Announcement

Collapse
No announcement yet.

Sree bhashyam continues

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sree bhashyam continues

    சூத்திரம் 5
    கௌணஸ் சேத் ந ஆத்மசப்தாத்


    சங்கல்பித்தது என்பது உருவகமான(figurative) சொல் அல்ல. ஆத்மா என்ற சொல்லின் சம்பந்தத்தால்.
    கௌண என்றால் என்ன?
    இதற்கு ஒரு சொல்லின் பொருளை எத்தனை வகையில் தெரிந்துகொள்ளலாம் என்பதைப் பார்க்க வேண்டும்,. மொழி விக்ஞானத்தில் மூன்று வகைகள் சொல்லப் படுகின்றன .
    அபிதா- - நேரிடை அர்த்தம். (direct meaning)சிங்கம் என்று சொன்னால் சிங்கத்தை மட்டுமே குறிப்பிடுகிறது.
    கௌணம் அல்லது லக்ஷணா- ( indirect meaning)மறைமுகமான அர்த்தம். ஒரு மனிதனைப் பார்த்து அவன் சிங்கம் என்றால் அவனுக்கு நாலு கால் ஒரு பிடரி என்றெல்லாம் பொருள் கொள்வதில்லை. அது அவனுடைய குணத்தைக் குறிக்கிறது.
    வ்யங்க்யம்- ( implied meaning) ஒன்றைச்சொல்லி குறிப்பாக இன்னொன்றைச் சொல்வது. இதற்கு ஒரு உதாரணம் காளிதாசனின் அபிக்ஞான சாகுந்தலத்தில் காணலாம் . சகுந்தலை துஷ்யந்தனுடன் இருக்கும்போது அவள் தோழி சொல்கிறாள். " ஒ சக்ரவாக பட்சியே உன் காதலனிடம் விடைபெறு . இரவு வந்துகொண்டிருக்கிறது. " அதாவது சகுந்தலையைத் தேடி அவள் தாய் போன்ற கௌதமி அம்மையார் வந்துகொண்டிருக்கிறாள் என்று அறிவுறுத்துகிறாள்.
    இது எதற்கு இங்கே என்றால் ஸாங்கிய வாதி சொல்கிறான் , அது சங்கல்பித்தது என்பது பிரக்ருதிக்கும் ஓட்டும் , நீர் சங்கல்பித்தது நுதலிய வாக்கியங்கள் வேதத்தில் காணப் படுவதால் என்று. அதாவது கௌணமான அர்த்தத்தில் இது சாத்தியம் என்று,
    அதற்கு இந்த சூத்திரம் பதிலளிக்கிறது. அது சரியல்ல என்று. ஏனென்றால் ஆத்மா என்ற சொல் அது சங்கல்பித்தது என்ற சந்தர்ப்பத்தில் உபயோகப்படுத்தி உள்ளது.
    சந்தோக்ய உபநிஷத்தில் " ஏதத் ஆத்ம்யம் இதம் சர்வம் தத் சத்யம் தத் ஆத்மா தத் த்ப்வம் அஸி ச்வேத்கேதோ,"(சாந்தோக்ய உப. 6.8.7) அதாவது எல்லாமே பிரம்மத்தை ஆத்மாவகக் கொண்டது, அதுதான் உண்மை அதுதான் அந்தராத்மா. அதுவே நீ. என்று பொருள்.
    ஜடமான் பிரகிருதி இந்த பிரபஞ்சத்தின் ஆத்மாவாக இருக்க முடியாது. அதனால் சங்கல்பித்தது என்ற சொல் முக்கிய அல்லது நேரிடை அர்த்தத்திலேயே உபயோகப்பட்டுள்ளது. மறைமுகமான் அர்த்தத்தில் அல்ல.
    ப்ரம்மசூத்ரம் - பிரிவு1 பகுதி 1
    சூத்ரம் 7-
    தன்னிஷ்டஸ்ய மோக்ஷோபதேசாத்
    முக்தி நிலை என்பது ஸத் அல்லது பிரம்மஉபாசனை மூலமே என்று சொல்லப்பட்டிருப்பதால்.
    ஸத் என்பது பிரகிருதி அல்ல. அதனால் பிரகிருதி பிரபஞ்சத்தின் காரணம் அல்ல. சாந்தோக்ய உபநிஷத்தில் 'தஸ்ய ததேவ சிரம் யாவத் ந விமோக்ஷ்யே அத ஸம்பத்ஸ்யே ,; என்ற வாக்கியம் காணப் படுகிறது. இதற்குப் பொருள், இந்த சரீரத்தில் உள்ளவரைதான் தாமதம் . பிறகு முக்தி அடைகிறான் என்பது.
