இந்த வாழ்க்கையே ஒரு கனவு போன்றதுதான், நாம்தான் அதை நிஜமாக எண்ணிக்கொண்டிருக்கிறோம் என்பதை விளக்க
கனவு காணும்போது கனவில் காணும் காட்சிகள் அப்போதைக்கு நிஜமாகவே எண்ணவைக்கின்றன என்பதற்கு உதாரணமாக ஒரு குட்டிக் கதை.

லண்டன் தேம்ஸ் நதியின் மேல் உள்ள ஒரு பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் ஒரு பிச்சைக்காரன் படுத்திருந்தான்.
சிறிது நேரத்தில் அவனருகே ஒரு கார் வந்து நின்றது, ஒரு பருவ மங்கை அதிலிருந்து இறங்கி அவனருகில் வந்து
நீ ஏன் இங்கே படுத்திருக்கிறாய், நீ வா என் வீட்டிற்குப் போகலாம் என்று அழைத்துப்போகிறாள்.

வீட்டிற்குச் சென்றதும் நன்கு குளிக்கச் சொல்லி புதிய உடைகளைக் கொடுத்து அணியச் சொல்கிறாள்.
சுவையான உணவையும் கொடுத்து உல்லாசமாகப் பேசிக் கொண்டிருந்துவிட்டு அவனைப் படுக்கயைில்
படுத்துக்கொள்ளும்படிக் கூறினாள். அவன் படுத்த சிறிது நேரத்தில் அவளும் அங்கே வந்தாள்,
அவனைப்பார்த்து, சற்றுத் தள்ளிப் படுத்துக்கொள் நானும் உன்னருகில் படுத்துக்கொள்கிறேன் என்றாள்.

அவனும் ஆவலாகத் தள்ளிப் படுத்தான்
ஐயகோ என்ன பரிதாபம், தொபீர் என்று தேம்ஸ் நதியில் அல்லவா விழுந்துவிட்டான்?!

தேம்ஸ் நதியின் பாலத்தில் பக்கவாட்டுச் சுவரில் படுத்தது உண்மை அதிலிருந்து நடந்ததெல்லாம் கனவு,
தள்ளிப் படுத்தது மட்டும் மீண்டும் உண்மையாக நடந்துவிட்டது?!