சிவாயநம. திருச்சிற்றம்பபலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*சிவ தல தொடர் 75.*


*சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*
*திருமீயச்சூர் இளங்கோயில்.*
******************************************
(நேரில் சென்று தரிசித்ததைப் போல.......)

*இறைவன்: சகல புவனேஸ்வரர்.


*இறைவி :* வித்வன் மேகலாம்பிகா. (மின்னும் மேகலையாள்)


*தல விருட்சம்:* மந்தார மரம்.


*தீர்த்தம்:* காளி தீர்த்தம்


இக்கோயிலின் பிரகார சுவற்றில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, சதுர்முக சண்டிகேஸ்வரர் உள்ளனர். தலவிநாயகர், சண்டிகேஸ்வரர், அருணாசலேஸ்வரர், பைரவர், சூரிய பகவான், ஆகாச லிங்கம், வாயுலிங்கம் ஆகியோரும் வீற்றிருக்கின்றனர்.


இத்திருக்கோயில் அன்னை லலிதாம்பிகை இவ்வுலகில் வேறெங்கும் காணமுடியாத வண்ணம் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். இப்பூமியில் வாழும் எல்லா மனிதர்களும் உயர்வு தாழ்வின்றி வாழ வேண்டும் என்பதை இக்கோயிலில் காணும் சிற்பங்களில் இருந்து நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.


சோழநாட்டின் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள 128 தலங்களுள் இத்தலம் ஐம்பத்து ஏழாவது தலமாகப் போற்றப் படுகிறது.


*வரலாற்றுத் தொன்மை:*
சோழர் கால கோயில்.


*பழமை:* 1000-லிருந்து 2000-வருடங்களுக்கு முன்னமானது.


*இருப்பிடம்:*
மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையிலும், அருகிலுள்ள பேரளம் இரயில் நிலையத்திலிருந்து மேற்கே ஒரு கி.மி. தொலைவிலும் அமைந்துள்ளது.


மின்னும் மேகலை சமேத ஸ்ரீ சகல புவனேஸ்வர் இளங்கோயில், திருமீயச்சூர் லலிதாம்பிகா சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயிலின் இக்கோயிலுள்ளேயே அமைந்துள்ளது.


*கோவில் அமைப்பு:*
கிழக்கு நோக்கிய பெரிய கோவிலுக்கு நாம் செல்ல, சந்நிதியில் நம் முதல்வர் விநாயகப் பெருமானை முதலில் கண்டு தலையில் குட்டி தோப்புக்கரணம் செய்து வணங்கிக் கொண்டோம்.


எதிரே ஐந்து நிலைகளையுடைய ராஜகோபுரம் தெரியவும், *சிவ சிவ, சிவ சிவ,* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.


கோபுரம் பார்ப்பதற்கு மிகவும் பழமையானதாகவும், அழகுப் பிரபிப்பு கொண்டவையாகவும் காட்சியளித்தன.


உள் புக, அங்கே மூன்று நிலைகளுடன் கூடிய இரண்டிவது கோபுரத்தை கண்டோம். தலைக்குமேல் கைகளை உயர்த்தி வணங்குதல் செய்தோம்.


உள்புகுந்ததும், நந்தியை கண்டு வணங்கினோம். தரிசனம் காணச்செல்ல அனுமதியும் கேட்டுப் பெற்று நகர்ந்தோம்.


பின், பலி பீடத்தை பார்க்க நேர்ந்தது. அதன் முன்னால் எங்களிடமிருந்த ஆணவமலத்தை அப்பீடத்தில் பலியிட்டு விட்டு தெளிந்த மணதுடன் நடையைத் தொடர்ந்தோம்.


பலிபீடத்தைத் தாண்டியதும் இடதுபுறமாய் இருந்த விஸ்வநாதப் பெருமானை வணங்கிக் கொண்டோம்.