    ச்வேதகேதுவிற்கு உபதேசம் செய்யும் அவன் தந்தை தத் அல்லது பிரம்மத்தைப் பற்றி உபதேசித்து 'தத் தவம் அஸி' என்று சொல்லி பிறகு எப்படி அந்த நிலையை அடைவது என்று சொல்கிறார்.
    பிரக்ருதியைப் பற்றிய அறிவால் அந்த நிலையை அடையமுடியாது. சாங்கிய மதத்திலும் புருஷன் ( ஜீவன்) பிரக்ருதியின் சம்பந்தத்தால் மயக்கத்தை அடைந்து உலகில் சுகதுக்கங்களினால் பீடிக்கப் படுகிறான். பிறகு அதனுடன் தனக்கு ஒரு சம்பந்தமும் இல்லை என்று தெரிந்து விடுதலை ( அதாவது சம்சாரத்திலிருந்து) அடைகிறான் என்றுதான் சொல்லப் படுகிறது.
    சூத்திரம் 8
    ஹேயத்வ அவசநாத் ச
    சத் அல்லது ப்ரம்மத்தை விடவேண்டும் என்று சொல்லப் படவில்லை.
    சத் அல்லது பிரம்மத்தை உபாசித்தால் முக்தி கிடைக்கும் என்று சொல்லப் பட்டிருக்கிறது. சத் என்பது பிரகிருதியாக இருந்தால் இதற்கு அர்த்தமில்லை. ஏனென்றால் அதை விடுவதன் மூலம்தான் புருஷன் விடுதலை அடைகிறான் என்று காண்கிறோம். அதனால் அது பிரபஞ்சத்தின் மூல காரணம் அல்ல.
    சூத்திரம் 9
    பிரதிக்ஞாவிரோதாத்
    ஆரம்பத்தில் சொன்ன வார்த்தைகளுக்கு விரோதமாக இருப்பதால்.
    தத்வமஸி அத்தியாயத்தில் ஆரம்பத்தில் " எது ஒன்றைத் தெரிந்துகொண்டால் எல்லாம் விளங்குமோ அதைத் தெரிந்துகொண்டாயா?" என்ற பின்னர் இது எல்லாம் சத் ஆகவே இருந்தது என்று தொடங்கி தத் தவம் அஸி என்று முடிகிறது.
    ஜடமான பிரகிருதி உலகத்தின் காரணமாயிருந்தாலும் அதைத் தெரிந்துகொண்டதனால் புருஷன் என்ற ஜீவன் தான் யார் என்று தெரிந்துகொள்ள முடியாது.
    ஏனென்றால் பிரகிருதி வேறு தான் வேறு என்ற ஞானத்தின் மூலம்தான் முக்தி அடைகிறான். அதனால் பிரகிருதியே பிரபஞ்சத்தின் காரணம் என்பது ஆரம்பத்தில் சொன்ன வார்த்தைகளுக்கு விரோதம்.
    இன்னும் மூன்று சூத்திரங்கள் மூலம் பிரம்மத்தின் ஜக்த்காரணத்தை ஸ்தாபிக்கிறார். அதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால் தத் தவம் அஸி என்ற சாந்தோக்ய முழக்கத்தை நன்றாக ஆராய வேண்டும். அதற்கு ஒரு தனிப் பதிவு போடுகிறேன்.
    அடுத்து வரும் எட்டு சூத்திரங்கள் உபநிஷத்தில் சொல்லப்படும் ஆனந்த மயமான புருஷன் என்பது ஜீவாத்மா அல்ல பரமாத்மாவே என்று வலியுறுத்துகின்றன.
    சூத்திரம். 13
    ஆனந்தமயோ அப்யாஸாத்
    ஆனந்தமயம் என்று சொல்லப்படுவது பரமாத்மாவே ஜீவாத்மா அல்ல. திரும்ப திரும்ப சொல்லப்படுவதால்.
    தைத்திரீய உபநிஷத்தில் ஆனந்தவல்லி அத்தியாயத்தில் 'ஏதஸ்மாத் வா ஆகாச: ஸம்பூத:' பிரம்மத்திடம் இருந்து ஆகாசம் தோன்றியது என்று ஆரம்பித்து பின்னர் மனித உடலுக்கு அன்னம் காரணம்(food) என்றுசொல்லி அன்னமயமான சரீரத்தின் ஆத்மா பிராணன் , ப்ராணமயமான சரீரத்திற்கு ஆத்மா மனம் , மனோமயமான் சரீரத்திற்கு ஆத்மா விக்ஞானம் ( consciousness) என்று சொல்லி அதற்கும் உள்ளே இருப்பது ஆனந்த மயமான ஆத்மா. என்று சொல்லி இருக்கிறது.
