Announcement

Collapse
No announcement yet.

Karumbeswarar temple, Thiruvenniyoor

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Karumbeswarar temple, Thiruvenniyoor

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    *பதியும் பணியே பணியாய் அருள்வாய்.*
    ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
    *120*
    *பாடல் பெற்ற சிவ தல தொடர்.*
    •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
    *பாடல் பெற்ற சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*
    ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
    *கரும்பேஸ்வரர். திருவெண்ணியூர்.


    *இறைவன்:* வெண்ணிக்கரும்பர், திரயம்பகேஸ்வரர், இரசபுரீஸ்வரர், வெண்ணிநாதர்.


    *இறைவி:* அழகிய நாயகி, சௌந்தரநாயகி.


    *திருமேனி:* சுயம்புவான திருமேனி.


    *ஆகமம்:* காமிக ஆகமம்.


    *ஆலயத் திறப்பு காலம்:*
    தினந்தோறும் காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.


    *ஆலயப் பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.


    *புராணப் பெயர்கள்:* திருவெண்ணியூர், கோயில் வெண்ணீ.


    தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் நூற்றி இரண்டாவது தலமாகப் போற்றப் படுகிறது.


    *ஊர்:* கோயில் வெண்ணீ.


    *தேவாரம் பாடியவர்கள்:*
    அப்பர், சம்பந்தர்.


    *திருவிழா:* நவராத்திரி ஒன்பது நாட்களும்,
    பங்குனி உத்திரம்,
    சித்ரா பெளர்ணமி,
    வைகாசி விசாகம்,
    ஆனித் திருமஞ்சனம்,
    திருக்கார்த்திகை,
    திருவாதிரை,
    தைப்பூசம்,
    மாசி மகம்.


    *அஞ்சல் முகவரி:*
    அருள்மிகு வெண்ணிக் கரும்பேஸ்வரர் திருக்கோயில்,
    கோயில் வெண்ணி,
    கோயில் வெண்ணி அஞ்சல்,
    நீடாமங்கலம் வட்டம்,
    திருவாரூர் மாவட்டம்.
    பின்கோடு-614 403


    *தொடர்புக்கு:*
    98422 94416


    *தல மரம்:*
    நந்தியாவர்த்தம்.


    *தீர்த்தம்:* சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்.


    *வழிபட்டோர்:*
    சம்பந்தர், அப்பர் ,சூரியன், சந்திரன், முசுகுந்தச்சக்கரவர்த்தி.


    *தேவாரப் பாடல்கள்:*
    சம்பந்தர், அப்பர்.

    *சிறப்புகள்:*
    இறைவன் திருமேனி கரும்புக்கழிகளை ஒன்றுசேர்த்து வைத்தாற்போல் இருக்கிறது.


    *இருப்பிடம்:*
    தஞ்சாவூர் திருவாரூர் இரயில் பாதையில், கோவில் வெண்ணி இரயில் நிலையத்திற்கு மூன்று கி.மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது.


    தஞ்சாவூர் நீடாமங்கலம், தஞ்சாவூர் திருவாரூர் செல்லும் பேருந்துகளில் சென்று, இப்பொழுது *"கோவில்வெண்ணி"* என்றழைக்கப்படும் இத்தலத்தை அடையலாம்.


    *கோவில் அமைப்பு:*
    இவ்வாலயத்துக்குச் செல்கையில், கிழக்கு திசையில் மூன்று நிலைகளைக் கொண்டு அழகான கோபுரத்தினைக் கண்டோம்.


    *சிவ சிவ* என மொமிந்து வணங்கிக் கொண்டோம்.


    கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தோம்.


    கிழக்குப் பிரகாரத்தில் நந்தி இருந்தார். வணங்கி உள் புகுந்தோம்.


    அடுத்திருந்த பலிபீடத்து முன் நின்று, நம்மிடமிருந்த ஆணவமலத்தை பலியிட்டுவிட்டு நகர்ந்தோம்.


    வெளிப் பிரகாரத்தில் செல்லும்போது, விநாயகர், முருகன், கஜலட்சுமி மற்றும் நவக்கிரக சந்நிதிகள் அமைந்திருந்தன.


    மூலவரைக் காண அவரிருக்கும் சந்நிதிக்கு வந்தோம்.


    கருவறையில் கிழக்கு நோக்கிய வண்ணம் இறைவன் கரும்பேஸ்வரர் சுயம்புலிங்க உருவில் காட்சியருளிக் கொண்டிருந்தார்.


