92.வேயிசைந்து
வேயி சைந்தெழு தோள்கள் தங்கிய
மாதர் கொங்கையி லேமு யங்கிட
வீணி லுஞ்சில பாத கஞ்செய அவமேதான்
வீறு கொண்டுட னேவ ருந்தியு
மேயு லைந்தவ மேதி ரிந்துள
மேக வன்றறி வேக லங்கிட வெகுதூரம்
போய லைந்துழ லாகி நொந்துபின்
வாடி நைந்தென தாவி வெம்பியெ
பூத லந்தனி லேம யங்கிய மதிபோகப்
போது கங்கையி னீர்சொ ரிந்திரு
பாத பங்கய மேவ ணங்கியெ
பூசை யுஞ்சில வேபு ரிந்திட அருள்வாயே
தீயி சைந்தெழ வேயி லங்கையில்
ராவ ணன்சிர மேய ரிந்தவர்
சேனை யுஞ்செல மாள வென்றவன் மருகோனே
தேச மெங்கணு மேபு ரந்திடு
சூர்ம டிந்திட வேலின் வென்றவ
தேவர் தம்பதி யாள அன்புசெய் திடுவோனே
ஆயி சுந்தரி நீலி பிங்கலை
போக அந்தரி சூலி குண்டலி
ஆதி யம்பிகை வேத தந்திரி யிடமாகும்
ஆல முண்டர நாரி றைஞ்சவொர்
போத கந்தனை யேயு கந்தருள்
ஆவி னன்குடி மீதி லங்கிய பெருமாளே.

-92 பழநி

பதம் பிரித்து உரை
வேய் இசைந்து எழு தோள்கள் தங்கிய
மாதர் கொங்கையிலே முயங்கிட
வீணிலும் சில பாதகம் செய அவமே தான்


வேய் இசைந்து = மூங்கிலுக்கு ஒத்ததாய் எழு = எழுந்துள்ள.தோள்கள் தங்கிய = தோள்களைக் கொண்ட மாதர் = விலை மாதர்களின் கொங்கையிலே = தனங்களை முயங்கிட = தழுவ வேண்டி வீணிலும் = வீணாக சில பாதகம் செய்ய =சில பாதகச் செயல்களைச் செய்ய அவமே தான் = பயனொன்றும் இல்லாமல்.


வீறு கொண்டு உடனே வருந்தியுமே
உலைந்து அவமே திரிந்து உள்ளம்
கவன்று அறிவு கலங்கிட வெகு தூரம்
வீறு கொண்டுடனே = செருக்கு அடைந்து. வருந்தியுமே = மனம் வருந்தி. உலைந்து = நிலை குலைந்து. அவமே = வீணாக. திரிந்து = திரிந்து. உளமே கவன்று = நெஞ்சம் கவலை கொண்டு. அறிவே கலங்கிட = அறிவு கலங்க. வெகு தூரம் = வெகு தூரம்.


போய் அலைந்து உழலாகி நொந்து பின்
வாடி நைந்து எனது ஆவி வெம்பியே
பூதலம் தனிலே மயங்கிய மதி போக
போய் அலைந்து = போய் அலைந்து. உழலாகி = திரிந்து. நொந்து = மனம் வருந்தி. பின் வாடி = பின்னர் உடல் வாட்டமுற்று.நைந்து = நிலை கெட்டு. எனது ஆவி வெம்பியே = என் ஆவி கொதித்து வாடி. பூதலம் தனிலே = இப் பூமியில். மயங்கிய =ஆசை மயக்கம் கொண்ட. மதி போக = புத்தி என்னை விட்டு விலகிப் போக.


போது கங்கையின் நீர் சொரிந்து இரு
பாத பங்கயமே வணங்கியே
பூசையும் சிலவே புரிந்திட அருள்வாயே


போது = மலரையும். கங்கையின் நீர் = கங்கை நீரையும்.சொரிந்து = நிரம்பப் பெய்து. இரு பாத பங்கயமே = (உனது) இரண்டு தாமரைத் திருவடிகளை வணங்கி = வணங்கியேபூசையும் சிலவே புரிந்திட = சில பூசைகளையும் செய்யஅருள்வாயே = அருள் புரிவாயாக.


தீ அசைந்து எழவே இலங்கையில்
ராவணன் சிரமே அரிந்து அவர்
சேனையும் செல மாள வென்றவன் மருகோனே


தீ இசைத்து எழவே = நெருப்புப் பற்றி எழும்படி. இலங்கையில் =இலங்கையில். ராவணன் = இராவணனுடைய. சிரமே அரிந்து =தலைகளை அரிந்து. அவர் சேனையும் செல மாள = அவனுடைய சேனைகள் தொலைந்து அழிய. வென்றவன் = வென்ற இராமனின். மருகோனே = மருகனே.


தேசம் எங்கணுமே புரந்திடு
சூர் மடிந்திட வேலின் வென்றவ
தேவர் தம் பதி ஆள அன்பு செய்திடுவோனே


தேசம் எங்கணுமே = எல்லா நாடுகளையும். புரந்திடு = ஆண்டு வந்த. சூர் மடிந்திட = சூரன் இறந்து போக. வேலின் வென்றவ =வேல் கொண்டு வென்றவனே. தேவர் தம் பதி ஆள = தேவர்கள் தம் ஊரை ஆளும்படி. அன்பு செய்திடுவோனே = அருள் புரிந்தவனே.


ஆயி சுந்தரி நீலி பிங்கலை
போக அந்தரி சூலி குண்டலி
ஆதி அம்பிகை வேத தந்திரி இடமாகும்


ஆயி = தாய். சுந்தரி = அழகி. நீலி = பச்சை நிறமுடையவள். பிங்கலை = பொன்னிறம் படைத்தவள். போக அந்தரி = (உயிர்களுக்குப்) போகத்தை ஊட்டும் ஓளி வடிவினள். சூலி = திரிசூலம் ஏந்தியவள். குண்டலி = சுத்த மாயையாகிய சத்தி. ஆதி = முதல்வி. அம்பிகை = அம்பிகை. வேத தந்திரி = வேதத் தலைவி (ஆகிய பார்வதி). இடமாகும் = இடப்பாகத்தில் அமரும்.


ஆலம் உண்ட அரனார் இறைஞ்ச ஓர்
போதகம் தனையே உகந்து அருள்
ஆவினன்குடி மீது இலங்கிய பெருமாளே.


ஆலம் உண்ட அரனார்= ஆலகால விடத்தை உண்டசிவபெருமான் இறைஞ்ச = வணங்க ஓர் = ஒப்பற்ற. போதகம் தனையே = ஞான உபதேசத்தை உகந்து = மகிழ்ந்து அருள் =அருளிய (பெருமாளே) ஆவினன்குடி மீதில் = திருவாவினன்குடி என்னும் தலத்தில். இலங்கிய பெருமாளே = விளங்குகின்ற பெருமாளே.


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஒப்புக
1. போது கங்கையில் நீர்....
கற்றுக் கொள்வன வாய் உள நா உள
இட்டுக் கொள்வன பூ உள நீர் உள....
........ திருநாவுக்கரசர் தேவாரம்