    இதில் ஆனந்தமயமான ஆத்மா என்பது ஜீவாத்மாவா இல்லை ப்ரம்மமா என்பது கேள்வி.
    இது ஜீவாத்மாதான் என்பதற்கு கூறப்படும் வாதம் இந்த ஆனந்தமயமான ஆத்மா வேறு பிரம்மம் வேறு என்றால் அதற்கு உள்ளே இன்னொரு ஆத்மா இருப்பதாகச் சொல்லி இருக்க வேண்டும். அப்படி இல்லை. அதனால் ஜீவாத்மாவே அன்னமய பிராணமய மனோமய விஞ்ஞானமய கோசங்களைக் கடந்த பின் (Discarding the outer sheaths)பிரம்மத்துடன ஒன்றாகி ஆனந்த மயமாகிறது என்பது. ஆனந்த மயம் என்பதற்குப் பொருள் ஆனந்த ஸ்வரூபம்.
    இதை இந்த சூத்திரம் மறுக்கிறது.ஆனந்தமய ஆத்மா என்று சொல்லியிருப்பது பிரம்மம்தான் ஜீவாத்மா அல்ல. ஏனென்றால் அப்யாஸாத், அதாவது திரும்பத் திரும்ப பிரம்மத்தின் ஆனந்த ஸ்வரூபத்தை சொல்லி இருப்பதால்.
    உபநிஷத் சொல்கிறது, ப்ரம்மத்திடம் இருந்து ஆகாசம் தோன்றியது. அதிலிருந்து வாயு, அதிலிருந்து நெருப்பு, அதிலிருந்து நீர், அதிலிருந்து நிலம். நிலத்தில் இருந்து அன்னம். அன்னத்தில் இருந்து மனிதன்.
    இந்த அன்னத்தை சரீரமாகக் கொண்டது பிராணன். மனதிற்கு பிராணன் சரீரம் , புத்திக்கு மனம் சரீரம் அதற்கும் உள்ளே இருப்பது ஆனந்தமய ஆத்மா.
    ஆனந்தம் என்பதற்கு அளவுகோல் என்ன என்றால் எல்லாம் உடைய ஒரு மனிதனின் ஆனந்தத்தை அளவுகோலாகக் கொண்டு அதற்குமேல் நூறு மடங்கு நூறு மடங்காக தேவர் முதலியவர்களின் ஆனந்தத்தைச்சொல்லி கடைசியில் ப்ரம்மானந்தத்தில் முடிகிறது.
    கடைசியில் 'ஆனந்தம் பிரம்மனோ வித்வான் ந பிபேதி குதஸ்சன ' இந்த பிரம்மானந்தத்தை உணர்ந்தவன் எதைக்கண்டும் பயப்படுவதில்லை என்று முடிக்கிறது.
    அதனால் ஆனந்தம் எல்லா இடத்திலும் ப்ரம்மத்தையே குறிக்கிறபடியால் ஆனந்தமய ஆத்மா என்பது பிரம்மமே என்று அறிகிறோம். ராமானுஜர் தைத்திரீய வாக்கியத்திற்கு இவ்வாறு விளக்கம் கூறுகிறார்.
    ஆனந்தமய ஆத்மா என்பது எல்லாமே எதற்கு சரீரமோ அந்த பரம்பொருளையே குறிக்கிறது
    சூத்திரம் 14
    விகாரஸ்சேத் ந ப்ராசுர்யாத்.
    மயம் என்ற சொல் பெரும்பாலும் என்ற பொருளில் அல்ல . ஆனந்த மயம் என்பது ஆனந்தமே உருவானது என்ற பொருளில்தான் சொல்லப்பட்டிருக்கிறது. அது பிரம்மத்திற்குத்தான் பொருந்தும்.அன்னமய ஆத்மா, பிராணமய ஆத்மா , மனோமய ஆத்மா, விஞ்ஞானமய ஆத்மா என்று சொல்லப்பட்டிருப்பது ஜீவாத்மா. விஞ்ஞானமய ஆத்மாவை சரீரமாகக் கொண்டது என்பது பிரம்மம்தான். ஜீவாத்மா ஆனந்தஸ்வரூபம் அன்று.
    சூத்திரம் 15
    தத் ஹேதுவ்யபதேசாத் ச
    அந்த ஆனந்தமய ஆத்மா ஜீவாத்மாவினுடைய ஆனந்தத்திற்குக் காரணமாக சொல்லப்படுகிறது.