இதனின் வலதுபுறமாக இருந்த அம்பாளையும் வணங்கிக் கொண்டு மூலவரைத் தரிசிக்கும் ஆவலில் வேகமெடுத்தோம்.


முன்னதாகயிருந்த சுதையாலான வண்ணமிருந்த துவாரபாலகர்களைத் தொழுதும், மூலவரைத் தரிசிக்க அவரிடம் அனுமதி பெற்றும் சந்நிதிக்குள் நுழைந்தோம்.


அருமையான மூலவர் தரிசனம் கிடைத்தது. அர்ச்சகர் தந்த ஆராத்தியை எடுத்துக் கொண்டு, எவ்விலும் உயர்ந்த வெள்ளிய விபூதிப் பிரசாதத்தைப் பெற்று, அவ்விபூதியை மூவிரலுக்கும் திரித்து, அப்படியே அவன் முன்பாகவே தத்தம் நெற்றிகளில் அணிந்து கொண்டோம்.


உள்பிராகாரம் வலம் வந்த போது அங்கே, நாகலிங்கப் பிரதிஷ்டைகள், சேக்கிழார், நால்வர்கள், சப்தமாதர்கள், வழிபட்ட லிங்கங்கள், விநாயகர், இந்திரன், எமன், அக்கினி பெயரைக் கொண்ட லிங்கங்கள், சுப்பிரமணியர், கஜலட்சுமி ஆகியோர்களின் சந்நிதித்திருவுருவங்களைத் தொடர்ந்து வணங்கியபடியே நகர்ந்து வணங்கி முடித்தோம்.


எனக்கும் வயது 56.என்னோடடு உடன் வந்தவர்களுக்கும் முதுமையை எட்டியவர்கள். ஆகையால், கோஷ்டத்திலுள்ளவர்களை வணங்குவதற்கு முன்னால், அங்கிருந்த கருங்கல் பலகனியில் அமர்ந்து சிறிது இளைப்பாறிக் கொண்டோம்.


கோஷ்டத்தில் வலம் செய்கையில், அங்கே காணப்பெற்ற ஷேத்ர புவனேஸ்வரரின் மூர்த்தம் சிறப்புடன் காட்சியருளும் பாங்கினைக் கண்டு, அப்படியே அவரருளை அள்ளியெடுத்து நெஞ்சுக்குள் பொதிந்து வைத்துக் கொண்டோம்.


இளங்கோயிலும், இக்கோயிலும், ஒவ்வொன்றும் அருகருகே அமைந்து இருந்தததினால் ஒரே நேரத்தில் ஒரே தலயாத்திரை செய்ததில் இருபாடல் பெற்ற தலங்களைத் தரிசிக்கும் பேறு பெற்றோம்.


இளங்கோயிலை வலம் வருகையில் சந்நிதியிலிருந்து நேராக சகலபுவனேஸ்வரரையும், இவரின் வலப்பக்கமாக மேகலாம்பிகையையும் மனமுருகப் பிரார்த்தித்து தரிசனம் பெற்று ஆனந்தித்துய்ந்தோம்.


இவர்களின் தரிசனம் முடித்து, பிராகாரம் வலம் முடித்து வருகையில் அவ்விடத்தில் படிக்கட்டுக்கள் அமைந்திருக்க............


விடுவோமா? அங்கே யார் தரிசனம் என?.... படிகள் ஏற நமக்கு மூச்சு அதிகமெடுத்தது. இருப்பினும் மூட்டியை அழுத்திப்பிடித்துப் படியேறி மேல் வந்து சேர்ந்தோம்.


அங்கே, உற்சவ மூர்த்தங்களின் அருள்பாயாசம் பொங்கக் கண்டு, அதன் அழகை ரசித்து அவன் அருள்பிராவாகங்களை, கண் கேமராவுக்குள் பிரதியெடுத்து வைத்துக் கொண்டோம்.


