Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    74.சுருதிமுடி
    சுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞானசிவ
    சமயவடி வாய்வந்த அத்துவித மானபர
    சுடரொளிய தாய்நின்ற நிட்களசொ ரூபமுத லொருவாழ்வே
    துரியநிலை யேகண்ட முத்தரித யாகமல
    மதனில்விளை யாநின்ற அற்புதசு போதசுக
    சுயபடிக மாவின்ப பத்மபத மேஅடைய உணராதே
    கருவிலுரு வேதங்கு சுக்கிலநி தானவளி
    பொருமஅதி லேகொண்ட முக்குணவி பாகநிலை
    கருதவரி யாவஞ்ச கக்கபட மூடியுடல் வினைதானே
    கலகமிட வேபொங்கு குப்பைமல வாழ்வுநிஜ
    மெனவுழலு மாயஞ்செ னித்தகுகை யேஉறுதி
    கருதசுழ மாமிந்த மட்டைதனை யானஉன தருள்தாராய்
    ஒருநியம மேவிண்ட சட்சமய வேதஅடி
    முடிநடுவு மாயண்ட முட்டைவெளி யாகியுயி
    ருடலுணர்வ தாயெங்கு முற்பனம தாகஅம ருளவோனே
    உததரிச மாமின்ப புத்தமிர்த போகசுக
    முதவுமம லாநந்த சத்திகர மேவுணர
    வுருபிரண வாமந்த்ர கர்த்தவிய மாகவரு குருநாதா
    பருதிகதி ரேகொஞ்சு நற்சரண நூபுரம
    தகையநிறை பேரண்ட மொக்கநட மாடுகன
    பதகெருவி தாதுங்க வெற்றிமயி லேறுமொரு திறலோனே
    பணியுமடி யார்சிந்தை மெய்ப்பொருள தாகநவில்
    சரவண பவாவென்று வற்கரமு மாகிவளர்
    பழநிமலை மேனின்ற சுப்ரமணி யாவமரர் பெருமாளே.

    -74 பழநி


    [div5]பதம் பிரித்து உரை
    சுருதி முடி மோனம் சொல் சித் பரம ஞான சிவ
    சமய வடிவாய் வந்த அத்துவிதமான பர
    சுடர் ஒளியதாய் நின்ற நிட்கள சொரூப முதல் ஒரு வாழ்வே


    சுருதி முடி = வேதங்களின் முடிவில் விளங்கும் மோனம் சொல் =மௌன நிலையை உபதேசித்து அருளும் சித் பரம =முற்றறிவுடைய பெரிய பொருளே ஞான = அறிவுடன் கூடியசிவ சமய வடிவாய் = சைவ சமயத் திருமேனி தாங்கி எழுந்தருளி வந்த அத்துவிதம் ஆன பர = இரண்டறக் கலந்திருக்கின்ற பரம்பொருளே சுடர் ஒளியது ஆய் நின்ற = ஒளிக்குள் ஒளியாய் நிற்கின்றநிட்கள = உருவம் இல்லாதவரே சொரூப = அருள் வடிவம் உடையவரே முதல் = முதற் பொருளே ஒரு வாழ்வே = ஒப்பற்ற சிவானந்தப் பெரு வாழ்வே.


    துரிய நிலையே கண்ட முத்தர் இதய கமலம்
    அதனில் விளையா நின்ற அற்புத சுபோத சுக
    சுய படிகமாய் இன்ப பத்ம பதமே அடைய உணராதே


    துரிய நிலையே கண்ட முத்தர் = துரிய நிலையில் தன் மயமாய்நிற்கும் உண்மைப் பொருளைக் கண்ட ஜீவ முத்தர்களுடையஇதய கமலம் அதனில் = இதயத் தாமரையில் விளையா நின்ற =விளைகின்றதும் அற்புத = ஆச்சரியத்தை விளைவிப்பதும் சுபோத= மேலான ஞானத்தைத் தருவதும் சுக = சுகத்தைத் தருவதும்சுய படிகமாய் இன்ப = சுயமான படிகம் போன்ற தூய இன்பத்தை உண்டாக்குவதும் பத்ம = தாமரைக்கு நிகரானதுமான பதமே அடைய உணராதே = உன் திருவடிகளை அடைந்துய்யும் நெறியை அடியேன் உணராமல்.


