Announcement

Collapse
No announcement yet.

Tbiruvaiyaru thirupugazh

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tbiruvaiyaru thirupugazh

    ஆறு கார்த்திகைப் பெண்கள், முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தனர். ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றனர். அவர்களை சிறப்பிக்கும் வண்ணம் ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. இப்படிப்பட்ட பெருமைகள் நிறைந்த ஆடிக் கிருத்திகை தினம் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.


    அறுபடை வீடுபோல் புகழ் பெற்ற ஆறு குமரக் கோட்டங்கள்!
    திருவையாற்றில் வில்லேந்திய வேலவன் கோட்டம்


    முருகப் பெருமான் விரும்பி உறையும் ஆறு படை வீடுகள் சிறப்பித்துக் கூறப்படுவதுபோல், சென்னையில் கந்தக் கோட்டம், காஞ்சியில் குமரக் கோட்டம், திருவையாற்றில் வில்லேந்திய வேலவன் கோட்டம் ஆகியவையும் தனிப்பெருமை வாய்ந்தவை.


    தஞ்சையிலிருந்து வடக்கே 13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தலம் திருவையாறு. மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்று சிறப்புகளையும் உடையது. இங்கு எழுந்தருளியுள்ள மூலப் பரம்பொருள் மூவருக்கும் கோவில் பெயருண்டு என்பதே தனிப்பெருமை.


    இறைவன் அருள்மிகு ஐயாறப்பர் கோவில் காவிரிக் கோட்டம் என்றும்; இறைவி அருள்மிகு அறம்வளர்த்தநாயகி கோவில் திருக்காமக் கோட்டம் என்றும்; அருள்மிகு வில்லேந்திய வேலவன் கோவில் வேலவன் கோட்டம் என்றும் குறிப்பிடப்படுகின்றன.


    ஐயாறப்பன் கோவிலின் இரண்டாம் திருச்சுற்றில் மேற்குப் பிராகாரத்தின் நடுவில் தனியாக அமைந்துள்ளது வேலவன் கோட்டம். இங்கு முருகப் பெருமான் வில்லேந்திய வேலவராக- தனுசு சுப்பிரமணியராக அருள்பாலித்து வருகிறார்.


    சிதம்பரத்தில் பஞ்சாக்கரப் படிகள் அமைந்துள்ளதுபோல் இங்கு சடாக்கரப் படிகள் அமைந்துள்ளன. அவற்றைக் கடந்து சந்நிதியை அடைய வேண்டும்.


    வில்லேந்திய வேலவன் ஐந்தடி உயரத்தில் காட்சி அளிக்கிறார். அவரது இருபுறமும் வள்ளியும் தெய்வானையும் எழுந்தருளியுள்ளனர். வேலவன் முன் இடத்திருக்கரத்தில் நீண்டுயர்ந்த கோதண்டமும், முன் வலத்திருக்கரத்தில் நீண்ட அம்பும், பின் இடத்திருக்கரத்தில் சக்தி ஆயுதமும், பின் வலத்திருக்கரத்தில் குலீசமும் கொண்டு காட்சி அளிக்கிறார்.


    தென்முக மயிலின் அருகே ஒரு கால் நேராகவும், ஒரு கால் சாய்ந்தும் திரிபங்க நிலையில் தரிசனம் தருகிறார். இங்கு மயிலின் முகம் இடம் மாறி வலப்புறத்தில் உள்ளது தனிச்சிறப்பு. மயிலின் வாயில் பாம்பு பின்னிக்கொண்டிருக்கும்.


    வலப்புறத்தே வள்ளி தன் இடக்கரத்தில் மலர்ந்தும் மலராத தாமரை மலரை ஏந்தி, வலக்கரத்தில் கத்யவலம்பித முத்திரையுடனும்; இடப்புறத்தில் தெய்வானை வலக்கரத்தில் கருங்குவளை மலர் தாங்கி, இடக்கரத்தில் முத்திரை கொண்டும் காட்சி அளிக்கிறார்கள்.


