Announcement

Collapse
No announcement yet.

Purusha sooktam with tamil meanings

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Purusha sooktam with tamil meanings

    Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
    புருஷசூக்தம் பிரதம அனுவாகம்
    1.ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்
    ஸ பூமிம் விச்வதோ வ்ருத்வா அதய்திஷ்டத் தசாங்குலம்
    புருஷ: - பரமபுருஷரானவர்
    ஸஹஸ்ர சீர்ஷா- ஆயிரக்கணக்கான தலைகள்
    ஸஹஸ்ராக்ஷ: - ஆயிரக்ககணக்கான கண்கள்
    ஸஹஸ்ரபாத்- ஆயிரக்கணக்கான பாதங்கள்
    உடையவர்
    ஸ- அவர்
    பூமிம்- பூமியை
    விஸ்வத: - எங்கும்
    வ்ருத்வா- வியாபித்து
    தசாங்குலம்- பத்துவிரல்களால் எண்ணும் எண்ணிக்கையை
    அத்யதிஷ்டத்- கடந்து நிற்கிறார்.
    சாதாரணமாக நாம் படங்களில் காட்டப்படும் விஸ்வரூப தரிசனத்தைப் பார்த்திருக்கிறோம். அனேக தலைகள் கைகள் இவ்வாறு.
    இது ஒரு உருவகம் அன்றி உண்மை இல்லை. புருஷ: என்பது இறைவனைக் குறிக்கிறது. அவன் எங்கும் சர்வவ்யாபி என்பதையே இவ்வண்ணம் சித்தரிக்கப் படுகிறது. அகில உலகமும் அவன் உருவமே என்ற அர்த்தத்தில் ஆயிரம் தலைகள் கண்கள் இவை சொல்லப்படுகின்றன.
    சர்வம் பிரம்ம மயம் என்பதே இதன் பொருள். வர பூமியை எங்கும் வியாபித்து என்பதும் இதைத்தான் குறிக்கிறது.
    பத்து விரல்களால் எண்ணும் எண்ணிக்கையை கடந்து நிற்கிறார் என்பதற்கு என்ன அர்த்தம் என்று பார்க்கலாம்.
    இது கணிதத்தில் அளவு என்ற பொருளைக் குறிக்கும் சொல். எண்ணிக்கைக்கு ஆரம்பம் பத்து விரல்கள் அல்லவா? அதைகடந்து நிற்கிறான் என்றால் இறைவனின் எல்லையில்லாத் தன்மையைக் குறிக்கிறது. அதாவது அனந்தம் infinity.
    'அணோரணீயான் மஹதோ மஹீயான் ' அணுவிலும் சிறியன் பெரிதிலும் பெரியன் என்கிறது உபநிஷத்.
    இங்கு எல்லாவற்றைக் காட்டிலும் பெரிய வடிவம் சொல்லப்படுகிறது. சாந்தோக்ய உபநிஷத்தில் தஹர வித்யை என்னும் பாகத்தில் அணுவிலும் சிறிய வடிவம் சொல்லப்படுகிறது.
    பிரம்ம சூத்ரத்தில் 'விகாராவர்த்தி ச ததா ஹி ஸ்திதிம் ஆஹ' என்ற வாக்கியம் காணப்படுகிறது. (பி. சூ.4.4.19)
    இதன் பொருள், பிரம்மம் இந்த வேறுபாடுகள் உடைய ப்ரப்ஞ்சத்தைத் தாண்டி நிற்கிறது.
    இதையே பகவானுடைய விஸ்வரூப தரிசனத்தைக் கண்ட அர்ஜுனன் கூறுகிறான்.
