Announcement

Collapse
No announcement yet.

Thirunaraiyur temple

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thirunaraiyur temple

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

    பிரபஞ்சநாதனே போற்றி!
    பிறவாவரமருளுநாயகா போற்றி!
    *பாடல்பெற்ற சிவ தல தொடர்.83.*

    *சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*

    *திருநறையூர்.*
    (நேரில் சென்று தரிசித்ததைப் போல.............)

    *சித்த நாதேஸ்வரர் கோவில், திருநறையூர் (சித்தீச்சரம்)*


    *இறைவன்:* சித்தநாதேஸ்வரர், வேதேஸ்ஸரர்.


    *இறைவி:* செளந்தர நாயகி, அழகாம்பிகை.


    *தல விருட்சம்:* பவளமல்லி.


    *தல தீர்த்தம்:* சூல தீர்த்தம்.


    *உள் சந்நிதிகள்:* சித்தீச்சரமுடையார்,கங்காளதேவர்.


    தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் அறுபத்து ஐந்தாவதாகப் போற்றப் படுகிறது.


    *புராணப் பெயர்கள்:*
    நரபுரம், குபேரபுரம், பிரமபுரம், சுகந்தவனம், திருநறையூர்ச்சித்திரம்.


    *பழமை:*
    சித்தர்கள் வழிபட்டதால் சித்த நாதேஸ்வரர் எனவும், தேவர்கள் வழிபட்டதால் தேவேஸ்வரர் என்றும், சித்தர்கள் இங்கு கோயில் கொண்டிருப்பதால் இப்பகுதி சித்தீஸ்வரம் எனவும் அழைக்கப்படுகிறது.


    துர்வாச முனிவரால் பறவை உருமாறி, சாமம் பெற்ற நரன் இங்கு வழிபட்டதால் இத்தலத்திற்கு நரபுரம் என்ற பெயரும் உண்டு.


    இங்கிருக்கும் லிங்கம் மிகப்பழமையானவை.


    *தேவாரம் பாடியவர்கள்:*
    திருஞானசம்பந்தர் - 3
    சுந்தரர் - 1.


    *இருப்பிடம்:*
    கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் செல்லும் வழியில் பத்து கி.மி. தொலைவில் திருநறையூர் உள்ளது.


    திருநறையூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மிக அருகிலேயே ஆலயம் உள்ளது.


    108 திவ்யதேசங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் என்ற வைணவத்தலம் சித்த நாதேஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஒரு கி.மி. தூரத்தில் இருக்கிறது.


    *அஞ்சல் முகவரி:*
    அருள்மிகு சித்த நாதேஸ்வரர் திருக்கோயில்,
    திருநறையூர்,
    நாச்சியார்கோவில் அஞ்சல்,
    கும்பகோணம் வட்டம்,
    தஞ்சாவூர் மாவட்டம்.
    PIN - 612 102.


    *ஆலயத் திறப்பு:* இவ்வாலயம் தினந்தோறும் காலை 6.00 மணி முதல் பகல் 12. 00 மணி வரையிலும், மாலை 5.00மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.


    *பூஜை:* ஆகம விதிப்படி.


    *கோவில் அமைப்பு:* சோழர்காலத் திருப்பணியைப் பெற்ற இக்கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடன் மேற்கு நோக்கி காட்சி தர.... *சிவ சிவ சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தைத் தரிசனம் செய்து வணங்கிக் கொண்டோம்.


    கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தபோது, முதலில் நேராக கவசமிடப்பிட்ட கொடிமரத்தைக் காணப் பெறவும், விழுந்து தரிசித்து வணங்கிக் கொண்டோம்.


    அடுத்திருந்த கொடிமரத்து விநாயகர் இருந்தார். விடுவோமி? காதைத் திருகி தோப்புக்கரணமிட்டு வணங்கிக் கொண்டோம்.


    தொடர்ந்து பலிபீடத்து முன் வந்து நின்று,.........