திரும்பி வர எத்தனிக்கையில் அங்கேயிருந்து பார்த்தால்.....நமது பார்வைக்குத் தெரிந்தன மீண்டும் மூலவரின் தரிசனம். *சிவ சிவ.*


லலிதாம்பிகை அமர்ந்த திருக்கோலம். *சிவ சிவ*


அடுத்து, இளங்கோயில் கோஷ்டத்திலிருக்கும் *சதுர்முக சண்டேசுவரர்* சந்நிதிக்கு வந்தோம். இவரின் சிறப்பான தியாண நிலையைக் கண்டு, அவர் முன்னே நாங்கள் கூனக்குனிந்து சத்தமில்லாமல் உள்ளங்கைகளிரண்டையும் விரித்துக் காட்டி, *வரும்போதும் எதுவும் கொண்டு வரவில்லை, போகும் போதும் ஒன்றும் எதுவும் எடுத்துச் செல்லவில்லை* என அவரிடம் உறுதிபட தெரிவித்து விட்டு, விரித்த கையை எடுத்து நெஞ்சுக்கு நேராக நிமிர்த்தி அவரை வணங்கி பின் நிமிர்ந்து வெளிவந்தோம்.


*(சண்டேசுவரர் முன் இப்படித்தான் வணங்க வேண்டும். அடியார்கள் இவ்விதம் வணங்கினால் மட்டும் போதாது. மற்றவர்களுக்கும் இதை விரித்துறைக்க வேண்டும். தியாணத்திலிருக்கும் இவரை, தியாணம் கலையாமலும், ஒலியெலுப்பாமலும், ஆடையின் நூலைப் பிய்த்தெரியாமலும் வணங்க வேண்டுமென்பதை எடுத்துக் கூறுங்கள். இவர் தியாணத்தைக் கலைப்பது பாவம்.)*


*திருவிழாக்கள்:*
ஆடிப்பெருக்கு, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, சஷ்டி, கார்த்திகை சோம வாரங்கள், திருவாதிரை போன்றவை சிறப்பான விழாக்களாகும்.


*தல அருமை:*
காசிப முனிவரின் மனைவிகளான கர்த்துரு, விநநை என்ற இருவரும் சிவபெருமானை மனதில் நினைத்து கடும் தவம் புரிந்தனர்.


இவர்களது தவத்தின் பலனாக இறைவன் இவர்கள் முன்தோன்றி இருவருக்கும் ஒரு முட்டையை பரிசாகக் கொடுத்தார்.


இந்த முட்டையை ஒரு வருட காலம் பாதுகாத்து பூஜை செய்து வந்தால், ஒரு ஆண்டு கழித்து உலகமே போற்றும் வண்ணம் ஒரு மகன் பிறப்பான் எனக் கூறி விட்டு மறைந்தார்.


ஆனால் ஒரு வருடம் கழித்து விநநையின் அண்டத்தில் இருந்து ஒரு பறவை பிறந்து அது பறந்து சென்று விட்டது.


தனக்கு மகன் பிறக்காமல், இப்படி ஆகிவிட்டதே என்று ஈஸ்வரனிடம் வருந்தி கேட்கிறாள். அதற்கு முக்கண்ணன் ''நான் கூறியது போலவே அவன் மகாவிஷ்ணுவுக்கு வாகனமாக கருடன் என்ற பெயருடன் உலகமெங்கிலும் போற்றிப் புகழப் படுவான்'' எண்டு கூறினார்.


இதனிடையே விநநைக்குக் குழந்தை பிறந்து விட்டதே என்று அவசரப்பட்டு தனக்குக் கொடுக்கப் பட்ட முட்டையை பிரித்துப் பார்த்தாள் கர்த்துரு.


இவளது அவசரத்தினால் அந்த முட்டையில் இருந்து சரியானபடி வளர்ச்சி அடையாத தலை முதல் இடுப்பு வரை மட்டுமே வளர்ந்த குழந்தை பிறந்தது.


