*ஆலய பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.
*பூஜை:* ஆகமம்.
*இருப்பிடம்:*
கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில் சாக்கோட்டைக்கு தென்கிழக்கில் ஒன்றரைக் கி.மீ. தூரத்தில் இருக்கிறது.
கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
*அஞ்சல் முகவரி:* அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில்,
மருதாநல்லூர்,
மருதாநல்லூர் அஞ்சல்,
திப்பிராஜபுரம் S.O,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்,
PIN - 612 402.
*பூஜை காலம்:*
தினந்தோறும் காலை 8.00 மணி முதல் பகல் 10. 00 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
சோழ நாட்டின் காவிரித் தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள இத்தலம் அறுபத்து எட்டாவது தலமாகப் போற்றப் படுகிறது.
*கோவில் அமைப்பு:*
ஆலயத்திற்கு வந்த பிறகுதான் தெரிந்தது, இது சிறியதான பழமையான கோயில் என்று.
கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடன் இவ்வாலயம் காட்சி தந்தது. *"சிவ சிவ"* என மொழிந்து உள் புகுந்தோம்.
வாயிலில் விநாயகர் இருக்க முதல் வணக்கத்தை அவரிடம் உரியதாக்கிச் செலுத்திக் கொண்டோம்.
கார்த்திகேயர் சந்நிதி பக்கத்தில் இருக்க அவரையும் வணங்கிக் கொண்டோம்.
சுவாமி சந்நிதிக்கு வந்தோம். கருவறையில் உள்ள சிவலிங்கம் மிகவும் சிறியதாக இருந்தது. குனிந்து அவனருட் பார்வையை பெற்று வணங்கி நிமிர்ந்தோம்.
அர்ச்சகரிடம் பாணம் சிறிதாக உள்ளதே என கேட்டோம்.
இறைவன் சுயம்பு லிங்கமாக அருள் பாலிக்கிறார். மண்ணினை கையால் பிடித்து செய்த சுவடுகள் லிங்கத்திருமேனியில் தெரியும். அரை அடி உயர சிறிய ஆவுடையார். பீடம் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
அடுத்து அம்மையை தரிசித்தோம். தரிசனத்தில் மனமுருகி பிரார்த்தனை செய்து கொண்டோம். ஆலயத்தில் கூட்டம் இல்லாததினால் வணங்கிக் கொள்ள வசதியாக இருந்தாலும், இவ்வாலத்துக்கு விளம்பரமின்மையின் காரணமாகத்தான் பக்தர்கள் நாடிவரவில்லை என்பதை எண்ணி மறுபுறம் மனம் வேதனையடைந்தது.
கோஷ்டங்களில் நர்த்தனவிநாயகரும், இருபுறத்திலும் பூதகணங்களும், இருந்தனர்.
தட்சிணாமூர்த்தி, (மேலே வீணாதர தட்சிணாமூர்த்தி), லிங்கோத்பவர் ஆகியோரின் மூர்த்தங்கள் உள்ளன. கை தூக்கி தொழுது வணங்கிக் கொண்டோம்.
பிரகாரத்தில் வலம் வந்தபோது, வலம்புரி விநாயகர் இருந்தார். வணங்கிக் கொண்டோம்.
நவகிரக சந்நிதி. சூரியன், சந்திரன், லிங்கோத்பவர், முருகன் ஆகியோர்களும் பிராகாரத்தில் இருக்க தொடர்ச்சியாக ஒவ்வொருவரையும் வணங்கி நகர்ந்தோம்.
பிரம்மா, சற்குணன் என்ற அரசன் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபபட்டுள்ளனர். இதனால் இறைவன் *சற்குணலிங்கேஸ்வரர்* என அழைக்கப்படுகிறார்.
இராமேசுவர வரலாறு இத்தலதிற்கும் சொல்லப்படுகிறது. ராமாயண காலத்தில் ராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன் இத்தலத்திற்கு வந்ததாக கூறப்படுகிறார்கள்.