    ஒவ்வொரு முறை ஆலயம் வரும் போதும் நம்மிடமிருக்கும் ஆணவமலத்தை பலிபீடத்தில் பலியிட்டுதான் திரும்பி செல்கிறோம்.


    அப்படியிருந்தும் திரும்ப ஆலயம் வருவதற்குள் பாலாய்ப்போன இந்த மானுடம், இக்கலிகாலத்தில் மீண்டும் மீண்டும் ஆவணமலத்தை கூட்டிவைத்துக் கொண்டு வந்து விடுகிறது.


    மனசு கேட்கவில்லை. மனதில் இருந்த ஆணவமலத்தை பலிபீடத்தில் பலியிட்டு விட்டு, இனி இந்நெஞ்சில் ஆணவ அழுக்கு கூடக்கூடாது என மனம்விட்டு வேண்டிக் கொண்டோம்.


    அடுத்தாக நம் நந்தியாரை வணங்கி, வழக்கமாக அவரிடம் நாம் வேண்டுதல் வேண்டி வைக்கும் பதிவுறுதலை அவரிடம் விண்ணப்பித்து விட்டு, ஆலயத்துக்கு உள் புகுந்தோம்.


    இறைவன் கருவறையில் லிங்க உருவில் மேற்கு திசை நோக்கி காட்சியருளை தந்து கொண்டிருந்தார்.


    கருவறையின் முன்பு தரிசனத்திற்கு கூட்டம் அதிகமிருப்பினும், ஈசனை மனங்குளிரப் பார்க்க முடிந்தது.


    *(அடியேனுக்கெல்லாம்,..... ஈசனின் தரிசனம் திருப்தியான முறையில் தெரியாவிட்டாலும், பார்க்க முடியாவிட்டாலும்,.......திரும்பவும் வரிசையில் நின்று அவனை நன்றாக உற்று நோக்கி வணங்கியபின்தான், அடுத்து வலத்திற்கு வருவேன். அது என் சுபாவம்.)*


    அர்ச்சகரிடம் தீபாராதனை மும், வெள்ளிய விபூதியும் பெற்று வெளி வந்தோம்.


    கருவறையை விட்டு வெளிப்பகுதியில், கருவறைச் சுற்றில் கோஷ்டத்தின் தென்திசையில் *ஒரு தட்சிணாமூர்த்தியும்,* மேற்கு திசையில் *மற்றொரு தட்சிணாமூர்த்தியும்* காணப்படுகின்றனர்.


    தென்திசை, மேற்திசையிலுமான சிவனின் அம்சமான இரு தட்சிணாமூர்த்திகளையும் மனமுருகப் பிரார்த்தித்து வணங்கி நகர்ந்தோம்.


    தொடர்ந்து வலத்தின்போது, ரிஷபத்தின் தலை மீது வலது கையை ஊன்றியபடி காட்சி தந்து கொண்டிருந்த அர்த்தநாரீஸ்வரர் சிற்பமும், பிச்சாடனர் சிற்பமும் மிக மிக பிரமிக்க வைத்தது.


    பார்த்து ரசிக்கவும் வேண்டும், வணங்கவும் வேண்டும் எண்ணா? அற்புதத் தோற்றம். மிக நேர்த்தியான பக்திப் பாங்குடன் அமைப்பு இது. சிவ..சிவ....அர்த்தநாரீஸ்வரரின் உருவமைப்பைக் கண்டு, அடியேன் தோல் மயிர்க்கால்கள் சிலிர்த்தன சிவ.. சிவ......


    கருவறைப் பின்புறமிருந்த கோஷடத்திலுள்ள லிங்கோத்பவர் உருவச்சிலையும் கலைநய அழகுடன் காட்சி தர, அதன் பக்தியருளழகில் மெய்மறந்து நின்றோம்.