    சிவலிங்கத் திருமேனியின் பாணப் பகுதி ஒரு கரும்புக்கழிகளை ஒன்றுசேர்த்து கட்டி வைத்தது போலக் காணப்பெற்றோம்.


    மனமுருகி பிரார்த்தித்தோம். அர்ச்சகர் காட்டிய தீபாரதனையைக் கண்டு சிரமேற் கைகள் உயர்த்தித் தொழுதோம்.


    பின் அர்ச்சகரிடம் பெற்ற வெள்ளிய விபூதியை அங்கேயே நெற்றினில் தரித்துக் கொண்டு வெளி வந்தோம்.


    வெளியே கருவறைச் சுற்றுச் சுவற்றில் கோஷ்ட தெய்வங்களாக நடன விநாயகரையும் தட்சினாமூர்த்தியையும், அண்ணாமலையாரையும், மற்றும் துர்க்கை ஆகியோர்களைத் தொடர்ச்சியாக ஒவ்வொருவரையும் வணங்கி நகர்ந்தோம்.


    அடுத்தாக அம்பாள் செளந்தர நாயகியைத் தரிசிக்க அவள் சந்நிதிக்கு ச்சீ சென்றோம்.


    சந்நிதி தெற்கு நோக்கிய வண்ணம் அமைந்திருந்தது. பரிபூரணமாக அம்பாளை வணங்கிக் கொண்டோம். பக்தர்களின் கூட்டம் இல்லாதிதின் காரணமாய் அம்பாளின் அருட்பார்வையை வெகுவாக வணங்க முடிந்தது.


    பின், குங்குமப் பிரசாதத்துடன் வெளிவந்தோம்.


    *சர்க்கரை நோய்க்கு மருந்து:*
    கரும்பில் இருந்து தான் சர்க்கரை எடுக்கப்படுகிறது. நமது உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது சர்க்கரை நோய் ஏற்படுகிறது.


    இந்த சர்க்கரை நோய் இன்று நம்மில் அனேகருக்கு இருக்கிறது.


    இந்நோய் உள்ளவர்கள் தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வருவது மிகவும் அவசியம்.


    கரும்புக் காடாக இருந்த இத்தலத்தில் சுயம்புவாகத் தோன்றிய இத்தலத்து இறைவனையும், அம்பாள் செளந்தர நாயகியையும் தொடர்ந்து வழிபட்டு வந்தால் விரைவில் சர்க்கரை நோயிலிருந்து விடுபட்டு குணம் பெறலாம் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை.


    இத்தலத்திற்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும், திருநாவுக்கரசர் பதிகங்கள் இரண்டும், ஆக மொத்தம் மூன்று பதிகங்கள் கிடைக்கப் பெற்றுள்ள தலம் இது.


    சம்பந்தர் தனது பதிகத்தில் (இரண்டாம் திருமுறை) திருவெண்ணியூர் இறைவனை வணங்குபவர்களின் வினைகள் நீங்கும் என்றும், துன்பங்கள அவர்களை அணுகாது என்றும், இப்பதிகத்தை தொடர்ந்து ஓதுபவர்கள் மண்ணுலகினும் மேம்பட்ட சிவலோகத்தை அடைந்து இனிது வாழ்வர் என்றும் பலவாறு குறிப்பிட்டுள்ளார்.


    திருநாவுக்கரசரும் தனது பதிகத்தில் இதனையே குறிப்பிடுகிறார்.


    ஐந்தாம் திருமுறையில் உள்ள அவரின் பதிகத்தில் இத்தல இறைவனை தலைதாழ்த்தி வணங்குபவர்களின் வினைகள் யாவும் நீங்கும் என்று குறிப்பிடுகிறார்.


    சுந்தரர் தனது ஷேத்திரக் கோவைப் பதிகத்தில் (ஏழாம் திருமுறை, நாற்பத்தேழாவது பதிகத்தின் ஐந்தாவது பாடலில்) இத்தல இறைவனை *"வெண்ணிக் கரும்பே"* என்று குறிப்பிட்டு பாடியுள்ளார்.


    *தல அருமை:*
    சதுர்யுகங்களிலும் தேவர்கள் வழிபாடு செய்த புண்ணியத்தலம் திருவெண்ணியாகும்.


