Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    49.மூளும்வினை
    மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்து
    பூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில்
    மூடிநெறி நீதி யேதுஞ்செ யாவஞ்சி யதிபார
    மோகநினை வான போகஞ்செய் வேனண்டர்
    தேடாரி தாய ஞேயங்க ளாய்நின்ற
    மூலபர யோக மேல்கொண் டிடாநின்ற துளதாகி
    நாளுமதி வேக கால்கொண்டு தீமண்ட
    வாசியன் லூடு போயொன்றி வானிங்க
    ணாமமதி மீதி லூறுங்க லாஇன்ப அம்தூறல்
    நாடியதன் மீதி போய்நின்ற ஆநந்த
    மேலைவெளி யேறி நீயனறி நானின்றி
    நாடியினும் வேறு தானின்றி வாழ்கின்ற தொருநாளோ
    காளவிட மூணி மாதங்கி வேதஞ்சொல்
    பேதைநெடு நீலி பாதங்க ளால்வந்த
    காலன்விழ மோது சாமுண்டி பாரம்பொ டனல்வாயு
    காதிமுதிர் வான மேதங்கி வாழ்வஞ்சி
    ஆடல்விடை யேறி பாகங்கு லாமங்கை
    காளிநட மாடி நாளன்பர் தாம்வந்து தொழுமாது
    வாளமுழு தாளு மோர்தண்டு ழாய்தங்கு
    சோதிமணி மார்ப மாலின்பி நாளின்சொல்
    வாழுமுமைமாத ராள்மைந்த நேயெந்தை யிளையோனே
    மாசிலடி யார்கள் வாழ்கின்ற வூர்சென்று
    தேடிவிளை யாடி யேயங்ங னேநின்று
    வாழுமயில் வீர னேசெந்தில் வாழ்கின்ற பெருமாளே.



    - திருச்செந்தூர்

    பதம் பிரித்து உரை


    மூளும் வினை சேர மேல் கொண்டிடா ஐந்து
    பூத வெகுவாய மாயங்கள் தான் நெஞ்சில்
    மூடி நெறி ஏதும் செய்யா வஞ்சி அதி பார


    மூளும் வினை சேர = மூண்டு வருகின்ற வினைகள் சேர்ந்து. மேல் கொண்டிட = மேல்கொண்டு என்னைப் பீடிக்க ஐந்து பூத(ம்) வெகுவாய = (மண், நீர், தீ, காற்று,விண் என்னும்) ஐந்து பூதங்களால் பல வகையானமாயங்கள் = மாயங்கள் என் நெஞ்சில் = என் உள்ளத்தில் மூடி = குவிய. நெறி நீதி ஏதும் செய்யா =நெறியான செயல்,நீதியான செயல் எதுவும் நான் செய்யாமல் வஞ்சி = வஞ்சிக் கொடி போன்ற மாதார்களின் அதி பார = மிக்க கனமான (கொங்கைகளின் மீது).


    மோக நினைவான போகம் செய்வேன் அண்டர்
    தேட அரிதாய ஞேயங்களாய் நின்ற
    மூல பரம யோகம் மேல் கொண்டிடா நின்றது உளதாகி


    மோக நினைவான = மோகம் கொண்ட நினைவு உள்ளவனாய். போகம் செய்வேன் = (அவர்களுடன்)இன்ப போகத்தை அனுபவிப்பேன் (நான்) அண்டர் தேட = தேவர்கள் தேடுதற்கும் அரிதாய = அரிதானதும்ஞேயங்களாய் நின்ற = ஞானத்தினால் அறியப்படும்பொருளாய் நின்றுள்ளதும்மூல பரம = (பிராண வாயு) மூலாதாரத்தினின்று மேலே உள்ள யோக மேல் கொண்டிடா = யோக நெறியை மேற்கொண்டு நின்றது உளதாகி = அந் நிலையிலேயே இருந்து.


    நாளும் அதி வேக கால் கொண்டு தீ மண்ட
    வாசி அனல் ஊடு போய் ஒன்றி வானின்
    கண் நாமம் மதி மீதில் ஊறும் கலா இன்ப அமுது ஊறல்


    நாளும் = நாள் தோறும் அதி வேக = மிக வேகமாகச் செல்லும் கால் கொண்டு = பிராண வாயுவின் சேர்க்கையால் எழுகின்ற தீ மண்ட = சிவாக்கினிச் சுவாலை வீச வாசி = சுவாசம் அனல் ஊடு போய் =அந்தப் பிராண வாயுவுடனும் சிவாக்கினியுடனும் (ஆறுஆதாரங்களின் வழியே கபாலம் வரை போய் ஒன்ற =தியானத்தில் ஒன்றிவானின் கண் = வானில் (மேலைச் சிவ வீதீயில்) நாமம் மதி மீதில் = நிறைந்த சந்திர மண்டலத்தின் மீது ஊறும் = ஊறுகின்ற கலா இன்ப =கலை இன்ப அமுது ஊறல் = அமுது ஊறலை.