    பின், இக்கோயிலில் பிரகாரத்தில் மூன்று சண்டிகேஸ்வரர்கள் இருப்பதை, இங்கு பிராகாரம் வலம் வரும்போதுதான் தெரிந்து கொண்டோம்.


    அம்மூன்று தட்சிணாமூர்த்திகளிடம் முன் வந்து சப்தமில்லாமல் நம் வரவு செலவின் உண்மைகளை உள்ளங்கைகளின் விரித்தியுணர்த்தி அவன்தாழ் பணிந்து விடைபெற்றுக் திரும்பினோம்.


    இந்த மூன்று தட்சிணாமூர்த்திகள் ஓரிடத்தில் அமைந்திருப்பது அரிய பெரும் சிறப்பாகும்


    *தல அருமை:*
    இத்தலத்து ஊரின் பெயர் திருநறையூர். ஆலயத்தின் பெயர் சித்தீச்சரம். மேதாவி மகரிஷி என்பவர் இத்தலத்தில் இறைவனை வணங்கி வந்தார்.


    மஹாவிஷ்ணுவை இந்த மகரிஷி வணங்காமல் இருந்தாலும் அவர் பத்தினி மகாலட்சுமி தனக்கு மகளாகப் பிறக்க அருள் செய்ய வேண்டும் என்று சிவபெருமானை வேண்டி தவம் இருந்தார்.


    சிவன் திருமாலிடம் மேதாவி மகரிஷியின் விருப்பத்தை நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டார். மஹாவிஷ்ணு கூறியதின் பேரில் மகாலட்சுமியும் தீர்த்தக் குளத்தில் ஒரு மலர்ந்த தாமரை மலரில் மேதாவி மகரிஷி முன் தோன்றினாள்.


    மகரிஷியும் அவளை வளர்த்து திருமணப் பருவத்தில் மஹாவிஷ்ணுவிற்கு திருமணம் செய்து கொடுக்க ஆசைப்பட்டார். அவ்வாறே சிவன், பார்வதி இருவரும் முன்னின்று மஹாவிஷ்ணுவிற்கு திருமணம் செய்து கொடுத்தனர்.


    கோரக்க சித்தர் என்பவர் தனக்கு ஏற்பட்ட தோல் வியாதி நீங்க இத்தலத்தில் இறைவனை வழிபட்டார். இறைவன் அவருக்கு அருள் புரிய, சித்தர் தனது நோய் நீங்கப் பெற்றார். சித்தருக்கு அருளியதால் இறைவன் பெயர் சித்தநாதேஸ்வரர் என்றும் ஆலயம் சித்தீச்சரம் என்றும் வழங்குகிறது.


    மேலும் மகாலட்சுமிக்கு பிறந்த ஊராக திருநறையூர் தலமும், புகுந்த வீடாக அருகில் உள்ள நாச்சியார்கோவில் வைணவத்தலமும் கருதப்படுகிறது.


    சம்பந்தர், சுந்தரர் இருவரால் பாடப்பெற்று, திருநாவுக்கரசரால் திருத்தாண்டகத்தில் குறிக்கப்பட்டுள்ள இத்தலம் மிகப் பழமையானது.


    நரன், நாராயணர் என்ற இருவர் இத்தலத்தில் தவமியற்றி வந்தனர். தவவாழ்க்கையில் ஈடுபட்டிருந்த அவர்களின் தவத்திற்கு இடையூறு செய்தான் அசுரன் ஒருவன்.


    எளிதில் வென்றுவிட முடியாத அந்த அசுரனை வெல்ல நாரதர் மகரிஷியிடமிருந்தும், சூரிய பகவானிடமிருந்தும் ஆலோசனைப் பெற்று, அதன்படி அசுரனின் கவச குண்டலங்களை யாசித்துப் பெற்றுக் கொண்டு, அசுரனை போர் புரிந்து கொன்றனர்.