    பங்குனி உத்திரம், சித்ரா பவுர்ணமி போன்ற புண்ணிய நாட்களில் சட்டைமுனி, சித்தர்கள் கூடி இத்திருத்தலத்து ஈசனை பூசிக்கின்றனர் என்றார் கோலர் எனுஞ் சித்தர்.


    திருவெண்ணியூர் என்றும், கோயில் வெண்ணி யென்றும் இத்தலத்தை தேவர்கள் போற்றினர்.


    தல தீர்த்தத்தினை சூரிய தீர்த்தம் என்றும் சந்திர தீர்த்தம் என்றும் முனிவர்கள் வழங்கினர்.


    முதுகு எலும்பில் தொல்லையுடன் இருப்போர் நவராத்திரி அன்று சூரிய அஸ்தமனத்திற்கு முன் நீராடி இறைவனை தொழ தண்டுவட பீடை அகலும் என்றார் அகத்தியர்.


    தேவர் தலைவன் இந்திரன் தன் பதவிக்கு அசுரரால் கேடு வரும்போதெல்லாம் இத்தலம் வந்து தொழுது பதவியை காத்துக் கொண்டிருக்கிறான்.


    யார் ஒருவருக்கு நல்ல பதவி வேண்டும் என்ற எண்ணம் உண்டோ, பதவிக்கு எவராலேனும் கேடு சூழுமென்றாலோ அவர்கள் இத்திருக்கோயிலின் தலவிருட்சமான நந்தியா வர்த்தத்தை சந்திர, சூரிய புஷ்கரணியில் மூழ்கி பின்தொழ பதவி பிழைப்பதோடு மட்டுமின்றி எதிரிகள் அழிவர் என்பது திண்ணம் என்று பதஞ்சலியோகியார் கூறியிருக்கிறார்.


    இத்திருக்கோயில் கருவறை அகழி அமைப்புடையது ஆகும்.


    *"திருமேனி கரும்புகட்டுடைத்து''* என்றார் திருமூலர்.


    ஈசனின் மேனி அதாவது பாணத்தில் கரும்பு கட்டுகளாக கட்டப்பட்டிருப்பது போன்ற காட்சியுடன் அருள்பாலிக்கின்றார்.


    இவரைத் தொழுபவருக்கு சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகின்றது என்பது உண்மை.


    பாம்பாட்டி சித்தர் தம் பாடலில் கூட.......


    *"குருதி தன்னிலே கண்ட இன்சுவை யகலச் செய்வன் கரும்பன்ன மேனியன் ரசபுரீச வெண்ணியூரனே.* என்றிருக்கிறார்.


    சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரையையும், ரவையையும் சம அளவில் கலந்து பிராகாரத்தை வலம் வந்து எறும்புக்கு உணவாய் இடவேண்டும்.


    இதனால் சர்க்கரை நோய் பூரண குணம் காணும் என்கிறார்கள்.


    இத்திருக்கோயிலுள் உறையும் பிடாரி அம்மன் வெற்றி தேவதை ஆவாள்.


    இவரை மகா சிவராத்திரியில் விரதமிருந்து தொழுது வருபவருக்கு சகல மந்திர சக்திகளும் சித்திக்கின்றது. போட்டியில் கலந்துகொள்ளுமுன் தொழுது செல்வோருக்கு வெற்றி நிச்சயம்.


    முன்பொரு சமயம் இத்தலம் முழுதும் கரும்புகள் செழித்து வளர்ந்து கரும்பு காடாக முளைத்து செழித்திருந்தது.


    முனிவர்கள் தல யாத்திரை மேற்கொண்டபோது இத்திருத்தலம் வந்தனர். அப்பொழுது இறைவனின் திருமேனியை கண்டு தொழுதனர்.


    அவர்களில் ஒருவர் இத்தலத்தின் தலவிருட்சம் கரும்பு என்றும், மற்றொருவர் வெண்ணி என்று அழைக்கப்படும் நந்தியாவர்த்தம் என வாதிட்டனர்.


    இறைவன் அசரீரியாக தோன்றி எமது பெயரில் *கரும்பும், தலவிருட்சமாக வெண்ணியும்* இருக்கட்டுமென்றார்.


    சித்தத்தை சிவன்பால் வைத்தே வாதிட்ட முனிவருக்கு ஈசன் மேனி கரும்பாகி பேரிருப்ப வெண்ணியமே தலத் தரு
    வென்றனனே யடிமுடியற்றோனே என்றார்.


