Announcement

Collapse
No announcement yet.

Fate and its consequences - Story from mahabharata

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Fate and its consequences - Story from mahabharata

    *22 . ஆன்மாவின் அனுபவங்கள் !*


    ✫ ✫ *BRS*✫ ✫ ✫


    கையில் வில்லோடும் அம்போடும் கானகத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தான் அர்ஜுனகன் என்ற வேடன். விலங்குகளை வேட்டையாடு வதே அவன் தொழில். ஆனால், அன்று மாலைக்குள் தன் வாழ்வே முற்றிலுமாக மாறப் போகிறது என்பதோ, வேட்டைத் தொழிலையே தான் கைவிடப் போகிறோம் என்பதோ அப்போது அவனுக்குத் தெரியாது.


    கால்வீசி நடக்கும் போது தன் கையிலிருந்த வில்லைப் பிரியமாக முத்தமிட்டுக் கொண்டான் அவன். தன் தொழிலுக்கான கருவியாகிய வில்லின் மேல் அத்தனை நேசம் அவனுக்கு.

    இப்போது எந்த வில்லை முத்தமிடுகிறானோ அந்த வில்லை விரைவில் ஒடித்துப் போடப் போகிறானே இவன் என்றெண்ணிக் காலம் தனக்குள் நகைத்துக் கொண்டது. அப்போது தான் கானகம் தொடங்கும் பகுதியில் அந்தக் குடிசையைப் பார்த்தான் வேடன்.


    ஆடம்பரமில்லாத எளிய குடிசை. அதைச் சுற்றிலும் ஒரு புனித ஒளி பரவியிருந்தது. யாரோ ஆத்மஞானம் நிறைந்த ஒருவர் குடிசையில் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். அப்படிப் பட்டவர்கள் இருக்கும் பிரதேசத்தைச் சுற்றி த்தான் இத்தகைய ஒளி பரவும் என்பதை அவன் கேள்விப்பட்டிருக்கிறான்.


    குடிசையில் வசிப்பவர் யார் என்றறியும் ஆவலோடு உள்ளே எட்டிப் பார்த்தான்.


    குடிசையில் நடுத்தர வயதுள்ள ஒரு பெண்மணி அமர்ந்திருந்தாள். கருணை, மன நிறைவு முதலிய நற்குணங்களெல்லாம் அவள் முகத்தில் சோபையாய்ப் படர்ந்திருந்தன. அவளைத் தரிசிப்பதே புண்ணியம் என்று தோன்றியது. வேடன் அவளை நமஸ்கரிக்கும் எண்ணத்தோடு குடிசையின் உள்ளே நுழைந்தான். அப்போதுதான் அவளருகே கிடத்தப்பட்டிருந்த ஒரு சிறுவனின் பிரேதம் அவன் கண்ணில் பட்டது.


    அவன் மனம் திடுக்கிட்டது. *''தாயே ! இந்தச் சடலம் யாருடையது ? இந்தச் சிறுவன் இறந்து எத்தனை காலமாகிறது ? தாங்கள் யார் ?"*


    சலனமற்ற முகத்தோடு வேடனைப் பார்த்த அவள் பேசலானாள்: *''வேடனே ! என் பெயர் கௌதமி. இதோ கிடத்தப்பட்டிருக்கும் சிறுவனின் தாய் நான். திடீரென்று என் மகன் இறந்துவிட்டதால் அடுத்து என்ன செய்வதென யோசித்துக் கொண்டிருக்கிறேன்.''*


    *சொந்த மகன் இறந்திருக்கும் போதும் அழாமல் யாருக்கோ நேர்ந்த துயரம்போல் தன் துயரத்தையே வேடிக்கை பார்த்தவாறிருக்கிறாளே ! உண்மையிலேயே மகத்தான மன உரம் படைத்தவள்தான் ! ''தாயே ! இவன் காலமாகி எத்தனை நேரமாயிற்று ? காலமானது எப்படி ?''*


