122.எலுப்பு நாடி


எலுப்பு நாடிக ளப்பொடி ரத்தமொ
டழுக்கு மூளைகள் மச்சொடு கொட்புழு
விருக்கும் வீடதி லெத்தனை தத்துவ சதிகாரர்
இறப்பர் சூதக வர்ச்சுத ரப்பதி
யுழப்பர் பூமித ரிப்பர்பி றப்புட
னிருப்பர் வீடுகள் கட்டிய லட்டுறு சமுசாரம்
கெலிப்பர் மால்வலை பட்டுறு துட்டர்கள்
அழிப்பர் மாதவ முற்றுநி னைக்கிலர்
கெடுப்பர் யாரையு மித்திர குத்திரர் கொலைகாரர்
கிருத்தர் கோளகர் பெற்றுதி ரிக்கள
வரிப்பர் சூடக ரெத்தனை வெப்பிணி
கெலிக்கும் வீடதை நத்தியெ டுத்திவ ணுழல்வேனோ
ஒலிப்பல் பேரிகை யுக்ரவ மர்க்கள
மெதிர்த்த சூரரை வெட்டியி ருட்கிரி
யுடைத்து வானவர் சித்தர்து தித்திட விடும்வோலா
உலுத்த ராவண னைச்சிர மிற்றிட
வதைத்து மாபலி யைச்சிறை வைத்தவன்
உலக்கை ராவிந டுக்கடல் விட்டவன் மருகோனே
வலிக்க வேதனை குட்டிந டித்தொரு
செகத்தை யீனவள் பச்சைநி றத்தியை
மணத்த தாதைப ரப்ரம ருக்கருள் குருநாதா
வனத்தில் வாழும யிற்குல மொத்திடு
குறத்தி யாரைம யக்கிய ணைத்துள
மகிழ்ச்சி யோடுதி ருத்தணி பற்றிய பெருமாளே

-122 திருத்தணிகைபதம் பிரித்து உரை


எலுப்பு நாடிகள் அப்பு ஒடு இரத்தம் ஒடு
அழுக்கு மூளைகள் மச்சு ஒடு கொள் புழு
இருக்கும் வீடு அதில் எத்தனை தத்துவ சதிகாரர்


எலுப்பு நாடிகள் = எலும்பு, நாடிகள் அப்பொடு இரத்த மொடு = நீர், இரத்தம் இவற்றுடன் அழுக்கு = அழுக்கு மூளைகள் = மூளைகள்மச்சொடு கொடு = தகுதியின் மையைக் கொண்ட புழு இருக்கும் =புழுக்கள் ஆகியவை இருக்கும் வீடு அதில் = வீடாகிய உடலில்எத்தனை = எத்தனை தத்துவ சதிகாரர் = குணத்து மோசக்காரர்கள்


இறப்பர் சூதக அர்ச்சுதர் அ பதி
உழப்பர் பூமி தரிப்பர் பிறப்புடன்
இருப்பர் வீடுகள் கட்டி அலட்டு உறு சமுசாரம்
இறப்பர் = அதிக்கிரமம் செய்பவர்கள். சூதக அர்ச்சுதர் = சூதான உள்ளமுடைய மக்கள் அப் பதி உழப்பர் = தமது ஊரில் போலி வாதம் செய்பவர்கள் பூமி தரிப்பர் = பூமியில் தோன்றுவர் பிறப்புடன் இருப்பர் = (பிறந்த) பிறப்புடன் இருப்பர். வீடுகள் கட்டி = வீடுகளைக் கட்டி. அலட்டு உறு =அலைச்சல் உறும் சமுசாரம் = சமுசாரத்தில்.


கெலிப்பர் மால் வலை பட்டு உறு துட்டர்கள்
அழிப்பர் மா தவம் உற்று நினைக்கிலர்
கெடுப்பர் யாரையும் மித்திர குத்திரர் கொலைகாரர்


கெலிப்பர் = வெற்றி பெறுவார்கள் மால் வலை பட்டு உறு = மோக வலையில் அகப்பட்டு கிடக்கும் துட்டர் = பொல்லாத வர்கள். மாதவம் உற்று நினைக்கிலர்= பெரிய தவ நிலையைச் சற்றேனும் நினைக்க மாட்டாதவர்கள் யாரையும் கெடுப்பர் = எவரையும் கெடுப்பவர்கள் மித்திர குத்திரர் = நட்பாளருக்கு வஞ்சனை செய்வர் கொலைகாரர் = கொலை செய்பவர்கள்.


கிருத்தர் கோளகர் பெற்று திரி களவு
அரிப்பர் சூடகர் எத்தனை வெம் பிணி
கெலிக்கும் வீடு அதை நத்தி எடுத்து இவண் உழல்வேனோ


கிருத்தர் = செருக்குள்ளவர் கோளகர் = கோள் சொல்லும் குணத்தவருடன் பெற்று = சேர்ந்து. திரி = திரிந்து களவு அரிப்பர் =களவுத் தொழிலில் தினைவு கொள்வர் சூடகர் = கோப உள்ளத்தினர். எத்தனை வெம் = எத்தனை கொடிய. பிணி கெலிக்கும் = பிணி முதலியவற்றை வெற்றி பெறும். வீடு அதை =இவ்வுடலாகிய வீட்டை நத்தி எடுத்து = ஆசையுடன் எடுத்துஇவண் = இவ்வுலகில் உழல்வேனோ = திரிவேனோ?
ஒலி பல் பேரிகை உக்ர அமர்க்களம்
எதிர்த்த சூரரை வெட்டி இருள் கிரி
உடைத்து வானவர் சித்தர் துதித்தட விடும் வேலா


ஒலிப் பல் பேரிகை = ஒலிக்கின்ற பல பேரிகைகள் (கொண்ட)உக்ர அமர்க்கள = கடுமையான போர்க் களத்தில் எதிர்த்த சூரரை =எதிர்த்து வந்த அசுரர்களைவெட்டி= வெட்டியழித்து இருள் கிரி =இருள் மாயை செய்த கிரௌஞ்ச மலையை உடைத்து= பிளந்துவானவர் சித்தர்= தேவர்களும் சித்தர்களும் துதித்திட = போற்றித் துதிக்க விடும் வேலா = செலுத்திய வேலனே.


