Announcement

Collapse
No announcement yet.

Ramanatheecharam temple

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Ramanatheecharam temple

    சிவாயநம.
    திருச்சிற்றம்பலம்.
    *கோவை கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

    பிரபஞ்ச நாதனே போற்றி!
    பிறவாவரமருளு நாயகா போற்றி!

    *பாடல் பெற்ற சிவ தல தொடர்.95.*

    *சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*

    *இராமனதீச்சரம்.*
    (நேரில் சென்று தரிசித்ததைப் போல.............)

    *திருக்கண்ணபுரம் இராமனதீசுவரர்.*


    *இறைவன்:* ராமநாதசுவாமி. இராமனதீசுவரர்.

    *இறைவி:* சரிவார் குழலி, சூளிகாம்பாள்.


    *உற்சவர்:* நந்தியுடன் சோமாஸ்கந்தர்.


    *திருமேனி:* சுயம்பு திருமேனி.


    *தல விருட்சம்:* வில்வமரம், (தற்போது இல்லை.)
    மகிழம். (தற்போது இருக்கிறது.) சம்பகமரம்.


    *தீர்த்தம்:* இராம தீர்த்தம்.


    *பதிகம் பாடியவர்கள்:*
    சம்பந்தர்.


    *புராணப் பெயர்:* ராமநாததீச்சரம், இராமனத்தீச்சரம்.


    *ஆகமம்,பூஜை:* காமீகம்.


    பாடல் பெற்ற தேவாரத் திருத்தலங்களுள் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் எழுபத்து ஏழாவது தலமாகப் போற்றப் படுகிறது.


    *இருப்பிடம்:*
    நன்னிலத்தில் இருந்து சுமார் பத்து கி.மி. தொலைவில் உள்ள திருப்புகலூரில் இருந்து முடிகொண்டான் ஆற்றைக் கடந்து, திருக்கண்ணபுரம் சென்று அங்கிருந்து கிழக்கே சென்றால் இத்தலத்தை அடையலாம்.


    திருப்புகலூரில் இருந்து இரண்டு கி.மி. தொலைவிலும், திருச்செங்காட்டங்குடி தலத்திலிருந்து மூன்று கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது.


    நன்னிலம், திருப்புகலூர் முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.


    *அஞ்சல் முகவரி:*
    நிர்வாக அதிகாரி,
    அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில்,
    திருக்கண்ணபுரம்,
    திருக்கண்ணபுரம் அஞ்சல்,
    நன்னிலம் வட்டம்,
    திருவாரூர் மாவட்டம்.
    PIN - 609 704


    *பூஜை காலம்:* இவ்வாலயம் தினந்தோறும் காலை 8-30 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.


    *கோயில் அமைப்பு:*
    நீண்ட நாளைய நினைப்பு, இப்போதுதான் அருளினான் அவன். அவரைத் தரிசிக்கப் புறப்பட்டுச் சென்றோம்.


    இங்கு வந்த பிறகுதான் தெரிந்து கொண்டோம் இவ்வாலயத்தின் குழந்தை ராஜகோபுரம் கிடையாது என்பதை.


    நாம் செல்கையில், நமக்கு எதிராக கிழக்கு நோக்கியவாறு இவ்வாலயம் அமையப் பெற்றிருந்தது.


    ஒரு முகப்பு வாயில் மட்டுமே இருக்க *"சிவ சிவ"* என மோழிந்து தொடர்ந்தோம்.


    ஆலயத்திற்கு எதிரில் தீர்த்தக்குளத்தைக் கண்டோமா. இதனருகில் சென்று சிரசிற்கு தீர்த்தத்தை அள்ளித் தெளித்து, இறைவனை மனதுக்குள் நினைத்துக் கொண்டோம்.


    அருகிருந்தோரிடம் இத்தீர்த்தத்தின் பெயரை வினவ, தீர்த்தம் எனக் கூறினார்கள்.


    பின், முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்ததும், நேராக பலீபீடத்தத்தைத்தான் முதலில் காணப் பெற்றோம்.


    நம்மிடம் ஆணவமலம் இருந்ததோ? இல்லையோ?வழக்கமாக பலிபீடத்தில் நம் ஆணவமலத்தை பலியிட்டுவிட்டு உள் புகுவது தான் முறை, மரபு.