    தைத்திரீய உபநிஷதத்தில்
    யத் தத் ஸுக்ருதம் ; ரஸோ வை ஸ: ரஸஹ்யோவாயம் லப்த்வா ஆனந்தீ பவதி; ----ஏஷ ஹ்யோவா ஆனந்தயதி
    இதன் கருத்து, எது ஆனந்தத்தின் காரணமோ அதன் தொடர்பால் ஜீவன் ஆனந்தம் அடைகிறது.
    பிரம்மம் தான் ஆனந்தத்தின் ஸ்வரூபம் . அதனால் ஆனந்தமயம் என்று சொல்லப் படுகிறது.
    .சூத்திரம் 16
    மந்த்ரவர்ணிகம் ஏவ ச கீயதே
    பிரம்மம் மந்த்ரத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.
    தைத்திரீய உபநிஷத்தின் இரண்டாவது அத்தியாயத்தின் ஆரம்பத்தில் பிரம்மவித் ஆப்நோதி பரம் என்று இருக்கிறது.
    அதாவது பிரம்மத்தை அறிந்தவன் மேலான கதியை ( முக்தியை) அடைகிறான் என்பது பொருள். அதற்குப் பிறகு 'ஸத்யம் ஞானம் ஆனந்தம் பிரம்ம,' என்ற வாக்கியம் வருகிறது. இதுதான் கடைசியில் ஆனந்த மயம் என்று சொல்லப்படுகிறது.
    பிரம்மத்தை அறிந்தவன் என்பது உடல் மனம் புத்தி இவைகளைக் கடந்த ஜீவாத்மாவாகும்.
    ஏனென்றால் பிரம்மஞானம் என்பது மனம், புத்தி, அஹம்காரம் இவைகளுக்கு அப்பால் உள்ளது. 'யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ' ,' , வாக்கும் மனதும் பிரம்மத்தைக் காண முடியாமல் திரும்பிவிட்டன என்ற வாக்கியம் இதை உறுதிப் படுத்துகிறது.
    பிரம்மசூத்ரம்- பிரிவு 1. பகுதி 1
    சூத்ரம் 10 ஸ்வாப்யயாத்
    ஜீவன் ஆத்மாவில் ஒடுங்குவதால்.
    சாந்தோக்ய உபநிஷத்தில் தத்வமஸி அத்தியாயத்தில் 'யத்ர ஏதத் புருஷ: ஸ்வபிதி நாம ஸதா சௌம்ய ததா ஸம்பன்ன: பவதி ஸ்வம் அபி அபீதோ பவதி,' (சாந். 6.8.1)என்னும் வாக்கியத்தை பார்க்கிறோம் .
    இதன் பொருள் , ஒரு மனிதன தூங்கும்போது ஸத் அல்லது ப்ரம்மத்திடம் லயிக்கிறான். அப்போது ஆத்மா மட்டும்தான் விழித்திருக்கிறது. அது பிரம்மத்திடம் லயித்து இருக்கிறது.
    உடல் மனம் புத்தி என்ற உணர்வு அப்போது இல்லை. ஆனால் அக்ஞானத்தின் காரணமாக அது அறியப்படுவதில்லை. அங்கு காரணம்தான் இருக்கிறது அதாவது பிரம்மம். இது பிரளயகாலத்து சூழ் நிலையை பிரதிபலிக்கிறது.
    ப்ர்ஹதாரண்யாக உபநிஷத்தில் 'ப்ரக்ஞானேன ஆத்மாநா ஸம்பரிஷ்வக்த: ந பாஹ்யம் கிம்சன வேத ந ஆந்தரம்' (ப்ருஹத். 4.3.21)
    இதன் பொருள், ஆழ்ந்த தூக்கத்தில் ஆத்மாவுடன் ஒன்றாகி உள்ளும் புறமும் எதுவும் உணர்வதில்லை. எழுந்தவுடன் நாம ரூபங்கள் உணரப் படுகின்றன.
    அதனால் ஆத்மா என்பது பிரகிருதி அல்ல.
    உடல் முதலியவை பிரக்ருதியின் மாறுபாடுகள். ஆனால் இவை இல்லாதபோதும் ஆத்மா ஆழ்ந்த தூக்கத்தில் தன்னை அறிகிறது. அதனால் ஜடமான பிரகிருதி பிரபஞ்சத்தின் காரணம் அல்ல.


    சூத்ரம் 11. கதி ஸாமான்யாத்
    சிருஷ்டியைப் பற்றிய மற்ற வாக்கியங்களும் இதோடு ஒத்து இருப்பதால்.