    இதுவே வடமொழியில் ரசபுரீஸ்வரர் என்று ஆனது.


    தலவிருட்சத்தின் பெயராலேயே இது வெண்ணியூர் என அழைக்கப்பட்டது.


    பங்குனி 2, 3, 4 தேதிகளில் சூரிய பூசை நடக்கிறது. இறைவன் திருமேனியில் சூரியனின் கதிர்கள் படர்கின்றன.


    இந்நாளில் ஈசனை தொழுவோருக்கு கண் சம்பந்தப்பட்ட பீடைகள் அகலும் என்பது சித்தர் வாக்கு.


    *வெண்ணிப் போர்:*
    தமிழக சரித்திரம் படித்தவர்கள் வெண்ணியில் நடந்த போரைப் பற்றி நன்கு அறிந்திருப்பார்கள்.


    தன்னை எதிர்த்த சேர, சோழ மற்றும் குறுநில மன்னர்களை எதிர்த்து கரிகால் சோழன் இந்த வெண்ணியில் தான் போரிட்டு பெரும் வெற்றிவாகை கண்டான்.


    இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளியிருந்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக கரிகால் சோழன் கரும்பேஸ்வர் ஆலயத்திற்கு பல திருப்பணிகள் செய்வித்தான்


    *கல்வெட்டின் கதை:*
    இறைவன் திருமேனி கரும்புக்கழிகளை ஒன்றுசேர்த்து வைத்தாற்போல் இருக்கிறார்.


    இக்கோவிலில் பல கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மையான கல்வெட்டுகள் சோழர் காலத்தவையாகும்.


    நீரிழிவு வியாதி நீக்க ஸ்ரீசம்பந்தர், ஸ்ரீஅப்பர் ஆகிய பெருமக்களால் பாடல் பெற்ற இறைவனுக்கு சீனியும் ரவையும் நிவேதனம் செய்து பிரசாதமாக பிறருக்கும், எறும்புகளுக்கும் இட வியாதி நீங்கும் என்பது ஐதீகம்!


    கரிகாற்சோழன் தனது பதினெட்டாவது வயதில் இங்குள்ள பிடாரி அம்மனை வழிபட்டு, சேர பாண்டிய மற்றும் குறுநில மன்னர்களை எதிர்த்து போர் செய்து வெற்றி பெற்றான்.


    கரிகாற்சோழன் பெற்ற இந்த வெற்றியே மாபெரும் வெற்றியாக கல்வெட்டு கூறுகிறது.


    *தேவாரம்:*
    முத்தி னைப்பவ ளத்தை முளைத்தவெம்
    தொத்தி னைச்சுட ரைச்சுடர் போலொளிப்
    பித்த னைக்கொலும் நஞ்சினை வானவர்
    நித்த னைநெரு நற்கண்ட வெண்ணியே.


    முத்தினை, பவளத்தை, முளைத்த எம் பூங்கொத்தினை, சுடரை, சுடர்போல் ஒளி உடைய பித்தனை, கொல்லும் நஞ்சு போல்பவனை, வானவர்க்குள் நித்தனை நேற்றுக்கண்ட வெண்ணித்தலமே இன்று என் உள்ளத்தில் பதிந்திருந்து பேரின்பத்தை மிகுவிப்பது.


    வெண்ணித் தொல்நகர் மேயவெண் திங்களார்
    கண்ணித் தொத்த சடையர் கபாலியார்
    எண்ணித் தம்மை நினைந்திருந் தேனுக்கு
    அண்ணித் திட்டமு தூறுமென் நாவுக்கே.


    வெண்ணியாகிய பழைய நகரத்தை மேவியவரும், வெண்திங்களைச் சூடியவரும், கொன்றைக் கண்ணியை உடைய கொத்தாக உள்ள சடையுடையவரும், கபாலத்தைக் கையில் ஏந்திய வரும், ஆகிய அப்பெருமானை எண்ணி நினைத்திருந்தேனுக்கு அவர் நினைவு என் நாவினில் அண்ணித்து அமுதாக ஊறும்.


    காற்றி னைக்கன லைக்கதிர் மாமணி
    நீற்றி னைநினைப் பார்வினை நீக்கிடும்
    கூற்றி னையுதைத் திட்ட குணமுடை
    வீற்றி னைநெரு நற்கண்ட வெண்ணியே.


