118.உடலி னூடு

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
உடலி னூடு போய்மீளு முயிரி னூடு மாயாத
உணர்வி னூடு வானூடு முதுதீயூ
டுலவை யூடு நீரூடு புவியி னூடு வாதாடு
மொருவ ரோடு மேவாத தனிஞானச்
சுடரி னூடு நால்வேத முடியி னூடு மூடாடு
துரிய வாகு லாதீத சிவரூபம்
தொலைவி லாத பேராசை துரிச றாத வோர்பேதை
தொடுமு பாய மேதோசொ லருள்வாயே
மடல றாத வாரீச அடவி சாடி மாறான
வரிவ ரால்கு வால்சாய அமராடி
மதகு தாவி மீதோடி யுழல ரால டாதோடி
மடையை மோதி யாறூடு தடமாகக்
கடல்பு காம காமீனை முடுகி வாளை தான்மேவு
கமல வாவி மேல்வீழு மலர்வாவிக்
கடவுள் நீல மாறாத தணிகை காவ லாவீர
கருணை மேரு வேதேவர் பெருமாளே

-118 திருத்தணிகைபதம் பிரித்து உரை
உடலின் ஊடு போய் மீளும் உயிரின் ஊடு மாயாத
உணர்வின் ஊடு வான் ஊடு முது தீ ஊடு


உடலின் ஊடு = உடலின் உள்ளும். போய் மீளும் உயிரின் ஊடு =அந்த உடலில் போய்த் திரும்பும் உயிரின் உள்ளும் மாயாத =அழிவில்லாத. உணர்வினூடு = உணர்ச்சி உள்ளும் வான் ஊடு =ஆகாயத்துள்ளும் முது = முற்றிய
தீ ஊடு = தீயினுள்ளும்.


உலவை ஊடு நீர் ஊடு புவியின் ஊடு வாதாடும்
ஒருவரோடு மேவாத தனி ஞான


உலவை ஊடு = காற்றினுள்ளும். நீர் ஊடு = நீரினுள்ளும்.புவியினூடு = மண்ணுள்ளும். வாதாடும் = சமய வாதம்செய்கின்ற. ஒருவரோடும் மேவாத = எவரிடத்தும் காணக்கிடையாத. தனி ஞான = ஒப்பற்ற ஞான.


சுடரின் ஊடு நால் வேத முடியின் ஊடும் ஊடாடு(ம்)
துரிய ஆகுல அதீத சிவ ரூபம்


சுடரினுடு = ஒளியினுள்ளும் நால் வேத முடியினூடும் = நான்கு வேதங்களின் உச்சியினுள்ளும் ஊடாடு = ஊடாடு கின்றதும்துரிய = யோகியர் தன்மயமாய் நிற்கும் ஆகுல அதீத =துன்பங்கள் கடந்த நிலையில் உள்ளதுமான சிவரூபம் = சிவ ரூபத்தை.


தொலைவு இலாத பேராசை துரிசு அறாத ஓர் பேதை
தொட உபாயம் ஏதோ சொல் அருள்வாயே


தொலைவு இலாத = முடிவு இல்லாத பேராசை = பேராசையும்துரிசு அறாத = குற்றமும் நீங்காத ஓர் பேதை = ஒரு முட்டாளாகிய நான் தொட = அடைதற்குரிய உபாயம் = உபாய வழி ஏதோ சொல் = எதுவோ அந்தச் சொல்லை அருள்வாயே = சொல்லி அருள்வாயாக.


மடல் அறாத வாரீச அடவி சாடி மாறான
வரி வரால் குவால் சாய அமராடி
மடல் அறாத = இதழ்கள் நீங்காத வாரீசம் = தாமரை. அடவி =காட்டை சாடி = துகைத்துத் தாவிக் குதித்து. மாறான = (அங்கு) தனக்குப் பகையாயிருந்த வரி வரால் = இரேகைகள் கொண்ட வரால் மீன்களின் குவால் = கூட்டம். சாய = தோல்வியுற்றுப் பின் வாங்க ஓடும்படி. அமராடி = போர் புரிந்து (பிறகு).


தகு தாவி மீதோடி உழவர் ஆல அடாது ஓடி
மடையை மோதி ஆறு ஊடு தடமாக


மதகு தாவி மீதோடி = (தான் போகும் வழியிலிருந்த) நீர் மடையைத் தாண்டி மேலே ஓடி உழவர் = (அங்குள்ள) உழவர்கள் ஆல அடாது ஓடி = தம்மை வருத்தாதபடி விலகி ஓடி. மடையை மோதி = (வழியிலுள்ள) நீர் மடைகளைத் தாவிச் சென்று ஆறு ஊடு தடமாக = (அந்த ஓடைகள்) சேரும்) ஆற்றின் வழியே சென்று.


கடல் புகா மகா மீனை முடுகி வாளை தான் மேவு
கமல வாவி மேல் வீழு மலர் வாவி


கடல் புகா = கடலில் புகுந்து. மகா மீனை = (அங்கே உள்ள) பெரிய மீனை முடுகி = விரைந்து ஓடும்படி செய்து. வாளை தான் மேவு =வாளை மீன் தான் முதலில் இருந்த. கமல வாவி = தாமரைக் குளத்தில் மேல் வீழும் = வந்து விழும் மலர் வாவி =மலர் பூக்கும் சுனையில்.


கடவுள் நீல(ம்) மாறாத தணிகை காவலா வீர
கருணை மேருவே தேவர் பெருமாளே.


கடவுள் = தெய்வ மணமுள்ள நீலம் மாறாத தணிகை = இந்திர நீல சுனை உள்ள தணிகை மலையின் காவலா = அரசனே வீர =வீரனே கருணை மேருவே = கருணை மேருவே தேவர் பெருமாளே = தேவர்கள் பெருமாளே.


விளக்கக் குறிப்புகள்
மடல் அறாத வாரீசம்...
இப்பாடல் திருத்தணிகையின் செழிப்பையும், அப்பகுதியில் இருந்த தாமரைத் தடாகத்து வாளை மீன்களின் செழுமையையும் விளக்குகின்றது.
ஒப்புக
கடவுள் நீல மாறாத தணிகை....
காலைப் போதினில் ஒருமலர், கதிர் முதிர் உச்சி
வேலைப் போதினில் ஒருமலர், விண்ணெலாம் இருள் சூழ்
மாலைப் பேதினில் ஒருமலர், ஆகஇவ் வரைமேல்
நீலப் போது மூன்று ஒழிவின்றி நிற்றலு மலரும்
-- கந்த புராணம்