    அந்த பாவத்தைப் போக்கிக் கொள்ள இத்தலத்தில் சித்தநாதரை வழிபட்டு அவரருள் பெற சிவநிஷ்டையில் ஆழ்ந்திருந்தனர்.


    தியானத்தில் இருந்த இவர்கள் ஆசிரமத்திற்கு வருகை தந்த துர்வாசரை கவனிக்கவில்லை. கோபம் கொண்ட துர்வாசர் அவர்கள் இருவரையும் பறவைகளாகப் போகும்படி சபித்துவிட்டார்.


    நாரையாகப் பிறந்த நாராயணர் காவிரி வடகரைத் தலமான திருநாரையூரில் இறைனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றார்.


    நரனோ, நரையான் என்ற பறவையாகப் பிறந்து, இத்தல சித்தீச்சரப் பெருமானை வழிபட்டு தன் பழைய வடிவம் பெற்றார். நர, நாராயணர் சிவ வழிபாடு செய்யும் புடைப்புச் சிற்பம் இவ்வாலயத்தில் இருக்ககிறது. இவ்வாலயம் செல்லும்போது அவசியம் பார்க்கவும்.


    மேதாவி மகரிஷி இத்தலத்தில் இறைவனை வழிபட்டு லட்சுமியை மகளாகப் பெற்று பின்பு அவளை மகாவிஷ்ணுவிற்கு மணம் முடித்த தலம் இதுவாகும். மேதாவி மகரிஷிக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது.


    குபேரன், தேவர்கள், கந்தருவர்கள் ஆகியோர் இங்கு இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.


    தீர்த்தம் பிரம தீர்த்தம். இது கோயிலுக்கு வடக்கே உள்ளது. மாசி மாதத்தில் மூன்று நாட்களும், ஆவணி மாதத்தில் மூன்று நாட்களும் சூரிய கிரணங்கள் மூலலிங்கத்தின் மீது படுகின்றது. சூரியனே இத்தலத்தில் இறைவனை வணங்குவதாக கருதப்படுகிறது.


    *தேவாரம் பாடியவர்கள்:*
    *சம்பந்தர்.*
    நேரிய னாகுமல்ல னொருபாலு மேனி
    யரியான்மு னாய வொளியான்
    நீரியல் காலுமாகி நிறைவானு மாகி
    யுறுதீயு மாய நிமலன்
    ஊரியல் பிச்சைபேணி யுலகங்க ளேத்த
    நல்குண்டு பண்டு சுடலை
    நாரியொர் பாகமாக நடமாட வல்ல
    நறையூரின் நம்பனவனே.


    ஊர்கள் தோறும் சென்று, பிச்சையேற்று உலகங்கள் போற்ற நல்குவதை உண்டு. முற்காலத்தே சுடலையில் மாதொருபாகனாக நடனமாடவல்ல, நறையூரில் விளங்கும் நம்பனாகிய சிவபெருமான், நுண்ணியன். பேருருவினன். தன்னொரு பாகத்தை அளித்த திருமால்முன் சோதிப்பிழம்பு ஆனவன். நீர், காற்று, முதலான ஐம்பூத வடிவினன்.


    இடமயி லன்னசாயன் மடமங்கை தன்கை
    யெதிர்நாணி பூண வரையில்
    கடும்அயி லம்புகோத்து எயில்செற் றுகந்து
    வமரர்க் களித்த தலைவன்
    மடமயில் ஊர்திதாதை யெனநின்றுதொண்டர்
    மனநின்ற மைந்தன் மருவும்
    நடமயி லாலநீடு குயில்கூவு சோலை
    நறையூரின் நம்பனவனே.


