155.திருமகள்


தனதனன தான தனனதன தான
தனதனன தான தனதான


திருமக ளுலாவு மிருபுய முராரி
திருமருக நாமப் பெருமாள்காண்
செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப் பெருமாள்காண்
மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
மரகதம யூரப் பெருமாள்காண்
மணிதரளம் வீசி யணியருவி சூழ
மருவுகதிர் காமப் பெருமாள்காண்
அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருத வீரப் பெருமாள்காண்
அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் பெருமாள்காண்
இருவினையி லாத தருவினைவி டாத
இமையவர்கு லேசப் பெருமாள்காண்
இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி நோதப் பெருமாளே155 கதிர் காமம்பதம் பிரித்தல்


திருமகள் உலாவும் இரு புய முராரி
திரு மருக நாம பெருமாள் காண்


திருமகள் உலாவும் = இலக்குமி தேவி விளையாடும்.
இரு புய = இரண்டு திருப் புயங்களை உடைய.
முராரி = திருமாலின். திரு = அழகிய.
மருக நாம = மருகன் என்னும் திரு நாமத்தை உடைய.
பெருமாள் காண் = பெருமான் நீ அன்றோ.


செக தலமும் வானும் மிகுதி பெறு பாடல்
தெரி தரு குமார பெருமாள் காண்


செக தலமும் = மண்ணுலகிலும்
வானும் = விண்ணுலகிலும்
மிகுதி பெறு = மிக்க பொலிவு பெறும்
பாடல் தெரி தரு= (தேவாரப்) பாடல்களை அளித்து அருளிய
குமாரப் பெருமாள் காண்= குமாரப் பெருமான் நீ அன்றோ.


மருவும் அடியார்கள் மனதில் விளையாடும்
மரகத மயூர பெருமாள் காண்


மருவும் = (உனது திருவடியைச்) சார்ந்த
அடியார்கள் = அடியவர்கள்
மனதில் விளையாடும் = மனதில் விளையாடும்
மரகத மயூர = பச்சை மயில் (ஏறும்)
பெருமாள் காண் = பெருமான் நீ அன்றோ.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
அரு வரைகள் நீறு பட அசுரர் மாள
அமர் பொருத வீர பெருமாள்காண்


அரு வரைகள் = பெரிய மலைகள்
நீறுபட = பொடிபட அசுரர் மாள = அசுரர்கள் இறக்க.
அமர் பொருத வீர = சண்டை செய்த வீரனாகிய
பெருமாள் காண் = பெருமான் நீ அன்றோ.


அரவு பிறை வாரி விரவு சடை வேணி
அமலர் குரு நாத பெருமாள் காண்


அரவு, பிறை, = பாம்பு, பிறைச் சந்திரன்,
வாரி = கங்கை நீர் இவை
விரவு = கலந்துள்ள.
சடை வேணி = பெரிய சடையை உடைய
அமலர் = மலம் இல்லாதவராகிய சிவபெருமானின்
குரு நாத = குரு நாதராகிய
பெருமாள் காண் = பெருமான் நீ அன்றோ.


இரு வினை இலாத தருவினை விடாத
இமையவர் குல ஈச பெருமாள் காண்


இரு வினை = இரண்டு வினைகளும்
இலாத = இல்லாதவர்களும்.
தரு வினை = கற்பகத் தருவை
விடாத = விட்டு நீங்காதவர்களும் ஆகிய.
இமையவர் குல ஈசா = தேவர்கள் குலத்துத் தலைவராகிய.
பெருமாள் காண் = பெருமான் நீ அன்றோ.


இலகு சிலை வேடர் கொடியின் அதி பார
இரு தன விநோத பெருமாளே.


இலகு சிலை = விளங்கும் வில் ஏந்திய
வேடர் = வேடர்களின்
கொடியின் = (மகளான) கொடி போன்ற வளளியின்.
அதி பார = அதிக பாரமுள்ள.
இருதன விநோத = இரண்டு கொங்கைகளிலும் களி கூரும். பெருமாளே = பெருமாளே.