    *''இவன் உயிர் பிரிந்து மிகச்சில கணங்கள்தான் ஆகியிருக்கின்றன. ஒரு பாம்பு திடீரென்று ஊர்ந்து வந்து இவனைக் கடித்துவிட்டுச் சென்றுவிட்டது. நான் இவன் இறந்ததை நம்ப இயலாமல் திகைத்துப்போய் அமர்ந்திருக்கிறேன். சென்ற கணம் இருப்பவர்கள் இந்தக் கணம் இல்லை என்பார்களே, அது எத்தனை உண்மை என்றெண்ணி வியப்பில் ஆழ்ந்திருக்கிறேன்.''* கௌதமியின் பேச்சைக் கேட்டு வேடன் மனம் பதைபதைத்தது. எத்தனை கொடிய செயலைச் செய்துவிட்டு ஓடி மறைந்திருக்கிறது பாம்பு. அதைச் சும்மா விடக் கூடாது.


    சடாரென்று குடிசைக்கு வெளியே வந்த வேடன் கூர்மையான பார்வையோடு சுற்றுமுற்றும் பார்த்தான். சற்றுத் தொலைவில் ஒரு பாம்பு வேகமாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதுதான் சிறுவனைக் கடித்த பாம்பாக இருக்க வேண்டும். ஓடிச்சென்று பாம்பைக் கையிலெடுத்தான். புடலங்காயைப் போல், பாம்பின் கழுத்தை இறுகப் பற்றித் தொங்க விட்டவாறே குடிசையை நோக்கி நடந்தான். தன்னை ஒருவர் இப்படிப் பாய்ந்து பிடித்துவிடலாம் என்று இதுவரை அறிந்திராத பாம்பு, வேடனின் அசாத்தியமான துணிச்சலை எண்ணி வியந்தது.


    இனி அவன் தன்னை என்ன செய்யப் போகிறானோ என்றும் கவலை கொண்டது. வேடன் நேரே கௌதமியின் முன் போய் நின்றான். *''தாயே! உங்கள் மகனைக் கொன்ற பாம்பு இதுதான். இதை நெருப்பில் போடலாமா, கல்லால் அடித்துக் கொல்லலாமா? எப்படி இதைக் கொல்ல வேண்டும் எனக் கட்டளையிடுங்கள். அதன்படிச் செய்கிறேன்.''* வேடனின் பேச்சைக் கேட்ட கௌதமி அனலில் பட்ட புழுப்போல் துடித்தாள். *''என்ன காரியம் செய்யத் துணிந்தாய்? இந்தப் பாம்பைக் கொல்வதால் என்ன பயன்?*


    *என் மகன் இறக்க வேண்டும் என்பது விதி. அதன்படி இறந்தான். மனிதர்கள் வாழ்வு அவரவர் விதிப்படியே நிகழ்கிறது. இறந்த என் மகன் இந்தப் பாம்பைக் கொன்றால் மீண்டு வரப்போகிறானா ? அப்படியிருக்க இந்தப் பாம்பு இறப்பதால் நான் அடையப்போகும் நன்மை என்ன ? உயிர்க்கொலை பாவம். பாம்பை விட்டுவிடு !''* கௌதமியின் பேச்சைக் கேட்டு வேடன் திகைத்தான். அவளது உத்தமமான மன நிலையைப் புரிந்துகொண்டாலும் அவள் சொல்படி நடக்க அவன் தயாராயில்லை.


    *''நீங்கள் என்ன சொன்னாலும் சரி. நான் இந்தப் பாம்பைக் கொல்லத்தான் போகிறேன். உயிர்க்கொலை பாவம் என்கிறீர்கள். அப்படியானால் உங்கள் மகனைக் கொன்ற இது பாவம் தானே செய்திருக்கிறது ? அந்தப் பாவத்திற்குத் தண்டனையாக இதை நான் கொல்வதே சரி.''*


    *''யார் செய்த பாவத்திற்கும் தண்டனையைத் தரும் உரிமை நமக்கில்லை வேடனே ! எது பாவம் என்பதை அறியும் தகுதி கூட நமக்கில்லை. தண்டனையை தெய்வம்தான் தரும். மனிதர்கள் அந்த உரிமையைக் கையிலெடுத்துக் கொள்ளக் கூடாது. எது நடந்தாலும் தெய்வ சித்தம் என ஏற்பதே நல்லது ! பாம்பை விட்டுவிடு !''*