    அதை நிறையவர்கள் கடைப்பிடிப்பதில்லை. அதனாலேயே வாழ்க்கையில் நிம்மதி இல்லாது மனக்குமைச்சலில் இருக்கிறார்கள்.


    ஈசனை வேண்டுவது வேறு. ஈசனை மட்டும் நாடிவிட்டால் உங்களுக்கு எல்லாம் கிடைத்து விடுமா?


    பிறகு எதற்காக தல தெய்வம், பலி பீடம், கொடிமரம், இறைசந்நிதிகள், கோஷ்டங்கள், கோஷ்டத்திலிருக்கும் மூர்த்தங்கள், ஈசனே மறுஉருவா நடராஜத் திருமேனிகள், கோமுகி, ஆலயப் புணர்மாணத்துக்கும் முன்னதாக லிங்கத்தை வைத்துப் பூசிக்கப் பெற்றவர்கள் போன்ற இவர்களை ஆலயவிதிப்படி நிறுவியிருக்கிறார்கள்!


    பொழுது போக்கிற்காக? இல்லை பொருட்காட்சியா? ஈசன்தான் தட்சிணாமூர்த்தி, தட்சிணாமூர்த்திக்கு ஏன் தனியிடம். இப்படி ஒவ்வொன்றுக்கும் விகிதாச்சார முறையில் ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிறது.


    இதோ!" நாங்கள் இத்தலத்திற்கு வந்து பலிபீடத்தைத்தான் வணங்கி நிற்கிறோம். அதற்குள், எங்களுக்குப் பின் வந்தவர்கள் எவ்வானவவையையும் வணங்காது சாமியைக் கும்பிட்டு வெளிவந்தாச்சு.


    இவர்கள் எப்படி.....? ஆண்டவனிடம் என்ன வேண்டியிருப்பார்கள்!.....பொத்தாம் பொதுவாக கையைத் தூக்கிய வணங்கி சாமிமுகத்தைப் பார்த்துத் திரும்பிவிட்டார்கள் போல.....


    ஒவ்வொரு முறையும் ஆலயம் வருவது....அவன் அருள்தான். அவன் அருள் இல்லாமல் அவனைப் பார்க்க காலம் வராது!


    எனவே ஆலயத் தொழுகை என்பது- மனநிறைவோடு தொழவேண்டும். ஆலயத்துள் புகுந்தால் வரிசை விதிப்படி அனைத்தையும் வணங்கி வர வேண்டும்.


    (சரி இருக்கட்டும்! நாங்கள் வணங்கத் தொடர்கிறோம்.)


    அடுத்து நந்தி, நந்தி மண்டபத்திலிருந்தார். இவரையும் கைதொழுது வணங்கிக் கொண்டு, ஆலயப்பிரவேசத்துக்குண்டான அனுமதியை இவரிடம் கேட்டுப் பெற்று, நம் வருகினையை இவனிடம் பதிவு செய்து விட்டு நகர்ந்தோம்.


    அடுத்ததாக இங்கு கொடிமரமில்லை. தொடர்ந்து விசாலமான முற்றவெளி இருந்ததுது.


    வலதுபுறம் தெற்கு நோக்கியபடி சந்நிதி தெரிய உள் நுழைந்தோம். அங்கு அம்பாள் சரிவார்குழலி அம்பாள் சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி காட்சியருள் புரிந்து கொண்டிருந்தாள்.
    அம்பாள் சந்நிதி முன்பு கூட்டமும் இல்லை. எனவே அம்பாளின் முன் நின்று மனமுருக பிரார்த்தித்து, தீபாரதனையுடன் அர்ச்சகர் தந்த குங்குமப் பிரசாதத்துடன் வெளிவந்தோம்.


    வெளிவந்தபோது வெளிப்புறச் சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி, காலபைரவர், சூரியன் ஆகியோரின் சந்நிதிகளைக் கண்டு வணங்கிக் கொண்டோம்.


    சுவாமியைக் காணவந்தபோது, மூலவர் கருவறை உள்ள மண்டபத்தின் நுழைவாயிலின் மேலினில் ரிஷபத்தின் மீதமர்ந்த சிவன், பார்வதி சுதைச் சிற்பத்தைக் காணப் பெற்றோம். அழகுடன் அருளும் சேர்ந்து இருந்தது இச்சுதையுருவம்.