    பொருந்திய மயில்கள் நடனம் ஆடி அகவவும், புகழ் நீடிய குயில்கள் கூவவும், விளங்கும் சோலை சூழ்ந்த நறையூரில் விளங்கும் நம்பனாகிய அப்பெருமான், இடப்பாகத்தே மயிலன்ன சாயலுடன் விளங்கும் மலைமங்கையோடு தன் கையில் உள்ள மலைவில்லில் அரவு நாணைப் பூட்டிக் கடிதானகூரிய அம்பினைக் கோத்து, மூவெயில்களைச் செந்று மகிழ்ந்து தேவர்கட்கு வாழ்வளித்த தலைவன். இளைய மயிலூர்தியைக் கொண்ட முருகனின் தந்தை என்று தொண்டர் எதிர்நின்று போற்ற அவர்கள் மனத்திலே எழுந்தருளும் மைந்தன் ஆவான்.


    சூடக முன்கைமங்கை யொருபாக மாக
    வருள்கார ணங்கள் வருவான்
    ஈடக மானநோக்கி யிடுபிச்சை கொண்டு
    படுபிச்ச னென்று பரவத்
    தோடக மாயொர்காதும் ஒருகா திலங்கு
    குழைதாழ வேழ வுரியன்
    நாடக மாகவாடி மடவார்கள் பாடும்
    நறையூரின் நம்ப னவனே.


    இளம் பெண்கள் நாட்டியம் ஆடிப்பாடிப் போற்றும் நறையூரில் எழுந்தருளிய நம்பனாகிய அப்பெருமான் வளையல் அணிந்தமுன் கைகளை உடைய மலைமங்கை ஒரு பாகமாக விளங்க அருள்புரிய வருபவன். பெரிய வீடுகளை நோக்கிச் சென்று அவர்கள் இடும் பிச்சையை ஏற்று, மிக்க ஈடுபாடு உடையவன் என்று அடியவர் பரவி ஏத்த, இரு காதுகளிலும் தோடும் குழையும் அணிந்து யானையின் தோலைப் போர்த்துள்ளவன்.


    சாயனன் மாதொர்பாகன் விதியாய சோதி
    கதியாக நின்ற கடவுள்
    ஆயக மென்னுள்வந்த வருளாய செல்வன்
    இருளாய கண்ட னவனித்
    தாயென நின்றுகந்த தலைவன் விரும்பு
    மலையின்கண் வந்து தொழுவார்
    நாயக னென்றிறைஞ்சி மறையோர்கள் பேணும்
    நறையூரின் நம்ப னவனே.


    தாங்கள் விரும்பிய மலையின்கண் இருந்து தவம் முயலும் சித்தர்கள் இறங்கி வந்து வழிபடுகின்ற, சித்தர்கட்கு ஈசுவரன் என்று மறையவரால் போற்றிப் பேணும் நறையூர்ச் சித்தீச்சரத்து இறைவனாகிய அவன், அழகிய மலைமாதினை ஒரு பாகமாகக் கொண்டவன். எல்லோர்க்கும் ஊழை வரையறுக்கும் சோதி. சிவகதியாக நிற்கும் கடவுள். என் மனத்திடை வந்து அருள் புரியும் செல்வன். இருண்ட கண்டத்தினன். தாயெனத் தலையளி செய்யும் தலைவன்.


    நெதிபடு மெய்யெமைய னிறைசோலை சுற்றி
    நிகழம்ப லத்தின் நடுவே
    அதிர்பட ஆடவல்ல வமரர்க் கொருத்தன்
    எமர்சுற்ற மாய இறைவன்
    மதிபடு சென்னிமன்னு சடைதாழ வந்து
    விடையேறி யில்பலி கொள்வான்
    நதிபட வுந்திவந்து வயல்வாளை பாயும்
    நறையூரின் நம்ப னவனே.


    வளைமீன்கள் நதி வழியாக நீந்தி வந்து வயல்களிற் பாயும் நறையூரில் எழுந்தருளிய இறைவன், சேமநிதியாகக் கருதப்படும் மெய்ப்பொருள் எமக்குத் தலைவன் நினைறந்த சோலைகள் சூழ்ந்த அம்பலத்தில் அதிர்பட ஆடுபவன் அமரர்க்குத் தலைவன். அடியவர்க்குச் சுற்றமாய் விளங்குபவன். பிறை பொருந்திய சடை தாழ்ந்து தொங்க விடைஏறி வந்து வீடுகள் தோறும் பலி ஏற்பவன்.