தான் செய்த தவறை உணர்ந்த கர்த்துரு இறைவனை நாடி, இப்படி ஆகி விட்டதே என மனம் வருந்தினாள்.


சிவபிரானும், *''நான் சொல்லியதுபோல் இக்குழந்தை சூரியனுக்கு சாரதியாக விளங்கி உலகப் புகழ் பெறுவான்''* என்று கூறினார்.


இந்நிலையில் கர்த்துரு தனது மகனுக்கு அருணன் எனப் பெயர் சூட்டினாள். இறைவனின் ஆணைப் படி சூரியனுக்கு சாரதியாக விளங்கினான்.


அருணன், சிவனின் இருப்பிடமான கைலாசம் சென்று அவரை தரிசித்து வர சூரியனிடம் அனுமதி கேட்டான்.


சூரியன் அருணனை பரிகசித்து, பெருமானை பார்க்கச் செல்ல உன்னால் முடியாது என்றும் கூறினான்.


நம்பிக்கை இழக்காத அருணன் இறைவனை நினைத்து தவமியற்றினான்.


சூரியன், இப்போதும் அருணனுக்கு பலவிதங்களில் தொல்லைகளைக் கொடுத்தாலும், தன் மனம் தளராத அருணன் மேலும் தீவிரமாக தவமிருந்தான்.


இதனைக் கண்ணுற்ற கைலாசநாதன், அருணனுக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்தார்.


சூரியனிடம், ''என்னைக் காண வேண்டும் என்ற ஆவலுடன் தவமிருந்த அருணனுக்கு நீ கொடுத்த கஷ்டங்கள் என்னை வருத்தமடையச் செய்தது. இதன் காரணமாக உன் *மேனி கார் மேக வண்ணமாய் மாறட்டும்''* என்று சாபமிட்டார்.


இதன் காரணமாக இப்பூவுலகமே இருளில் மூழ்கியது.


இதனைக் கண்ட பரமேஸ்வரி தாய் சிவனிடம், சூரியன் கரு நிறமாய் ஆனதினால் உலகமே இருண்டுவிட்டது. சூரியன் இன்றி உலகம் இயங்காதே என வினவினார்.


கவலை கொள்ள வேண்டாம் தேவி. அருணனின் தவ பலத்தினால் உலகம் வெளிச்சம் பெரும் என பெருமான் கூறினார்.


தனது தவறினை உணர்ந்த கதிரவன் இறைவனிடம் மன்னித்தருள வேண்டினார்.


ஈசன் சூரியனிடம் *"எம்மை நீ ஏழு மாத காலம் வணங்கினால் உனது சாபம் நீங்கும்''*என்றார்.


அதன்படியே சூரியன் இத்திருக்கோயில் வந்து ஏழு மாத காலம் தவமிருந்தான். பூஜை செய்து வழிபட்ட பின்னரும் தனது கருமை வண்ணம் மாறாதிருந்தன.


கருமை குறையவில்லையே என்று மனம் வருந்தியவன், தன்னைக் காப்பாற்றும்படி கதறி மன்றாடினான்..


இவர் செய்த ஆர்ப்பாட்டத்தைப் பார்த்து கோபம் கொண்ட பார்வதியம்மை, தானும் சாபமிட முற்படுகிறார்.


அவளைத் தடுத்தாட்கொண்ட இறைவன், இவ்வுலகம் பிரகாசம் பெறவும், நீ சாந்தமடையவும் தவமிருப்பாயாக என்று கூறிவிட்டு, சூரிய பகவானுக்கு சாப விமோசனம் அளித்தார்.


அம்பாளும் சாந்த நாயகி ஆகிறார். அன்னையின் திருவாயிலிருந்து வசினீ
என்ற தேவதைகள் தோன்றின.


அவர்கள் துதித்த பாடல்களே *சஹஸ்ரநாம ஸ்தோத்திரம்* எனப் படுகிறது.