    அநேக பாஹூதர வக்த்ர நேத்ரம் பச்யாமி த்வாம் சர்வதோ அனந்த ரூபம்
    நாந்தம் ந மத்யம் நபுனஸ்தவாதிம் பச்யாமி விஸ்வேஸ்வர விஸ்வரூப
    விஸ்வேஸ்வர – பரம்பொருளே
    விஸ்வரூப- எல்லாம் ஆனவனே
    த்வாம் – உன்னை
    அநேகபாஹூதர வக்தர்நேத்ரம் – அநேக கைகள், முகங்கள் உடல், கண்கள் உடையவனாக
    \பச்யாமி-காண்கிறேன்
    சர்வத: – சர்வ வ்யாபியாக
    அனந்த ரூபம் – எல்லையில்லாத உருவமாக
    ந அந்தம் – முடிவில்லாத
    ந மத்யம் – நடுவும் இல்லாத
    ந புன: தவ ஆதிம்- உன் ஆதியும் எது என்று தெரியாமல்
    பச்யாமி – பார்க்கிறேன் உன்னை
    சினிமாவில் பார்ப்பதுபோல் விஸ்வரூபம் அன்று அர்ஜுனன் பார்த்தது. ஏனென்றால் எவ்வளவு பெரிய உருவம் ஆனாலும் அதற்கு ஒரு ஆரம்பமும் முடிவும் இருந்தாக வேண்டும்.
    மேலும் நடுவும் இல்லாத என்பது அகண்ட ப்ரப்ஞ்சத்தையே குறிக்கும். ஆதலால் இது ப்ரம்ம சாக்ஷாத்காரமேயாகும்.
    இதையே நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன் என்று நம்மாழ்வார் கூறுகிறார்.
    2. புருஷ ஏவ இதம் ஸர்வம் யத் பூதம் யத் ச பவ்யம்
    உதாம்ருதத்வஸ்யேசான: யதன்னேனாதிரோஹதி
    யத் பூதம்- எது இருந்ததோ
    யத் பவ்யம்- எது இருக்கப்போவதோ
    இதம் – எது இப்போது இருக்கிறதோ
    சர்வம் இது எல்லாம்
    புருஷ: ஏவ- பரமபுருஷனே
    உத-மேலும் பரமபுருஷனே
    அம்ருதத்வஸ்ய – அழிவின்மைக்கும்
    ஈசான:-அதிபன்
    யத் –எது
    அன்னேன- அன்னமயமான் இந்த பிரபஞ்சத்தை
    அதிரோஹதி- கடந்து நிற்கிறதோ ( அதுவும் பரம புருஷனே)
    எது இப்போது இருக்கிறதோ முன்னால் இருந்ததோ பின்னால் இருக்கப் போவதோ என்ற சொற்களினால் இந்த பிரபஞ்சம் குறிப்பிடப்படுகிறது.
    பிரபஞ்சம் என்பது மாறிக்கொண்டே இருக்கிறது. நேற்று இருந்தது இன்று இல்லை . இன்றுள்ளது நாளை இருக்கப்போவதில்லை. ஆனால் மாறுதல் என்பது எப்போதும் உள்ளது, Change is the only permanent thing என்று ஆங்கிலத்தில் சொல்வது போல.
    நேற்று மண் இன்று பானை நாளை ஓட்டாஞ்சல்லி. ஆனால் இவை யாவற்றிலும் நிரந்தரமாக உள்ளது எது? எல்லாவிதமான உயிருள்ள வஸ்து ஜடவஸ்து இவைகள் மாறிக்கொண்டே இருந்தாலும் மாறாமல் உள்ள ஒன்றே அவற்றிற்கு ஆதாரமாக உள்ளது. அதுதான் பிரம்மம் அல்லது பரமபுருஷன் என்பது இதன் பொருள்.
    இதற்கு ஒருஉதாரணம் பார்க்கலாம். வெள்ளித்திரையில் பல உருவங்களை ப்ரொஜெக்டார் மூலம் விழச்செய்கிறார்கள். இது மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் மாறாமல் இருப்பது எது? வெள்ளித்திரை மட்டுமே.
    அதுதான் பிரம்மம் அந்த பிம்பங்கள் தான் பிரபஞ்சம். அப்படி என்றால் ப்ரொஜெக்டார் எது? நம்முடைய அக்ஞானம்.