இராமேஸ்வரத்தில் நடந்தது போல குறித்த நேரத்தில் வழிபாடு செய்ய அனுமன் சிவலிங்கம் கொண்டு வர தாமதமானதால், ராமன் தன் அருகிலிருந்த மணலிலேயே இரண்டு கைகளாலும் லிங்கம் பிடித்து இத்தலத்தில் வழிபட்டார் என்றும் அதுவே தற்போதைய *பிருதிவி லிங்கமாகும்* என்றும் கூறப்படுகிறது.
அனுமன் கொண்டு வந்த லிங்கம் கோயிலின் இடப்புறம் *அனுமந்த லிங்கம்* என்ற பெயரில் தனி சந்நிதியில் உள்ளதைக் கண்டு விழுந்து எழுந்து வணங்கினோம்.
இத்தலத்திற்கு மற்றொரு வரலாறையும் அங்கிருந்தோர் கூறினர். தனஞ்சயன் என்ற வணிகன் ஒருவன் தன் சிற்றன்னையை அறியாது புனர்ந்தமையால் தொழுநோய் ஏற்படுகிறது.
மனம் வருந்திய அவன் இத்தல இறைவனை வேண்டி தொழுநோய் நீங்கப்பெற்றான்.
அம்மன் சன்னதி எதிரே தனஞ்சய வணிகனின் வணங்கிய சிலை உள்ளது.
எனவே தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல இறைவனை வழிபட்டு வந்தால் பலன் கிடைக்கும் என்றும் கூறினார்கள்.
*தேவாரம் பாடியவர்கள்:*
*திருஞானசம்பந்தர்* இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
*தல அருமை:*
ராமேஸ்வர வரலாறு எப்படியோ அது போலவே இந்த தலத்திற்கும் அதே மாதிரியான வரலாற்றைச் சொல்லப்படுகிறது.
இராமேஸ்வரத்தில் நடந்தது போல குறித்த நேரத்தில் வழிபாடு செய்ய அனுமன் சிவலிங்கம் கொண்டு வர தாமதமானதால், நேரத்தினை கணக்கிற் கொண்டு, ராமன் தன் கைகளால் மணலிலேயே இரண்டு கைகளாலும் லிங்கம் பிடித்து இத்தலத்தில் வைத்து வழிபட்டார்.
மண்ணினை கையால் பிடித்து செய்த சுவடுகள் தெரிகிறது. அர்ச்சகர் தீபம் கட்டும் போது அந்த சுவடுகள் நமக்குத் தெரியும்..
மணல் லிங்கமாக தாவல், லிங்கத்திருமேனி மீது சுவாமிக்கு குவளை சார்த்தி அர்ச்சகர் அபிஷேகம் செய்கின்றார்.
ராமன் மணல் லிங்கம் பிடித்து வைத்தபின், அனுமன் கொண்டு வந்த லிங்கமான *ஹனுமத் லிங்கம்* என்ற பெயரில் தனி சன்னதியில் காட்சியையும் செய்கிறது.
தனஞ்சயன் என்ற வணிகனுக்கு ஏற்பட்ட தொழு நோயை சுவாமி குணப்படுத்தினார். அம்மன் சன்னதி எதிரில் தனஞ்சயன் சிலை உள்ளது.
இத்தலம் பரிகார தலங்கள் என்று சொன்னால்தான் பக்தகோடி கூட்டம் ஓடி வரும் போல.....,நாங்கள் சென்றிருந்த சமயத்தில் ஆலத்தினுள் யாருமில்லை.
வழிபாட்டுக்கு வந்திருந்த நாங்களும், ஆலய அர்ச்சகரும் மட்டுந்தான். பாடல் பெற்ற தலம். ஆரவாரம் எதுவுமில்லாது இவ்வளவு அமைதியாக இருக்கிறதே? என வேதனைப் பட்டோம்.
பிரபலமான தலம் என பிரச்சாரம் இல்லாததால் கூட்டம் அவ்வளவாக இல்லை என்பதை உணர்ந்தோம்.
மிகவும் சிறிய கிராமம். இந்தக் கிராமத்தில் வசதிகள் எதுவும் இல்லை. எனவே வேண்டிய பூஜை பொருட்களை வீட்டிலிருந்து புறப்படும் போதே எடுத்துச் செல்லுங்கள்.