    கணிகையொர் சென்னிமன்னு மதுவன்னி கொன்றை
    மலர்துன்று செஞ் சடையினான்
    பணிகையின் முன்னிலங்க வருவேட மன்னு
    பலவாகி நின்ற பரமன்
    அணுகிய வேதவோசை யகலங்க மாறின்
    பொருளான ஆதி யருளான்
    நணுகிய தொண்டர்கூடி மலர்தூவி யேத்து
    நறையூரின் நம்ப னவனே.


    அருள் பெறத் தன்னை நண்ணிய தொண்டர்கள் மலர் தூவி ஏத்த நறையூரில் விளங்கும் இறைவன். கங்கை தங்கிய முடி மீது வன்னி, கொன்றைமலர் முதலின பொருந்திய சடையினை உடையவன். வணங்குதற்கு முன்னரே அவர்கள் விரும்பும் வடிவங்கள் பலவாகத் தோன்றி அருள்புரிபவன். தன்னை அணுகிய வேதங்களின் ஓசை, அகன்ற ஆறு அங்கங்களின் பொருளாக விளங்கும் கருணையாளன்.


    ஒளிர்தரு கின்றமேனி யுருவெங்கு மங்க
    மவையார ஆட லரவம்
    மிளிர்தரு கையிலங்க வனலேந்தி யாடும்
    விகிர்தன் விடங்கொண் மிடறன்
    துளிதரு சோலையாலை தொழின்மேவ வேத
    மெழிலார வென்றி யருளும்
    நளிர்மதி சேருமாட மடவார்க ளாரு
    நறையூரின் நம்ப னவனே.


    தேன் துளிக்கும் சோலைகளையும், கரும்பினைப் பிழிந்து வெல்லம் ஆக்கும் தொழிலையும் வேதமுழக்கங்களின் எழுச்சியையும், வெற்றி வழங்கும் செல்வவளம் உடைய வானளாவிய, மடவார்கள் வாழும் மாடவீடுகளையும் உடைய நறையூரில் எழுந்தருளிய இறைவன் ஒளிதரும் தன்திருமேனியிலுள்ள அங்கங்கள் எங்கும் அரவுகள் ஆட, கையில் விளங்கும் அனலை ஏந்தி ஆடும் விகிர்தன். விடம் பொருந்திய கண்டத்தினன்.


    அடலெரு தேறுகந்த வதிருங் கழற்கள்
    ளெதிருஞ் சிலம்பொ டிசையக்
    கடலிடை நஞ்சமுண்டு கனிவுற்ற கண்டன்
    முனிவுற் றிலங்கை யரையன் உடலொடு
    தாளனைத்து முடிபத் திறுத்தும்
    இசைகேட் டிரங்கி யொருவாள்
    நடலைகள் தீர்த்துநல்கி நமையாள வல்ல
    நறையூரின் நம்ப னவனே.


    இலங்கை மன்னனாகிய இராவணனின் உடல் தோள் பத்துத் தலைகள் ஆகியவற்றை நெரித்துப் பின் அவனது இசையைக் கேட்டு இரங்கி அவன் துன்பங்களைத் தவிர்த்து ஒப்பற்ற வாளைத் தந்து கருணை காட்டியவனாய் நம்மை ஆளுதற்பொருட்டு நறையூரில் எழுந்தருளிய இறைவன் வலிய எருதினை உகந்தவன். அதிரும் கழல்களோடு ஒருபாதியில் சிலம்பு ஒலிக்க வருபவன். கடலிடையே தோன்றிய நஞ்சினை உண்டு கனிவு பொருந்தக் கண்டத்தில் நிறுத்தியோன்.


