94ஆனாத பிருதிவி
ஆனாத பிருதிவிப் பாச நிகளமும்
மாமாய விருளுமற் றேகி பவமென
வாகாச பரமசிற் சோதி பரையைய டைந்துளாமே
ஆறாறி னதிகமக் க்ராய மநுதினம்
யோகீச ரெவருமெட் டாத பரதுரி
யாதீத மகளமெப் போது முதயம நந்தமோகம்
வானாதி சகலவிஸ்த் தார விபவரம்
லோகாதி முடிவுமெய்ப் போத மலரயன்
மாலீச ரெனுமவற் கேது விபுலம சங்கையால்நீள்
மாளாத தனிசமுற் றாய தரியநி
ராதார முலைவில்சற் சோதி நிரபமு
மாறாத சுகவெளத் தாணு வுடலினி தென்றுசேர்வேன்
நானாவி தகருவிச் சேனை வகைவகை
சூழ்போது பிரபலச் சூரர் கொடுநெடு
நாவாய்செல் கடலடைத் தேறி நிலைமையி லங்கைசாய
நாலாறு மணிமுடிப் பாவி தனையடு
சீராமன் மருகமைக் காவில் பரிமள
நாவீசு வயலியக் கீசர் குமரக டம்பவேலா
கானாளு மெயினர்தற் சாதி வளர்குற
மானோடு மகிழ்கருத் தாகி மருடரு
காதாடு முனதுகட் பாண மெனதுடை நெஞ்சுபாய்தல்
காணாது மமதைவிட் டாவி யுயவருள்
பாராயெ னுரைவெகுப் ப்ரீதி யிளையவ
காவேரி வடகரைச் சாமி மலையுறை தம்பிரானே.

- 94 திருவேரகம்பதம் பிரித்து உரை


ஆனாத பிருதிவி பாச நிகளமும்
மா மாய இருளும் அற்று ஏகி பவம் என
ஆகாச பரம சிற் சோதி பரையை அடைந்து உளாமே

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
ஆனாத = நீங்குதற்கு அரிய பிருதிவி = மண் பாச = ஆசையாகியநிகளம் = விலங்கும். மா மாய இருள் = மிகப் பெரிய அஞ்ஞானமாகிய இருளும். அற்று = ஒழிந்து ஏகி பவம் என =ஒன்று பட்ட தன்மை என்று கூறும்படி. சிற் சோதி = அறிவுச் சோதியான பரையை = பரா சக்தியை அடைந்து உளாமே =அடைந்து நினைப்பை விட்டு.


ஆறு ஆறின் அதிகம் அக்ராயம் அநுதினம்
யோகீசர் எவரும் எட்டாத பர துரிய
அதீதம் அகளம் எப்போதும் உதயம் அநந்த மோகம்


ஆறு ஆறின் அதிகம் = முப்பத்தாறு தத்துவங்களுக்கும்மேற்பட்டதாய் அக்கிராயம் = முற்பட்டதாய். அநு தினம் =எப்போதும் யோகீசர் எவரும் எட்டாத = யோகியர்கள் எவருக்கும் எட்டாததான பர துரிய அதீதம் = பெரிய துரிய நிலைக்கு அப்பாற்பட்டதாய் அகள = உருவம் இல்லாததாய் எப்போதும் உதயம் = எப்போதும் தோன்றி நிற்பதாய் அநந்த மோகம் =அளவற்ற வேட்கை உடையதாய்.


வான் ஆதி சகல விஸ்தார விபவரம்
லோகாதி முடிவும் மெய் போத மலர் அயன்
மால் ஈசன் எனும் அவற்கு ஏது விபுலம் அசங்கையால் நீள்


வான் ஆதி = விண் முதலான சகல விஸ்தார விபவரம் = எல்லா விரிவுள்ள வாழ்வுப் பொருளாய் லோக ஆதி முடிவும் =உலகத்துக்கு முதலும் முடிவுமாக விளங்குவதாய் மெய்ப் போத = உண்மை அறிவாய் மலர் அயன் = தாமரை மலரில் வாழும் பிரமன் மால் ஈசன் எனும் அவற்கு = திருமால், உருத்திரன் என்ற மும்மூர்த்திகளுக்கும். ஏது விபுலம் = மூலகாரணமாய் நிற்கும் பெருமை கொண்டதாய் அசங்கையால் நீள் = ஐயம் இன்றி நீண்டு.


மாளாத தன் நிசம் உற்றாயது அரிய
நிராதாரம் உலைவு இல் சற் சோதி நிருபமும்
மாறாத சுக வெ(ள்)ள தாணு உடன் இனிது என்று சேர்வேன்


மாளாத தன் நிசம் உற்றாயது = இறத்தலின்றி தானேமெய்த்தன்மை உற்றதாய் அரிய நிராதாரம் = சார்பு ஒன்றும்இல்லாததாய் உலைவு இல் சற் சோதி = அழிவில்லாத உண்மை சோதியாய் நிருபமும் = உருவம் இல்லாததாய் மாறாத =மாறுதல் இல்லாது நிலைத்து விளங்கும் சுக வெ(ள்)ள தாணு உடன் = இன்ப வெள்ளமான சிவத்துடன் இனிது என்று சேர்வேன் = இனிதாக எப்போது சென்று சேர்வேன்.


