154. சரியையா ளர்க்கும்
சரியையா ளர்க்குமக் கிரியையா ளர்க்குநற்
சகலயோ கர்கட்டுமெட் டரிதாய
சமயபே தத்தினுக் கணுகொணா மெய்ப்பொருட்
டருபரா சத்தியிற் பரமான
துரியமே லற்புதப் பரமஞா னத்தனிச்
சுடர்வியா பித்தநற் பதிநீடு
துகளில்சா யுச்சியக் கதியையீ றற்றசொற்
சுகசொரூ பத்தையுற் றடைவேனோ
புரிசைசூழ் செய்ப்பதிக் குரியசா மர்த்யசற்
புருஷவீ ரத்துவிக் ரமசூரன்
புரளவேல் தொட்டகைக் குமரமேன் மைத்திருப்
புகழையோ தற்கெனக் கருள்வோனே
கரியயூ கத்திரட் பலவின்மீ திற்சுளைக்
கனிகள்பீ றிப்புசித் தமராடி
கதலிசூ தத்தினிற் பயிலுமீ ழத்தினிற்
கதிரகா மக்கிரிப் பெருமாளே- 154 கதிர்காமம்

பதம் பிரித்து உரை
சரியையாளர்க்கும் அக் கிரியையாளர்க்கும் நல்
சகல யோகர்க்கும் எட்ட அரிதாய


சரியையாளர்க்கும் = சரியை மார்க்கத்தில் இருப்பவர் களுக்கும் அக் கிரியையாளர்க்கும் = அந்தக் கிரியை மார்க்கத்தில்இருப்பவர்களுக்கும் நல் சகல யோகர்க்கும் =நல்ல எல்லாவித யோக நிலையில் இருப்பவர்களுக்கும் எட்ட அரிதாய = எட்டுதற்கு முடியாததும்


சமய பேதத்தினுக்கு அணுக ஒணா மெய் பொருள்
தரு பரா சத்தியின் பரமான


சமய பேதத்தினுக்கு = சமய வேறுபாடுகளால் அணுக ஒணா =நெருங்க முடியாததுமான மெயப் பொருள் தரு = உண்மைப் பொருளைத் தர வல்ல பரமான = பராசத்தியினும் மேலான தானதும்.


துரிய மேல் அற்புத பரம ஞான தனி
சுடர் வியாபித்த நல் பதி நீடு


துரியம் = யோகியர் தன் மயமாய் நிற்பதும் மேல் அற்புத =மேம்பட்டதானதும் (ஆகி) பரம ஞான = பரம ஞான. தனிச் சுடர் = தனி ஒளி வியாபித்த = பரந்துள்ளதாய் நல் பதி = சிறந்த இடமாய் நீடு=நீடியதாய்


துகள் இல் சாயுச்சிய கதியை ஈறு அற்ற சொல்
சுக சொரூபத்தை உற்று அடைவேனோ


துகள்இல் = குற்றமில்லாத சாயுச்சியக் கதியை = இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலையை
ஈறு அற்ற = முடிவில்லாததும் சொல் = புகழப் படுவதுமான சுக சொரூபத்தை = பேரின்ப நிலையை உற்று அடைவேனோ = பொருந்தி அடைவேனோ?


புரிசை சூழ் செய்ப்பதிக்கு உரிய சாமர்த்ய சத்
புருஷ வீரத்து விக்ரம சூரன்


புரிசை சூழ் = மதில் சூழ்ந்துள்ள செய்ப்பதிக்கு = வயலூருக்கு உரிய =உரிய சாமர்த்ய = வல்லவனே
சத் புருஷ = உத்தமனே வீரத்து = வீரமும் விக்ரம
சூரன் = வலிமையும் கொண்ட சூரன்.


புரள வேல் தொட்ட கை குமர மேன்மை திரு
புகழை ஓதற்கு எனக்கு அருள்வோனே


புரள = புரண்டு விழ வேல் தொட்ட = வேலைச் செலுத்தியகைக்குமரனே = திருக்கரத்தை உடைய குமரனே மேன்மை = மேன்மை ருந்திய திருப்புகழ் = திருப்புகழை ஓதற்கு எனக்கு அருள்வோனே =ஓதுவதற்கு எனக்கு அருள் செய்தவனே.


கரிய ஊக திரள் பலவின் மீதில் சுளை
கனிகள் பீறி புசித்து அமர் ஆடி


கரிய = கரு நிறமான ஊகத் திரள் = குரங்குகளின் கூட்டங்கள்பலவின் மீதில் = பலா மரத்தின் மீது இருந்து சுளைக் கனிகள் = சுளைப் பழங்களை பீறிப் புசித்து = கீறிக் கிழித்து உண்டு அமர் ஆடி = சண்டை இட்டு.


கதலி சூதத்தினில் பயிலும் ஈழத்தினில்
கதிர் காம கிரி பெருமாளே.


கதலி சூதத்தினில் = வாழை மரங்களிலும், மாமரங் களிலும் பயிலும் =நெருங்கி விளையாடும் ஈழத்தினில் = ஈழ நாட்டில் உள்ள கதிர் காமக் கிரிப் பெருமாளே = கதிர்காம மலையில் வீfற்றிருக்கும் பெருமாளே.


ஒப்புக:


உத்ரமிகும் அக்கினி சொரூப வடிவாகிய
ஓங்கார ரூபமாகி
ஒளியாகி வெளியாகி உதயகிரி மீதினில்
உதிக்கின்ற தெய்வமாகிச்
சகல புவனங்களும் தானாகி நின்றவொரு
சச்சிதானந்த மயமாய்ச்
சாலோக சாமீப சாரூப சாயுஜ்ய
சகல சூட்சும தாரியாய்
விக்கிர சிவலிங்க வடிவாக வுமிகுந்த சதுர்
வேதாந்த முத்தி முதலாய்
வெகுகோடி காலங்கள் உன்னையே நம்பினேன்
வேதனே பர நாதனே
சுக்ரகெம் பீரபரி பூரண விலாசனே
சுயம்புரத மீதேறியே
துலங்குகதிர் மதியென விளங்கு சிவசங்கர
சூரி நாராயண சுவாமியே ! --------------------- சூரிய நமஸ்கார பதிகம்


சுருதி வெகுமுகபு ராண கோடிகள்
சரியை கிரியைமக யோக மோகிகள்
துரித பரசமய பேத வாதிகள் என்றுமோடித்
தொடர வுணரஅரி தாயதூரிய
பொருளை யணுகியநு போக மானவை
தொலைய இனியவொரு ஸ்வாமி யாகிய நின்ப்ரகாசங்
கருதி ---------------------- திருப்புகழ், சுருதி வெகுமுக


நாடக ஆசார கிரியையாளர் காணாத பரம ஞான வீடு ஏது புகல்வாயே- ..திருப்புகழ், குருதி மூளை யூனாறு


சரியையில் கிரியையில் தவமும் அற்று
- திருப்புகழ், ஒருவரைச் சிறுமனை


சரியைஉடன் க்ரியை போற்றிய பரம பதம் பெறுவார்க்கு அருள் தரு கணன் திருப்புகழ், அரிவையர்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
சரியை கிரியை அண்டர் பூசை வந்தனை வழிபாடு துதியொடு நாடுந் தியான மொன்றையு முயலாதே
...திருப்புகழ் குருதிபு லாலென்பு


செய் சரியை க்ரியா யோக நியமத்தின் மாயாது-
திருப்புகழ், கமையற்ற
எப்போது சரியை கிரியை செய்து உயிர் வாழ்வேன்
. திருப்புகழ், கருப்புச் சாப னனைய