45. மனத்தின்


மனத்தின்பங் கெனத்தங்கைம்
புலத்தென்றன் குணத்தஞ்சிந்
த்ரியத்தம்பந் தனைச்சிந்தும் படிகாலன்
மலர்ச்செங்கண் கனற்பொங்குந்
திறத்தின்தண் டெடுத்தண்டங்
கிழியத்தின்றிங் குறத்தங்கும் பலவோரும்
எனக்கென்றிங் குனக்கென்றங்
கினத்தின்கண் கணக்கென்றன்
றிளைத்தன்புங் கெடுத்தங்கங் கழிவாமுன்
இசைக்குஞ்செந் தமிழ்க்கொண்டங்
கிரக்கும்புன் றொழிற்பங்கங்
கெடத்துன்பங் கழித்தின்பந் தருவாயே
கனைக்குந்தண் கடற்சங்கங்
கரத்தின்கண் தரித்தெங்குங்
கலக்கஞ்சிந் திடக்கண்துஞ் சிடுமாலும்
கதித்தொண்பங் கயத்தன்பண்
பனைத்துங்குன் றிடச்சந்தங்
களிக்குஞ்சம் புவுக்குங்செம் பொருளீவாய்
தினைக்குன்றந் தனிற்றங்குஞ்
சிறுப்பெண்குங் குமக்கும்பந்
திருச்செம்பொன் புயத்தென்றும் புனைவோனே
செழிக்குங்குண் டகழ்ச்சங்கங்
கொழிக்குஞ்சந் தனத்தின்பைம்
பொழிற்றண்செந் திலிற்றங்கும் பெருமாளே.- திருச்செந்தூர்

பதம் பிரித்து உரை

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
மனத்தின் பங்கு என தங்கு ஐம்
புலத்து என்றன் குணத்து அஞ்சு
இந்திரிய தம்பத்தனை சிந்தும்படி காலன்


மனத்தின் பங்கு என = மனம் செல்வதற்குப் பங்கு எடுத்துக் கொள்வன என தங்கு = தங்கியுள்ளஐம்புலத்து = ஐம்புலன் களோடு (சம்பந்தப்பட்ட)என்றன் = என்னுடைய குணத்து = குணமும் அஞ்சு இந்திரியம் = ஐம்பொறிகளின் தம்பத்தினை = கட்டும் பிணிப்பும் சிந்தும்படி = சிதறிப் போக காலன் = யமன்.


மலர் செம் கண் கனல் பொங்கும்
திறத்தின் தண்டு எடுத்து அண்டம்
கிழித்தின்று இங்கு உற தங்கும் பலவோரும்


மலர்ச் செங்கண் = மலர் போலும் சிவந்த கண்கள் கனல் பொங்கும் திறத்தின் = நெருப்பு மிக்கு எழும்வலிமையுடன். தண்டு எடுத்து = தண்டாயுதத்தை எடுத்து அண்டம் கிழித்தின்று = அண்டம் கிழியும் படி(தோன்றி) இங்கு உற = இங்கு (என்னிடம்) வர தங்கும் பலவோரும் = பல சுற்றத்தினரும்.


எனக்கு என்று இங்கு உனக்கு என்று
அங்கு இனத்தின் கண் கணக்கு என்று என்று
இளைத்து அன்பும் கெடுத்து அங்கு அழிவா முன்


எனக்கு என்று = (இது) எனக்கு என்றும் இங்கு உனக்குஎன்று = (அது) உனக்கு என்றும் (பாகப் பொருளைப் பற்றிச் சண்டை எழ) அங்கு = அப்பொழுது இனத்தின் கண் = சுற்றத்தாரிடம் கணக்கு என்று என்று = கணக்கு,கணக்கு என்று பல முறை கூறி. இளைத்து = இளைத்துஅன்பும் கெடுத்து = (உறவினரின்) அன்பையும் கெடுத்து அங்கம் கழிவா முன் = உடல் அழிந்து ஒழிக்கப்படுவதற்கு முன்பு.