    எல்லாம் வல்ல முழுமுதற் பரம்பொருளே வேலவனாக- இச்சா சக்தியே வள்ளியாக- கிரியா சக்தியே தெய்வானையாக- ஞான சக்தியே வேலாயுதமாக- நாதமெனும் ஒலி வடிவே சேவலாக (இங்கு வில்) ஓம் என்னும் பிரணவமே மயிலாகக் கொண்டு திருவையாற்றில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.


    முருகனை வழிபட்டால் எண்ணியவை ஈடேறும். வறுமை, துன்பங்கள் நீங்கும். அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தை அளிப்பான். திருமண பாக்கியம், புத்திரப் பேறு வேண்டியும் அவனைப் பிரார்த்திக் கொண்டு பலனடைந்தோர் பலர்!


    திருவையாறு திருப்புகழ்


    சொரியு மாமுகி லோஇரு ளோகுழல்
    சுடர்கொள் வாளிணை யோபிணை யோவிழி
    சுரர்த மாரமு தோகுயி லோமொழி ...... யிதழ்கோவை


    துவர தோஇல வோதெரி யாஇடை
    துகளி லாவன மோபிடி யோநடை
    துணைகொள் மாமலை யோமுலை தானென ...... உரையாடிப்


    பரிவி னாலெனை யாளுக நானொரு
    பழுதி லானென வாணுத லாரொடு
    பகடி யேபடி யாவொழி யாஇடர் ...... படுமாயப்


    பரவை மீதழி யாவகை ஞானிகள்
    பரவு நீள்புக ழேயது வாமிகு
    பரம வீடது சேர்வது மாவது ...... மொருநாளே


    கரிய மேனிய னானிரை யாள்பவன்
    அரிய ராவணை மேல்வளர் மாமுகில்
    கனகன் மார்பது பீறிய வாளரி ...... கனமாயக்


    கபடன் மாமுடி யாறுட னாலுமொர்
    கணையி னால்நில மீதுற நூறிய
    கருணை மால்கவி கோபக்ரு பாகரன் ...... மருகோனே


    திரிபு ராதிகள் தூளெழ வானவர்
    திகழ வேமுனி யாவருள் கூர்பவர்
    தெரிவை பாதியர் சாதியி லாதவர் ...... தருசேயே


    சிகர பூதர நீறுசெய் வேலவ
    திமிர மோகர வீரதி வாகர
    திருவை யாறுறை தேவக்ரு பாகர ...... பெருமாளே.

    - அருணகிரி நாதர்


    ......... சொல் விளக்கம் .........


    சொரியும் மா முகிலோ இருளோ குழல் ... கூந்தல் மழையாய்
    சொரிந்து விழும் இருண்ட மேகமோ அல்லது இருளே தானோ?


    சுடர் கொள் வாள் இணையோ பிணையோ விழி ... கண்கள்
    ஒளிகொண்ட இரு வாள்களோ, அல்லது மானின் கண்களோ?


    சுரர் தம் ஆர அமுதோ குயிலோ மொழி ... தேவர்களுடைய
    அருமையான அமுதமோ, அல்லது குயிலின் குரல் தானோ?


    இதழ் கோவை துவர் அதோ இலவோ ... வாயிதழ் கொவ்வைக்
    கனி தானோ, பவளமோ, அல்லது இலவ மலரோ?


    தெரியா இடை துகள் இலா அ(ன்)னமோ பிடியோ நடை ...
    இவர்களின் இடுப்பு கண்ணுக்கே தெரியாததோ? நடை குற்றம்
    இல்லாத அன்னப் பறவையினதோ, அல்லது பெண் யானையோ?


