Announcement

Collapse
No announcement yet.

திருக்கடவூர் தொடர்.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருக்கடவூர் தொடர்.

    ( 21 )
    திருக்கடவூர் தொடர்.
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    வீரட்டானத்து வித்தகப் பெருமானை நாடி அருளாளர்கள் திருவடிகள் நிலப்புழுதி எழுந்து பிரிந்து மறையுமாறு திருக்கடவூர் தலத்திருக் கோயிலுக்கு வந்து செல்லும் நேரமெல்லாம், திருக்கடவூருக்குத் திருவிழாக் கோலமே!


    அப்படியாக அன்றும் திருக்கடவூரில் விழாக்கோலம் பூண்டு ஆனந்த பரவச அலைகள் ஆர்ப்பரித்தன.


    தம்பிரான் தோழரான நாவலூர்க்கோன் இன்று திருக்கடவூருக்கு எழுந்தருள வருகிறாரென்று மக்கள்கள், பக்தர்கள், அடியார்கள், சைவ அன்பர்கள், முதலானோர்கள் தாமரையைமொய்த்த வண்டுகள் போல, தெய்வத்தமிழ் பருக திரண்டோடி திருக்கோயில் வந்து குழுமினார்கள்.


    *திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும், குங்கிலியக் கலயனாரும், இணைந்து ஒன்றாக சந்நிதியில் வந்து நின்ற சுந்தரரை வருகவென்று பணிந்தழைத்து வணங்கியது சுடர் முறுகிச் சிந்தின திருக்கோயிலின் திருவிளக்குகள்.


    பெருமானைக் கண்ட ஆளுடைய நம்பிகள் அகம், நா, தழுதழுத்தது.


    உன்னையன்றி வேறுதுணையுண்டோ எனக்கென அவருள்ளம் உருகின பாங்குகள் அவரின் திருபாட்டின் பெருக்கத்தோடு "பா"-- வில் தெரிந்தன.


    அமுதகடேசப் பெருமானை ஒவ்வொரு திருப்பாட்டிலும் "அமுதே அமுதே" என்று அகநெகிழ்ந்தழைத்தார் ஆலால சுந்தரப் பெருமான்.


    பொடியார் மேனியனின் பொன்னார் மேனியில் யானைத்தோல் போர்த்திருக்கும் எழிலையும், வாம பாகத்தில் அம்மை இடங் கொண்டுள்ளழகையும் திருநீல மிடற்றின் ஒளியையும் அனுபவித்தார் அவர்.


    "போரா ருங்கரியின் னுரிபோர்த்துப்பொன் மேனியின்மேல்


    வாரா ரும்முலையாள் ஒருபாகம் மகிழ்ந்தவனே


    காரா ரும்மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டானத்து


    ஆரா என்னமுதே எனக்கார்துணை நீயலதே!"


    எங்குமுள்ள பஞ்ச பூதங்களிலும் எதிர்ப்படும் ஒவ்வோர் உயிரினிலும் நிறைந்திருக்கும் சிவமே உயிர்த்துணை என்பதை பழையபடி பழையபடி சுந்தரமூர்த்தி சுவாமிகள் உணரும் விதத்துடன் அந்தத் தரிசனம் சிறப்பாக நடந்தது.
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    ( 22 )
    திருக்கடவூர் தொடர்.
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤


    மண்ணீர் தீவெளிகால் வருபூதங்க ளாகிமற்றும்


    பெண்ணோ டாணலியாய்ப் பிறவாவுரு ஆனவனே


    கண்ணா ரும்மணியே கடவூர்தனுள் விரட்டத்தெம்


    அண்ணா என்னமுதே எனக்காா்துணை நீயலதே!"


    சுந்தரர் பாடப்பாட அமுதீசப் பெருமானையும் அமுதான தேவாரத்தையும் ஒருங்கே உணரும் பெரும்பேறு பெற்ற அடியார்கள் தங்கள் உவகையை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்தினார்கள்.


    "கார்மேகம் பொழிவதுபோலல்லவா அருள் வாக்கு பொழிகிறது"
    என்றார் ஒருவர்.


    அந்த அடியவரை நோக்கி, "உங்களுக்கு எந்த ஊர்?" என்று தம்பிரான் தோழர் கேட்க,


    அவரோ திகைத்தவராய், "எனக்கு திருக்கடவூர்தான் சுவாமி" என கூப்பிய கைகளுடன் சொன்னார்.


    "கலகல" வெனச் சிரித்த நம்பியாரூரர், "திருக்கடவூரில் பிறந்த நீங்கள் என்னைப்போய் கார்மேகமென்று சொல்லலாமா?" கார்மேகம் போல் கவிபொழிந்த வல்லார் இத்தலத்திலேயே வாழ்ந்த நாயன்மாராகிய காரி நாயனார் அல்லவா!


    அவருக்கும் அவர் தமிழுக்கும் நான் அடியவன் அல்லவா" என்றார்.