    ஞானி படத்தோடு வெள்ளித்திரையையும் சேர்த்துக் காண்கிறான். அஞ்ஞானி படத்தை மட்டும் காண்கிறான் . இதுதான் வித்தியாசம்.
    அம்ருதத்வம் என்பதற்கு வரிக்கு வரி மொழிபெயர்ப்பு (literal translation) சாகா நிலை அதாவது அழிவின்மை.
    இது எப்போது ஏற்படும்?பிறப்பிறப்பற்ற நிலை அடைவதற்கும் அந்த பரமபுருஷனே காரண பூதனாக இருக்கிறான் என்பதுதான் அம்ருததத்வஸ்ய ஈசான: என்பதன் பொருள்.
    யத் அன்னேன அதிரோஹதி- எது இந்த அன்னமயமான பிரபஞ்சத்தைக் கடந்து நிற்கிறதோ,
    'அன்னாத் வை ப்ராஜா: ப்ரஜாயந்தே ' தைத்திரீய உபநிஷத் வாக்கியம்.
    அன்னம் என்றால் எல்லாவற்றிற்கும் உண்டாவதற்கும் இருப்பதற்கும் எது முக்கியமோ அதைக் குறிக்கிறது.
    இந்த பிரபஞ்சம் அன்னமயமானது என்றால் என்ன?
    ஸ்தூலமாகக் காணும் பிரபஞ்சம் பஞ்சபூதங்களால் ஆனது.
    ஸ்ருஷ்டிக்ரமத்தைப் பார்த்தால் பிரம்மம் மட்டும் முதலில் இருந்தது என்று உபநிஷத் கூறுகிறது. அதிலிருந்து முதலில் ஆகாசம் பிறகு வாயு, பிறகு அக்னி, பிறகு ஜலம் , கடைசியாக மண் அல்லது பூமி.
    ஆகாசத்தில் சப்தம் மட்டுமே உண்டு . வாயுவில் சப்தத்துடன் கூட அதன் தனிக்குணமாகிய தொடு உணர்வு இரண்டும் உண்டு. அக்னிக்கு இவை இரண்டுடன் கூட உருவம் இருக்கிறது. ஜலத்தில் அதனுடைய குணமாகிய ருசியுடன் சேர்ந்து நான்கு குணங்கள். கடைசி ஸ்தூல பூதமாகிய பூமியில் இவற்றுடன் அதன் தனிக்குணமாகிய வாசனையுடன் சேர்ந்து ஐந்து குணங்கள்.
    பூமி ஸ்ருஷ்டிக்குப்பிறகுதான் இந்த ஸ்தூல பிரபஞ்சம் முழுமை பெறுகிறது.
    பூமியில் தோன்றும் எல்லா ஜீவராசிகளும் ஏதோ ஒன்றை அன்னமாகக்கொண்டு பிறக்கின்றன , வளர்கின்றன. தாவரங்களுக்கு நீர், பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் உணவு இவை பூமி மூலமே கிடைக்கின்றன.
    அதனால் தான் 'அன்னாத் பவந்தி பூதானி,' எல்லா உயிர்களும் அன்னத்திலிருந்து உண்டாகின்றன' என்று கீதையிலும் பார்க்கிறோம்.
    ஆக, அன்னமயம் பிரபஞ்சம் என்பது உண்மை. அன்னம் ன்ற சொல் இந்த சூக்தத்தில் ப்ரபஞ்சத்தையே குறிக்கிறது.
    இந்த பிரபஞ்சம் பிரம்மத்தை ' பரத்தை மறைத்தது பார் முதல் பூதம், ' என்ற வகையில் மறைத்துள்ளது. திரோஹதி என்றால் மறைக்கிறது என்று பொருள். அதிரோஹதி என்றால் அதற்கு அப்பால் சென்றால் காண்பது பிரம்மமே அல்லது பரமபுருஷனே என்பதுதான் இந்த சொல்லுக்கு அர்த்தம்.