    உள்ளே கருவறையிலுள் மூலவர் சிவலிங்கத் திருமேனி சுயம்புவானவர். பெரிய நெடிய உயரத்துடன் பெரிய சுற்றுடைய ஆவுடையாருடன் கூடிய உயர்ந்த பாணத்துடனும் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.


    தரிசனம் அருமையாகக் கிடைத்தது!..மீண்டும் மறுவொருமுறை உன்னைக் காணும் பேறு வாய்க்க வேண்டுமென பிரார்த்தித்து, அர்ச்சகர் கொடுத்த வெள்ளிய விபூதியை பெற்றுக் கொண்டு, அவ்விபூதியை அங்கேயே திரித்து நம் நெற்றிக்கு தரித்துக் கொண்டோம்.


    உடல் ஒரு வித சிலிர்ப்பு ஏற்பட்டது. அவன் சொத்தையல்லவா நெற்றியில் வரிந்து விட்டோம். அதனால் அவன் நம்மோடு கூட இருக்கிறான். அதனால்தான் அந்த சிலிர்ப்பு (புல்லரிப்பு) நமக்கு ஏற்பட்டது.


    அர்ச்சகர் தீபாராதனை ஆராதித்த போது மூலவர் லிங்கத் திருமேனியில் பட்டு ஜோதி வடிவம் தெரிந்தது.


    தரிசிக்கும் எல்லோருக்கும் இங்கு ஜோதிவடிவம் தெரியும். இது மிக விசேஷம்.


    ஈசனை வணங்கியதும் உட்கார்ந்தெழ வேண்டும். அதுபோல நாமும் சற்று அமர்ந்து இளைப்பாறியெழுந்தோம்.


    சுவாமிக்கு உண்டியலில் காணிக்கையிடச் சொல்லி பக்கத்தாரொருவர் தந்த காணிக்கையினையும், எங்களுடைய காணிக்கையினையும், இது பக்கத்தார் கொடுத்து அனுப்பியது, இது உன்னாலான எங்களது என்று மனதில் உரைத்து, சுவாமி முன்பிருந்த உண்டியல்கலயத்தில் *"சிவ சிவ"* எனக்கூறிச் செலுத்திக் கொண்டோம்


    கோஷ்டமூர்த்தங்களிலிருந்த தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோரை அவர்களுக்குத்தான் விதிமுறைப்படி வணங்கி நகர்ந்தோம்.


    சண்டேசுவரர் சந்நிதியும் அதற்குரிய இடத்தில் அமைந்திருக்க, அவரையுமா அவருக்குத்தான் ஒழுங்குபடி வணங்கிக் கொண்டோம்


    *தல பெருமை:*
    முற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஒருவருக்கு புத்திரப்பேறு இல்லாதிருந்தது.


    சிவபக்தரான இவர் குழந்தை வேண்டி சிவனுக்கு யாகங்களை நடத்தினார்.


    சிவன், அசரீரியாக, அம்பிகையே உனக்கு மகளாக பிறப்பாள் என்று அருளினார்.


    ஒருசமயம் மன்னர் வனத்திற்கு வேட்டையாடச் சென்ற போது ஓரிடத்தில் நான்கு பெண் குழந்தைகளை கண்டார். அக்குழந்தைகளை எடுத்துக் கொண்டு வந்து வளர்த்தார்.


    அவர்கள் பிறப்பிலேயே சிவபக்தைகளாக திகழ்ந்தனர். தகுந்த பருவத்தில் அவர்களை மணந்து கொள்ளும்படி சிவனிடம் வேண்டினார்.


    சிவனும் மணந்து கொண்டார். இந்த அம்பிகையர் நால்வரும் இப்பகுதியிலுள்ள நான்கு தலங்களில் காட்சி தருகின்றனர்.


    இத்தலத்தில் அம்பிகை சரிவார் குழலியாகவும், திருச்செங்காட்டங்குடியில் வாய்த்த திருகுகுழல் நாயகியாகவும், திருப்புகலூரில் கருந்தாழ் குழலியம்மையாகவும், திருமருகல் தலத்தில் வண்டார் குழலியம்மையாகவும் காட்சி தருகிறாள்.


