சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
☘ *(2).நாயன்மார் சரிதம்.*☘
☘ *முருக நாயனார்*☘
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
கூந்தலில் மலர் சூடி மலைமகளான உமாதேவியார் தன் தளிர்க்கையால் சிவபெருமானின் திருமேனியைத் தழுவியிருப்பாள்.


அப்பெருமானின் தலைமீது கற்றைச் சடையில் கங்கை தங்கியிருப்பாள். அந்நிலையில் சிவபெருமான் விரும்பும் திருத்தலம். *திருப்புகலூர்.*


அந்த ஊர் மணிமுடிச் சோழர்களின் காவிரி வளநாட்டில் அமைந்துள்ளது. அவ்வூரைச் சுற்றிப் பூஞ்சோலைகளும் தடாகங்களும் நிறைந்திருக்கும்.


அங்கு உடம்பில் வெண்ணிலவைப் போல் அணிந்திருக்கும் திருநீற்றுப் பூச்சின் வெள்ளிய ஒளி, நள்ளிரவின் கனத்த இருளையும் நீக்குவது போல் பிரகாசிக்கும்.


வாசனைப் பூக்களில் இனிய தேனை உண்ணும் கருவண்டுகளுங்கூட விபூதியின் பிரகாசத்தினால் தங்கள் கருமை நிறத்தைக் காட்டாமல் வெண்ணிறத்துடன் விளங்கும்.


பாடும் வண்டுகளால் மரக்கிளைகளில் உள்ள அரும்பு மலர்கள் அசைப்புண்டு வண்ண மதுரத் தேன் பொழியும். அது மட்டுமல்ல, அழகான மெல்லிய நாகணவாய்ப் பறவைகள்:


இன்மொழிப் பேசும் தங்கள் வாயால் பண்ணமைந்த திருப்பதிகங்களைப்போல் செழுந்தேனைப் பொழியும். அந்த இசையமுதால் தடாகங்களிலுள்ள தாமரைகள் மொட்டு விரிந்து மலர்ந்து, அகம் உருகிக் கண்ணீர் சொரிவது போல் தேன்நீர் சொரியும்.


சிவபெருமானைத் துதிக்கும் திருப்பதிகங்களைத் தொண்டர்கள் தங்கள் செவிகளால் அருந்தி, அவர்களது முகத் தாமரைகளும் மலர்ந்து, அகம் உருகி ஆனந்தக் கண்ணீர் அரும்பும்!.


இத்தகைய பெருமை வாய்ந்த திருப்புகலூரில் மேன்மையான அந்தணர் குலத்தில் முருகனார் என்னும் ஒருவர் தோன்றினார். அவர் நான்மறைகளை நன்குணர்ந்தவர்;


ஞானமார்க்கத்தின் முடிவான எல்லையைக் கண்டவர்: சிவபிரானது திருவடியில் நிறைந்த அன்பினால் உருகும் மனமுடையவர்.


அவர் முந்தைய மெய்தவப் பயனால் சிவபெருமானின் விரிசடையில் அணிவிப்பதற்குத் திருப்பள்ளித் தாமம் பறித்துவந்து சாத்துவதைத் தம் திருத்தொண்டாகக் கொண்டிருந்தார்.


அவர் நாள்தோறும் பொழுது புலரும் முன் வைகறையில் துயில் எழுவார். தூய நீராடுவார். திருநந்தவனம் புகுவார். ஆகாச கங்கையும் வெண்ணிலவும் சூடிய சிவபெருமானின் விரிசடையில் பூக்களை அணிவித்து வாசனை வீசச் செய்ய வேண்டும் என்பதற்காக மலரும் பருவத்திலுள்ள விதவிதமான பூக்களையெல்லாம் முருகனார் பறிப்பார்.


கோட்டுப் பூ, கொடிப் பூ, நீர்ப் பூ, நிலப் பூ, என்ற நால்வகை மலர்களில் சிவ பூஜைக்குரிய மலர்களை நிறைய பறித்து, வெவ்வேறாகப் பூக்கூடைகளில் சேர்ப்பார்.


பிறகு அவற்றைத் தூக்கிக் கொண்டு சென்று ஒரு தனியிடத்தில் அமர்ந்து கொள்வார். கோவை மாலை, இண்டை மாலை, பத்தி மாலை, கொண்டை மாலை, சரமாலை, தொங்கல் மாலை முதலிய பல்வேறு மாலைகளை அவ்வக் காலத்திற்கு ஏற்றபடி தொடுத்துக் கட்டுவார்.


அப்பூமாலைகளை உரிய பூஜாக் காலங்களில் அவர் எடுத்துக் கொண்டு போய் வர்த்தமானேச்சுரம் என்னும் அவ்வூர்ச் சிவாலயத்தை அடைந்து அங்குள்ள சிவபிரானுக்குப் பேரன்போடு சாத்துவார். நெஞ்சுருகி உருகி பேரின்பப்பாக்கள் தொடுப்பார்.


திருவைந்தெழுத்தை உள்ளன்போடு இடைவிடாமல் ஓதுவார்.


இம்முறைகளில் திருத்தொண்டு புரிந்துவந்த முருக நாயனார் ஒருசமயம் உமையம்பிகையிடம் ஞானப்பால் அருந்திய திருஞானசம்பந்த சுவாமிகளுக்கு நண்பராகிப் பெருமை பெற்றார்.


அச்சுவாமிகளின் திருமணச் சிறப்பில் முருகனார் கலந்து கொண்டு சிவபெருமானின் திருவருளால் எம்பெருமானின் திருவடி நிழலை அடைந்தார்.


அரவம் அணிந்த அண்ணலாரை அருச்சித்து அவருடைய திருவடி நிழலை அடைந்த முருக நாயனாரான மெய்த்தொண்டர் பதம் போற்றி!


திருச்சிற்றம்பலம்.


■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends