*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*


சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

*பாடல் பெற்ற சிவ தல தொடர்.97*

☘ *சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*☘

*திருச்செங்காட்டங்குடி.*
*(2-ஆம்நாள் தொடர்ச்சி.)*

(நேரில் சென்று தரிசித்ததைப் போல............)

*குறிப்பு.*
*இத்தலப் பதிவு அதிக நீளம் கருதி நேற்று பாதி பதியப்பட்டது. மீதி பாதியை இன்று இத்தலப் பதிவை பதிந்து அனுப்பப்பட்டுள்ளது. ஆயினும் மேலும் சில குறிப்புகள் கிடைக்கப்பெற்றதால், இன்றுடன் இப்பதிவு மகிழ்ந்து நிறையாது. ஆகவே மேலும் ஒரு நாள் கூடுதலாக திருசெங்காட்டங்குடி பதிவு வ(ள)ரும். அடியார்கள், நேற்றைய முதல் பதிவுடன் இரண்டாம் நாளான இந்த பதிவையும் சேர்த்து வாசிக்கவும், நாளை வ(ள)ரும் மூன்றாம் நாளையும் சேர்த்து சேமித்து இணைத்து வைத்துக் கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நாளைய பதிவில் சிறுத்தொணாடர் நாயனார் தொண்டும் சேர்ந்து இணைந்து இருக்கும். சிவ சிவ. திருச்சிற்றம்பலம்.*


*இறைவன்:* உத்தராபதீசுவரர், ஆத்திவனநாதர், கணபதீஸ்வரர், மந்திரபுரீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர், பாஸ்கரபுரீஸ்வரர்.


*இறைவி:*
*சூளிகாம்பாள், வாய்த்த திருக்குழலம்மை, வாய்த்த திருக்குலழம்மை உமைநாயகி.


*தல விருட்சம்:*
ஆத்தி மரம். (காட்டாத்தி.)


*தீர்த்தம்:* சத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், இந்திர தீர்த்தம், யம தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், மற்றும் சீராள தீர்த்தம் ஆகிய மொத்தம் ஒன்பது தீர்த்தங்கள்.


*திருமேனி:* சுயம்புத் திருமேனியானவர். உத்திராபசுபதீஸ்வரர் திருமேனியின் நெற்றியில் காயத்துடனே காட்சி தருகிறார்.


*புராணப் பெயர்:* கணபதீச்சரம்.


*ஊர்:* திருச்செங்காட்டங்குடி.


*பதிகம் பாடியவர்கள்:*
அப்பர், சுந்தரர்.


*ஆலய பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.


*ஆகமம்/பூஜை:* காமிகம்.


*தல அருமை:*
கோயிலின் பின்புற வீதியில் இருக்கும் மடாலயத்தில்தான் சித்திரைப் பரணி நட்சத்திரத்தில் *உத்தராபதீஸ்வரருக்கு* அமுது செய்த ஐதீகவிழா நடைபெறுகிறது.


இதன் வடபக்கத்திலுள்ள *சிறுத்தொண்டர்* மாளிகை இன்று கோயிலாக உள்ளது. இங்குச்
சிறுத்தொண்டர், உத்ராபதீஸ்வரர், திருவெண்காட்டு நங்கை, அன்னம் பரிமாறும் கோலத்தில் திருவுருவங்கள் உள்ளன.


நான்கு வீதிகளின் கோடியிலும் விநாயகர் ஆலயங்கள் உள்ளன. கோயிலின் கீழவீதியில் உள்ள விநாயகர் *'வேண்டும் விநாயகர்'* என அழைக்கப்படுகிறார்.


உற்சவக்காலங்களில் உலாவரும் நாதரே உத்திராபதியார் ஆவார்.


*உத்தராபதியார் திருமேனி உருவான விதம்.*வரலாறு.


ஐயடிகள் காடவர்கோன் என்னும் பல்லவ மன்னன், சிறுத்தொண்டருக்கு இறைவன் அருள் புரிந்த செய்தியைக் கேட்டு, இத்தலத்திற்கு வந்து, பல நாள்கள் தங்கி வழிபட்டு வந்தார்.


உத்தராபதியாரின் தோற்றத்தைக் காண வேண்டுமென்று விரும்பினார்.