    *''தாயே! உங்கள் மகனைக் கொன்றதுபோல் இது இன்னும் எத்தனை பேரைக் கொல்லுமோ! இந்த ஒரு பாம்பைக் கொல்வதன் மூலம் இதனால் எதிர்காலத்தில் கொல்லப்படவிருக்கும் அத்தனை பேரையும் காப்பாற்றிய புண்ணியம் எனக்கு வந்து சேரும். எனவே பாம்பைக் கொல்வதற்குத் தடை சொல்லாதீர்கள்.''*


    *''பாம்பின் சுபாவத்தை இறைவன் அல்லவோ படைத்தான்? அது பற்றி விமர்சிக்க நாம் யார்? நீ நினைப்பதுபோல் ஏராளமான பேரை இது கொல்வதற்கு முன் சீக்கிரத்திலேயே தானாகவே இதன் உயிர் போகலாம்.*


    அல்லது இதன் விரோதியான கழுகு இதைக் கொத்தித் தின் று விடலாம். இதுபோன்ற ஆராய்ச்சிகள் தேவையில்லாதவை. என் கண்ணெதிரே ஓர் உயிரை நீ கொல்வதை நான் அனுமதிக்க இயலாது. வேடனே! பாம்பை விட்டுவிடு!'' இவர்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த பாம்பு பேசத் தொடங்கியது.


    ''முதலில் என் கழுத்தை நெருக்கிக் கொண்டிருக்கும் உன் கைப்பிடியைச் சற்றுத் தளர்த்து!'' என வேடனைக் கேட்டுக் கொண்டது. வேடன் கைப்பிடியைத் தளர்த்தியதும் அது தொண்டையைச் சரிசெய்துகொண்டு பேசலாயிற்று:


    ''நான் எங்கே சிறுவனைக் கொன்றேன்? இந்தச் சிறுவனின் பால்வடியும் முகத்தைப் பார்த்ததும் இவனைக் கொல்லவேண்டியிருக்கிறதே என்று நான் தயங்கினேன் என்பதே உண்மை. ஆனால் நான் என்ன செய்வது? எமன் எனக்கிட்ட கட்டளை அப்படி! உன்னைப் போல் எமனும் ஒரு வேடன். உயிர் வேட்டையாடும் வேடன். எய்தவன் அவன் என்றால் நான் அம்பு. அவ்வளவே ! எய்தவன் இருக்க நீ அம்பைக் குறைசொல்வது என்ன நியாயம் ?


    அப்பாவியான ஒரு மானை நீ கொன்றால், உன்னைத் தண்டிக்க வேண்டுமா, இல்லை உன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைத் தண்டிக்க வேண்டுமா?


    தண்டிப் பதானால் எமனையல்லவா நீ தண்டிக்க வேண்டும்?'' வேடன் கடகடவென நகைத்தான்.


    ''பாம்பே! சாமர்த்தியமாக வாதிடு கிறாய். எமன் என்முன் வரமாட்டான், எமனைத் தண்டிப்பது இயலாது என்பதால் தானே, இப்படி வாதம் செய்து தப்பிக்கப் பார்க்கிறாய்? என் அம்பு உயிரில்லாத ஜடப்பொருள். ஆனால், எமனின் கருவியாக வி ளங்கிய நீ உயிருள்ள ஜந்து. எனவே, உன்னைத் தண்டிப்பேன். உன் உயிரை எடுப்பேன். இப்போது எமனின் கருவியாக நான் இருப்பதாகவும் எமன் கட்டளைப்படியே நீ கொல்லப்படுவதாகவும் எண்ணிக் கொள்!''


    அப்போது திடீரென அந்தக் குடிசைக்குள் ஓர் ஒளிவெள்ளம் தோன்றியது. அதிலிருந்து எமதர்மராஜன் வெளிப்பட்டான். கௌதமியும் வேடனும் எமனைக் கைகூப்பி வணங்கினார்கள்.