    கருவில் உருவே தங்கு சுக்கில நிதான வளி
    பொரும அதிலே கொண்ட முக்குண விபாக நிலை
    கருத அரியா வஞ்சக கபடம் மூடி உடல் வினை தானே


    கருவில் உருவே தங்கு சுக்கிலம் = கருப்பத்தில் உருவாகித் தங்கிய சுக்கிலத்தோடு நிதான வளி பொரும் = பிராண வாயு வந்து பூரிக்கஅதிலே கொண்ட = அவ்வுருவத்தில் பொருந்திய முக்குணவிபாக நிலை= சத்துவ, இராஜச, தாமசம் என்னும் மூன்று குணங்களின் வேறு பாடுடைய நிலையை கருத அறியா = நினைப்பதற்கு முடியாத வஞ்சகக் கபடம் மூடி = வஞ்சனையுடன் கூடிய கபட குணத்தால் மூடப் பட்டு உடல் வினை தானே = உடலினால் வந்த தீ வினைகள்.


    கலகம் இடவே பொங்கு குப்பை மல வாழ்வு நிஜம்
    என உழலும் மாயம் செனித்த குகையே உறுதி
    கருது அசுழம் ஆம் இந்த மட்டை தனை ஆள உனது அருள் தாராய்


    கலகம் இட = கலகங்களைச் செய்ய பொங்கு குப்பை மல வாழ்வு =மிகுந்த குப்பைக்குச் சமமான மும்மலத் தொடர்பால் வந்த (அநித்திய) வாழ்வையே நிஜம் என உழலும் = நிலைத்தது என்று திரிபவனும். மாயம் செனித்த குகையே உறுதி கருது(ம்) = மாயா குணங்கட்குப் பிறப்பிடமான இவ்வுடலையே அழிவற்றது எனக் கருதும் அசுழம் ஆம் = நாய்க்குச் சமமானவனுமாகிய இந்த மட்டைதனை ஆள = மூடனாகிய இவ்வடியேனை ஆட்கொள்ளஉனது அருள் தாராய் = நீ அருள் புரிவாயாக.


    ஒரு நியமமே விண்ட சட் சமய வேத அடி
    முடி நடுவுமாய் அண்ட முட்டை வெளி ஆகி உயிர்
    உடல் உணர்வு அது ஆய் எங்கும் உற்பனமது ஆக அமர் உளவோனே


    ஒரு நியமமே விண்ட = ஒரு விதியையே கூறுகின்ற சட் சமய வேத =ஆறு சமயங்களைத் தன்னகத்தே கொண்ட வேதத்தின் அடி முடி நடுவுமாய் = முதலும் முடிவும் நடுவுமாகி அண்ட முட்டை வெளி ஆகி =உருண்டை வடிவமாக உள்ள அண்டங்களாகவும் அதற்கப்பாலுள்ள பெரு வெளியாகவுமாகி உயிர் உடல் உணர்வு அது ஆய் = ஆன்மாக்களின் உயிருக்கு உயிராகவும் உடலாகவும் அறிவுமாகி எங்கும் உற்பனம் அது ஆக அமர் உளவோனே = யாண்டும் நீக்கமற நிறைந்து தோன்றுப வருமாகி உள்ள நித்தியப் பொருளே.


    உத தரிசமாம் இன்ப புது அமிர்த போக சுகம்
    உதவும் அமல ஆனந்த சத்தி கர(ம்) மேவு உணர் அ
    உரு பிரணவா மந்த்ர கர்த்தவியம் ஆக வரு குரு நாதா


    உத தரிசமாம் இன்ப = தண்ணீர் ஊற்றெடுப்பது போல மாறாத இன்பத்தை நல்கும் புத் = புதிய அமிர்த போக சுகம் உதவும் =அமிர்தத்தை ஒத்த சிவலோகப் பேரின்ப நலத்தை வழங்குகின்ற அமல ஆனந்த = மலமில்லாத இன்ப வடிவான எம் பெருமானே சத்தி கர = வேற் படையைக் கையில் ஏந்தி இருப்பவரே மேவு உணர் உரு பிரணவா மந்த்ரம் = பொருந்திய அறிவுருவமாகிய அந்தப் பிரணவ மந்திரத்திற்கு கர்த்தவியம் ஆக வரு குரு நாதா = முதன்மைப் பொருளாக எழுந்தருளி வருகின்ற குருநாதரே.