இத்திருக்கோயிலைத் திருப்பணி செய்து, உத்தராபதியார் திருவுருவம் அமைத்துச் சித்திரைத் திருவோணத்தில் குடமுழுக்கு செய்வாயாகில், *யாம் சண்பகப்பூ மணம் வீசக் காட்சி தருவோம்"* என்றருளினார் இறைவன்.


ஐயடிகள் அவ்வாறே பணிகளை போர்க்கால அடிப்படை கொண்டு செயல்படலானார்.


கொல்லர்கள் உத்தராபதியார் உருவம் அமைக்கத் தொடங்கினர்.


சிலை உருவாகமல் பல இடர்ப்பாடுகள் தொடர்ந்தன. கும்பாபிஷேக நாள் வேறு நெருங்கிக் கொண்டிருந்தது.


மன்னனோ சிலையை விரைவில் முடிக்கக் கட்டளையிட்டான். வடிவம் நன்கு அமைய வேண்டுமே என்ற கவலையுடன் உலைக்களத்தில் ஐம்பொன்னை உருக்கிக் கொண்டிருந்தனர் கொல்லர்கள்.


அப்போது உலைக்கலம் வந்த இறைவன், சிவயோகியார் வடிவெடுத்து வந்து தாகத்துக்கு தண்ணீர் கேட்டார்.


உலைக்கலத்திலிருந்த கொல்லர்களோ"........ . *"உலைக்களத்தில் நீர் ஏது? காய்ச்சிய மழுதான் உள்ளது வேண்டுமானால் ஊற்றுகிறோம்" குடிக்கிறீர்களா?* கேலிவிளையாட்டாகச் சொன்னர்.


சிவயோகியார், வேடமெடுத்திருந்த இறைவன் *"நல்லது! அந்த மழுக்குழம்பையே அதையே ஊற்றுங்கள்"* என்றார்.


கொல்லர்களும் அதிர்ச்சியுற்று,....காய்ச்சிய மழுக்குழம்பை ஊற்ற, சிவயோகியார் அதை வாங்கிக் குடித்து விட்டு மறைந்து போனார்.


உலக்கலத்தில் உத்தராபதீஸ்வரர் முழுமையாகி உருவத்துடன் காணப்பெற்றார்.


செய்தியறிந்த மன்னன் வியந்து போற்றி, அத்திருவுருவை கோயிலில் எழுந்தருளுவித்து கும்பாபிஷேகம் செய்வித்தான்.


ஐயடிகள் காடவர் கோனுக்கு இறைவன் சண்பகப்பூவின் மணம் வீசச் செய்து, காட்சி தந்தருளினார்.


இக்கோயிலில் நாள்தோறும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன.


இத்தலத்தில் சில மருந்துப் பொருள்களும் சேர்த்து செய்யப்படும் சீராளங்கறி எனம் பிரசாதம் - அமுது படையல் விழா நாளன்று மட்டுமே கிடைக்கும்.


மக்கட்பேறு வாய்க்கப்பெறாதவர்கள் உத்தராபதியாரை வழிபட்டு, இப்பிரசாதத்தை உண்டால் புத்திரப் பேறு அடையப் பெறுவர் என்பது உண்மை.


கல்வெட்டுக்களில் இறைவன் பெயரை *செங்காடுடைய நாயனார், கணபதீச்சரமுடைய மகாதேவர், கணபதீஸ்வரமுடையார் என கூறுகிறது.


தலத்தின் பெயர் *"கயா மாணிக்க வளநாட்டு மருகல் நாட்டு திருச்செங்காட்டங்குடி"* என்றும் கூறுகிறது.


இத்திருக்கோயில் வேளாக்குறிச்சி ஆதீனத்தின் கோயிலாகும்.


*திருவிழாக்கள்:*
உத்தராபதியாருக்கு ஆனி உத்திரம், மார்கழித் திருவாதிரை, பங்குனி பரணியில் அபிஷேகம் நடைபெறுகிறது. நடராஜர் அபிஷேகங்கள், நவராத்திரி, கார்த்திகைச் சோமவாரங்கள், கார்த்திகை தீபம், மார்கழியில் பாவை விழா, சிவராத்திரி முதலிய விசேஷ வழிபாடுகளும் உற்சவங்களும் நடைபெறுகின்றன.


