111.பாதிமதி


பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா
காது மொருவிழி காக முறஅருள்
மாய னரிதிரு மருகோனே
கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட அருள்வாயே
ஆதி யயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி லுறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட
வேலை விடவல பெருமாளே.

- 111 திருவேரகம்பதம் பிரித்தல்


பாதி மதி நதி போதும் அணி சடை
நாதர் அருளிய குமரேசா


பாதி மதி = பிறைச் சந்திரனையும். நதி = கங்கை யையும். போதும் = மலர்களையும். அணி சடை நாதர்= அணிந்துள்ள சடையை உடைய சிவ பெருமான். அருளிய குமரேசா = அருளிய குமரோனே.


பாகு கனி மொழி மாது குற மகள்
பாதம் வருடிய மணவாளா
பாகு = சர்க்கரையையும் கனி=பழத்தையும் போன்றமொழி = மொழிகளை உடைய மாது குற மகள் =குறப் பெண்ணாகிய வள்ளியின் பாதம் வருடிய மணவாளா = பாதங்களைப் பிடித்துத் தடவும்மணவாளா = கணவனே.


காதும் ஒரு விழி காகம் உற அருள்
மாயன் அரி திரு மருகோனே


காதும் = பிரிவு செய்யப்பட்ட. ஓரு விழி = ஒருவிழியை. காகம் உற அருள் = (காகாசுரன் என்னும்) காகம் அடையும் படி அருளிய. மாயன் = திருமால் (இராமன்). அரி திரு மருகோனே = அரி, இலக்குமி இவர்களுடைய மருகனே


காலன் எனை அணுகாமல் உனது இரு
காலில் வழி பட அருள்வாயே


காலன் = யமன். எனை அணுகாமல் = என்னை அணுகாதபடி உனது இரு காலில் = உனது இரண்டு திருவடிகளில். வழி பட அருள்வாயே = வழி படும் புத்தியைத் தந்து அருள்வாயாக.


ஆதி அயனொடு தேவர் சுரர் உலகு
ஆளும் வகை உறு சிறை மீளா


ஆதி அயனொடு = ஆதிப் பிரமனோடு. தேவர் சுரர் உலகு = தேவர் தேவலோகத்தை ஆளும் வகை உறு =ஆளும்படி. சிறை மீளா = (அவர்களைச்) சிறையினின்றும் மீட்டு.


ஆடும் மயிலினில் ஏறி அமரர்கள்
சூழ வர வரும் இளையோனே


ஆடும் மயினில் ஏறி = ஆடுகின்ற மயில் மீது ஏறிஅமரர்கள் சூழ = தேவர்கள் சூழ்ந்து வர வரும் இளையோனே = வந்த இளையவனே


சூதம் மிக வளர் சோலை மருவு
சுவாமி மலை தனில் உறைவோனே


சூதம் மிக வளர் = மா மரங்கள் அதிகமாகவளர்ந்துள்ள சோலை மருவு = சோலைகள் பொருந்தியுள்ள சுவாமி மலை தனில் உறைவோனே =திருவேரகத்தில் வீற்றிருப்பவனே.


சூரன் உடல் அற வாரி சுவறிட
வேலை விட வ(ல்)ல பெருமாளே.


சூரன் உடல் அற = சூரனுடைய உடல் துணி பட. வாரி= கடல். சுவறிட = வற்றிப் போக வேலை விட வல்லபெருமாளே = வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே.


காதும் ஒரு விழி காகம் உற அருள்...


சீதையின் உடலைத் தன் உகிரினால் கொத்திய காகத்தின் மீது புல்லையே படை ஆக்கி இராமர் செலுத்தினார். அப்படைக்கு அஞ்சி காகம் சரண் அடைய, அவர் அதற்கு உயிர்ப் பிச்சை அளித்து, இரு கண்ணிற்கும் ஒரு கண்மணியே பொருந்த அருளினார். காகாசுரனாக வந்தவன் இந்திர குமாரன் சயந்தன் என்பார்.


ஒப்புக
பாகு கனி மொழி மாது குற மகள் தேனென்று பாகென்றுவமிக் கொணாமொழித் தெய்வவள்ளி


யமன் என்னை அணுகாமல் அருள்வாயே