    எல்லா உபநிஷத்துக்களும் பிரம்மமே முதல் காரணம் என்று சொல்வதால் பிரகிருதி காரணம் அல்ல.
    ஐதரேய உபநிஷத்தில் ' ஆத்மா வா இதம் ஏக ஏவ அக்ர ஆஸீத். (ஐதரேய. ஆரண்யகம் 2.4.11) என்று காண்கிறோம்.
    அதாவது ஆத்மா தான் முதலில் இருந்தது. இங்கு ஆத்மா என்ற சொல் ஸத் அல்லது அந்தராத்மாவைக் குறிக்கிறது.
    மேலும் தைத்ரேய உபநிஷத், 'தஸ்மாத் வா ஏதஸ்மாத் வா ஆத்மன: ஆகாச: ஸம்பூத:, ஆகாசாத் வாயு:, வாயோ: அக்னி: , அக்னே: ஆப: , அத்ப்ய: ப்ருதிவீ,' (தைத். 2.1) ,
    அதாவது, அந்த ஆத்மாவிடம் ( சத் அல்லது பிரம்மம்) இருந்து, ஆகாயம் தோன்றியது. ஆகாயத்தில் இருந்து வாயு, வாயுவிலிருந்து, அக்னி, அக்னியில் இருந்து நீர் , நீரிலிருந்து நிலம் தோன்றியது என்று சிருஷ்டிக்ரமத்தைக் கூறுகிறது
    . இதைப்போல் உள்ள எல்லா பகுதிகளும் பிரம்மத்தையே முதல் காரணமாகக் கூறுகின்றன.அதனால் ஸத் என்பது பிரம்மம்தானே அன்றி பிரகிருதி அல்ல.
    சூத்ரம் 12
    ஸ்ருதத்வாத் ச
    உபநிஷதத்தில் தெளிவாகக் கூறியிருப்பதால்.
    ராமாநுஜர் பல ஸ்ருதிவாக்கியங்களைக் கூறி ஸத் என்பது ஸர்வசக்திமானும் , ஸர்வக்ஞனும், எல்லாவற்றிற்கும் ஆதாரமும் , அனந்த கல்யாண குணமும், மாசுமருவற்றதும் ஆன பிரம்மமே என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.
    மேலும் 'அந்தர்பஹி: ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித:' (மஹாநாராயண உப.11) என்ற மஹாநாராயண உபநிஷத்தை மேற்கோள் காட்டி அது நாராயணனே என்று ஸ்தாபிக்கிறார்.
    இதனால் பிரம்மம் நிர்விசேஷ சின்மாத்ரம்( undifferentiated consciousness) என்கிற அத்வைத கொள்கையும் மறுக்கப்படுகிறது.
    ஸத் என்பது பிரகிருதி அல்ல என்பதை விளக்கும் பகுதி இதோடு முடிவடைகிறது.
    அடுத்து ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் உள்ள வித்தியாசங்கள் விளக்கப்படுகின்றன. இது ஜீவப்ரம்ம ஐக்யத்தைக் கூறும் அத்வைதத்தில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது என்பதைக் காண்போம்.
    சூத்ரம் 17
    ந இதர: அனுபபத்தே: ச
    பிரம்மத்தைத் தவிர வேறு எதுவும் ஆனந்தமயம் என்ற சொல்லுக்கு ஒவ்வாததாக இருப்பதால்.
    பிரம்மமும் ஜீவனும் ஐக்கியம் ஆக முடியாது.
    ஏனென்றால் 'தத் ஐக்ஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய ,' அந்த சத் அல்லது பிரம்மம் சங்கல்பித்தது 'நான் பலவாக ஆவேன் என்று,' என்பது ஜீவனுக்கு முக்தி நிலையில் கூட சம்பவிக்க முடியாத ஒன்றாகும்.
    சூத்ரம் 18
    பேதவ்யபதேசாத் ச
    வித்தியாசம் ஏற்கெனவே காட்டப் பட்டதால்.
    ஜீவாத்மா என்பது விஞ்ஞானமய ஆத்மா. அதற்கும் உள்ளே ஆத்மாவாக இருப்பது என்றால் அது பிரம்மமே.
    சூத்திரம் 19
    காமாத் ச ந அனுமானாபேக்ஷா
    தைத்திரீயத்தில் ஸ அகாமயத- அது ஆர்வம் கொண்டது,
    பஹுஸ்யாம் பிரஜாயேய- நான் பலவாக ஆவேன் என்று.
    அதனால் ஆனந்தமயமான் ஆத்மா பிரம்மம்தான் ஸாங்க்ய வாதத்தின்படி ப்ர்க்ருதியும் அல்ல என்று தெரிகிறது.