*தல பெருமை:*
பைரவ வேடத்தில் இறைவன் வந்து சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறியமுது கேட்டு அவருக்கும் அவர் மனைவி, மகன், வேலைக்காரி ஆரியோருக்கும் அருள்புரிந்து தலம்.


இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம், தலவிருட்சம் ஆகிய நான்காலும் சிறப்புடையது.


சிறுத் தொண்டர் அருள் பெற்றத் தலம்.


மந்திரபுரி, செங்காடு, சத்தியபுரி, பிரமபுரி, தந்திரபுரி, ஆத்திவனம், பாஸ்கரபுரி, சமுத்திரபுரி, கணபதீச்சரம் ஆகிய ஒன்பது திருநாமங்களைக் கொண்டு விளங்குகின்றது.


தலத்தீர்த்தக் குளம் கோயிலுக்கு எதிரில் உள்ளது.


இறைவனார், அடியார் பொருட்டு பூமியில் வந்து, தம் பாதம் தோய நடந்து அருள் செய்தத் திருத்தலங்களான சிதம்பரம், திருஆலவாய், திருவாரூர், திருக்கச்சூர் ஆலக்கோயில், திருக்கருகாவூர் வெள்ளடை, திருஅம்பர்மாகாளம், திருமறைக்காடு, திருவாய்மூர், திருப்பஞ்ஞீலி, திருப்பெருந்துறை, திருச்சாய்க்காடு, திருவெண்ணைநல்லூர், திருநாவலூர் ஆகிய தலங்கள் வரிசையில் இத்தலம் இறைவன் *உத்திராபதீஸ்வர்-*ஆகத் தோன்றி, சிறுத்தொண்ட நாயனார் இல்லம் முதலாக கணபதீச்சர ஆலய ஆத்திமரம் வரை தனது பொற்பாதம் பதித்த சிறப்புடையது.


விநாயகர், பிரமன், வாசுதேவன், சூரியன், சந்திரன், சத்யாஷாட முனிவர், சிறுத்தொண்டர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் வழிபாடு செய்து பேறு பெற்ற தலம்.


நாயன்மார்கள் வரலாற்றில், சரவணத்துத் தனயரான முருகப் பெருமானுடன் கூட இறைவியாரும் இறைவரும் சோமாஸ்கந்தர் திருக்கோலம் காட்டி அருளியது இத்திருத்தலத்தில்தான் என்ற தனிச் சிறப்பு பெற்றத் திருத்தலமாகும்.


சிறுத்தொண்டர் பல்லவ மன்னனின் தளபதியாக *'வாதாபி'* சென்று சாளுக்கியரோடு போர் செய்து வெற்றிவாகை சூடி வந்தபோது உடன் கொண்டு வந்த (வாதாபி) விநாயகரை இக்கோயிலில்தான் பிரதிஷ்டை செய்துள்ளார்.


சிறுத்தொண்டர் மாளிகை இன்று கோயிலாகவுள்ளது. இங்குச் சிறுத்தொண்டர், உத்ராபதீஸ்வரர் (உற்சவ காலங்களில் வீதி உலா வருபவர் இவரே),


*கஜாமுகசுரனை அழித்தது:*
வழக்கம் போலவே திருக்கயிலை எனும் மாமலையில் பெருங்கூட்டம் சூழ்ந்திருந்தன.


தேவர்களும் முனிவர்களும் அங்குமிங்குமாக நின்று சொல்லானத் துயரங்களை பகிர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.


அன்றாடம் செய்யும் நித்ய ஜப, தவங்களைச் செய்ய முடியாதபடிக்கு கஜமுகாசுரன் எனும் அசுரன் பெரும் தீங்கு விளைவித்து வந்தான்.


அசுரனால் பெருந் தொல்லைகளை சந்தித்தவர்கள், இன்று ஈசன் தரிசனத்தின் போது தெளிவாக குழப்பமில்லாமல் நடந்த விபரீதத்தைச் சொல்லிவிட வேண்டும் என தேவர்கள் முனிவர்கள் தரப்பு முடிவெடுத்து கூடியிருந்தார்கள்.


இந்த கஜமுகாசுர அசுரனால் நமது பதவிக்கு எவ்வித ஆபத்தும் வந்து விடக்கூடாது என்று ஈசனின் தரிசனத்தின் போது குழப்பத்தைச் சொல்லி தீர்த்து தெளிவாக விட வேண்டும் என்று இந்திராதி தேவர்களும் காத்திருந்தனர்.