    காற்றும் கனலும் ஆவான்; கதிர்விக்கும் மாமணிமேற் சண்ணித்த திருநீறு போன்ற திருமேனியுடையான்; அத்திருமேனியை நினைப்பார் வினையை நீக்குபவன். கூற்றினை உதைத்த குணமுடைய தனிச்சிறப்புடையவன். இப்பெருமானை நேற்றுக் காண்டற்கு இடமாக இருந்த திருவெண்ணியே எனக்கு இதுபோது பேரின்பத்தைப் பெருக்குவது.


    நல்ல னைத்திகழ் நான்மறை யோதியைச்
    சொல்ல னைச்சுட ரைச்சுடர் போலொளிர்
    கல்ல னைக்கடி மாமதில் மூன்றெய்த
    வில்ல னைநெரு நற்கண்ட வெண்ணியே.


    நல்லவினை, விளங்கும் நால்வேதங்களை ஓதும்பிரானை, சொல்வடிவானவனை, ஒளியை, சுடர்விட்டு ஒளிர்கின்ற திருக்கயிலாயத் திருமலை உடையவனை, திரிபுரம் எரிசெய்த வில்லுடையவனை நேற்றுக்கண்ட வெண்ணியே இன்று எம்மை இது செய்வது.


    சுடரைப் போலொளிர் சுண்ணவெண் ணீற்றனை
    அடருஞ் சென்னியில் வைத்த அமுதினைப்
    படருஞ் செஞ்சடைப் பான்மதி சூடியை
    இடரை நீக்கியை யான்கண்ட வெண்ணியே.


    சுடரைப் போல் ஒளிர்கின்ற வெண்ணீற்றுப் பொடியணிமேனியனை, பூவிதழும் (பிறவும்) சென்னியிலே வைத்த அமுதனையானை, படர்ந்த செஞ்சடையிலே பால் போன்ற மதியைச் சூடியவனை, இடர்கள் நீக்கும் இறைவனை யான் கண்டது வெண்ணித் தலத்திலாகும். சடைநெருங்கிய சென்னியில் அமுது (நீர் - கங்கை) வைத்தவனை - எனினும் அமையும். (வைத்த அமுதினை என்பதைஅருங்கேடன் என்பது போலக் கொள்க)


    பூத நாதனைப் பூம்புக லூரனைத்
    தாதெ னத்தவ ழும்மதி சூடியை
    நாதனை நல்ல நான்மறை யோதியை
    வேத னைநெரு நற்கண்ட வெண்ணியே.


    பூதங்களுக்குத் தலைவனை, பூக்கள் நிறைந்த புகலூரனை, மகரந்தம் போல் தவழும் மதியைச் சூடியவனை, தலைவனை, நான்மறை ஓதியவனை, வேதப்பொருளானவனை நேற்று வெண்ணியிற் கண்டு ஏத்தினேன்.


    ஒருத்தி யையொரு பாகத் தடக்கியும்
    பொருத்தி யபுனி தன்புரி புன்சடைக்
    கருத்த னைக்கறைக் கண்டனைக் கண்ணுதல்
    நிருத்த னைநெரு நற்கண்ட வெண்ணியே.


    ஒருத்தியை ஒருபாகத்தில் அடக்கியும், மற்றொருத்தியைப் புன்சடையிற் பொருத்திய புனிதனை, கருத்துள் இருப்பவனை, திருநீலகண்டனை, கண்ணுதலானை, நிருத்தம் ஆடுவானை, நேற்று வெண்ணியிற்கண்டு ஏத்தினேன்.


    சடைய னைச்சரி கோவண ஆடைகொண்
    டுடைய னையுணர் வார்வினை தீர்த்திடும்
    படைய னைமழு வாளொடு பாய்தரும்
    விடைய னைநெரு நற்கண்ட வெண்ணியே.


    சடை உடையவனை, சரியும் கோவண ஆடை கொண்டு உடையவனை, உணர்வார் வினைதீர்த்திடும் மழுவாளொடு பிறவும் படை உடையவனை, பாய்ந்து செல்லும் விடை உடையவனை நேற்று வெண்ணியிற் கண்டு ஏத்தினேன்.


    பொருப்ப னைப்புன லாளொடு புன்சடை
    அருப்ப னையிளந் திங்களங் கண்ணியான்
    பருப்ப தம்பர வித்தொழுந் தொண்டர்கள்
    விருப்ப னைநெரு நற்கண்ட வெண்ணியே.


