சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(156-வது நாள்.)*
*25--வது படலம்.*
*திருவிளையாடல் புராணத் தொடர்.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*கொலைப்பழி அஞ்சியது.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
இராஜசேகரன் தனது அருமை மைந்தன் குமாரன் குலோத்துங்கனுக்கு பட்டங் கட்டி விட்டுச் சோமசுந்தரக் கடவுளின் திருவடி நிழல் சேர்ந்தான்.


குலோத்துங்கப் பாண்டியன் ஒவ்வொரு நாளும் சோமசுந்தரப் பெருமானைப் பக்தியுடன் வழிபடும் நியமத்தை மேற்கொண்டான்.


பாண்டியன் குலோத்துங்கன் அரசு புரிந்து வருகின்ற நாளிலே திருப்புத்தூரிலிருந்து ஒரு பிராமணன் தனது மனைவியுடனும் கைக் குழந்தையுடனும் நடந்து வந்து கொண்டிருந்தான்.


தனது மாமனின் வீடு மதுரையிலே இருந்ததால் காட்டுவழி வழியே நடந்து வந்தான். வழியில் அவனது மனைவிக்கு நா வறட்சி ஏற்பட்டு தண்ணீர்தாகம் உண்டானது.


ஆதலால், மனைவி குழந்தையை பெரிய ஆலமர நிழலின் கீழ் இருக்கச் செய்து தண்ணீரைத் தேடிக் கண்டு கொண்டு வருகிறேன் எனச் சொல்லிவிட்டுப் போனான்.


அந்தணக் கணவன் சென்றதும் குழந்தையை தன்னோடு அனைத்து வைத்திருந்தவள் அந்த ஆலமரநிழலிலே அப்படியே கண்ணயர்ந்து தூங்கிப் போனாள்.


ஆலமரத்தின் கிளைகளுக்கூடே அடர்ந்த இலைகளுக்கிடையில் கூர்மையான அம்பு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது.


என்றோ ஒருநாள் வேடனொருவன் வேட்டையாட எய்த அம்பு இம்மரகிளைகளுக்குள் வந்து சிக்கியிருந்தது போலும். அந்தச் சமயத்தில் காற்று பலமாக வீசவே, மரத்தின் கிளைகள் அசைய, இலைகள் பிரிந்து உராய, மேலேத் தொங்கிக் கொண்டிருந்த அம்பு கீழே விழுந்தது.


கீழாக வந்த அம்பு, மல்லாந்து படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த அந்தணின் மனைவியின் வயிற்றிலே பாய்ந்து சொருகி நின்றது.


விதிப்பயன் காரணத்தால் அந்தணனின் மனைவி இறந்து போனாள். அச்சமயத்தில் அவ்விடத்தில் இயல்பாக வேட்டைக்காக வந்த வேடனொருவன் வில்லும் கையுமாக ஆலமரத்தருகில் நின்று கொண்டிருந்தான்.


தண்ணீர் கொண்டு வரச் சென்ற அந்தணன் தண்ணீரோடு திரும்பி வந்து பார்த்தபோது, பக்கத்தில் குழந்தை இருக்க இரத்த வெள்ளத்தில் தனது மனைவியின் வயிற்றில் அம்பு பாய்ந்து இறந்து போயிருப்பதைக் கண்டான். கண்டு கலங்கி அறிவால் மனம் வதங்கினான்.


பின்பு இவ்வித ஹத்தியைச் செய்தவன் யார்? என்று சுற்றும் முற்றும் பார்க்க, சற்று தள்ளி வில்லுடன் வேடனொருவன் நிற்பதை அந்தணன் கண்டான். இவ்வேடனே என் மனையாளைக் கொன்றவன் என்று அந்தணன் யூகித்து விட்டான்.


*"ஏ வேடா?, என் மனைவியைக் கொன்று விட்டாயே!"* என்று கூறிக்கொண்டு வேடனின் கையைப் பிடித்து தன்னுடன் இழுத்து வந்தான். இறந்து கிடந்த தன் மனைவியை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டான். கண்கள் அழுத வண்ணம், நெஞ்சம் விம்மியபடி மதுரைக்குச் சென்றான்.


மதுரை வந்து குலோத்துங்க பாண்டியனின் அரண்மனையை அடைந்தான். அரண்மனை வாயிலில் தனது இறந்த மனைவியின் உடலைக் கிடத்தி *"இந்தப் பொல்லாத வேடன் என் மனைவியை அம்பு எய்திக் கொலை செய்து விட்டான் என்று முறையிட்டுக் கூவியழுதான். கதறினான்.


வாயிற்காவலர்கள் நிலைமையை மன்னிடம் விரைந்து போய் கூறினர். செய்தி கேட்ட மன்னனும் நிலை குலைந்து பயந்து தன்னையே வெறுத்துக் கொண்டு வெளி வந்தான்.