    3.ஏதாவான் அஸ்ய மஹிமா.| அதோ ஜாயான் ச பூருஷ:
    பாதோ அஸ்ய விச்வாபூதானி | த்ரிபாதசஸ்யாம்ருதம் திவி||
    ஏதாவான் – இங்கு காணப்படுவதெல்லாம்
    அஸ்ய மஹிமா-அந்த பரமபுருஷனின் மகிமையே
    அத: அது எல்லாவற்றைக் காட்டிலும்
    புருஷ:- பரம புருஷன்
    ஜ்யாயான்-அதிகமானவர்
    விச்வா பூதானி- சகல சிருஷ்டியும்
    அஸ்ய – இவருடைய
    பாத: - கால் பாகம்
    திரிபாத:- முக்கால் பாகம்
    அம்ருதம் – அழிவற்றது
    திவி- பரமபதத்தில் உள்ளது.
    இதையே கீதையில் 'விஷ்டப்யாஹம் இதம் க்ருத்சஸ்னம் ஏகாம்சேன ஸ்திதோ ஜகத்' என்று கூறப்பட்டிருக்கிறது.
    இதன் பொருள் " நான் எல்லாவற்றையும் கடந்து நிற்கிறேன். இந்த பிரபஞ்சத்தை என்னில் ஒரு சிறிய பாகமாகத தாங்கி நிற்கிறேன்." என்பது.
    அர்ஜுனன் எந்தெந்த இடத்தில் இறைவனின் வெளிப்பாடாக ( manifestation) என்று கேட்க பகவான் ஐம்பத்துநான்கு உருபொருள்களைச் சொல்லி அங்கே இறைவனைக் காணலாம் என்கிறார்.
    அப்படியானால் மற்ற இடத்தில் அவர் இல்லையா என்ற கேள்வி எழும் அல்லவா அதற்கு பதிலாக மேலே சொன்ன சொற்களால் புருஷசூக்தத்தின் இந்த வாக்கியம் குறிக்கும் பொருளை உணர்த்துகிறார்.
    இதன் பொருளாவது பரம்பொருளின் ஒரு அம்சமே இவ்வுலகம் என்பது.
    இறைவனின் சர்வவ்யாபித்வம் சர்வ அந்தர்யாமித்வம் நமக்குப் புரிந்தாலும் இதில் ஒரு கஷ்டம் உள்ளது.
    பிரம்மம் மாயையினால் உலகமாகத் தோன்றுகிறது என்றாலும் பிரம்மம் ஜகத் ஜீவன் எல்லாமே உண்மை . பிரம்மம் உயிர் பிரபஞ்சம் உடல் என்றாலும், நாம் அறிந்த பிரபஞ்சத்திற்கு ஒரு எல்லை உள்ளது
    அது எவ்வளவு பெரிதாக கற்பனை செய்யினும் எல்லை என்பது இருக்கிறது. அப்போது பிரம்மமும் ஒரு எல்லைக்குட்பட்டதா என்ற ஐயம் எழும் அல்லவா?
    ஆதியில் பரம்பொருள் ஒன்றுதான் அதைத்தவிர வேறு இல்லை என்று கூறுவது உபநிஷத். அதுவே இந்த எல்லைக்குட்பட்ட பிரபஞ்சம் என்பது சரியல்ல. அது பிரம்மத்திற்கும் எல்லை கூறுவதாக ஆகும். இதைக் காட்டுவதே புருஷசூக்தத்தின் இந்த வாக்கியம்.
    ஒரு உதாரணம் கூறவேண்டும் என்றால் நாம் தலைக்கு மேல் ஆகாயத்தைப் பார்க்கிறோம். வீட்டுக்குள்இருந்து பார்த்தால் சிறிதளவே தெரிகிறது. வெட்டவெளியில் நின்று பார்த்தால் அதிகமான அளவு தெரிகிறது. ஆனால் அதுதான் ஆகாயமா என்றால், இல்லை, ஆகாயம் அதைக்காட்டிலும் பன் மடங்கு பெரியது எங்கும் வியாபித்துள்ளது அல்லவா?
    அதே மாதிரிதான் நாம் காணும் இந்த உலகத்தில் இறைவன் எங்கும்வ்யா பித்துள்ளன் என்றாலும அதற்கும் மேலே அளவிட முடியாத ஒன்றுதான் பரம்பொருள்.