    திருக்கயிலாயப் பொருப்புக்குரியவனை, கங்கையாளைச் சடையிற் கொண்டவனை, அரும்பு போன்ற இளந்திங்களைக் கண்ணியாகக் கொண்டவனை, திருக்கயிலாயத்தைப் பரவிவாழ்த்தும் தொண்டர்கள் விருப்பத்துக்குரியவனை நேற்றுக் கண்டு வெண்ணியில் ஏத்தினேன்.


    சூல வஞ்சனை வல்லவெஞ் சுந்தரன்
    கோல மாஅருள் செய்ததோர் கொள்கையான்
    காலன் அஞ்ச வுதைத்திருள் கண்டமாம்
    வேலை நஞ்சனைக் கண்டது வெண்ணியே.


    வஞ்சிப்பார் வஞ்சனையைக் களையவல்ல எமது அழகன்; திருமேனிகாட்டி அருள்செய்த கொள்கையினை உடையான்; காலன் அஞ்சும்படி உதைத்தவன்; கண்டம் இருளும்படி செய்த கடல் நஞ்சினை உண்டு அமரர்களை உயிர் வாழச்செய்தவன். இப்பெருமானை நெருநல்கண்ட இடம் திருவெண்ணியூரே ஆம்.


    இலையி னார்கொன்றை சூடிய ஈசனார்
    மலையி னாலரக் கன்திறல் வாட்டினார்
    சிலையி னால்மதி லெய்தவன் வெண்ணியைத்
    தலையி னால்தொழு வார்வினை தாவுமே.


    இலைகளுடன் கூடிய கொன்றை சூடிய ஈசனார் மலையினால் அரக்கன் ஆற்றலை வாட்டினார். வில்லினால் முப்புரங்களை எய்தவர்க்குரிய வெண்ணியைத் தலையினால் தொழுவார்களது வினை நீங்கும்.


    திருச்சிற்றம்பலம்.


    *தேவாரம்:*
    தொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியி னாருந்
    தூநீறு துதைந்திலங்கு மார்பி னாரும்
    புண்டரிகத் தயனொடுமால் காணா வண்ணம்
    பொங்குதழற் பிழம்பாய புராண னாரும்
    வண்டமரும் மலர்க்கொன்றை மாலை யாரும்
    வானவர்க்கா நஞ்சுண்ட மைந்த னாரும்
    விண்டவர்தம் புரமூன்றும் எரி செய்தாரும்
    வெண்ணியமர்ந்த துறைகின்ற விகிர்த னாரே.


    சிவபெருமான், தொண்டு புரியும் அடியவர்களுக்கு நன்னெறியாகுபவர்; தூய திருவெண்ணீறு திகழும் மார்பினர்; அயனும் மாலும் காணாதவாறு பேரழற்பிழம்பாய் ஓங்கியவர்; கொன்றை மாலை தரித்தவர்; தேவர்கள் உய்யும் தன்மையில் நஞ்சினை உட்கொண்டு அருள் புரிந்தவர்; அசுரர்களின் கோட்டைகள் மூன்றினையும் எரித்துச் சாம்பலாக்கியவர். அவர் சென்னியில் உறையும் விகிர்தர் ஆவார்.


    நெருப்பனைய மேனிமேல் வெண்ணீற் றாரும்
    நெற்றிமே லொற்றைக்கண் நிறைவித் தாரும்
    பொருப்பரையன் மடப்பாவை யிடப்பா லாரும்
    பூந்துருத்தி நகர்மேய புராண னாரும்
    மருப்பனைய வெண்மதியக் கண்ணி யாரும்
    வளைகுளமும் மறைக்காடும் மன்னி னாரும்
    விருப்புடைய அடியவர்தம் முள்ளத் தாரும்
    வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.


    சிவபெருமான், நெருப்புப் போன்ற வண்ணம் கொண்ட திருமேனியில் திருவெண்ணீறு தரித்தவர்; நெற்றியில் கண்ணுடையவர்; உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டு விளங்குபவர்; பூந்துருத்தியில் மேய புராணனார்; யானையின் தந்தம் போன்று வளைந்து மேவும் வெண்மையான சந்திரனைச் சூடியுள்ளவர்; வளைகுளம், திருமறைக்காடு ஆகிய தலங்களில் விளங்குபவர்; திருத்தொண்டர்களின் உள்ளத்தில் வீற்றிருப்பவர். அவர் வெண்ணியில் உறையும் விகிர்தனார் ஆவார்.


