25. காலனார்
காலனார் வெங்கொடுந் தூதர்பா சங்கொடென்
காலினார் தந்துடன் கொடுபோகக்
காதலார் மைந்தருந் தாயரா ருஞ்சுடுங்
கானமே பின்தொடர்ந் தலறாமுன்
சூலம்வாள் தண்டுசெஞ் சேவல்கோ தண்டமுஞ்
சூடுதோ ளுந்தடந் திருமார்பும்
தூயதாள் தண்டையுங் காணஆர் வஞ்செயுந்
தோகைமேல் கொண்டுமுன் வரவேணும்
ஆலகா லம்பரன் பாலதா கஞ்சிடுந்
தேவர்வா ழன்றுகந் தமுதீயும்
ஆரவா ரஞ்செயும் வேலைமேல் கண்வளர்ந்
தாதிமா யன்றனன் மருகோனே
சாலிசேர் சங்கினம் வாவிசூழ் பங்கயஞ்
சாரலார் செந்திலம் பதிவாழ்வே
தாவுசூ ரஞ்சிமுன் சாயவே கம்பெறுந்
தாரைவே லுந்திடும் பெருமாளே.- திருச்செந்தூர்


[linbk]பதம் பிரித்து பதவுரை
காலனார் வெம் கொடும் தூதர் பாசம் கொ(ண்)டு என்
காலில் ஆர்தந்து உடன் கொ(ண்)டு போக


காலனார் = யமனுடைய வெம் கொடும் = மிகக் கொடுமையான தூதர்= தூதுவர்கள் பாசம் கொடு = பாசக் கயிற்றால் என் காலில் ஆர்தந்து = என் காலைக் கட்டி உடன் கொ(ண்)டு போக = தம்முடன் கொண்டு போக காதல் ஆர் மைந்தரும் தாயராரும் சுடும் கானமே பின் தொடர்ந்து அலறா முன்


சூலம் வாள் தண்டு செம் சேவல் கோதண்டமும்
சூடு தோளும் தடம் திரு மார்பும்


காதல் ஆர் மைந்தரும் = அன்பு மிக்க பிள்ளைகளும் தாயராரும்= தாய்மார்களும் சுடும் கானமே = சுடுகாட்டுக்கு பின் தொடர்ந்து = பின் தொடர்ந்து வந்து அலறா முன் = அலறி அழுது வருவதற்கு முன்பு சூலம் வாள் தண்டு = சூலம், வாள், தண்டாயுதம் செம் சேவல் = செவ்விய சேவல் கோதண்டமும் சூடு(ம்) = வில் இவைகளை ஏந்தியுள்ள. தோளும் = கைகளும்தடம் = அகன்ற திரு மார்பும் = அழகிய மார்பும்


தூய தாள் தண்டையும் காண ஆர்வம் செயும்
தோகை மேல் கொண்டு முன் வரவேணும்


தூய தாள் தண்டையும் = தூய்மையான காலில் அணிந்துள்ள
தண்டையும் காண = நான் காணும்படி ஆர்வம் செய்யும் =அன்பு கொண்டுள்ள தோகை மேல் = மயிலின் மீது. கொண்டு முன் வரவேணும் = ஏறி என் முன்னே நீ வந்தருள வேண்டும்


ஆலகாலம் பரன் பாலதாக அஞ்சிடும்
தேவர் வாழ அன்று உகந்து அமுது ஈயும்


ஆலகாலம் = ஆலகால விடத்தை பரன் = சிவபெருமான்
பாலதாக = பால் போல ஏற்றுக் கொள்ள அஞ்சிடும் = பயந்து நின்ற தேவர் வாழ = தேவர்கள் வாழும்படி அன்று உகந்து =அன்று மகிழ்ச்சியுடன் அமுது ஈயும் = அமுதத்தை அவர்களுக்குக் கொடுத்து.


ஆரவாரம் செயும் வேலை மேல் கண் வளர்ந்த
ஆதி மாயன் தன் நல் மருகோனே


ஆரவாரம் செய்யும் = பேரொலி செய்யும் வேலை மேல் =கடல் மீது கண் வளர்ந்த = துயில் கொள்ளும் ஆதி மாயன் தன்= ஆதி மாயனாகிய திருமாலின் நல் மருகோனே = நல்ல மருகனே.


சாலி சேர் சங்கினம் வாவி சூழ் பங்கயம்
சாரல் ஆர் செந்தில் அம் பதி வாழ்வே

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
சாலி = செந் நெல் (சாலி என்ற வகையான நெல் விளையும்வயலில்) சேர் = சேர்ந்த சங்கினம் = சங்கின் கூட்டங்களும்வாவி சூழ் = குளங்களில் மலர்ந்துள்ள பங்கயம் =தாமரைகளும் சாரல் ஆர் = பக்கங்களில் சார்ந்து நிறைந்துள்ள செந்தில் அம் பதி வாழ்வே = திருச்
செந்தூர் என்னும் அழகிய ஊரில் வாழ்பவனே.
தாவு சூர் அஞ்சி முன் சாய வேகம் பெறும்
தாரை வேல் உந்திடும் பெருமாளே.


தாவு = தாவி வந்த சூர் = சூரன் அஞ்சி = அஞ்சி முன் சாய =முன் சாய்ந்து அழிய. வேகம் பெறும் = வேகமும் தாரை வேல்= கூர்மையும் கொண்ட வேலை உந்திடும் பெருமாளே =செலுத்திய பெருமாளே.[/link]
சுருக்க உரை


கொடிய யம தூதர்கள் என் காலைக் கட்டிக் கொண்டு போக, மக்களும் தாய்மார்களும் என் பின்னால் சுடு காட்டுக்குப் பின் தொடர்ந்து வந்து அலறி அழுவதற்கு முன், உன்னுடைய சூலம், வாள், தண்டை, வில் இவைகளை ஏந்திய கரங்களுடன் மயில் மீது என் முன் வரவேண்டும்.


ஆலகால விடத்தைச் சிவபெருமான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள, தேவர்களுக்கு அமுதத்தைக் கொடுத்துக் கடல் மேல் துயில் கொள்ளும் திருமாலின் மருகனே, சங்குகள் சூழ்ந்த குளங்களில் தாமரை மலர்கள் நிறைந்த திருச்செந்தூரில் வாழ்பவனே, சூரன் அழிய வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே, தோகை மேல் என் முன்னே வர வேண்டும்.