Agneeswarar temple ( Thirukattupalli)
சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
கோவை.கு.கருப்பசாமி.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
(28)
சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர்.
நேரில் சென்று தரிசித்ததைப் போல........
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■


இறைவன்: அக்னீஸ்வரர், தீயாடியப்பர்.


இறைவி: செளந்தரநாயகி, அழகம்மை.


தலமரம்: வன்னிமரம், வில்வமரம்.


தீர்த்தம்: காவிரி, அக்னி (கினற்று வடிவில் தீர்த்தம் அமையப்பெற்றுள்ளது.)


இத்தீர்த்தத்தில் கார்த்திகை ஞாயிறு, மாசிமகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் ஆகிய நாட்களில் நீராடி வழிபடுவது சிறப்பென்று கூறுகிறார்கள்.


சோழ நாட்டின் காவிரித் தென்கரையில் 128 தலங்களுள் ஒன்பதாவதாகப் போற்றப்படும் தலம் இதுவாகும்.


இருப்பிடம்:
திருவையாறு --கல்லணைச் சாலையில் திருக்காட்டுப்பள்ளி இருக்கிறது.


தஞ்சையிலிருந்தும் திருவையாறு வந்து இத்தலத்திற்கு செல்லலாம்.


பெயர்க் காரணம்:
அக்னி தேவன் வழிபட்டதால் அக்னீஸ்வரம் என்று பெயர்.


பள்ளி எனும் சொல்லைக் கொண்டு இவ்வூரில், ஒருகாலத்தில் சமணர்கள் வாழ்ந்திருக்கலாமென கருதுகின்றனர்.


அதற்கேற்ப இருபத்து நான்காவது தீர்த்தங்களின் சிலை இத்தலத்தில் கிடைத்துள்ளது.


தேவாரம் பாடியவர்கள்:
சம்பந்தர்-3-ல் ஒரே ஒரு பதிகமும்,
அப்பர்- 5-ல் ஒரே ஒரு பதிகமும் ஆக மொத்தம் இத்தலத்திற்கு இரண்டு பதிகங்கள்.


கோவில் அமைப்பு:
இக்கோவில் ஒரு ஏக்கரும் இன்னும் கொஞ்ச இடங்களுடனான நிலப்பரப்பளவைக் கொண்டதாகும்.


ஐந்து நிலை ராஜகோபுரம்.


மூன்று பிரகாரங்களைக் கொண்டவை.


இக்கோயிலின் கொடிமரம் செப்பினால் கவசமிட்டிருக்கிறார்கள்.


முதலில் வலது புறமாகச் செல்லும் போது, விநாயகப் பெருமான் காட்சி தர அவரைத் தொழுது வணங்கிக் கொள்கிறோம்.


வலதுபுறமாகச் செல்ல, தெற்கு பார்த்த வண்ணம் அம்பாள் சந்நிதி காட்சியருளிக் கொண்டிருக்கிறாள்.


அம்பாள் நின்ற கோலத்துடன் இருக்கிறாள்.


அம்பாள் வாசலில் சுதைச் சிற்பங்களால் ஆன துவார பாலகர்கள் இருக்கிறார்கள்.


அத் துவாரபாலகர்களிடம் அனுமதியைப் பெற்று உள்புகுந்து அம்பாளை தொழுது வணங்கிக் கொள்கிறோம்.


உட்கோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டிருக்கிறது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
அதனிடமிருந்தும் வலமாகச் செல்ல நடராச சபையைக் காண்கிறோம். அவன் ஆடிய பாதகமலத்தாமரைகளைக் கண்டு கண்ணீர் உகுக்க அவனையும் தொழுது கொள்கிறோம்.


அருகாமையில் உற்சவத் திருமேனிகளை பாதுகாப்பாக வைத்திருப்பதைக் காணமுடிகிறது.


நவக்கிரக சந்நிதியில் எல்லா கிரகங்களும் சூரியனைப் பார்த்த வண்ணமே இருக்கிறார்கள்.


மூலவரானவர் சுயம்புத் திருமேனியைக் கொண்டவர்.


இவர், நிலத்திலிருந்து நான்கு படிகள் தாழ்ந்தவனவாக இருக்கின்ற அமைப்பு கொண்டு இருக்கிறார்.


அப்படியினின்றி நாமும் கீழிறங்கி அவனைச் சுற்றி வணங்கி வலம் வரலாம்.


கோஷ்ட மூர்த்தமாக தட்சிணாமூர்த்தி விளங்கிறார்.


உள்பிரகாரத்திலும் விநாயகர் இருக்கிறார்.


லிங்கோத்பவர் கோஷ்ட மூர்த்தத்தில் இல்லாமல், விநாயகருக்கு அருகாமையில் சன்னதியாக இருக்கின்றார்.


லிங்கோத்பவர் இருக்குமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார்.


அடுத்ததாக வள்ளி, தெய்வானை சமேதராக ஆறுமுகப் பெருமான் அருளோட்சிக் கொண்டிருக்கிறார்.


