெருக அடியார்களோடு இணையுங்கள்.*


    *ஆசை தீர கொடுப்பார்------*
    *அலங்கல் விடைமேல் வருவார்.*


    திருச்சிற்றம்பலம்.
Working...
X