அம்பாளே அருளிச் செய்ததால் லலிதா சஹஸ்ரநாமம் என்று அழைக்கப் படுகிறது.


சூரியனும் தனக்கிட்ட சாபத்திலிருந்து மீண்டு வந்ததினால் இத் திருத்தலம் மீயச்சூர் என விளிக்கப் படுகிறது.


*திருக்கோயில் சிறப்பு:*
ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் இருபத்தொன்றாம் தேதி முதல் இருபத்தேழாம் தேதி வரை சூரியன் உதிக்கும் நேரத்தில் இவ்வாலய சிவலிங்கத்தின் மேல், கதிரவனின் செங்கதிர்கள் விழுவது இயற்கையின் கொடை. இயற்கையே இறைவன்.


சூரிய பகவான், அருணன், காசிப முனிவரின் மனைவிகளான கர்த்துரு, விநநை, அகத்திய முனிவர், என்று இவர்களோடு அல்லாமல் , எமன் இக்கோயிலிலேயே தங்கி எப்போதும் சிவ சிந்தனையிலேயே இருந்து பூஜை செய்து வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.


நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை கடலில் தோன்றுவதால் சங்கிற்கு ஆயுளைக் கூட்டும் சக்தி உள்ளது என்பதால், சதய நட்சத்திரத்தின் அதிதேவதையான எமன், அதிக ஆயுளைத் தரவல்ல சங்கினைக் கொண்டு 1008 சங்காபிஷேகம் செய்து, சக்தி வாய்ந்த மூலிகைகள், எமலோகத்தின் தலவிருட்சமான பிரண்டை கலந்த சாதத்தினை அன்னதானம் செய்து சிவபிரானை வழிபட்டார் என்பது இக்கோயில் ஐதீகம்.


ஸ்ரீ ஹயக்ரீவர் அகத்தியருக்கு லலிதா சஹஸ்ரநாமம் உபதேசம் செய்யும் வேளையில், ஸ்ரீ லலிதாம்பாளை தரிசிக்க சிறந்த இடம் எது என அகத்தியர் வினவினார்.


'அருணனும், சூரியனும் வழிபட்ட திருமீயச்சூர் சென்று, அங்கு லலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்திரம் சொல்ல அதற்குக் கிடக்கும் பலனே தனி என ஸ்ரீ ஹயக்ரீவர் பெருமான் கூறி அருளினார்.


அவ்வாறே அகத்தியரும் இத்தலம் வந்து லலிதா சஹஸ்ரநாமம் ஜபித்து, அர்ச்சனை செய்து பூரண பலனைப் பெற்றார்.


அகத்தியர் பெருமானும் இத்தலத்தில் அன்னையை ஆராதித்து அழகிய செந்தமிழில் ஸ்ரீ லலிதா நவரத்தின மாலையைப் பாடியுள்ளார்.


பௌர்ணமி தினத்தன்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை என இவற்றை மனமுருக நீங்கள் பாடுங்கள். அன்னையின் அருள் கிடைக்கப் பெறுவீர்கள்.


அமர்ந்த திருக்கோலத்தில் பேரழகுடன் காட்சி தருகிறார் இத்தலத்து ஸ்ரீ லலிதாம்பிகை. நின்ற இடத்தில் அப்படியே சிலையாக நின்று விடுவோம் அன்னை லலிதாம்பிகையின் திருமுகத்தை நாம் காணும் போது.


அன்னையைக் கண்ட ஆனந்தத்தில் எங்கள் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தன.


அன்னை லலிதாம்பிகை பார்வதி, லெட்சுமி, சரஸ்வதி என எல்லோரும் இணைந்த வடிவமாகத் திகழ்பவள் என அங்கிருந்தோர் கூறினர்.


