170. மலைக்கு நாயக


தனத்த தானன தனத்தான தானன
தனத்த தானன தனத்தான தானன
தனத்த தானன தனத்தான தானன தனதான


கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு மொருவாழ்வே
கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுக
ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ
கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள் தரவேணும்
மலைக்கு நாயக சிவக்காமி நாயகர்
திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக
வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ் தருவேளே
வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
அகத்ய மாமுநி யிடைகாடர் கீரனும்
வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு முருகோனே
நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவொனே
நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெ
யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி
நினைத்த காரிய மநுக்கூல மேபுரி பெருமாளே

170 திருக்கோணமலை
(ஈழ நாடு)பதம் பிரித்து உரை


கலக்கமாகவே மல கூடிலே மிகு
பிணிக்குள் ஆகியே தவிக்காமலே உனை
கவிக்கு(ள்)ளாய் சொ(ல்)லி கடைத்தேறவே செயும் ஒரு வாழ்வே


கலக்கமாகவே = கலக்க நெஞ்சினனாய் மலக் கூடிலே = மும்மலக் கூடாகிய இந்த உடலில்.
மிகு = நிரம்ப பிணிக்கு உள்ளாகியே = நோய் களுக்குஆளாகி தவிக்காமலே = தவிக்காமல் உனை =உன்னை கவிக்குள்ளாய் சொல்லி
= பாட்டில் அமைத்து கடைத்தேறவே = ஈடேற.செய்யும் ஒரு வாழ்வே = அருளும் ஒப்பற்றசெல்வமே.


கதிக்கு நாதன் நீ உனை தேடியே புகழ்
உரைக்கு நாயேனை அருள் பார்வையாகவே
கழற்குள் ஆகவே சிறப்பான தாய் அருள் தரவேணும்


கதிக்கு = நற்கதியை நாதன் நீ = தருகின்ற நாதன் நீ உனைத் தேடியே = உன்னைத் தேடி புகழ் உரைக்கு =உனது புகழை உரைக்கும் நாயேனை = நாய் போன்றசிறியேனை அருட் பார்வையாகவே = உனது அருள்பார்வையால் கழற்குள்ளாகவே = உன் திருவடியைக்கூடவே சிறப்பான = சிறந்ததான.
தாய் அருள் தர வேணும் = தாய் அன்பை எனக்கு அருள் புரிய வேண்டும்.


மலைக்கு நாயக சிவகாமி நாயகர்
திரு குமாரன் என முகத்து ஆறு தேசிக
வடிப்ப மாது ஒரு குற பாவையாள் மகிழ் தரு வேளே


மலைக்கு நாயக = எல்லா மலைகளுக்கும் தலைவனே சிவ(க்)காமி நாயகர் = சிவகாமி அம்மையின் தலைவராகிய சிவபெருமானின் திருக் குமாரனே = அழகிய குமாரனே ஆறு முகத்து தேசிகனே = ஆறு திரு முகங்களை உடையகுரு மூர்த்தியே வடிப்ப = வடிவழ குள்ள மாது =மாதாகிய குறப் பாவையாள் = குறப் பெண்ணாகியவள்ளி மகிழ்தரு வேளே = மகிழும் வேளே.


வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
அகத்ய மா முநி இடைக் காடர் கீரனும்
வகுத்த பாவினில் பொருள் கோலமாய் வரு முருகோனே


வசிட்டர் காசிபர் = வசிட்டர், காசிபர்
தவத்தான யோகியர் = தவத்தில் சிறந்த யோகிகள்அகத்திய மா முநிவர் = அகத்திய முனிவர் இடைக் காடர் = இடைக் காடர் கீரனும் = நக்கீரர் ஆகியோர்வகுத்த = அமைத்த பாவினில் = பாடல்களில்பொருள் கோலமாய் வரும் முருகோனே = பொருள்உருவாய் வரும் முருகோனே.


நிலைக்கு நான் மறை மகத்தான பூசுரர்
திருக்கோணா மலை தலத்து ஆரு கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே


நிலைக்கு = அழியாது நிலைத்து நிற்கும் நான்
மறை = நான்கு வேதங்களைப் பயின்ற
மகத்தான = சிறந்த பூசுரர் = அந்தணர்கள்
திருக்கோணாமலை = திருக்கோண மலை என்னும்தலத்து = தலத்தில் ஆரு = விளங்கும் கோபுர நிலைக்குள் = கோபுர நிலையின் வாயினில் =வாசலில் கிளிப்பாடு பூதியில் வருவோனே =கிளிப்பாடு பூதி என்னும் இடத்தில் எழுந்தருளிவருபவனே.


நிகழ்த்தும் ஏழ் பவ கடல் சூறையாகவே
எடுத்த வேல் கொ(ண்)டு பொடி தூளதா எறி
நினைத்த காரியம் அநு(க்)கூலமே புரி பெருமாளே.
நிகழ்த்தும் = நிகழ்கின்ற ஏழ் பவ கடல் = ஏழுபிறப்பு என்னும் கடல் சூறையாகவே = கொள்ளைபோய் அழிய எடுத்த = திருக் கரத்தில் எடுத்த வேல் கொடு = வேலைக் கொண்டு பொடித் தூளதா எறி = (பகைவர்களைப்) பொடிப்பொடியாகப் போகும் படிச் (செலுத்தியபெருமாளே)
நினைத்த காரியம் = நினைத்த காரியங் களெல்லாம்அனு(க்)கூலமே புரி = நன்மையாக கைகூடும்படிஅருளும். பெருமாளே = பெருமாளே.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
விளக்கக் குறிப்புகள்


1. தட்சிண கயிலாயங்கள் மூன்று. திருக்காளத்தி, சிராப்பள்ளி, திருக்கோணமலை
சுயம்புவாக சுவாமி தோன்றியது. கைலாயத்தில், உமாதேவி சமேதராக சிவபெருமான் இருக்கையில், நந்தி பகவான் அவரிடத்தில் தாங்கள் எழுந்தருளியுள்ள தலங்களுள் இந்தக் கயிலாயத்திற்கு நிகராகக் கருதக்கூடியது எது என ஒரு சந்தேகம் கேட்க, அதற்கு பெருமான பதில் கூறியபோது உத்தர கயிலாயம், மத்திய கயிலாயம், தட்சிண கயிலாயம் என மூன்று உள்ளன. அவை ஒத்த சிறப்புடையவை தாம். ஆனால், எளிய மனிதரும் முக்தி அடையக்கூடிய திருத்தலச்சிறப்பு திருப்பேரூர் என்கிற தட்சிண கயிலாயத்துக்கே உண்டு என்றாராம். திருப்பேரூர் ஸ்தல புராணம்.


2. கிளிப்பாடு பூதி என்பது திருக்கோணமலைக் கோயில் கோபுர நிலையில்
உள்ள ஓரிடத்துக்குப் பெயர். கிளிப்பாடு பூதி என்பதற்கு அருணகிரி நாதர்
கிளியான பின்பு பாடிய என்று பொருள் கொண்டால் இந்தத் திருப்புகழ்
அருணகிரி நாதர் பாடினதா என்பது ஆராயத் தக்கது என்று
டாக்டர் வ.சு. செங்கல்வராய பிள்ளை அவர்களின் கருத்து.

(வருங்காலத்தைச் சுட்டி அங்கனம் பாடினார் என்பது கிருபானந்தா வாரியார்
கருத்து-)