    நான்கு அம்பிகையருக்கும், *"சூலிகாம்பாள்"*என்ற பொதுப்பெயர் உள்ளது.


    ஒருசமயம் இப்பகுதியில் வசித்த அம்பாள் பக்தையான ஏழைப்பெண் ஒருத்தி கர்ப்பமடைந்தாள்.


    ஒருநாள் இரவில் அவளது தாயார், ஆற்றைக்கடந்து வெளியில் சென்றுவிட்டாள். அன்றிரவில் பலத்த மழை பெய்யவே, அவளால் கரையைக் கடந்து வீடு திரும்ப முடியவில்லை. அதே நேரத்தில் வீட்டிலிருந்த மகளுக்கு பிரசவ வலி வந்தது.


    அப்போது அம்பிகையே அவளது தாயார் வடிவில் சென்று பிரசவம் பார்த்தார். எனவே இந்த நான்கு தலங்களிலுள்ள அம்பிகைக்கும் *"சூலிகாம்பாள்"* என்ற பெயர் ஏற்பட்டது.


    *"சூல்"* என்றால் *"கரு"* என்று பொருள். *"கரு காத்த அம்பிகை"* என்றும் இவருக்கு பெயர் உண்டு.


    பிரசவம் பார்த்துவிட்டு இரவில் தாமதமாக சென்றதால், அம்பிகை கோயிலுக்குள் செல்லாமல் வெளியிலேயே நின்றுவிட்டார்.


    எனவே இந்த நான்கு தலங்களிலும் அம்பாள் சன்னதி வெளியில் தனியே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


    அர்த்தஜாம பூஜையில் மட்டும் அம்பிகைக்கு சம்பா அரிசி, மிளகு, சீரகம், உப்பு, நெய் கலந்த சாத நைவேத்யத்தை விசேசமாக படைப்பது இங்கு வழக்கம்.


    ராமர் கோயில்களில் அவரது திருநட்சத்திரமான புனர்பூசத்தன்று விசேஷ பூஜை நடக்கும். இத்தலத்தை ராமர் வழிபட்ட தலமென்பதால் இங்கு சிவனுக்கும் அந்நாளில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது.


    தற்போதும் சாயரட்சை பூஜையை ராமரே செய்வதாக ஐதீகம். இவ்வேளையில் சுவாமி தரிசனம் செய்வது விசேஷம்.


    சுப்பிரமணியர் தனிச்சன்னதியில் இருக்கிறார். திருச்செந்தூரில் முருகப்பெருமான், வலது கையில் மலர் வைத்தபடி காட்சி தருகிறார். இத்தலத்தில் இவர் இடதுகையில் மலர் வைத்து, வலது கையால் ஆசிர்வதித்த கோலத்தில் காட்சி தருகிறார். உடன் வள்ளி, தெய்வானை இருக்கின்றனர்.


    அருகில் திருமருகல் , திருச்செங்காட்டங்குடி , திருப்புகலூர் முதலான திருத்தலங்கள் உள்ளன.


    இத்தல அருகிலிருக்கும் சௌரிராஜப் பெருமாள் கோயில் திவ்யதேசங்களில் ஒன்று.


    *தல வழக்கம்:*
    இவ்வூரை இன்றும் மக்கள் வழக்கில் *'கண்ணபுரம்'* என்றே வழங்கி அழைக்கிறார்கள்.


    இராமன் (இராவணனைக் கொன்ற கொலைப்பாவம், நீங்க) இங்கு வந்து ஈசனை வழிபட்டத் தலம் - இராமனது ஈச்சுரம்.


    இராமர் இத்தலத்திற்கு வந்தபோது நந்தி தடுத்ததாகவும், அம்பாள் கருணை கொண்டு நந்தியைத் தடுத்து, காட்சித் தந்ததாகவும் பின்பு இராமன் தீர்த்தத்தில் நீராடி வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது.


    இதனால் இராம - நந்தீச்சரம் என்பது மருவி இராமனதீச்சரம் ஆயிற்று என்பர்.


    இதற்குச் சான்றாக இத்தலத்திற்குரிய சோமாஸ்கந்த மூர்த்தத்தில் நந்திதேவர் (அம்பாள் கரத்தில்) உள்ளார்.