*தல பெருமை:*
முதல் பாதாங்குலீயகம் வரை பல ஆபரணங்கள் அணிந்த அன்னை, தனது பக்தை ஒருவரிடம் கொலுசு வாங்கி போட்டுக் கொண்டுள்ள அதிசயமும் சமீப காலத்தில் நிகழ்ந்துள்ளது.


பக்தையின் கனவில் தோன்றிய அன்னை தான் எல்லாவிதமான அணிகலன்களையும் அணிந்துள்ளதாகவும், கொலுசு மட்டும் அணியவில்லை எனவும், எனவே அதனை தனக்கு அணிவிக்குமாறும் கனவில் கூறிச் சென்றுள்ளார்.


இதனால் ஆனந்த அதிர்ச்சி அடைந்த அந்த, பெரும் புண்ணியம் செய்த பக்தை அழகு கொலுசினை செய்து கொண்டு ஊர் ஊராக அலைந்து கடைசியாக, திருமீயச்சூர் வந்துள்ளார்.


இங்கு வந்து கோயில் சார்ந்தவர்களிடம் இந்தச் செய்தியினை அவர் கூற அவர்கள் நம்பவில்லை. அந்தப் பெண்மணியின் தொடர் வற்புறுத்தலுக்குப் பிறகு அன்னையின் காலின் சுற்றுப் பகுதியில் கொலுசு அணிவிக்க வசதியாக துளை ஏதும் உள்ளதா என ஆராய்ந்துள்ளனர்.


பல காலம் அன்னைக்கு செய்த அபிஷேகங்களினால், அந்தப் பொருட்கள் துளையை மூடியுள்ளதைக் கண்டுபிடித்து, கொலுசு அணிய துவாரம் உள்ளதைக் கண்டு அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினர்.


இதன் பின்னரே அன்னையின் திருவிளையாடலை புரிந்து கொண்டு அம்பாளுக்கு கொலுசு அணிந்து மகிழ்ந்தனர்.


தான் பிறந்த பலனையும் அடைந்ததாக கொலுசு அணிவித்த பெண்ணும் மகிழ்ந்தார்.


பரபிரும்மத்தின் சக்திகள் அனைத்தும் இணைந்த வடிவமாகவே துதிக்கப் படுகிறாள் அன்னை லலிதாம்பிகை.


இத்தலத்தில் லலிதாம்பிகையிடமிருந்து நேரடியாக உபதேசம் பெற்றவர்தான் ஸ்ரீ ஹயக்ரீவர்.


அகத்தியரின் மனைவி இங்கு வந்து அன்னையை வழிபட்ட போது , அவருக்கு அம்பாள் நவரத்தினங்கள் வடிவில் காட்சி தந்தார். இதன் காரணமாகவே அகத்தியர் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே எனத் தொடங்கும் லலிதா நவரத்தின மாலையை அருளிச் செய்து நல்ல பலன்களைப் பெற்றார்.


இத்திருத்தலத்தில் காணப்படும் அன்னையின் திருவுருவத்தை, வடிவத்தை உலகில் வேறு எங்கும் காணமுடியாது என்பது இத்தலத்தின் பெருஞ்சிறப்பு.


*தேவாரம் பாடியவர்கள்:*
திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம்.


1. தோற்றும் கோயிலும் தோன்றிய கோயிலும் வேற்றுக் கோயில் பலவுள மீயச்சூர்க் கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடை அரற்கு ஏற்றம் கோயில்கண்டீர் இளங்கோயிலே.


2. வந்தனை அடைக்கும் அடித்தொண்டர்கள் பந்தனை செய்து பாவிக்க நின்றவன் சிந்தனை திருத்தும் திருமீயச்சூர் எம் தமை உடையார் இளங்கோயிலே.


3. பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார் அஞ்ச ஆனை உரித்மு அனலாடுவார் நெஞ்சம் வாழி நினைந்திரு மீயச்சூர் எம் தமை உடையார் இளங்கோயிலே.