    பருதி கதிரே கொஞ்சு நல் சரண நூபுரம்
    அது அசைய நிறை பேர் அண்டம் ஒக்க நடமாடும் கன
    பத கெருவிதா துங்க வெற்றி மயில் ஏறும் ஒரு திறலோனே


    பருதி கதிரே கொஞ்சு = சூரியப் பிரகாசத்தை இனிது வெளிப்படுத்தும் நல் சரண நூபுரம் அது அசைய = நன்மையைத் தரும் தேவரீரது திருவடிகளின் தண்டைகள் அசைந்து இனிது ஒலி செய்ய நிறை பேர் அண்டம் ஒக்க = நிறைந்த பெரிய அண்டங் களில் எல்லாம் ஒருங்கு அசைய நடமாடும் = நடனம் செய்கின்ற கனபத கெருவிதா = பெருமை பொருந்திய அடிகளை உடை மையால் செருக்குள்ளதும் துங்க = பரிசுத்தமும். வெற்றி = வெற்றியும் கொண்டுள்ள மயில் ஏறும் ஒரு திறலோனே = மயிலேறும் ஒப்பற்ற ஆற்றல் உடையவனே.


    பணியும் அடியார் சிந்தை மெய் பொருள் அது ஆக நவில்
    சரவணபவா ஒன்றும் வல் கரமும் ஆகி வளர்
    பழநி மலை மேல் நின்ற சுப்ரமணியா அமரர் பெருமாளே.


    பணியும் அடியார் = உன்னை வணங்கும் அடியவர்களுடையசிந்தை மெய்ப் பொருள் அது ஆக நவில் = உள்ளம் இதுவே உண்மைப் பொருள் என்று சொல்லுகின்ற சரவணபவா ஒன்றும் =சரவணபவா என்னும் ஆறெழுத்துக்கள் பொருந்திய வல்கரமும்ஆகி வளர் = (அஞ்ஞான இருளை நீக்கும்) வலியுடையபேரொளியாகி வளர்கின்ற பழநி மலைமேல் நின்ற = பழனி மலை மேல் வீற்றிருக்கின்ற. சுப்ரமணியா = சுப்பிர மணியனே அமரர் பெருமாளே = தேவர்கள் பெருமாளே.[/div6]





    விளக்கக் குறிப்புகள்


    அ. மோனம்...
    (மோன மென்பது ஞானவரம்பு).... ஒளவையார்
    (தமர பரிபுர சரணமு மவுனமும் அருள்வாயே)...திருப்புகழ் (அருவமிடை)


    ஆ. துரிய நிலை ...
    (துரியமே லற்புதப் பரமஞா னத்தனிச்
    சுடர்வியா பித்தநற் பதிநீடு)..........................திருப்புகழ் 154 (சரியையாளர்க்கு).


    இ. முத்தரித யாகமல.....
    (சுத்தவ மகாதவ சிகாமணியெ னோதுமவர்
    சித்தமதிலே குடிய தாவுறையு மாறுமுக)..............திருப்புகழ் (தத்தைமயில்).


    ஈ ஒரு நியமமை விண்ட சட்சமயம் ...
    (முதலொன்றா மானை முதுகுடன் வாலும்
    திதமுறு கொம்பு செவிதுதிக் கைகான்
    மதியட னந்தகர் வகைவகை பார்த்தே
    அதுகூற லொக்கு மாறு சமயமே)............................திருமந்திரம். 1507


    உ. வேத அடி முடி நடுவுமாய்...
    • ஓலமறைக ளறைகின்ற ஒன்றது........................................... திருப்புகழ்,ஓலமறைகள்
    • மறைபலவுமோதி தொழமுது பழநிமேவு பெருமாளே.................திருப்புகழ் ஒருவரை
    • மறை ஆயிரங்களும் குமரகுருவென..........................................திருப்புகழ்,ஒருவரை


    ஊ. உயிர் உடல் உணர்வதாய்...
    ஊனுமுயிரு முழுதுங்க லந்தது...............................................திருப்புகழ்,ஓலமறைகள்


    எ. பேரண்டமொக்க நடமாட.. ..
    அண்ட கோளகை வெடிபட இடிபட
    எண்டி சாமுக மடமட நடமிடும்
    அந்த மோகர மயிலினில்.......................................................திருப்புகழ்,பஞ்சபாதக


    ஏ. சரவணபவா – சரவணபவா என்னும் ஆறெழுத்து ஒன்றும் மலை. பழநி சடாக்ஷர
    மலையாகும்
Working...
X