    கையுலாம் மூவியைவே லேந்தி னாருங்
    கரிகாட்டில் எரியாடுங் கடவு ளாரும்
    பையுலாம் நாகங்கொண் டாட்டு வாரும்
    பரவுவார் பாவங்கள் பாற்று வாரும்
    செய்யுலாங் கயல்பாய வயல்கள் சூழ்ந்த
    மெய்யுலாம் வெண்ணீறு சண்ணித் தாரும்
    வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.


    சிவபெருமான், சூலத்தை ஏந்தியவர்; கையில் நெருப்பேந்தி மயானத்தில் நடனம் புரிபவர்; நாகத்தை ஆட்டுபவர்; திருப்புன்கூரில் மேவியவர். திருமேனியில் திருவெண்ணீறு தரித்தவர்; அவர் வெண்ணியில் உறையும் விகிர்தர் ஆவார்.


    சடையேறு புனல்வைத்த சதுர னாருந்
    தக்கன்றன் பெருவேள்வி தடைசெய் தாரும்
    உடையேறு புரியதன்மேல் நாகங் கட்டி
    யுண்பலிக்கென் றாரூரி னுழிதர் வாரும்
    மடையேறிக் கயல்பாய வயல்கள் சூழ்ந்த
    மயிலாடு துறையுறையும் மணாள னாரும்
    விடையேறு வெல்கொடியெம் விமல னாரும்
    வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.


    சிவபெருமான், கங்கையைச் சடையில் வைத்த சதுரர்; தக்கன் செய்த வேள்வியைத் தகர்த்தவர்; புலித்தோலை உடையாகக் கொண்டு அதன்மேல் நாகத்தைக் கட்டியவர்; பலியேற்று ஊர் தோறும் திரிபவர்; மயிலாடுதுறையுள் மேவும் மணாளர்; இடபக் கொடியுடையவர். அவர் வெண்ணியில் உறையும் விகிர்தர் ஆவார்.


    மண்ணிலங்கு நீரனல்கால் வானு மாகி
    மற்றவற்றின் குணமெலா மாய்நின் றாரும்
    பண்ணிலங்கு பாடலோ டாட லாரும்
    பருப்பதமும் பாசூரும் மன்னி னாரும்
    கண்ணிலங்கு நுதலாருங் கபால மேந்திக்
    கடைதோறும் பலிகொள்ளுங் காட்சி யாரும்
    விண்ணிலங்கு வெண்மதியக் கண்ணி யாரும்
    வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.


    சிவபெருமான், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் மற்றும் அவற்றின் குணமாக விளங்குபவர்; பண்ணுடன் ஏத்தும் இசை விளங்கும் பருப்பதம் பாசூர் ஆகிய தலங்களில் மேவியவர்; நெற்றியில் கண்ணுடையவர்; கையில் கபாலம் ஏந்தியவர்; தாருகவனத்து முனிவர்களின் இல்லந்தோறும் சென்று பலி கொள்பவர்; வெண்மையான சந்திரனைச் சூடியவர்; அப் பெருமான், வெண்ணியில் உறையும் விகிர்தர் ஆவார்.


    வீடுதனை மெய்யடியார்க் கருள்செய் வாரும்
    வேலைவிட முண்டிருண்ட கண்டத் தாரும்
    கூடலர்தம் மூவெயிலும் எரிசெய் தாரும்
    குரகைழ லாற் கூற்றுவனைக் குமைசெய் தாரும்
    ஆடுமர வரைக்கசைத்தங் காடு வாரும்
    ஆலமர நீழலிருந் தறஞ்சொன் னாரும்
    வேடுவராய் மேல்விசயற் கருள்செய் தாரும்
    வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.


    சிவபெருமான், மெய்யடியவர்களுக்கு வீடுபேறு அருள்பவர்; நஞ்சுண்டு கருத்த கண்டம் உடையவர்; முப்புர அசுரர்களின் கோட்டைகளை எரித்தவர்; கூற்றுவனைக் காலால் உதைத்தவர்; நாகத்தை ஆட்டுபவர்; கல்லால மரத்தின் கீழ் இருந்து அறம் உரைத்தவர்; வேட்டுவத் திருக்கோலத்தில் சென்று அர்ச்சுனருக்கு அருள் செய்தவர். அப் பெருமான், வெண்ணியில் வீற்றிருக்கும் விகிர்தனார் ஆவார்.