    சூத்திரம் 2௦
    அஸ்மின் அஸ்ய ச தத் யோகம் சாஸ்தி
    ஜீவன் பிரம்மத்தை அடைவது சொல்லப் படுகிறது.
    இந்த இடத்தில் 'ரஸோ வை ஸ: ரஸஹ்யோவாயம் லப்த்வா ஆனந்தி பவதி,' என்று காண்கிறோம். அதாவது ஆனந்த மயமானது எதுவோ அதை அடைந்து ஜீவன் ஆனந்தம் அடைகிறது. அதனால் ஆனந்தமயம் என்பது பிரம்மம்தான் .
    சூத்ரம்-21
    அந்த: தத் தர்மோபதேசாத்
    சூரியனுள்ளும் கண்ணின் உள்ளம் இருப்பதாகச் சொல்லபடுவது பிரம்மம் தான் அதனுடைய குணங்கள் சொல்லப்பட்டிருப்பதால்.
    ஆனந்த மயம்,என்று சொல்லப்பட்டது பிரம்மமே என்று சென்ற எட்டு சூத்ரங்களில் பார்த்தோம்.
    இங்கே சாந்தோக்ய உபநிஷத்தில் காணப்படும் வாக்கியமான
    ' ய ஏஷோ அந்த்தராதித்ய: புருஷ: த்ருச்யதே ஹிரண்மயச்மச்ரு ஹிரண்யகேச: ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸுவர்ண:; தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவ அக்ஷிணீ; தஸ்ய உதிதி நாம ஸ ஏஷ ஸர்வேப்ய:பாப்மப்ய: உதித:,'
    (சாந்- 1-6-8)
    என்பது சான்றாகக் காட்டப்படுகிறது.
    இதன் பொருள், ஒரு தங்கமயமான புருஷன் சூரியபிம்பத்தின் உள்ளே காணப்படுகிறான். அவனுடைய சிகை தலையிலும் முகவாயிலும் தங்க மயமானது. நகத்திளிருது எல்லாம் தங்கமயம். அவனி உடைய கண்கள் அன்றலர்ந்த தாமரையை ஒக்கும். உத் என்ற பெயரைக்கொண்ட இந்த புருஷன் எல்லா பாபங்களையும் அழித்து எழுகிறான்.
    மேலும் சில வாக்கியங்களால் ருக் வேதமும் சாமவேதமும் அவனுடைய அங்கங்கள் , இவன் சூரியனைக் கடந்த சர்வலோகநாயகன் என்றும் காண்கிறோம்.
    இதைத்தொடர்ந்து 'அத ய ஏஷோ அந்தரக்ஷிணி புருஷ: த்ருச்யதே ,' இந்த புருஷன் கண்ணின் உள்ளே காணப்படுகிறான், என்றும் உள்ளது.
    புருஷன் என்ற சொல்லால் இது பிரம்மத்தைக் குறிக்காது என்ற வாதத்தை இந்த சூத்ரம் மறுக்கிறது.
    ஏனென்றால் பாபங்களைப் போக்கி எழுகிறான் என்பது பிரம்மத்திற்குதான் ஒட்டிவரும்
    . சூரியனைக் கடந்த சர்வலோகநாயகன் என்பதும் பிரம்மம் தான். சூரியனிலும் கண்ணிலும் உள்ளான் என்பது உபாசனைக்காக சொல்லப்பட்டது.
    அதாவது பிரம்மத்தை சூரியனுள் இருப்பதாகவோ அல்லது கண்ணினுள் இருப்பதாகவோ தியானம் செய்யும் முறை.
    ராமானுஜர் மேலும் சொல்கிறார்,
    'ஏஷ ஆத்மா அபஹதபாப்மா விசரோ விம்ரருத்யு: விசோகோ விஜிகத்ஸோ அபிபாஸ: சத்யகாம: சத்யசங்கல்ப: ' (சாந்- 8-1.5)
    இதன் பொருள்,
    பிரம்மம் எல்லாவற்றிற்கும் அந்தராத்மா, பாபத்தை ஒழித்தவன் , கிழத்தன்மை, மரணம் , சோகம் , பசி , தாகம் அற்றவன். சத்தியமான எண்ணம் சங்கல்பம் இவை உடையவன். "
    இது பிரம்மம்தான் என்று சந்தேகம் அறத் தெரிகிறது.
    சூத்திரம் 22
    பேதவ்யபதேசாத் ந அன்ய:
    வேறுபாடு கூறியிருப்பதால்.