இருக்கின்ற குறுகிய காலத்தில், இது மாதிரியான தொல்லைகள் தொடர்ந்தால், பதவிசுகத்தை நிம்மதியாக எப்படி அனுபவிப்பது?..'' இது பெருங்கவலையாக இருந்தது இந்திரனுக்கு......


மற்ற தேவர்களின் மனதில் பதவி போனால் போகட்டும்... இந்த மனிதப் பதர்கள் செய்யும் குடைச்சல்களில் இருந்து தப்பித்த மாதிரி இருக்கும்!..'' என்று உள்ளூர வேறு ஒரு தனி ஓட்டம் ஓடிக் கொண்டிருந்தது!..


நந்தியம்பெருமான் புன்முறுவலுடன் கையசைத்து அனைவரையும் அனுமதித்தார்..


''காவாய் கனகத் திரளே போற்றி!..
கயிலை மலையானே போற்றி!.. போற்றி!..'' என பெருத்த ஒலிகள் கிளம்பின.


பெருத்த ஆரவாரத்துடனே அனைவரும் எம்பெருமானின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்கள்.


அனைவரையும் அன்புடன் ஆசீர்வதித்த அம்மையும் அப்பனும் ஆசீர்வதித்தனர்.


ஈசன், ஏதும் அறியாதவர் போல, ''.நலமா!.'' என்றார்.


இதற்காகவே காத்திருந்த இந்திரனின் கன்னங்களில், கண்ணீர்த் துளிகள் ''கர கர'' தூர்த்தொழுகியது.


ஒருவழியாக விஷயத்தை விம்மலுடன் சொல்லி முடித்தான். யாராலும் வெல்ல முடியாத வலிமை பெற்ற அசுரன் அகந்தையுடன் செய்யும் அடாத செயல்களைக் குறித்து மற்றவர்களும் பெருமானிடம் முறையிட்டனர்.


எம்முடைய அம்சமாகத் தோன்றும் *புத்திரனால் உம்முடைய குறைகள் யாவும் தீரும்!..''*!என்றனர் பெருமானும் அம்பிகையும்.


திருக்கயிலாய மாமலையின் மந்திர சித்திர மணிமண்டபத்தில் தீட்டப்பட்டிருந்த சமஷ்டி பிரணவமும் வியஷ்டி பிரணவமும், அப்பனும் அம்மையும் திருவிழி கொண்டு நோக்கியதால் பேரொளியுடன் மருவிப் பொருந்தின.


அந்தப் பேரொளியின் உள்ளிருந்து - பிரணவ வடிவாக, யானை முகத்துடன் விநாயகர் தோன்றியருளினார்.


அண்டபகிரண்டம் எங்கும் சுபசகுனங்கள் தோன்றின. கஜமுகாசுரனின் தொல்லை தாள மாட்டாமல் மலையிடுக்கிலும் மரப்பொந்திலும் ஒளிந்து தவம் மேற்கொண்டிருந்த முனிவர்கள் உரம் பெற்று எழுந்தனர்.


உலகின் முதற்பொருளாக முடி சூட்டப்பட்டார் விநாயகர்.


இந்திரனுக்கு, தன் மணிமுடி காப்பாற்றப்பட நேரம் திரண்டது கண்டு சந்தோஷம் கொண்டான்.


விநாயகர், தாய்க்கும் தந்தைக்கும் இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட தங்கக்கலசத்தில் கங்கை நீரெடுத்து பாதபூஜை செய்தார்.


பாரிஜாத மலர்களைத் தூவியபடி அம்மையப்பனை வலஞ்செய்து வணங்கினார்.


வழிபடும் அடியவர் தம் இடர்களைக் களைவதற்காகத் தோன்றிய கணபதி எனும் இளங்களிறு பெற்றவர் கண்டு பேருவகை கொண்டனர் எல்லோரும்.


கயிலை மாமலையில் அங்குமிங்கும் ஓடி விளையாடித் திரிந்த விநாயகப் பெருமானின் மலர்ப் பாதங்களைத் தாங்கி தன் தலையில் வைத்துக் கொண்ட இந்திரன், மெதுவாக தன் குறையினை அவருடைய அகன்ற காதுகளில் கூறிவவைத்தான்.