    காரிநாயனார் திருப்பெயரை உச்சரித்த மாத்திரத்திலே ஆலால சுந்தரின் திருக்கரங்கள் சிரமேற் குவிந்து பணிவு கண்டு புளகித்தனர் அடியவர்கள்.
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    (23)
    திருக்கடவூர் தொடர்.
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    ஆலகால சுந்தரின் திருக்கரங்கள் சிரமேற் குவிந்து பணிவு கண்டு புளகித்தனர் அடியார்கள்.


    "ஆம் சுவாமி!" இரண்டு நாயன்மார்கள் அவதரிக்கும் பெரும் பேற்றினை இத்தலம் கொண்டுள்ளது.


    கோவைநூல் பாடுவதில் வித்தகராகிய காரிநாயனாரின் கற்கண்டுக் கவிதையில் மூவேந்தர்களும் தங்கள் உள்ளங்களைப் பறி கொடுத்தார்கள்.


    கயிலாய நாதனையும் திருக்கயிலாயத்தையும் கணப்பொழுதும் மறவாத காரிநாயனார் பாடிப் பெற்ற பெருஞ் செல்வத்தை சிவாலயங்கள் எழுப்புவதற்கும் சிவனடியார்களுக்கு திருவமுது ஊட்டுவதற்கும் பயன்படுத்தினார் என்றார் ஓர் அடியாா்.


    "ஆடவல்லான் அந்த மகானின் திருநாவிலல்லவா தாண்டவம் புரிந்தான். மனதில் மகேசனை நிலை நிறுத்தி கயிலாயநாதனையே கருதிக் கிடந்து கார்மேகமாய் வாழ்ந்த காரி எங்கள் ஊர் மேகவல்லவா" பெருமை பொங்கச் சொன்னார் மற்றொருவர்.


    திருக்கோயிலை வலம் வந்து, அடியவர்கள் புடைசூழ கூங்கிலியக் கலய நாயனார் வாழ்ந்த அருள் மனையினையும் காரி நாயனார் வாழ்ந்த திருமனையினையும் தரிசிவிட்டு திருக்கடவூர் திருமயானம் சென்றார் சுந்தரர்.


    அங்கே கோயில் கொண்டிருக்கும் பெரிய பெருமானடிகளையும் வாடாமுலை அம்மையையும் தரிசித்து மனமுருகப் பதிகம் பாடினார்.


    திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் கலயருடன் தரிசித்த திருமயானத்தில் சைவ வழிபாட்டின் உள்மரபினராகிய பஞ்சவடியினரைக் கண்டார். கூந்தல் கொண்டு பூணூல் அணியும் மாவிரதிகளாகிய அவர்களைக் கண்டதும் மானக்கஞ்சாற நாயனாரின் நினைவு தோன்றிற்று. மணமகள் கோலத்திலிருந்த தன் மகளின் கூந்தலை மாவிரதியான சிவயோகி கேட்ட மறுவிநாடி அரிந்தளித்த அவரின் பக்தியை நினைந்து நெக்குருகினார்.


    அந்த நாயன்மாரின் நினைவை அத்தருணத்தில் வழங்கிய மாவிரதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாய் அவர்களைக் காண நேர்ந்ததைப் பதிகத்தில் பதிவு செய்தார்.


    "துணிவார் கீளுங் கோவணமுந்
    துதைந்து சுடலைப் பொடியணிந்து
    பணிமே விட்ட பாசுபதர்
    பஞ்ச வடிவமார் பினர்கடவூர்த்
    திணிவார் குழையார் புரமூன்றுந்
    தீவாய்ப் படுத்த சேவகனார்
    பிணிவார் சடையார் மயானத்துப்
    பெரிய பெருமா னடிகளே!


    -என சுந்தரர் பாட மாவிரதிகள் மனமகிழ்ந்தனர்.


    "வாடா முலையாள் தன்னோடும்
    மகிழ்ந்து காணில் வேடுவனாய்க்
    கோடார் கேழற் பின்சென்று
    குறுகி விசயன் தவமழித்து
    நாடா வண்ணஞ் செருச்செய்து
    ஆவ நாழி நிலையருள்செய்
    பீடார் சடையார் மயானத்துப்
    பெரிய பெருமானடிகளே!


    எனவும்,


    "வேழம் உரிப்பர் மழுவாளர்
    வேள்வி அழிப்பர் சிரமறுப்பர்
    ஆழி அளிப்பர் அரிதனக்குஅன்று
    ஆனஞ்சு உகப்பர் அறமுறைப்பர்
    ஏழைத் தலைவர் கடவூரில்
    இறைவர் சிறுமான் மறிக்கையர்
    பேழைச் சடையர் மயானத்துப்
    பெரிய பெருமா னடிகளே!


    என பெருமாளையும்,அம்மையையும் பலவாறாகப் போற்றிப் பாடி யாத்திரை தொடர்ந்த ஆளுடைய நம்பிக்கு ஊர் எல்லை வரை சென்று பிரியாவிடை தந்தனர் திருக்கடவூர் சிவநேசர்கள்
    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    கோவை.கு.கருப்பசாமி.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
Working...
X