    பிரம்மம் எல்லாவற்றிற்கும் அந்தராத்மா அன்று சொல்லப்பட்டிருப்பதால் அது சூரியனிலிருந்து வேறுபட்டது.
    ப்ர்ஹதார்ண்ய உபநிஷத் கூறுகிறது.
    'ய ஆதித்யே திஷ்டன் ஆதித்யாத் அந்தர: யம் ஆதித்யோ ந வேத யஸ்ய ஆதித்ய: சரீரம் ய: ஆதித்யம் அந்தர: யமயதி,' என்று. ( ப்ருஹத்-3.7.,19)
    இதன் பொருள் , எவன் சூரியனிருந்து வேறுபட்டவனாய் சூரியனின் உள்ளிருந்து சூரியனை நடத்துகிறானோ , யாரை சூரியன் அறியவில்லையோ,யாருக்கு சூரியன் சரீரமோ' என்று பிரம்மத்தை வர்ணிக்கிறது.
    இதே போல ஆத்மா, பூமி மற்ற எல்லாவற்றிற்கும் பிரம்மத்தையே அந்தராத்மாவாகக் கூறுகிறது. இதனால் பரமாத்மா எல்லாவற்றிற்கும் அந்தராத்மா என்று நிரூபிக்கப் படுகிறது
    . பின்வரும் சூத்ரங்கள் ஆகாசம், பிராணன் , ஒளி முதலியவை பற்றி குறிப்பிடும் மந்திரங்கள் பிரம்மத்தையே குறிக்கின்றன என்று விளக்குகின்றன.
    ஸ்ரீபாஷ்யம் - -பகுதி1 பிரிவு1
    சூத்திரம் – 23
    ஆகாசஸ்தல்லிங்காத்
    ஆகாசம் என்று குறிப்பிட்டிருப்பது பிரம்மம்தான் , அதனுடைய அடையாளங்களால்.
    இந்தப் பகுதியில் இதுவரை பிரம்மம்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்றும் அந்தராத்மா என்றும் ஆனந்தமயம் என்றும் சேதன அசேதனப் பொருள்களினின்று வேறுபட்டது என்றும் சாஸ்திர மேற்கோள்களின் மூலம் காட்டப்பட்டது.
    இப்போது இந்தப் பிரிவின் கடைசிப் பகுதியில், ஆகாசம் மற்றும் இதர வஸ்துக்களைப் பற்றிய வாக்கியங்களைப் பற்றி விளக்கத்துடன் எவ்வாறு இவை எல்லாம் பிரம்மத்தையே குறிப்பிடுகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது.
    சாந்தோக்ய உபநிஷத்தில் பின்கண்ட வாக்கியம் காணப் படுகிறது. 'ஸர்வாணி ஹ வா இமானி பூதானி ஆகாசாத் ஏவ ஸமுத்பத்யந்தே, ஆகாசம் பிரதி அஸ்தம் யாந்தி'
    இதன் பொருள், எல்லாம் ஆகாசத்தில் இருந்து தோன்றின ஆகாசத்தில் ஒடுங்குகின்றன என்பது. '
    இங்கு ஆகாசம் என்பது பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாசமா இல்லை ப்ரம்மமா என்பது கேள்வி.
    தைத்திரீய உபநிஷத்தில் , 'ஆத்மன: ஆகாச: ஸம்பூத:' என்று காண்கிறோம். அதனால் இங்கு பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாசம்தான் குறிப்பிடப்படுகிறது என்ற வாதத்தை இந்த சூத்திரம் மறுக்கிறது.
    ஏனென்றால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள குணங்கள் எல்லாம் பிரம்மத்தையே ஒட்டி வருவன. பஞ்ச பூதமான ஆகாசம் அசேதனம். (ஜடவஸ்து). அது எல்லாவற்றிற்கும் காரணம் ஆக முடியாது . எல்லாம் அதில் ஒடுங்கும் என்பதும் சரியல்ல.
    இது தத்வமஸி அத்தியாயத்தில் ஸத் ( ப்ரம்மம் ) ஒன்றுதான் முதலில் இருந்தது , அதைத்தவிர மற்றொன்று இல்லை என்று பார்த்தோம்.
    பிறகு, அது, தான் எல்லாமாகவும் ஆக சங்கல்பித்தது என்றும் சொல்லப் பட்டது,. அதனால் பிரம்மம்தான் இந்த பிரபஞ்சத்தின் காரணம் என்று அறுதியிட்டுக் கூறியதோடு,


    தைத்திரீயத்தில் ' எதனிடம் இருந்து இவை எல்லாம் உண்டானவோ எதனால் காப்பாற்றப் படுகின்றனவோ எதில் கடைசியில் ஒடுங்குகின்றனவோ அதைத் தெரிந்துகொள். அதுதான் பிரம்மம் என்று காண்கிறோம்.