    இப்போது இம்மூர்த்தத்தை நாம் காணப்பெற முடியாது. பாதுகாப்புக் கருதித் திருப்புகலூர் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.


    *தல சிறப்பு:*
    இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சுவாமிக்கு தீபாராதனை செய்யும்போது லிங்கத்திருமேனியில் ஜோதி வடிவம் விசைஷமாகத் தெரிகிறது.


    இக்கோயிலுக்குச் செல்பவர்கள் முன்னரே போனில் தொடர்பு கொண்டுவிட்டுச் செல்வது நல்லது.


    *பொது தகவல்:* பிரகாரத்தில் காசி பைரவருக்கு அருகில் வணங்கிய கோலத்தில் அகத்தியர் காட்சி தருகிறார். இந்த பைரவரை அகத்தியர்பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக சொல்கிறார்கள்.


    இத்தலத்திலிருந்து சற்று தூரத்தில் திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோயில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் இத்தலமும் ஒன்று.


    தல விநாயகரின் திருநாமம் அனுக்ஞை விநாயகர்.


    *தல அருமை:*
    ராமர், சீதையை மீட்க இலங்கை சென்ற போது, போரில் ராவணன் உட்பட பல வீரர்களை வீழ்த்தினார். இதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்த அவர், அயோத்தி திரும்பும் வழியில் பல தலங்களில் சிவ வழிபாடு செய்தார்.


    அவர் செண்பக வனமான இவ்வழியே வரும்போது, ஒரு மரத்தின் அடியில் சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளியிருந்ததைக் கண்டார்.


    சிவனுக்கு பூஜை செய்ய ஆயத்தமானார். நந்தி தேவர், ராமரை மானிடர் என நினைத்து சிவனை நெருங்கவிடாமல் தடுத்தார். அம்பாள் கருணை கொண்டு நந்தியைத் தடுத்து காட்சி தந்ததாகவும், பின்பு இராமர் தீர்த்தத்தில் நீராடி வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது.


    ராமர் சிவ வழிபாடு செய்து பின்பு அயோத்தி திரும்பினார். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. இராமரால் வழிபடப்பட்டவர் என்பதால் சுவாமி "ராமநாதசுவாமி" என்று பெயர் பெற்றார்.


    இராமர் கோயில்களில் அவரது திருநட்சத்திரமான புனர்பூசத்தன்று விசேஷ பூஜை நடக்கும். இராமர் வழிபட்ட தலமென்பதால் இங்கு சிவனுக்கு அந்நாளில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது.


    தற்போதும் சாயரட்சை பூஜையை இராமரே செய்வதாக ஐதீகம். இவ்வேளையில் சுவாமி தரிசனம் செய்வது விசேஷமானதாக கருதப்படுகிறது.


    இங்குள்ள சோமாஸ்கந்தர் (உற்சவ மூர்த்தி) மிக விசேஷமானவர். இச்சிலை ராமர் சிவனை வழிபடுவதற்காக அம்பிகை நந்தியை இழுத்த அமைப்பில் வடிக்கப்பட்டிருக்கிறது.


    *பதிகம் பாடியவர்கள்:*
    திருஞானசம்பந்தர். இத்தலத்து இறைவன் மேல் இயற்றியுள்ள இப்பதிகத்தின் பதினோறாவது பாடல் சிதைந்து போயிற்று. ஆக மீத பத்தும் இங்கே!


    1. சங்கொளிர் முன்கையர் தம்மிடையே அங்கிடு பலிகொளு மவன்கோபப் பொங்கர வாடலோன் புவனியோங்க எங்குமன் இராமன தீச்சுரமே.


    2. சந்தநன் மலரணி தாழ்சடையன் தந்தம தத்தவன் தாதையோதான் அந்தமில் பாடலோன் அழகன்நல்ல எந்தவன் இராமன தீச்சுரமே.


    3. தழைமயி லேறவன் தாதையோதான் மழைபொதி சடையவன் மன்னுகாதிற் குழையது விலங்கிய கோலமார்பின் இழையவன் இராமன தீச்சுரமே.