    நாடி அதன் மீது போய் நின்ற ஆனந்த
    மேலை வெளி ஏறி நீ அன்றி நான் அன்றி
    நாடியினும் வேறு தான் இன்றி வாழ்கின்றது ஒரு நாளே


    நாடி = நாடி ஆய்ந்து அதன் மீது போய் நின்ற =அந்நிலைக்கும் மேல் போய் நின்ற. ஆனந்த மேலை வெளி = ஆனந்த மயமான பர ஆகாச வெளியில். ஏறி =ஏறிச் சேர்ந்து நீ இன்றி நான் இன்றி = நீ-நான் என்னும் வேற்றுமை இல்லாததுமான நாடியினும் = நாடிப்
    பார்க்கின் வேறு தான் இன்றி = எதுவும் இல்லாத சூனிய நிலையில். வாழ்கின்றது ஒரு நாளே = வாழும்படியான நிலையப் பெறும் பாக்கியம் கிட்டுவது ஒரு நாளாகுமோ?


    காள விடம் ஊணி மாதங்கி வேதம் சொல்
    பேதை நெடு நீலி பாதங்களால் வந்த
    காலன் விழ மோதும் சாமுண்டி பார் அம்பு ஒடு அனல் வாயு


    காள விடம் = கரிய விடத்தை. (ஆலகால விஷம்) ஊணி =
    உண்டவள் மாதங்கி = மதங்க முனிவர் தவம் செய்து பெற்றவள் வேதம் சொல் = வேதத்தில் புகழ்ந்து சொல்லப்பட்ட பேதை = பேதை நெடுநீலி = பெருமை வாய்ந்த நீல நிறத்தவள் பாதங்களால் வந்த=கிரகபாதங்களின்படி (கோள்முறைப்படி) தோன்றியவள் காலன் விழ மோதும் = யமன் விழும்படி உதைத்து மோதிய {வந்த காலன் பாதங்களால் விழ மோதும் என பிரித்து – மார்க்கண்டேயரை காப்பாற்ற இயமனை பாதங்களால் மோதிய எனவும் பொருள் கொள்ளாலாம்} சாமுண்டி = துர்க்கைபார் அ(ப்)பு ஒடு = மண், நீர் இவைகளுடன் அனல் வாயு = தீ, காற்று


    காதி முதிர் வானமே தங்கி வாழ் வஞ்சி
    ஆடல் விடை ஏறி பாகம் குலா மங்கை
    காளி நடமாடி நாள் அன்பர் தாம் வந்து தொழு மாது


    காதி = யாவையும் அழித்து முதிர் = முற்படும் வானமே =விண் (ஆகிய ஐந்து பூதங்களிலும்)தங்கி வாழ் = தங்கி வாழ்கின்ற வஞ்சி = வஞ்சிக் கொடி போன்றவள் ஆடல் =ஆனந்த தாண்டவமி யற்றுபவரும் விடை ஏறி =இடபத்தில் மேல் வருபவர்மாகிய சிவபெருமானுடையபாகம் குலா = (இடப்) பாகத்தில் விளங்கும் மங்கை =மங்கை. காளி = காளி நடமாடி = நடனம் செய்பவள்நாள் = தினமும் அன்பர் தாம் வந்து தொழும் மாது =அடியார்கள் வந்து வணங்கும் மாது.


    வாளம் முழுறு ஆளும் ஓர் தண் துழாய் தங்கு
    சோதி மணி மார்ப மாலின் பின்னாள் இன் சொல்
    வாழும் உமை மாதராள் மைந்தனே எந்தை இளையோனே


    வாளம் = சக்கரவாள கிரியால் முழுது ஆளும் = சூழப்பட்ட பூவுலகம் முழுமையும் ஆளும் ஓர் =ஒப்பற்ற தண் = குளிர்ந்த துழாய் = துளசி மாலை தங்கும் = தங்கும் சோதி மணி மார்ப = சோதி மணியாகிய கவுத்துவ மணி அணிந்த மார்பனும் மாலின் பின்னாள் = திருமாலுக்குப் பின் வந்தவள் (தங்கை) இன் சொல் வாழும் = இனிய சொல்லே வழங்கும் உமை மாதராள் = உமா தேவியின் மைந்தனே=மகனே என்தை= எந்தையே இளையோனே=இளையோனே.


    மாசு இல் அடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று
    தேடி விளையாடியே அங்ஙனே நின்று
    வாழும் மயில் வீரனே செந்தில் வாழ்கின்ற பெருமாளே.


    மாசு இல் அடியார்கள் = குற்றம் இல்லாத அடியார்கள்வாழ்கின்ற. (நெஞ்சில் வஞ்சகம் இல்லாத நன்மக்கள்) ஊர் சென்று = ஊர்களுக்குப் போய் தேடி =(அவர்கள் இருக்கும் இடத்தைத்) தேடி விளையாடி =அவர்களுடன் விளையாடி அங்ஙனே நின்று =அங்கேயே நின்று வாழும் மயில் வீரனே = வாழ்கின்ற மயில் வீரனே செந்தில் வாழ்கின்ற பெருமாளே = திருச் செந்தூரில் வாழ்கின்ற பெருமாளே.








    ஞேயம் = ஞானத்தால் அறியப்படு பொருள்.


    ஆலகால விஷம் அருந்தியது, மார்கண்டேயனுக்காக யமனை உதைத்தது எல்லாமே பார்வதி தேவிதான் என்பதாக குறிப்பிடுகிறார்
Working...
X