இசைக்கும் செம் தமிழ் கொண்டு அங்கு
இரக்கும் புன் தொழில் பங்கம்
கெட துன்பம் கழித்து இன்பம் தருவாயே


இசைக்கும் = புகழப்படும் செந்தமிழ்க் கொண்டு=செந்தமிழ் கொண்டு அங்கு இரக்கும் = அங்கு (பொருள்உள்ளோரிடம்) இரக்கின்ற புன் தொழில் = இழி தொழில் பங்கம் கெட = குற்றம் நீங்க துன்பம் கழித்து =(என்) துன்பத்தை ஒழித்து இன்பம் தருவாயே =இன்பத்தைத் தருவாயாக.


கனைக்கும் தண் கடல் சங்கம்
கரத்தின் கண் தரித்து எங்கும்
கலக்கம் சிந்திட கண் துஞ்சிடும் மாலும்


கனைக்கும் = ஒலிக்கின்ற தண் கடல் = குளிர்ந்த கடலில் சங்கம்=
பஞ்ச சன்னியம் என்னும் சங்கை கரத்தில் தரித்து =கையில் ஏந்தி எங்கும் கலக்கம் சிந்திட = உலகெங்கும் இடர்கள் ஒழிய கண் துஞ்சிடு மாலும் = அறி துயில் கொள்ளும் திருமாலும்.


கதித்த ஒண் பங்கயத்தன் பண்பு
அனைத்தும் குன்றிட சந்தம்
களிக்கும் சம்புவுக்கும் செம் பொருள் ஈவாய்


கதித்த = (அவர் உந்தித் தாமரையில்) தோன்றியபங்கயத்தன் = பிரமனும் பண்பு = (தமது) பெருமை எல்லாம் குன்றிட = குலைய சந்தம் களிக்கும் = சந்தப் பாடலுக்கு மகிழ்ச்சி கொண்டிருக்கும். சம்புவுக்கும் =சிவபெருமானுக்கும் செம் பொருள் ஈவாய் = மூலப்பொருளை உபதேசித்தவனே.


தினை குன்றம் தனில் தங்கும்
சிறு பெண் குங்கும கும்பம்
திரு செம் பொன் புயத்து என்றும் புனைவோனே


தினைக் குன்றம் = தினை விளையும் (வள்ளி) மலையில்தங்கும் = தங்கியிருந்த சிறுப் பெண் = சிறிய பெண்ணாகிய வள்ளியின் குங்கும = குங்குமம் கொண்டுள்ள கும்பம் = குடம் போன்ற (கொங்கையை)திருச் செம்பொன் = அழகிய செம்பொன் போன்ற புயத்து = திருப் புயங்களில் என்றும் புனைவோனே =என்றும் புனைவோனே.


செழிக்கும் குண்டு அகழ் சங்கம்
கொழிக்கும் சந்தனத்தின் பைம்
பொழில் தண் செந்திலில் தங்கும் பெருமாளே.


செழிக்கும் = செழித்துள்ள குண்டு அகழ் = ஆழ்ந்தநீர்நிலை (கடல்) சங்கம் கொழிக்கும் = சங்கங்களைக் கொழிக்கும் சந்தனத்தின் = சந்தன மரங்கள் உள்ள பைம்பொழில் = பசுஞ்சோலை (சூழ்ந்த) தண் =குளிர்ந்த செந்திலில் தங்கும் பெருமாளே = திருச் செந்தூரில் தங்கும் பெருமாளே.


விளக்கக் குறிப்புகள்


அ. மனத்தின் பங்கெனத் தங்கும் ஐம்புலன்....
மனம் செல்வதற்கு வேறு வேறு வாயில்களாகப் பொருந்தி இருக்கும் ஐம்புலன்கள்.


ஆ. எங்கும் கலக்கம் சிந்திடக் கண் துஞ்சிடும் மாலும்...
உலகத்தோர் கலக்கம் அற்று வாழ அறி துயில் கொள்ளும் திருமால்.