    4. சத்தியு ளாதியோர் தையல்பங்கன் முத்திய தாகிய மூர்த்தியோதான் அத்திய கையினில் அழகுசூலம் வைத்தவன் இராமன தீச்சுரமே.


    5. தாழ்ந்த குழற்சடை முடியதன்மேல் தோய்ந்த இளம்பிறை துளங்குசென்னிப் பாய்ந்தகங் கையொடு படவரவம் ஏய்ந்தவன் இராமன தீச்சுரமே.


    6. சரிகுழல் இலங்கிய தையல்காணும் பெரியவன் காளிதன் பெரியகூத்தை அரியவன் ஆடலோன் அங்கையேந்தும் எரியவன் இராமன தீச்சுரமே.


    7. மாறிலா மாதொரு பங்கன்மேனி நீறது ஆடலோன் நீள்சடைமேல் ஆறது சூடுவான் அழகன்விடை ஏறவன் இராமன தீச்சுரமே.


    8. தடவரை அரக்கனைத் தலைநெரித்தோன் படவர வாட்டிய படர்சடையன் நடமது வாடலான் நான்மறைக்கும் இடமவன் இராமன தீச்சுரமே.


    9. தனமணி தையல்தன் பாகன்றன்னை அனமணி அயன்அணி முடியுங்காணான் பனமணி அரவரி பாதங்காணான் இனமணி இராமன தீச்சுரமே.


    10. தறிபோலாஞ் சமணர்சாக் கியர்சொற்கொளேல் அறிவோரால் நாமம் அறிந்துரைமின் மறிகையோன் தன்முடி மணியார்கங்கை எறிபவன் இராமன தீச்சுரமே.


    11-வது பாடல் சிதைந்து போயிற்று. சிவ சிவ சிவ திருச்சிற்றம்பலம்.


    *கல்வெட்டு:*
    இத்தலம் திருக்கண்ணபுரம் கல்வெட்டுக்களிற்சேர்த்தே அரசியலாரால் படியெடுக்கப்பெற்றுள்ளது.


    ஐந்து கல்வெட்டுக்கள் உள்ளன. அதில், இறைவன் *"இராமனதீச்சரமுடையார்"* என வழங்கிக் கூறுகிறது. குலோத்துங்கசோழன் இக்கோயில் பூசைக்காகவும், அமுதுபடிக்காகவும் நிலம் அளித்தான்.


    இந்நிலம் பின்னர் சிவபாதசேகரமங்கலம் என்று வழங்கப்பெற்றது.


    கோயிலைத் திருப்பணிசெய்தவனும் இவனே. பின்னர், திருமலைதேவமகாராயரின் விக்ரமாதித்தன் என்னும் அரசகாரியம் பார்ப்பவன் கோயிலைப் பழுதுபார்த்திருக்கிறான்.


    பூசைக்கும், அமுதுக்கும் நிலம் அளித்து இருக்கின்றான்.


    கோனேரின்மை கண்டான் (யார் என்று அறியக்கூடவில்லை) காலத்தில் அருச்சகருக்குள் உரிமைப்போர் நிகழ்ந்திருக்கின்றது. அதனை நீக்கி, திருமன்னுசோழ பிரமராயனுக்கும், மானவரையனுக்கும் பூசை உரிமைகள் வழங்கப் பெற்றிருந்திருக்கின்றனர்.


    தனியூரான தில்லையிலிருந்த மாகேசுவரர்களால் இக்கோயில் நிலம் பஞ்சத்தால் விளையாதுபோக, இராஜராஜபாண்டிமண்டலம் வீரசோழமண்டலம், நடுவில்நாடு, ஜெயங்கொண்ட சோழமண்டலம் முதலியவற்றில் உள்ள கோயில்களிலிருந்து நெல்லும் பொன்னும் கொடுத்துதவும்படி உத்தரவிட்டிருக்கின்றனர்.


    இது கோயில் நிர்வாகத்தின் தனிச்சிறப்பைக் குறிக்கிறது.


    *தொடர்புக்கு:*
    91- 4366- 292 300,
    91- 4366- 291 257,
    94431 13025


    . திருச்சிற்றம்பலம்.


    *நாளைய தலம் திருப்பயற்றுநாதர் திருக்கோவில், திருப்பயற்றூர்.*



    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X