Announcement

Collapse
No announcement yet.

Sahasra chandra darsanam - Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sahasra chandra darsanam - Periyavaa

    ஸதாபிஷேகம் பண்ணிக்கோ!


    ஓருநாள் பெரியவாளை தர்ஶனம் பண்ண ஒரு வயஸான தம்பதி வந்தார்கள்.


    "பெரியவாட்ட ஒரு ப்ரார்த்தனை....."


    "சொல்லு....."


    "எனக்கு 81 வயஸ் ஆறது. கொழந்தேள்ளாம் ஸதாபிஷேகம் பண்ணிக்கச் சொல்லி வற்புறுத்தறா....."


    "பண்ணிக்க வேண்டியதுதானே!.."


    "இல்ல... பெரியவா! எங்களுக்கு அதுல இஷ்டமில்ல... மனஸு ஒப்பல!!"


    "ஏன்?.."


    "ஸதாபிஷேக பத்ரிகைல "ஸஹஸ்ர சந்த்ர தர்ஶனம் [ஆயிரம் பிறை கண்டவர்]ன்னு போடறோம். ஆனா, நெஜத்ல நா... அப்டி ஒண்ணும் பாத்ததில்ல...! ஒவ்வொரு பக்ஷமும் மூணாம் பிறையை தர்ஶனம் பண்ற வழக்கமில்ல! அப்டி செய்யாதப்போ, நா.. எப்டி ஆயிரம் பிறை கண்டவன்னு போட்டுக்கறது? அது பொய் இல்லியா? அதான் வேண்டாம்னு தோணித்து பெரியவா!"


    எளிமைக்கெல்லாம் எளிமையான பெரியவா அழகாக சிரித்துக் கொண்டே, மிக மிக எளிமையான ஒரு உபாயம் சொன்னார்....


    "நீயும், ஆயிரம் சந்த்ரனை பாக்காம, பத்ரிகைல தர்ஶனம் பண்ணினேன்...ன்னு போட்டுக்க வேணாம். ஸஹஸ்ர சந்த்ர தர்ஶனம் பண்ணிட்டே, கொழந்தேள் ஆசைப்படி ஸதாபிஷேகம் பண்ணிக்கலாம்"


    தம்பதி குழம்பினார்கள்.


    ஆயிரம் பிறைகள்.... இனிமேலா? எப்படி?


    "நேர இங்கேர்ந்து ஏகாம்பரேஶ்வரர் கோவிலுக்கு போங்கோ! அங்க, ப்ராஹாரத்த ப்ரதக்ஷிணமா வரச்சே, ஸஹஸ்ரலிங்கத்தை தர்ஶனம் பண்ணிட்டு வாங்கோ!.."


    இருவரும் ஏகாம்ரேஶ்வரர் கோவிலுக்குப் போய், பெரியவா சொன்னபடி ஸஹஸ்ரலிங்கத்தை தர்ஶனம் செய்துவிட்டு மீண்டும் பெரியவாளிடம் வந்தார்கள்.


    "என்ன? ஸஹஸ்ரலிங்கம் தர்ஶனமாச்சா?..."


    "பெரியவா அனுக்ரஹத்தால ஆச்சு.."


    "ஸெரி.... இப்போவாவது ஸதாபிஷேகம் பண்ணிக்கலாமா?.."


    "ஸஹஸ்ரலிங்கத்துக்கும் ஸதாபிஷேகத்துக்கும் என்ன ஸம்பந்தம்?...."


    அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை!


    "என்ன முழிக்கற? நீ கோவில்ல ஸஹஸ்ரலிங்கத்தை தர்ஶனம் பண்ணினேல்லியோ? அதுல... மொத்தம் ஆயிரம் லிங்கம் இருக்கும். ஒரொரு லிங்கத்தோட தலைலேயும் சந்த்ரன் இருக்கோன்னோ? அதான்.... ஒனக்கு ஸஹஸ்ர சந்த்ர தர்ஶனம் ஆய்டுத்து! இனிமே... கொழந்தேள் ஆசைப்படி, ஸதாபிஷேகமும் பண்ணிக்கலாம்..."


    அந்த தம்பதிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. பெரியவாளுடைய இந்த simple logic [but true] அவர்கள் மனத்தைக் குடைந்து கொண்டிருந்த வருத்தத்தை, தவிடுபொடியாக்கியதை நினைத்தும், பெரியவாளுடைய கருணையை நினைத்தும் கண்களில் மாலை மாலையாய் வழிந்த கண்ணீரால், மானஸீகமாக பெரியவா பாதங்களுக்கு அபிஷேகம் செய்தார்கள்.


    "க்ஷேமமா இருங்கோ"


    அபயகரம் தூக்கி ஆஸிர்வதித்து ப்ரஸாதம் குடுத்தனுப்பினார்.


    நாமும் எல்லா ஶிவன் கோவிலிலும் உள்ள ஸஹஸ்ரலிங்கத்தை பல ஸமயங்களில் திரும்பிக் கூட பார்க்க மாட்டோம். அல்லது போகிற போக்கில் ஒரு கும்பிடு போடுவோம். ஆனால் மிகவும் அறிவு சார்ந்த நம் முன்னோர்கள் ஸஹஸ்ரலிங்கத்தை ஆவாஹனம் பண்ணியிருப்பதன் தாத்பர்யம் இதுதான் என்பது பெரியவா சொல்லித்தான் தெரிந்து கொள்ள முடியும்.


    ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்
    compiled & penned by Gowri sukumar
Working...
X