`ஆவணி அவிட்டம் சோ

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
கேள்வி : இந்த ஆவணி அவிட்டம் என்பது என்ன? பழைய பூணூலை கழற்றி விட்டு, புதிய பூணூலைப் போட்டுக் கொள்ள ஒரு தினம். அதுதானே ஆவணி அவிட்டம் என்பது? அதாவது பூணூலை மாற்றுகிற தினம்தானே அது?


சோ : நீங்கள் சொல்கிற மாதிரிதான் இப்போது ஆகிவிட்டது. ஆனால், ஆவணி அவிட்டம் என்பது அதுவல்ல. ஆவணி அவிட்டம் என்று சொல்லப்படுகிற சடங்கின் உண்மையான பெயர் உபாகர்மா. உபாகர்மா என்றால் ஆரம்பம் என்று அர்த்தம். ச்ராவண மாதத்தில் பிரம்மதேவனுக்கு வேதம் கிட்டியது; அதாவது உபதேசம் ஆகியது. அந்த தினம், ஆவணி மாதம், அவிட்ட நக்ஷத்திரம். அதனால்தான் இதற்கு 'ஆவணி அவிட்டம்' என்ற
பெயரும் வந்தது. அப்போது பிரம்மனுக்கு வேதம் கிட்டியதால், அவனுக்கு அது ஆரம்பம் ஆகியது. அந்த ஆரம்பத்தை இங்கே மனிதர்கள் கொண்டாடுகிறார்கள். இது வருடா வருடம் செய்யப்படுகிறபோது, வேதத்திற்குச் செய்யப்படுகிற மரியாதையாக இது கருதப்படுகிறது.


வேதத்திற்கு ஆண்டு விழா என்றும் இதைச் சொல்லலாம். ப்ரம்ம தேவனுக்கு உபதேசமாகிய தினம்; அதிலிருந்து வழி வழியாக மனிதர்களுக்குக் கிடைத்தது. அதனால் ஒவ்வொரு வருடமும் அந்த தினத்தைக் கொண்டாடுகிறோம். அது ஆண்டு விழா.


கேள்வி : ஆரம்பம் என்று சொன்னீர்கள். அது என்றோ ஆரம்பமாகி விட்டது. திரும்பவும் ஒவ்வொரு வருடமும் அதைப் புதிதாக ஆரம்பிப்பானேன்? அது எதற்கு? இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயமாக இல்லையே?


சோ : இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயம் இல்லை என்கிறீர்கள்; சரி, இருக்கட்டும். தேசிய ஒருமைப்பாட்டுக்காக உறுதிமொழி, பிரமாணம் என்று வருடா வருடம் எல்லோரும் எடுத்துக் கொள்கிறார்கள். 'போன வருடம்தான் இந்த உறுதிமொழி, பிரமாணம் எல்லாம் எடுத்தாகி விட்டதே! அதே தேசம்தான் இருக்கிறது; அதே பிரமாணம்தான் இது. அதை எதற்கு இன்னொரு முறை செய்ய வேண்டும்? தேசம் போய் விட்டதா? அல்லது
பிரமாணம்தான் தீர்ந்து விட்டதா? அந்த பிரமாணத்திற்கு ஒரு வருடம்தான் ஆயுளா? ஏன் இதை திரும்பவும் வருடா வருடம் செய்ய வேண்டும்? ஏன்? அந்தப் பிரமாணம் ஆறு மாதத்திலேயே தீர்ந்து போகாதா? அல்லது மூன்று மாதத்தில் தீர்ந்து போகாதா? அல்லது தினம் தினம் அந்த பிரமாணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாதா? ஏன், இப்படி வருடத்திற்கு ஒருமுறை?' என்றும் கேட்கலாம். ஆனால், அப்படி யாரும்
கேட்பதில்லை. அது எப்படி பகுத்தறிவுக்கு உகந்ததாக இருக்கிறதோ, அதே மாதிரிதான் இதுவும்.


தேசம் என்கிற சிந்தனை, ஒருமைப்பாடு என்கிற சிந்தனை ஆகியவற்றை நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்கிறோம். அதற்காக இதைச் செய்கிறோம். அதே மாதிரிதான் இந்த உபாகர்மாவும். இந்த சிந்தனை, வேதம் எவ்வளவு உயர்வானது என்பது பற்றியது. ப்ரம்ம தேவனுக்குக் கிடைத்த தினம் பற்றியது. அங்கிருந்து நமக்கு அது கிடைத்தது என்ற விஷயம் பற்றியது. அந்த மாதம், அந்தத் தேதியில் அதாவது ஆவணி மாதம்
அவிட்ட நக்ஷத்திரத்தில் நாம் இதையெல்லாம் நினைத்துக் கொள்கிறோம். சொல்லப் போனால், இது தேசிய ஒருமைப்பாட்டு பிரமாணத்தை விட, பகுத்தறிவுக்கு உகந்த விஷயம்.


ஏனென்றால், தேசம் என்பது, என்றோ உண்டாகி விட்டது. ஒருமைப்பாடு என்பதும் என்றோ உண்டாகி விட்டது. ஆனால், தேசம் பிறந்த நேரத்திலோ, ஒருமைப்பாடு உண்டான சமயத்திலோ, இந்த பிரமாணத்தை நாம் எடுத்துக் கொள்வதில்லை. இந்த உபகர்மாவை எடுத்துக் கொண்டால் பிரம்மனுக்கு அது எப்போது உபதேசமாகியதோ, எப்பொழுது பிரம்மனுக்கு வேதம் கிட்டியதோ, அந்த மாதம், அந்த தினம் எது என்று பார்த்து, அந்த
தினத்தில் நாம் இங்கே அந்தச் சடங்கைச் செய்கிறோம். அன்று நமக்கு வேதம் பயில்வது மீண்டும் ஆரம்பம்.இது பிராமணர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்ட விஷயம் என்று நினைத்து விடக்கூடாது. உபநயனம் என்பது முதல் மூன்று வர்ணத்தாருக்கும் உண்டு. அதாவது பிராமண, க்ஷத்ரிய, வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர்களுக்கு உபநயனம் உண்டு. அவர்கள் மூவருமே வருடா வருடம் இந்த 'ஆவணி அவிட்டம்'
என்கிற உபாகர்மாவைச் செய்ய வேண்டும். இதை வெறும் பூணூலை மாற்றிக் கொள்கிற விஷயமாகக் கருதி விடாமல், வேதம் நமக்குக் கிட்டியதை கொண்டாடுகிற தினம் என்று நாம் கருத வேண்டும்