அந்தணன் கூறியழும் நிலை கண்டு அரசனின் மனம் கலங்கிக் கணத்தது. அருகே வந்து அந்தணிடம் குறை கேட்டான்.


*"பாண்டியா! மனைவியின் தாகம் தீர்க்க தண்ணீர் கொண்டு வரப் போயிருந்தேன். தண்ணீருடன் திரும்ப வந்த போது இவ்வேடன் என் மனையாளினை அம்பெய்துக் கொன்று விட்டான். என குற்றஞ்சாட்டினான் அந்தணன்.


வேடனை மன்னன் உற்று நோக்கினான். அப்போது வேடனே பேசினான்............


*"அரச பெருமானே!* இளைப்பாறுவதற்காகத்தான் நான் ஆலமரநிழல் தேடி வந்தேன். நான் இந்தக் கொலையைச் செய்யவில்லை மன்னா! நடந்திருந்த கொலையை நான் கண்ணாலும் காணவில்லை. இப்பாவச் செயலை நான் செய்யவில்லை என பணிந்து சொன்னான்.


இதற்கிடையை மந்திரி குறுக்கிட்டு, அப்படியானால் இப்பெண்ணின் உடலிலே எப்படி அம்பு பாய்ந்தது என வினவினர்.


அதற்கு அவ்வேடன், நடந்த சம்பவம் எதுவுமே எனக்குத் தெரியாது. இது உண்மை. சத்தியம் என்றான்.


மந்திரிகளின் யோசனைப்படி அவ்வேடனைப் பலவிதமான சோதனை செய்து பார்த்தான்.


வேடன் ஒரே பதிலைத்தான் கடைசிவரைச் சொல்லிக் கொண்டிருந்தான். அரசனின் பலவிதச் சோதனைகளில் அரசனுக்கு ஏதும் புலப்படவில்லை. பெருங் குழப்பம் அடைந்தான்.


இந்த ச் சம்பவம் மனித விசாரணைக்கு அப்பாற்பட்டது. இச்சம்பவத்திற்கு தெய்வம் தான் பதில் தர வேண்டும் என மன்னன் நினைத்தான்.


பிறகு அந்தணரை அவன் மனைவிக்கு ஈம காரியங்களை செய்து முடிக்குமாறு அனுப்பிவிட்டு, வேடனையும் சிறையிலடைக்க உத்தரவிட்டான்.


ஈமச் சடங்களையெல்லாம் முடித்துத் திரும்பி வந்த அந்தணனை அரண்மனை வாசலிலே இருக்கச் செய்து விட்டு, குலசேகரப் பாண்டியன் நேராகத் திருக்கோயிலை அடைந்தான்.


சோமசுந்தரப் பெருமான் முன்பு பணிந்து வணங்கித் தொழுது நின்று, "பெருமானே!...குழப்பமான மனத்துடனே வந்துள்ளேன்!. அந்தணன் மணைவியைக் கொன்றது வேடனா? அல்லது வேறுயாரேனுமா?..எனத் தெரியவில்லை. என் சோதனைகள் இவ்விஷயத்தில் விடை கிடைக்கவில்லை. எம்பெருமானே! ஈசனே!! அருள் புரிந்து எளியேனின் குழப்பம் தீரத் தெளிவாக்கியருள வேண்டும் என்று விண்ணப்பித்தான்.


அச்சமயம் ஆகாசத்திலிருந்து,......
*"பாண்டியா, இத்திருநகரின் வெளியிலுள்ள செட்டித் தெருவிலுள்ள ஒரு வீட்டில் இன்றிரவு விவாகம் நடக்கும். நீ அந்தப் பிராமணனையும் உன்னுடன் அழைத்துக் கொண்டு அங்கே செல். அவ்விடத்தில் உன் குழப்பம் தீர்ந்து உன் மனம் தெளிவடையச் செய்வோம்!* என்று ஆகாசவாணி குரலொலித்தது. இதைக் கேட்டதும் பாதி அமைதி அடைந்த உள்ளத்துடன் பாண்டியன் அரண்மனை திரும்பினான்.


மாலை நேரம் வந்து. மன்னன் மாறு மாறு வேடமெடுத்துக் கொண்டான். தன்னோடு அந்தணனையும் அழைத்துக் கொண்டு, விவாக வீட்டிற்குச் சென்று ஒரு புறமாக நின்றனர்.


மன்னவனுக்கும் மறையவனுக்கும் பக்கத்திலே இரண்டு பேர் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் யம.தூதர்களாவர்.கடவுள் கருணையால் அவ்விரண்டு பேர் பேசியது இந்த இரண்டு பேர்களின் செவிகளுக்கு மட்டுமே கேட்டன.