4. நாறு மல்லிகை கூவிளம் செண்பகம் வேறு வேறு விரித்த சடையிடை ஆறு கொண்டு உகந்தான் திருமீயச்சூர் ஏறு கொண்டு உகந்தார் இளங்கோயிலே.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
5. வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே கவ்வ வண்ணக் கனல் விரித்தாடுவர் செவ்வ வண்ணம் திகழ் திருமீயச்சூர் எவ்வ வண்ணம் பிரான் இளங்கோயிலே.


6. பொன் அம்கொன்றையும் பூ அணி மாலையும் பின்னும் செஞ்சடை மேற் பிறை சூடிற்று மின்னு மேகலையாளொடு மீயச்சூர் இன்ன நாள் அகலார் இளங்கோயிலே.


7. படைகொள் பூதத்தன் பைங்கொன்றைத் தாரினன் சடைகொள் வெள்ளத்தன் சாந்த வெண் நீற்றினன் விடைகொள் ஊர்தியினான் திருமீயச்சூர் இடை கொண்டு ஏத்த நின்றார் இளங்கோயிலே.


8. ஆறு கொண்ட சடையினர் தாமும் ஓர் வேறு கொண்டது ஓர் வேடத்தர் ஆகிலும் கூறு கொண்டு உகந்தாளொடு மீயச்சூர் ஏறு கொண்டு உகந்தார் இளங்கோயிலே.


9. வேதத்தான் என்பர் வேள்வியுள் உளான் என்பர் பூதத்தான் என்பர் புண்ணியன் தன்னையே கீதத்தான் கிளரும் திருமீயச்சூர் ஏதம் தீர்க்க நின்றார் இளங்கோயிலே.


10. கடுக்கண்டன் கயிலாய மலைதனை எடுக்கல் உற்ற இராவணன் ஈட் அற விடுக்கண் இன்றி வெகுண்டவன் மீயச்சூர் இடுக்கண் தீர்க்க நின்றார் இளங்கோயிலே.


*கலையப்படாத பாலாயம்:*
கோயில் சிறிது. இளங்கோயில் என்பது பாலாலயம். திருக்கோயில்களிலே பெருமளவில் திருப்பணி செய்யப்படும் போது, முக்கியமான மூர்த்திகள், பூசனை முதலியவற்றை வழக்கம்போல செய்வதற்கு, வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யப் பெறுவார்.


அப்போது அக்கிரியை *"வாலஸ்தாபனம்"* என்பர். பாலஸ்தாபனம் செய்யப்படும் கோயில், *"பாலாலயம்"*. தமிழில் *"இளங்கோயில்"* எனப்படும்.


திருப்பணி நிறைவேறி, திருக்குட முழுக்கும் செய்தபின், பாலாலயம் அழிக்கப்படுவது வழக்கம். ஆனால் மீயச்சூரில் பாலாலயம் அழிக்கப்படாது, பேணப்பட்டு வருகிறது.


*அதற்குக் காரணம்:*
(திருவாலங்காட்டில் எழுப்பப்பட்ட பாலாலயம் அளவில் சிறியது). திருமேனிகள் பழைய இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு உள்ளன. ஆனால் சிற்றாலயம் பேணப்பட்டு வருகிறது.


இறைவர், இறைவி பாலாலயத்தில் எழுந்தருளி இருக்கும்போது நாவுக்கரசர் தரிசித்து, பதிகம் பாடினர் ஆதலின் பாலாலயம் அழிக்கப்பெறாது, பாதுகாக்கப்பட்டு, தனிக்கோயிலாக இருந்து வருகிறது. இப்போது பாலாலயம் இருக்கும் இடம்.


*பூஜை:*
காலை 7.00 மணி முதல் 12.30 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.


*தொடர்புக்கு:*
94448 36526.


திருச்சிற்றம்பலம்.


*நாளைய தலம்.....திருத்திலைப்பதி.*


*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்கள்ளிருக்கிறான்*