    ( தைத். 3.1)
    அதனால் இந்த குணாதிசயங்கள் எல்லாம் பிரம்மத்திற்குதான் பொருந்தும். ஆகவே ஆகாசம் என்று இங்கே சொல்லப் படுவது பிரம்மாதான் என்று நிர்ணயிக்கப்படுகிறது.
    சூத்ரம்-26
    சந்தோ அபிதாநாத் இதி சேத் ந ததா சேதோ அர்ப்பண நிகதாத் ததாஹி தர்சனம்
    'காயத்ரீ வா இதம் சர்வம் ; என்ற வாக்கியத்தினால் சொல்லப்பட்டது காயத்ரீ சந்தஸ் தான் பிரம்மம் அல்ல என்பது சரி அல்ல ஏனென்றால் இதர வாக்கியங்களால் ப்ரம்ம்த்தைப் பற்றிய தியானமே சொல்லப் பட்டிருக்கிறது.
    சாந்தோக்ய உபநிஷத்தில் 'காயத்ரீ வா இதம் ஸர்வம்,' (சாந்.3.12.1) பிரபஞ்சத்தில் உள்ளவை எல்லாமே காயத்ரி என்ற வாக்கியம் காணப்படுகிறது. இந்த சூத்ரத்தின் மூலம் அது பிரம்மத்தைத்தான் குறிக்கிறது என்று தெளிவுபடுத்தப் படுகிறது. இது அடுத்த சூத்ரத்தின் மூலம் மேலும் விளக்கப்படுகிறது.
    சூத்ரம் 27
    பூதாதி பாதவ்யபதேச உபபத்திஸ்ச ஏவம்
    பாதம் என்பது எல்லா சேதன அசேதன வஸ்துக்களைக் குறிப்பதால் .
    சூத்ரம் 28
    உபதேசபேதாத் ந இதி சேத் ந, உபயஸ்மின் அபி அவிரோதாத்
    தேஜஸைப் பற்றிய வாக்கியத்திற்கும் காயத்ரியைப் பற்றிய வாக்கியத்திற்கும் பேதம் காணப்படுகிறதே என்றால் அது சரியல்ல. இரண்டிற்கும் பேதம் இல்லை.
    சாந்தோக்யத்தில் 'யத் அத: பர: திவ: ஜ்யோதி: தீப்யதே' என்ற வாக்கியத்தில் ஜ்யோதி என்ற பதம் பிரம்மத்தைக் குறிக்கிறது என்று எடுத்துக் கொண்டால் , அந்த ஜ்யோதி விண்ணுலகத்திற்கு மேல் பிரகாசிக்கிறது என்று குறிப்பிடப் படுகிறது. ஆனால் காயத்ரியைப் பற்றிய வாக்கியத்திற்குப் பிறகு 'பாதோ அஸ்ய ஸர்வா பூதானி -த்ரிபாதஸ்யாம்ரருதம் திவி' என்று காணப்படுகிறது. அதாவது ஒருபாகம் இந்த பிரபஞ்சம் மற்ற மூன்று பாகம் விண்ணுலகத்தில் என்ற பொருள். ஜ்யோதி , காயத்ரி இரண்டுமே பிரம்மனைக் குறிக்கிறது என்றால் ஏன் இந்த வேறுபாடு?
    இதற்கு ராமானுஜர் பதில் சொல்கிறார்.
    இது வேறுபட்ட பொருள் அல்ல. ஒரு பறவை மரத்தின் மேல் பாகத்தில் இருக்கிறது என்பதற்கும் அது மரத்தின் மேல் இருக்கிறது என்பதற்கும் வித்தியாசம் இல்லை.
    அதாவது ஜ்யோதியைப் பற்றிய் வாக்கியத்தில் "அந்த ஜ்யோதி விண்ணுலகத்திற்கு மேல் பிரகாசிக்கிறது' என்பதற்கும் காயத்ரியைப் பற்றிய வாக்கியத்திற்குப் பிறகு 'பாதோ அஸ்ய ஸர்வா பூதானி -த்ரிபாதஸ்யாம்ரருதம் திவி' அதாவது ஒருபாகம் இந்த பிரபஞ்சம் மற்ற மூன்று பாகம் விண்ணுலகத்தில் என்பதற்கும் ஒரேபொருள்
    அதனால் இரண்டு உபநிஷத் வாக்கியங்களும் பிரம்மத்தையே குறிக்கும்.
Working...
X