உலுத்த ராவணனை சிரம் இற்றிட
வதைத்து மாபலியை சிறை வைத்தவன்
உலக்கை ராவி நடு கடல் விட்டவன் மருகோனே


உலுத்த ராவணனை = ஆசைக்காரனாகிய இராவணனின். சிரம் இற்றிட = தலை அற்று விழ. வதைத்து = (அவனை) வதைத்து.மாபலியை = மாவலியை. சிறை வைத்தவன் = சிறை வைத்தவன். உலக்கை ராவி = உலக்கையைத் தாவி (அரத்தால் பொடி செய்து) நடுக் கடல் விட்டவன் = நடுக் கடலில் விட்டவனாகிய திருமாலின் மருகோனே = மருகனே


வலிக்க வேதனை குட்டி நடித்து ஒரு
செகத்தை ஈனவள் பச்சை நிறத்தியை
மணத்த தாதை பரப்ரமருக்கு அருள் குரு நாதா


வலிக்க = வலி உண்டாகும்படி. வேதனைக் குட்டி = பிரமனைக் குட்டி. நடித்த ஒரு = நடனம் செய்து ஒப்பற்ற செகத்தை =உலகங்களை ஈனவள் = ஈன்ற பச்சை நிறத்தியை = பச்சை நிறத்தவளாகிய பார்வதியை மணந்த = மணந்த பரப்ரமருக்கு =பரப் பிரமப் பொருளான சிவ பெருமானுக்கு. அருள் குரு நாதா =(உபதேசம்) அருளிய குரு நாதரே.


வனத்தில் வாழும் மயில் குலம் ஒத்திடு
குறத்தியாரை மயக்கி அணைத்து உள
மகிழ்ச்சி ஓடு திருத்தணி பற்றிய பெருமாளே.


வனத்தில் வாழும் = (வள்ளி மலைக்) காட்டில் வாழும் மயில் குலம் ஒத்திடு = மயிலினம் போன்ற குறத்தியாரை = குறத்தியாகிய வள்ளி நாயகியை மயக்கி அணைத்து = மயக்கி அணைத்து உ(ள்)ள மகிழ்ச்சியோடு= உள்ளத்தில் மகிழ்வோடுதிருத்தணி பற்றிய பெருமாளே = திருத்தணிகையில் பற்று வைத்து வீற்றிருக்கும் பெருமாளே.


விளக்கக் குறிப்புகள்
1.மாபலியைச் சிறை வைத்தவன்.....
திருமால் காசிபரிடத்து வாமனனாக அவதரித்து, அசுர சக்ரவர்த்தி மாபலியிடம் மூன்று அடி மண் கேட்டார். அசுரப் புரோகிதர் சுக்கிரன் இது விஷ்ணுவின் மாயை என்று தடுத்தார். பலி அதை கேட்காமல் சம்மதிக்கவும் வாமனர் இரண்டு அடியால் மூவுலகை அளந்து, ஓரடி வைக்க இடம் பெறாமலிருக்க, மாவலி தன் தலையைக் காட்டினார். திருமால் மூன்றாவது அடியால் மாவலியின் தலையில் கால் பதித்து அவனைப் பாதளத்தில் அழுத்திச் சிறை இட்டார்.


ஒப்புக:
விதரண மாவலி வெருவ மகாவ்ருத வெள்ள வெளுக்க நின்ற
நாராயண மாமன் .... - திருப்புகழ், வதனசரோருக

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
மாவலி யைச்சி றைமண்ட ஓரடி யொட்டி யளந்து - திருப்புகழ், நூலினை
ஆன் நிரை துரந்து மா நிலம் அளந்து
ஓர் ஆல் இலையில் அன்று துயில் மாயன் - திருப்புகழ்,வேனின்மத


திண் பதம் வைத்துச் சக்கிரவர்த்திக்குச் சிறை இட்டுச்
சுக்கிரன் அரிய விழி கெட இரு பதமும் உலகு அடைய
நெடியவர் திருவும் அழகியர் - - திருப்புகழ்,மருவுகடல்முகி.


2.வலிக்க வேதனை குட்டி.....
பிரமனை முனிந்து காவலிட்
டொருநொடியில் மண்டு சூரனைப் பொருதேறி திருப்புகழ்,கறைபடு.
3. உள மகிழ்ச்சியோடு....
உலகில் உள்ள பல்வேறு மலைகளிலும் திருத்தணி மலையில் தான் தமக்கு அதிக மகிழ்ச்சி என்று முருகவேள் வள்ளிக்குக் கூறுகின்றார்.
சுந்தரக்கிரி தொல் புவி தனிற்பல எனினும்
இந்த வெற் பினில் ஆற்றவும் மகிழ்ச்சி உண்டெமக்கே--- கந்த புராணம் வள்ளியம்மை திருமணம்