இப்பொழுதே இங்கேயே மணமகன் உயிரை எடுத்து வரும்படி நம் யமதர்ராஜாவின் ஆணை. அவரது ஆணையை எப்படி நிறைவேற்றுவது? மணமகன் ஆரோக்கியச் சூழலிலேயே இருக்கிறானே?,என்ன செய்வது?, என யமதூதரிருவரில் ஒருவன் கேட்க......


அதற்கு மற்றொரு யமதூதரொருவன், இதில் என்ன கஷ்டம் உள்ளது. இன்று பகலிலே, ஆலமர இலைகளில் சிக்குண்டிருந்த பழைய அம்பைக் காற்றினால் அசைத்து வீசச் செய்து, அம்மரநிழலிலே தூங்கிக் கொண்டிருந்தவளை கொன்று அவள் உயிரை வாங்க வில்லையா?, அதைப் போலவே இப்பொழுதும் ஒரு சம்பவத்தை நிகழ்த்தி விடுவோம் என்றான்.


அதற்கு முதலாமாவ யமதூதனும் ஒத்து, இங்கே சம்பவம் நடைபெற என்னமாதிரி நிகழ்த்தலாம் என்றான்.


வீட்டிற்கு வெளிப்புறத்தில் மாடு ஒன்று நின்று கொண்டிருக்கிறது பார். விவாக வீட்டில் கெட்டி மேளச் சத்தத்தின் ஆரவாரத்தைக் கொஞ்சம் கூட்டச் செய்வோம். கெட்டிமேளச் சத்த்தில் மருண்டு மிரண்டு மாடை ஓடச் செய்ய வேண்டியதுதான். மாட்டின் கொம்புகள் மணமகனின் உயிரைப் பறிக்கச் செய்வோம் என யுத்தியைச் சொன்னான்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
இப்போது வேந்தன் வேதியரைப் பார்த்தான். அவ்வேந்தனின் மனம் தெளிவுற்றிருந்தது. மேலும் விளைவுகளை அறிய அப்படியே இருவரும் நின்று கவணித்துக் கொண்டிருந்தனர்.
மணவீட்டில் ஏகப்பட்ட ஆரவாரம். நல்ல வேளை நெருங்கியதும் மங்கையர் மங்கலம் முழங்கினர். பலவாறு வாத்தியங்கள் ஒலியைப் பெருக்கின. பேரொலி மாட்டிற்கு பெரும் எரிச்சலாகி அதுவும் அலறி கயிற்றை அறுத்துக் கொண்டது. விரைந்து வந்த மாடு மணவரையிலிருந்த மணமகனை தன் கொம்புகளால் குத்திக் கொன்றுவிட்டு வெளியே ஓடிவிட்டது.


மணமகன் பினமானான். மணப்பறை முழுவதும் மங்கலக்குரல் அகன்று ஓலக்குரல் கேட்டது. விதி வெற்றி பெற்றுக் கொண்டது.


இந்நிகழ்வுகளை நன்கு கவணித்த அந்தணன் மிக மிக வருத்தம் கொண்டான். குற்றமில்லா வேடனைத் துண்பத்துக்குள்ளாக்கியதை எண்ணி எண்ணி மனம் புழுங்கினான். பின் மன்னருடன் அரன்மணை திரும்பினான். அரண்மனையில் மந்திரிகளிடமும் மற்றையோர்களிடமும் நடந்த விபரத்தைக் கூறினான் மன்னன்.


குலோத்துங்கப் பாண்டியன் பின் அந்தணனைப் பார்த்து,...... "உன் குழந்தையின் மேன்மைக்காகவே நீ வேறொரு விவாகம் செய்து கொள்! எனக்கூறி நிரம்பப் பொருள் கொடுத்து அனுப்பி வைத்தான்.
சிறை கிடந்த வேடவனையும் விடுவித்து, அந்தணுக்காக தன்சார்பில் மன்னிப்புக் கோரிக் கொண்டான். அவனுக்கும் பொருளுதவி கொடுத்தனுப்பி ஆறுதலடையுமாறு அனுப்பி வைத்தான்.


பின் பாண்டியர் திருக்கோயில் சென்று, சோமசுந்தரப் பெருமானை வணங்கி, *"பெருமானே! எளியோன் பொருட்டுத் தேவரீர் பழியஞ்சு நாதராய் இருந்தீர்!"* என்று வியந்து போற்றி விசேஷ பூஜை நடத்தினான்.
திருச்சிற்றம்பலம்.


*திருவிளையாடவல் புராணத் தொடர் இன்னும் தொடர்ந்து வ(ள)ரும்.*


■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*