அல்லது கும்பகோணம் பட்டீஸ்வரத்தில் வாங்கி கொள்ளுங்கள். முடிந்தால் விளக்கெரிக்க எண்ணெய்யை உங்களால் முடிந்த அளவுக்கு வாங்கி ஆலயத்தில் சேர்த்து விடுங்கள்.
விளக்கெரிப்பு தடைபடாது. உங்களுக்கும் புண்ணிய கணக்கின் உயரம் எழும்.
*தேவாரம் பாடியவர்கள்:*
நனவிலும் கனவிலும் நாளும் தன்னொளி
நினைவிலும் எனக்குவந் தெய்து நின்மலன்
கனைகடல் வையகம் தொழுக ருக்குடி
அனலெரி யாடுமெம் அடிகள் காண்மினே.
நான் விழித்திருக்கும் பொழுதும், கனவு காணும்பொழுதும், உள்ளொளியாக நெஞ்சில் நின்று நினைவிலும் எனக்குக் காட்சி தரும், இயல்பாகவே பாசங்களின் நீங்கியவனாகிய இறைவனாய், ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த இப்பூவுலகத்தோர் போற்றும் திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற, நெருப்பைக் கையிலேந்தி ஆடுகின்ற எம் தலைவரான சிவபெருமானைத் தரிசித்துப் பயனடைவீர்களாக.
மேகம் சூழும் சோலைகளையுடைய வளம் மிக்க திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற நஞ்சுண்ட திருக்கழுத்தையுடைய தலைவரான சிவபெருமான், அழகிய வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய உமாதேவி அஞ்சம்படி கொடிய சுடுகாட்டில் ஆடல் செய்வது என்கொல்?
இறைவர் சடைமுடியில் கங்கையைச் சூடி உள்ளார். தம் திருமேனியில் ஒரு பாகமாக உமாதேவியை வைத்துள்ளார். இவ்வுலகில் பிச்சை ஏற்கும் பொழுது இசையோடு பாடுவார். பறைகொட்ட நள்ளிருளில் நடனம் ஆடுவார். இது திருக்கருக்குடியில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமானின் அருள் தன்மையாகும்.
சிவபெருமான் கால தத்துவமாகவும், அதனைக் கடந்தும் விளங்குபவர். ஞாயிறு முதலிய சுடராக ஒளிர்பவர். நெருப்பு முதலிய பஞ்சபூதங்களானவர். தம் சடைமுடியில் பாம்பணிந்தவர். சிறந்த புகழை உடையவர். திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அப்பெருமானின் தன்மை சாலவும் இனிதாகும்.
அலைவீசுகின்ற கடலையுடைய இலங்கை மன்னனான இராவணனை நிலை கெடும்படி மலையிடையில் வைத்து அடர்த்த சிவமூர்த்தியாகிய இறைவர், மரங்களின் அடர்த்தியால் இருண்ட சோலைகளில் சந்திரன் தவழும் திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவராய், தம்மை ஞானத்தால் தொழும் அடியவர்கட்கு நன்மையைத் தந்தருளி ஆட்சி செய்கின்றார்.
தாமரைப் பூவில் வாழ்கின்ற பிரமனும், அழகிய வாமனாவதாரம் எடுத்த திருமாலும் அறிய முடியா வண்ணம், ஓங்கிய நெருப்பு மலையாய் உயர்ந்து நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தை நாம் மனத்தால் நினைந்து வழிபட நன்மையாகும்.
புத்தரும், சமணர்களுமான வஞ்சகர் கூறும் பொய்ம்மொழிகளை உரையாகக் கொள்ள வேண்டா. பெறுதற்கரிய சைவசமயத்தில் நம்மைப் பிறக்குமாறு செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற அழகிய திருக்கருக்குடி என்னும் திருத்தலத்திலுள்ள பூமணம் கமழும் திருக்கோயிலைச் சார்ந்து உய்தி அடையுங்கள்.
Bookmarks