    மட்டிலங்கு கொன்றையந்தார் மாலை சூடி
    மடவா ளவளோடு மானொன் றேந்திச்
    சிட்டிலங்கு வேடத்த ராகி நாதஞ்
    சில்பலிக்கென் றூரூர் திரிதர் வாருங்
    கட்டிலங்கு பாசத்தார் வீச வந்த
    காலன்றன் கால மறுப்பார் தாமும்
    விட்டிலங்கு வெண்குழைசேர் காதி னாரும்
    வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.


    சிவபெருமான், கொன்றை மாலை சூடி விளங்குபவர்; உமாதேவியை ஒரு பாகங்கொண்டு மான் ஏந்தியவர்; சிட்டர் வேடத்தராகிப் பலியேற்றுத் திரிபவர்; பாசக் கயிற்றை வீசிய காலனை மாய்த்தவர், வெண் குழையக் காதில் அணிந்தவர். அப்பெருமான், வெண்ணியில் வீற்றிருக்கும் விகிர்தனார் ஆவார்.


    செஞ்சடைக்கோர் வெண்டிங்கள் சூடி னாருந்
    திருவால வாயுறையுஞ் செல்வ னாரும்
    அஞ்சனக்கண் அரிவையொரு பாகத் தாரும்
    ஆறங்கம் நால்வேத மாய்நின் றாரும்
    மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி
    மதிலாரூர் புக்கங்கே மன்னி னாரும்
    வெஞ்சினத்த வேழமது உரிசெய் தாரும்
    வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.


    சிவபெருமான், சடையில் சந்திரனைச் சூடியவர்; திருஆலவாயில் உறையும் செல்வர்; உமைபாகர்; ஆறு அங்கமும் நான்கு வேதமும் ஆனவர்; நீண்ட சோலையும் மாடவீதியும் கொண்ட ஆரூரில் உறைபவர்; யானையின் தோலை உரித்தவர். அப்பெருமான், வெண்ணியில் வீற்றிருக்கும் விகிர்தனார் ஆவார்.


    வளங்கிளர்மா மதிசூடும் வேணி யாரும்
    வானவர்க்கா நஞ்சுண்ட மைந்த னாருங்
    களங்கொளவெண் சிந்தை யுள்ளே மன்னினாருங்
    கச்சியே கம்பத்தெங் கடவு ளாரும்
    உளங்குளிர அமுதூறி யண்ணிப் பாரும்
    உத்தமரா யெத்திசையும் மன்னி னாரும்
    விளங்கிளரும் வெண்மழுவொன் றேந்தி னாரும்
    வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.


    சிவபெருமான், வளரும் சந்திரனைச் சூடியவர்; நீலகண்டர்; என் சிந்தையுள் மேவுபவர்; திருக்கச்சியேகம்பத்தில் திகழ்பவர்; உள்ளத்தில் நிறையும் அமுதாகுபவர்; எல்லாத் திசைகளிலும் ஒளிர்பவர்; மழுப்படையுடையவர். அவர் வெண்ணியில் வீற்றிருக்கும் விகிர்தனார் ஆவார்.


    பொன்னிலங்கு கொன்றையந்தார் மாலை சூடிப்
    புகலூரும் பூவணமும் பொருந்தி னாருங்
    கொன்னிலங்கு மூவிலைவே லேந்தி னாருங்
    குளிரார்ந்த செஞ்சடையெங் குழக னாருந்
    தென்னிலங்கை மன்னவர்கோன் சிரங்கள் பத்துந்
    திருவிரலா லடர்த்தடனுக் கருள்செய் தாரும்
    மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகத் தாரும்
    வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.


    சிவபெருமான், கொன்றை மாலை சூடியவர்; திருப்புகலூர், திருப்பூவணம் ஆகிய தலங்களில் மேவுபவர்; சூலம் ஏந்திச் செஞ்சடையில் கங்கை திகழ விளங்குபவர்; இராவணனுடைய தலைகளைத் திருவிரலால் ஊன்றி நெரித்தவர்; உமைபாகர். அப்பெருமான் வெண்ணியில் வீற்றிருக்கும் விகிர்தனார் ஆவார்.


    திருச்சிற்றம்பலம்.


    பாடல் பெற்ற சிவ தல அருமைகள் பெருமைகள் தொடரில் நாளைய அடுத்த பதிவு *திருப்பூவனூர், புஷ்பவனநாதர்.*


    •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X