நானாவித கருவி சேனை வகை வகை
சூழ் போது பிரபல சூரர் கொடு நெடு
நாவாய் செல் கடல் அடைத்து ஏறி நிலைமை இலங்கை சாய


நானாவித கருவிச் சேனை = பலவிதமான போர்க் கருவிகளைத் தாங்கிய வகை வகை சூழ் போது = வித விதமாகச் சூழ்ந்து வரபிரபல சூரர் கொடு = புகழ் பெற்ற அசுர வீரர்களுடன் சூழ்ந்துள்ள நெடு = பெரிய. நாவாய் செல் = கப்பல்கள் செல்லுகின்ற கடல் அடைத்து ஏறி = கடலை அணையிட்டுக் கரை ஏறி இலங்கை நிலைமை சாய = இலங்கையின் வாழ்வு நிலை தொலைய.


நாலாறு மணி முடி பாவி தனை அடு
சீராமன் மருக மை காவில் பரிமள
நா வீசு வயலி அக்கீசர் குமர கடம்ப வேலா


நாலாறு மணி முடி = பத்து மணி முடிகளைக் கொண்ட பாவி தனைஅடு = அப்பாவியாகிய இராவணனை வதைத்த சீராமன் =இராமபிரானது மருக = மருகனே. மைக் காவில் = இருண்ட சோலையில் பரிமளம் நா வீசு வயலி = நறு மணம் வீசுகின்ற வயலூர் என்னும் தலத்தில் எழுந்தருளி உள்ள அக்கீசர் = அக்னீச்சுரர் என்னும் பெயரை உடைய சிவபெருமானது. குமர =குமரனே கடம்ப வேலா = கடம்ப வேலனே.


கான் ஆளும் எயினர் தன் சாதி குற
மானோடு மகிழ் கருத்தாகி மருள் தரு
காதாடும் உனது கண் பாணம் எனதுடை நெஞ்சு பாய்தல்


கான் ஆளும் = காட்டை ஆள்கின்ற எயினர் தன் =வேடுவர்களுடைய சாதி வளர் குற மானொடு = சாதியில் வளர்ந்த குறப் பெண்ணாகிய வள்ளியோடு மகிழ் = மகிழ்ச்சி பூண்ட. கருத்து ஆகி = எண்ணம் கொண்டு மருள் தரு காதொடும் = மோக மருட்சியைத் தந்து காதுவரை நீண்டிருக்கும் உனது கண் பாணம் = உன்னுடைய கண்ணாகிய பாணம். எனதுடை நெஞ்சு பாய்தல் = என்னுடைய நெஞ்சுக்குள் பாய்வதை


காணாது மமதை விட்டு ஆவி உய அருள்
பாராய் என உரை வெகு ப்ரீதி இளையவ
காவேரி வட கரை சாமி மலை உறை தம்பிரானே.


காணாது = நீ பார்க்காமல் இருக்கின்றாய் மமதை விட்டு =அந்தச் செருக்கினை விடுத்து. ஆவி உய = என்னுடைய உயிர் பிழைக்க அருள் பாராய் என உரை = அருள் செய்வாய் என்று வள்ளியிடம் உரைத்த வெகு ப்ரீதி இளையவ = மிக்க அன்பு கொண்ட இளையவரே காவேரி வட கரைச் சாமி மலை உறை தம்பிரானே = காவிரியின் வட கரையில் உள்ள சுவாமி மலையில் வீற்றிருக்கும் தம்பிரானே.


ஒப்புக;


ஆனாத பிருதிவிப் பாச....
ஆசா நிகளந் துகளா யினபின்
பேசா அனுபூதி பிறந்ததுவே --- கந்தர் அநுபூதி.

விளக்கக் குறிப்புகள்
1.. ஏகி பவமென ....
சீவனும் சிவனும் இரண்டற்ற தன்மை அடைந்து நிற்கும் நிலை.
2. ஆறாறின் அதிகம..... தத்துவங்கள் .... 36. அவையாவன ---
ஆன்ம தத்துவம் 24( பூதங்கள், 5, ஞானேந்திரியங்கள்5,
கர்மேந்திரியங்கள் 5, தன்மாத்திரைகள் 5, அந்தக் கரணங்கள் 4). வித்யா தத்துவம் -- 7 (காலம், பிறழா நிகழ்ச்சி, கலை, நினைப்பு, விருப்பு, மகன், மாயை). சிவ தத்துவம் -- 5 தூய நினைவு, தலைமை, அருள் நிலை, அன்னை, அத்தன்.)3. துரியம் ....
துரியம் ஐந்து அவத்தைகளுள் ஒன்று. இவை நனவு (சாக்கிரம்), கனவு (சொப்பனம்), உறக்கம் (சுழுத்தி), பேருறக்கம் (துரியம்), உயிர்ப்டக்கம் (துரியாதீதம்).
துரியம் - ஆன்மா உந்திப் பிரதேசத்தில் பிராணனோடு லயித்து நிற்கத் தன்னையே அடக்கும் நான்காம் ஆன்ம நிலை.
துரியா தீதம் - துரியாதீதத்தில் இந்திரியங்கள் பத்தும், அந்தக் கரணங்கள் நான்கும் பற்றற்று, சீவன் தானே மூலாதாரத்தில் சென்றோங்கி மலம், மதம்,மாயை எதையும் அறியாமல் நிற்கும் ஐந்தாம் நிலையாகிய உயிர்ப்டக்கம். இதுவே ஆன்மா மிகத் தூய்மையாய் நிற்கும் நிலை.
4. விபுலம் ... மேலான ஞான மயமானது.


வயலூர் .. இங்கு உள்ள சிவ மூர்த்தியின் பெயர் அக்னீச்வரர்.