    குலமலர் மேவினானும் மிகுமாய னாலும்
    எதிர்கூடி நேடி நினைவுற்
    றிலபல வெய்தொணாமை யெரியா யுயர்ந்த
    பெரியா னிலங்கு சடையன்
    சிலபல தொண்டர்நின்று பெருமைக்கள் பேச
    வருமைத் திகழ்ந்த பொழிலின்
    நலமலர் சிந்தவாச மணநாறு வீதி
    நறையூரின் நம்ப னவனே.


    சிலபல தொண்டர்கள் நின்று பெருமைகள் பேசிப் பரவக் கரியமேகங்கள் விளங்கும் பொழிலின் நல்ல மலர்கள் சிந்துதலால் மணம் வீசும் வீதிகளை உடைய நறையூரில் எழுந்தருளிய நம்பனாகிய இறைவன் மலர்களிற் சிறந்த தாமரைமலர் மேல் விளங்கும் பிரமனும் புகழ்மிக்க திருமாலும், எதிர்கூடித் தேடியும் அவர்கள் நினைப்பில் உற்றிலாத பல சிறப்பினனாய் அவர்கள் காணமுடியாத படி, தீயாய் ஓங்கிய பெரியோன், விளங்கும் சடைமுடியை உடையவன்.


    துவருறுகின்ற ஆடை யுடல்போர்த் துழன்ற
    அவர்தாமும் அல்ல சமணும்
    கவருறு சிந்தையாள ருரைநீத் துகந்த
    பெருமான் பிறங்கு சடையன்
    தவமலி பத்தர்சித்தர் மறையாளர் பேண
    முறைமாதர் பாடி மருவும்
    நவமணி துன்றுகோயி லொளிபொன்செய் மாட
    நறையூரின் நம்ப னவனே.


    தவம் நிறைந்த பத்தர்கள், சித்தர்கள், மறைவல்லோர் விரும்பி வழிபடவும், மாதர்கள் முறையாகப் பாடி அடையவும், நவமணிகள் செறிந்த கோயிலையும் ஒளிதரும் பொன்னால் இயன்ற மாடவீடுகளையும் கொண்டுள்ள நறையூரில் விளங்கும் இறைவன், துவர் ஏற்றிய ஆடையை உடலில் போர்த்துத் திரியும் தேரரும் அவரல்லாத சமணர்களும் ஆகிய மாறுபட்ட மனம் உடையோர் உரைகளைக் கடந்து நிற்கும் பெருமான் ஆவன். அவன் விளங்கும் சடைமுடி உடையோன்.


    கான லுலாவி ஓதம் எதிர்மல்கு காழி
    மிகுபந்தன் முந்தி யுணர
    ஞான முலாவுசிந்தை அடிவைத் துகந்த
    நறையூரின் நம் னவனை
    ஈனமி லாதவண்ணம் இசையா லுரைத்த
    தமிழ்மாலை பத்து நினைவார்
    வானநி லாவவல்லர் நிலமெங்கு நின்று
    வழிபாடு செய்யு மிகவே.


    ஓதநீர் கடற்கரைச் சோலைகளைக் கடந்து வந்து நிறையும் காழிப்பதியில் தோன்றிய புகழ் மிகு ஞானசம்பந்தன் இளமையில் உணரும் வண்ணம் ஞானம் உலாவுகின்ற மனத்தில் தன் திருவடிகளைப் பதிய வைத்து உகந்த நறையூரில் விளங்கும் இறைவனை, குற்றமற்றவகையில் இசையால் உரைத்த தமிழ்மாலையாகிய இப்பத்துப் பாடல்களையும் உணர வல்லவர் நிலவுலகம் நின்று வழிபடுமாறு வானம் நிலாவ வல்லவர் ஆவர்.
    *திருச்சிற்றம்பலம்.*


    *நாளைய தலம் அரிசிற்கரைப்புத்தூர்......வ(ள)ரும்.*



    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிரேக்கிறான்.*
Working...
X