    துணை கொள் மா மலையோ முலை தான் என உரை ஆடி ...
    மார்பகங்கள் இரட்டையாயுள்ள பெரிய மலைகளோ? - என்றெல்லாம்
    உவமைகள் எடுத்துப் பேசி,


    பரிவினால் எனை ஆளுக நான் ஒரு பழுது இலான் என வாள்
    நுதலாரொடு பகடியே படியா ஒழியா இடர் படு மாயப் பரவை
    மீது அழியா வகை ... அன்புடன் என்னை ஆண்டருளுக, நான் ஒரு
    குற்றமும் இல்லாதவன் என்று ஒளி மிக்க நெற்றியை உடைய
    மாதர்களுடன் வெளி வேஷப் பேச்சுக்களையே பேசிப் படித்து, நீங்காத
    துன்பத்துக்கு இடமான (இந்தப் பிறவிச் சுழல்) என்னும் மாயக் கடலில்
    அழியாதபடி,


    ஞானிகள் பரவு நீள் புகழே அதுவாம் மிகு பரம வீடு அது
    சேர்வதும் ஆவதும் ஒரு நாளே ... ஞானிகள் போற்றுகின்ற பெரும்
    புகழே உருவான சிறந்த மேலான மோட்சத்தைச் சேர்வதும், அங்ஙனம்
    சேரத் தகுந்தவன் ஆவதுமான, ஒரு நாள் எனக்குக் கிட்டுமோ?


    கரிய மேனியன் ஆ நிரை ஆள்பவன் அரி அரா அணை மேல்
    வளர் மா முகில் கனகன் மார்பு அது பீறிய ஆளரி ... கரு நிற
    உடல் உடையவன், பசுக் கூட்டத்தை மேய்த்து ஆள்பவன், திருமால்,
    (ஆதிசேஷன் என்ற) பாம்பணையின் மேல் (துயில்) வளர் கரிய மேகம்
    போன்றவன், பொன்னிறம் படைத்த கனகன் (இரணியனுடைய)
    மார்பைப் பிளந்த நரசிம்மன்,


    கன மாயக் கபடன் மா முடி ஆறுடன் நாலும் ஒர்
    கணையினால் நிலம் மீது உற நூறிய கருணை மால் கவி
    கோப க்ருபாகரன் மருகோனே ... வலிமையான மாயங்களில்
    வல்ல வஞ்சகனாகிய ராவணனின் சிறந்த பத்து முடிகளும் ஒரே
    பாணத்தால் நிலத்தின் மேல் விழும்படி தூளாக்கிய கருணை மிகுத்த
    திருமால், (வாலி என்னும்) குரங்கைக் கோபித்தவனும், கிருபைக்கு
    இடமானவனுமான விஷ்ணுவின் மருகனே,


    திரி புராதிகள் தூள் எழ வானவர் திகழவே முனியா அருள்
    கூர்பவர் தெரிவை பாதியார் சாதி இலாதவர் தருசேயே சிகர
    பூதர நீறு செய் வேலவ ... திரிபுர அசுரர்கள் பொடியாகுமாறும்,
    தேவர்கள் விளங்கும் பொருட்டும், (திரிபுராதிகள் மீது) கோபித்து
    (தேவர்களுக்கு) அருள் பாலிப்பவர், உமா தேவிக்குத் தன் உடலில்
    பாதியைக் கொடுத்தவர், சாதி என்பதே இல்லாதவர் ஆகிய
    சிவபெருமான் பெற்ற குழந்தையே, சிகரங்களை உடைய கிரெளஞ்ச
    மலையை தூளாக்கி அழித்த வேலவனே,


    திமிர மோகரம் வீர திவாகர திருவையாறு* உறை தேவ
    க்ருபாகர பெருமாளே. ... அஞ்ஞானம் என்னும் இருளைப்
    போக்க வல்ல வீர ஞானபானுவே, திருவையாற்றில்* வீற்றிருக்கும்
    தேவனே, கிருபாகர மூர்த்தியே, பெருமாளே.


    சீரார் திருவையாறா போற்றி போற்றி!!


    என்றும் சமய,சமூக,கலாச்சார பணிகளில்…
    திருவையாறு சிவ சேவா அறக்கட்டளை
Working...
X