அதனையடுத்து, காசி விஸ்வநாதர் விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை, சந்நிதிகள் உள்ளன.


முன்பாலுள்ள மண்டபத்தில் வலப்புறமாக பைரவரும், நால்வர் திருமேனிகளும் இருக்கின்றன.


தல அருமை:
உறையூரிலிருந்து ஆண்டு வந்த மன்னன், உறையூர் ந்தவனத்தில் இறைவனுக்குரியதாக பூத்து வந்த செவ்வந்தி மலர்களைப் மன்னனின் பணியாளன் பறித்துக் கொண்டு போய் மன்னனிடம் கொடுக்க, அதைப் பெற்றுக் கொண்ட மன்னன், அச்செவ்வந்தி மலர்களை அவன் இருமனைவியருக்கும் தலையில் சூடிடக் கொடுத்தான்.


மன்னனின் மூத்த மனைவியோ மன்னன் தந்த செவ்வந்தி அம்மலர்களை தான் சூடிக்கொள்ளாமல் சிவபெருமானுக்குச் சார்த்தினாள்.


இளைய மனைவியோ மன்னன் தந்த செவ்வந்தி மலர்களை தன் தலையில் வைத்துச் சூட்டி மகிழ்ந்தாள்.


இதனால் இளையவள் இருந்த உறையூர் மண் மாரியால் அழிந்தன.


மூத்தவள் இருந்த திருக்காட்டுப்பள்ளி மட்டும் அழியாமல் பிழைத்தது என்று சொல்லப்படுகிறது.


திருமால், பிரமன், சூரியன், பகீரதன் உறையூர் அரசி ஆகியோர் வழிபட்ட தலம்.


பிரமதேவன் மகாசிவராத்திரி தினத்தில் மூன்றாம் ஜாம வேளையில் வழிபட்டார்.


அகத்தியரின் சீடரான ரோமரிஷி சித்தர் சிவலிங்கத்தை வழிபடுவது போன்ற மூர்த்தம் ஒன்றும் இங்குள்ளது.


கோஷ்டத்தில் உள்ள யோக தட்சிணாமூர்த்தி தவிர மற்றுமொரு யோக தட்சிணாமூர்த்தியும் அருள்பாலித்துக் கொண்டு இருக்கிறார்.


கழுத்தில் ருத்ராட்சம், சிரிசில் சூரிய, சந்திரர்களோடு கையில் சின்முத்திரை காட்டி கல்வியும், ஞானமும் அள்ளித் தருகிறார்.


இவரை வியாழக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி, முல்லை மலர்களால் அர்சித்து வழிபட கல்வித் தடை, திருமணத் தடை, தொழில் நசிவு என அனைத்தும் விலகி நலம் உருவாகும்.


தல பெருமை:
சகல நோய்களையும், பாவங்களையும் போக்கும் தலம் இதுவே.


ஒரு முறை யாகத்தில் சேர்க்க வைத்திருந்த நெய்யை எடுத்து சாப்பிட்ட அக்னி தேவன் தீராத வயிற்று வலியாலும், வெப்பு நோயாலும் அவதிப்பட்டான்.


தனது நோய் தீர வேண்டி இத்தலத்தில் வந்து தவம் புரிந்தான்.


தவத்திற்குக் காட்சியான இறைவன், இத்தலத்திற்கு கிழக்கே குளம் அமைத்து, அதிலிருந்து நீர் எடுத்து வந்து என்னை நீராட்டு என்றருளி மறைந்தார்.


அதன்படி திருக்குளம் அமைத்து நீர் கொண்டு இறைவனை அபிஷேகித்து வழிபட்டான்.


இதன் பலனாக அக்னி நோய் நீங்கப் பெற்றான்.


என் நோயைக் குணபடுத்தியதைப் போல் இங்கு நான் அமைத்த திருக்குளத்தில் நீராடி தங்களை வழிபடுவோரின் நோய்களையும் போக்கியருள வேண்டும் என்று அக்னி பிரார்த்தித்தான்.


அப்படியே ஆகட்டும் என்று ஈசன் அருள் புரிந்தார்.


திருவிழாக்கள்:
மாசி மகம், பங்குனி உத்திரத்தில் காவிரியில் தீர்த்தம் கொடுத்தல்.


வைகாசி விசாகம்.


மார்கழித் திருவாதிரை சிறப்பாக நடைபெறுகின்றன.


கல்வெட்டுக்கள்:
முதலாம் ஆதித்த சோழன், சுந்தரபாண்டியன், கோனேரின்மை கொண்டான் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.


பூஜை:
காமீக ஆகம முறையில் நான்கு கால பூஜை.


காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை,


மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.


அஞ்சல் முகவரி:
அருள்மிகு, அக்னீஸ்வரர் திருக்கோயில்,
திருக்காட்டுப்பள்ளி அஞ்சல்,
தஞ்சை மாவட்டம்- 613 104


தொடர்புக்கு:
சிவக்குமார சிவம். 94423 47433
04362--287294


திருச்சிற்றம்பலம்.


நாளை.......திரு ஆலம் பொழில்.