    ''வேடனே! நான் வெளிப்படையாகத் தோன்ற மாட்டேன் என நீயாக ஏன் நினைக்கிறாய்? இதோ நான் வெளிப்பட்டிருக்கிறேன். பூமியில் மதுவாகவும், போதைப் பொருட்களாகவும் பல மாறுவேடங்களில் நான் உலவுகிறேன். மக்கள் அதனால் தான் என்னை அடையாளம் காண் பதில்லை. அதனாலேயே என்னிடம் சிக்கி அவதிப்படுகிறார்கள்.


    இந்தப் பாம்பு சொன்னதை நான் கேட்டேன். இது சொன்னது அத்தனையும் உண்மைதான். இந்தச் சிறுவனைக் கடிக்குமாறு இதன் மனத்தில் புகுந்து தூண்டியவன் நான்தான். என் கட்டளைப்படியே இது இயங்கியது. எனவே, இதைத் தண்டிக்காமல் என்னைத் தண்டிப்பதே நியாயம்.


    ஆனால், உண்மையைச் சொல்லப்போனால் என்னைத் தண்டிப்பதும் ''நியாயமல்ல.''''ஏன் அப்படி?'' வேடன் திகைப்போடு கேட்டான்.''யோசித்துப் பார். என்னைப் போன்ற தேவர்களைத் தரிசிக்கும் பாக்கியம் உனக்குக் கிட்டுமா? இதோ இந்த கௌதமிக்கு அத்தகைய பாக்கியம் கிட்டக்கூடும்.


    ஏனெனில் அவள் ஆத்ம ஞானி. ஆனால், உனக்கு ஏன் கிட்டியது? நீ இந்தப் பிறவியில் வேடனாக இருந்தாலும், பூர்வ ஜன்மத்தில் புண்ணியங்கள் செய்திருக்கிறாய். அதோடு இப்பிறவியில் ஆத்ம ஞானியான கௌதமியைத் தரிசித்திருக்கிறாய். அவளது துயரம் என்று நீ கருதிய ஒரு துயரத்தை உன் துயரம்போல் காணும் அன்பு மனமும் உனக்கிருக்கிறது. இதெல்லாம் சேர்ந்தல்லவா உனக்கு என்னை தரிசிக்கும் பாக்கியத்தைத் தந்தது? எனவே, பூர்வ ஜன்மங்களிலும் இந்தப் பிறவியிலும் செய்த செயல்களின் எதிர்ச் செயல்களாகவே ஓர் ஆன்மா தன் வாழ்வில் பல்வேறு அனுபவங்களை அடைகிறது என்பதைப் புரிந்துகொள்.


    இந்தச் சிறுவன் இந்தக் கணத்தில் இறக்க வேண்டும் என்பது காலதேவன் விதி. நீ சரியான நபருக்குத் தண்டனை தர வேண்டுமானால் என்னை இயக்குபவரும் என் தலைவருமாகிய கால தேவருக்குத் தான் தண்டனை தர வேண்டும்!'' எமன் இதைச் சொன்ன மறுகணம், குடிசைக்குள் மற்றோர் ஒளிவெள்ளம் தோன்றியது.


    அதனுள்ளிருந்து காலதேவர் வெளிப்பட்டார். எமன், கௌதமி, வேடன் மூவரும் காலதேவரைப் பணிந்தார்கள்.


    காலதேவர் பேசலானார். ''உண்மையில் தண்டிக்கப்பட வேண்டியது நானுமல்ல. சிறுவனைக் கொன்றது நானல்ல.


    சிறுவனின் கர்ம வினையே அவனைக் கொன்றது. ஒவ்வோர் உயிரும் அதனதன் விதியை அதுவே தீர்மானித்துக் கொள்கிறது. ஒரு செயலைச் செய்தால் அதற்கு எதிர்ச்செயல் என்ற ஒன்று கட்டாயம் உண்டு. செய்யப்பட்ட அந்தச் செயல் முன் ஜன்மத்தில் செய்ததாகவும் இருக்கலாம். இந்தப் பிறவியில் செய்ததாகவும் இருக்கலாம். செயலின் விளைவு உடனுக்குடனேயும் நேரலாம். ஒரு பிறவி தாண்டி மறுபிறவியிலும் நேரலாம். இந்தச் சிறுவனின் மரணத்திற்கு இவன் முற்பிறவியில் செய்த வினைகளே காரணம்.