இவ்வளவுதானா?'' என ஆச்சர்யப்பட்ட விநாயகர் அன்னை தந்தையரை நோக்கினார். புன்னகைத்தனர் இருவரும். புறப்பட்டார் கணபதி போருக்கு!.... பின்னாலேயே தேவாதி தேவரும் ''வீரத்துடன்'' தைரியமாக படையெடுத்துச் சென்றனர்.


விஷயமறிந்து பெரிதாகப் பிளிறிக் கொண்டு வந்தான் கஜமுகாசுர அசுரன்.


''ஏதடா?.. நம்மைப் போலவே, ஒரு உருக்கொண்டு நம் எதிரில் நிற்கின்றதே! என வியந்தான்.


இது யார் பிள்ளை?...'' என்று யோசித்திருக்க வேண்டாமா! அந்த அளவுக்கு அவனை யோசிக்க விடவில்லை அவன் விதி!..


அவன் தன் கைகளில் கிடைத்த ஆயுதங்களை எல்லாம் வாரி இறைத்தான் கணபதியின் மீது!


அவை அனைத்தும் பாறையில் விழுந்த பனிக்கட்டிகளாக விழுந்து மறைந்து போயின..


கணபதியும், தன்னுடன் வந்த சிவாஸ்திரங்களை அவன் மீது எய்தார். ஆனால் அவை போன வேகத்திலேயே அவரிடம் திரும்பி விநாயகரிடம் வந்து சேர்ந்தன.


காரணம், கஜமுகாசுரன்
எந்த ஆயுதங்களாலும் வீழக்கூடாது என சிவபெருமானிடம் வரம் பெற்றிருந்தான்.


தேவர்களும் இதை நினைவு கூர்ந்தனர் விநாயகரிடம். அதற்குப்பின் கணபதி தாமதிக்கவே இல்லை. சிவ மந்திரத்தை உச்சரித்தபடி தன் வலப்புற தந்தத்தினை முறித்து கஜமகாசரனை நோக்கி எறிந்தார்.


ஆயுதம் துளைக்காத கல்நெஞ்சினைக் கொண்ட ஆனையின் தந்தம் துளைத்து வீழ்த்தியது.


செங்குருதி ஆறாகப் பெருகியோட மண்ணில் வீழ்ந்தான் கஜமுகாசுரன். ஆயினும் அவனுடைய ஆன்மா மூஷிகமாக உருக்கொண்டு எதிர்த்து வந்தது.


விநாயகப் பெருமான் தன் காலால் தீண்டினார். அசுரனின் ஆணவம் அடங்கியது. கொடியவன் அடியவனான். கணபதியின் பாதமலர்களே தஞ்சம் என ஒடுங்கினான். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.


கஜமுக அசுரனை வீழ்த்திய கணபதி, தன் தளிர்க்கரங்களால் சிவலிங்க பிரதிஷ்டை செய்து போர் முடிக்கப் பெருந்துணை புரிந்த பெருமானை வழிபட்டார்.


அப்போது, அசுரனை வீழ்த்துதற்கு முறித்த தந்தத்தினை ஈசன் மீண்டும் வழங்கியருளினார் விநாயகனிடம்.


கணபதி வழிபட்ட திருத்தலம் கணபதீச்சரம்
எனத் திருப்பெயரும் கொண்டது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
அசுரனை வீழ்த்திய போது, ஆறாக ஓடிய செங்குருதியினால் சிவப்பாக மாறிய இத்தலம் செங்காடு எனப்பெயர் பெற்று, பின் மருகி திருச்செங்காட்டங்குடி என நிலைத்தது.


இந்த ஐதீகம், மார்கழி மாத வளர்பிறை சஷ்டியன்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.


இந்த திருச்செங்காட்டங்குடி தான் நரசிம்ம பல்லவனின் படைத்தளபதியான பரஞ்சோதி என்பவரின் சொந்த ஊராகும்.


போர்த்தொழில் புரிந்தது போதும் என மன்னனிடம் விடை பெற்று ஊருக்குத் திரும்பி வந்தார்.


வாதாபியில் தான் கவர்ந்த கணபதி திருமேனியினை கணபதீச்சர திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்தார்.


திருச்சிற்றம்பலம்.


*திருச்செங்காட்டங்குடி தல பதிவு தொடர்ந்து (மூன்றாவதாக) நாளையும் வ(ள)ரும்.*