42. புகரப் புங்க


புகரப் புங்கப் பகரக் குன்றிற்
புயலிற் றங்கிப் பொலிவோனும்
பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப்
பொருளைப் பண்பிற் புகல்வோனும்
திகிரிச் செங்கட் செவியிற் றுஞ்சத்
திகிரிச் செங்கைத் திருமாலும்
திரியப் பொங்கித் திரையற் றுண்டுட்
டெளிதற் கொன்றைத் தரவேணும்
தகரத் தந்தத் சிகரத் தொன்றித்
தடநற் கஞ்சத் துறைவோனே
தருணக் கொங்கைக் குறவிக் கின்பத்
தையளித் தன்புற் றருள்வோனே
பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப்
படியிற் சிந்தத் தொடும்வேலா
பவளத் துங்கப் புரிசைச் செந்திற்
பதியிற் கந்தப் பெருமாளே.-திருச்செந்தூர்பதம் பிரித்து உரை


புகர புங்க பகர குன்றில்
புயலில் தங்கி பொலிவோனும்


புகர = புள்ளிகளை உடையதும் புங்க =உயர்ந்துள்ளதும் பகர = அழகுள்ளதுமான குன்றில் =வெள்ளை யானையின் மீதும் புயலில் = மேகத்தின் மீதும் தங்கிப் பொலிவோனும் = தங்கி விளங்கும் இந்திரனும்.


பொரு இல் தஞ்ச சுருதி சங்க
பொருளை பண்பில் புகர்வோனும்


பொரு இல் = இணை இல்லாத தஞ்ச = பெருமையுள்ள சுருதி சங்க = வேதத் தொகுதிகளின் பொருளை = பொருளை பண்பில் = முறையாக புகல்வோனும் = சொல்லும் பிரமனும்.


திகிரி செம் கண் செவியில் துஞ்ச
அ திகிரி செம் கை திருமாலும்


திகிரி = மலை போல செங்கண் செவியில் = பெருமை வாய்ந்த பாம்பின் மீது துஞ்ச = தூங்குகின்ற அத் திகிரி = அந்தச் சக்கரம் (ஏந்திய) செம் கைத் திருமாலும் = திருக் கையை உடைய திருமாலும்.


திரிய பொங்கி திரை அற்று உண்டிட்டு
தெளிதற்கு ஒன்றை தர வேணும்


திரிய = (உபதேசப் பொருள் கிடைக்கவில்லையே என்று) சுழல பொங்கி =(என் உள்ளம்) மகிழ்ந்து திரை அற்று = அலைதல் அற்று உண்டிட்டு = உபதேசத்தை உட்கொண்டு தெளிதற்கு = மனம் தெளிவு பெற ஒன்றைத் தர வேணும் = ஒப்பற்ற உபதேசத்தை எனக்கு அருள வேண்டும்.


தகர தந்த சிகரத்து ஒன்றி
தட நல் கஞ்சத்து உறைவோனே


தகரத் தந்த சிகரம் = தகர வித்தை என்னும் வேத சிகரமான ப்ரும ஸ்தானத்தில் ஒன்றி = பொருந்தி தட நல் கஞ்சத்து =நல்ல இருதய கமலம் என்னும் இடத்தில் உறைவோனே =உறைபவனே


தருண கொங்கை குறவிக்கு இன்பத்தை
அளித்து அன்புற்று அருள்வோனே


தருண கொங்கை = இளங் கொங்கை கொண்ட குறவிக்கு =குறப் பெண்ணாகிய வள்ளிக்கு இன்பத்தை அளித்து =இன்பத்தைக் கொடுத்து அன்புற்று = அவளிடம் அன்பு உற்று அருள்வோனே = அருள்பவனே.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
பகர பைம்பொன் சிகர குன்றை
படியில் சிந்த தொடும் வேலா


பகர = ஒளி கொண்ட பைம்பொன் = பசுமையான பொன்னாலாகிய சிகரக் குன்றை = சிகரங்களை உடைய கிரவுஞ்ச) மலையை படியில் சிந்த = பூமியில் சிதறி மடியதொடும் வேலா = செலுத்திய வேலனே.


பவள துங்க புரிசை செந்தில்
பதியில் கந்த பெருமாளே.


பவளத் துங்க = பவளம் போல் சிவந்த புரிசை = மதில் சூழும்
செந்தில் பதியில் = திருச்செந்தூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே = கந்தப் பெருமாளே.
விளக்கக் குறிப்புகள்


அ. தகரத் தந்தச் சிகரத் தொன்றித் தட....
தகரம் = இருதயத்தின் உள்ளிடம். தகர வித்தை = இறைவனைப் ப்ரும்ம ஸ்தானத்தில் (தகரகாசத்தில்) வைத்துத் தியானம் செய்யும் முறையை உணர்த்தும் வித்தை.


ஆ. தட நல் கஞ்சம் = இருதய கமலம்.


இ. சிகரக் குன்றைப் படியில் சிந்த...
குன்று = கிரெளஞ்சம்.
(குருகு பெயர் பெற்ற கன வடசிகரி பட்டுருவ வேல் தொட்ட)...வேடிச்சி காவலன் வகுப்பு