    ஏதொன்றும் அறியாத ஓர் அப்பாவி உயிரை இவன் தன் முற்பிறவியில் கொன்றதால், இப்பிறவியில் இந்தப் பாம்பால் கொல்லப்பட்டிருக்கிறான். கர்ம வினைப்படியே வாழ்வில் பலாபலன்கள் நேர்கின்றன என்ற பேருண்மையைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறாள் கௌதமி. அதனால்தான், மகன் மரணம் கூட அவளிடம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. தன் மகனைக் கொன்ற பாம்பைக் கொல்வதையும் அவள் அனுமதிக்க வில்லை.''


    காலதேவரின் விளக்கத்தைக் கேட்ட கௌதமி பேசலானாள்: ''வேடனே! பாம்பை விடுதலை செய்துவிடு! என் கர்ம வினைகளின் காரணமாகவே இந்தச் சிறுவன் எனக்கு மகனாகப் பிறந்தான்.


    என் கர்ம வினைகளின் காரணமாகவே இவனை நான் இழக்கவும் நேர்ந்துள்ளது. இதெல்லாம் தேவ ரகசியங்கள். இவற்றை ஓரளவு நான் அறிந்திருப்பதாலேயே என் மகன் மரணம் விதிப்பயன் என நான் ஆறுதல் அடைந்தேன். எந்தச் செயலுக்காகவும் யாரும் யாரையும் நொந்து கொள்வதில் பயனில்லை. நடக்கும் அனைத்திற்கும் அவரவர் விதியே காரணம். நாம் யாரையும் கொல்லாமல் இருந்தால் நாமும் யாராலும் கொல்லப்படாமல் இருப்போம். நாம் யாரையும் துன்புறுத்தாமல் இருந் தால் நாமும் யாராலும் துன்புறுத்தப்படாமல் இருப்போம்.


    இயற்கையின் நியதிகள் நுணுக்கமானவை. ஆனால், நம் விதியைத் தீர்மானிக்கும் அதிகாரம் நம்மிடமே தரப்பட்டுள்ளது. நாம் நல்லதைச் செய்தால் நமக்கு நல்லதே நடக்கும். இந்த மகா சத்தியத்தை உணர்பவர்கள் பாக்கியசாலிகள்.''


    இந்த வாக்கியங்களைக் கேட்ட வேடன், ''அப்படியானால் இனி நான் எந்த உயிரையும் கொல்ல விரும்ப வில்லை!'' என்றவாறே தன் வில்லை ஒடித்துப் போட்டான். எமனும் கால தேவரும் புன்முறுவல் பூத்தவாறே அவர்களுக்கு ஆசிகூறி மறைந்தார்கள். வேகமாக ஊர்ந்து வந்த பாம்பு கௌதமியையும் வேடனையும் நமஸ்கரித்தது. பின் தன்னால் இறந்த அந்தச் சிறுவனின் உடலைச் சுற்றிவந்து அந்த உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டுக் கானகத்தில் ஊர்ந்து மறைந்தது.


    (மகாபாரதத்தில், அம்புப் படுக்கையிலிருந்த பீஷ்மர், தர்ம புத்திரருக்கு, வினைப்பயனே வாழ்வின் நிகழ்ச்சிகள் என்பதை உணர்த்தச் சொன்ன கதை இது.)


    🔷➖🔷➖🔷➖🔷➖🔷➖🔷


    *எப்போதும் எல்லோரிடமும் 100 சதவீத அன்பை காட்டுங்கள்....!!!!*
    சிவனடிமை பொன்ரவி

  • #2
    Re: Fate and its consequences - Story from mahabharata

    A wonderful narration explaining the "Karma theory". Whatever happens is preordained based on our Karmas done in the past and present. We should develop a sence of forebearance and stability of mind to take all good and bad in Its stride. Develop a sense of balance. Let us strive for such a state of mind.
    Thanks.
    Varadarajan

    Comment


    • #3
      Re: Fate and its consequences - Story from mahabharata

      Dear sir,Excellent explanation regarding results of past actions in this birth.Thanks and warm regards.Dasan Govindarajan.

      Comment

      Working...
      X