    5. தஸ்மாத் விராட் அஜாயத|விராஜோ அதி பூருஷ:|ஸ ஜாதோ அத்யரிச்யத | பச்சாத் பூமிம் அதோ புர:
    தஸ்மாத் – அந்த புருஷனிடம் இருந்து
    விராட்- பிரம்மாண்டம் அல்லது சூக்ஷ்ம உலகம்
    அஜாயத- தோன்றியது.
    விராஜோ அதி- அதை ஒட்டி
    பூருஷ: - பிரம்மா
    ஜாத:- தோன்றினார்
    அத்யரிச்யத- அவர் எல்லாவற்றையும் வ்யாபித்தார்
    பச்சாத் – பிறகு
    பூமிம்- பூமியையும்
    அத: அதன் பின்
    புர:- சரீரங்களையும் சிருஷ்டித்தார்
    'தத் ஐக்ஷத பஹுஸ்யாம் பிரஜாயேய' பிரம்மம் தான் பலவாக ஆக சங்கல்பித்தது. ( சாந்தோக்ய உபநிஷத் 'தத் தவம் அஸி' அத்யாயம்)
    இங்கு விராட் என்பது பிரபஞ்சம் நாம ரூப ஸ்ருஷ்டிக்கு முந்தைய நிலை. இதைத்தான் சாங்கய சாஸ்திரம் பிரகிருதி என்று கூறுகிறது,.இந்தநிலையில் எல்லாம் சூக்ஷ்ம ரூபத்தில் இருக்கிறது . பரம்பொருளின் ஸ்ருஷ்டிசக்தியே பிரம்மா. இந்த சிருஷ்டி சக்தியானது பிரபஞ்சம் முழுதும் பரவி பூமியை ஸ்ருஷ்டித்தது. பூமி என்ற சொல் பஞ்சபூதங்கலாளான இந்த உலகத்தைக் குறிக்கிறது. அதாவது ஸ்தூல பிரபஞ்சம். அதற்குப்பிறகு சரீரங்களை சிருஷ்டித்தது. அதாவது நாம ரூபம்.
    சாந்தோக்யத்தில் தத் தவம் அஸி என்ற பகுதியில் ஆகாயம் முதலான பூதங்களின் சிருஷ்டி சொல்லப்படவில்லை. ஆகாயத்திற்கும் வாயுவிற்கும் உருவம் கிடையாது. ஆதலால் முதல் இரண்டிற்கும் பல உருவம் கிடையாது.
    அக்னியிலிருந்து நீர் அதிலிருந்து மண் இப்படி ஸ்ருஷ்டிக்ரமம் சொல்லப்படுகிறது
    அதற்குப்பிறகு பிரம்மம் சங்கல்பித்தது.
    'அஹம் இமா: திஸ்ரா: தேவதா: அனேன ஜீவேன ஆத்மநா அனுப்ரவிச்ய நாமரூபே வ்யாகரவாணி' (சாந்தோக்ய உப.)
    இதன் பொருள், 'இந்த மூன்றினுள் அவற்றின் ஜீவனாகப் புகுந்து பெயர் ,உருவம் இவற்றை கற்பிப்பேன்.
    இதுதான் இந்த புருஷசூக்த வாக்கியத்தின் பொருள்
    6. யத் புருஷேண ஹவிஷா| தேவா யக்ஞம் அதன்வத|வஸந்தோ அஸ்ய ஆஸீத் ஆஜ்யம் \கிரீஷ்ம இத்ம: சரத் ஹவி:
    தேவா: தேவர்கள்
    புருஷேண- புருஷன் என்ற
    ஹவிஷா- ஹவிஸ்ஸினால்
    யத் – எந்த
    யக்ஞம்- மானஸ யக்ஞத்தை
    அதன்வத்- செய்தார்களோ
    அஸ்ய – அதற்கு
    வஸந்த: - இளவேனிற்காலம்
    ஆஜ்யம் – நெய்யாகவும்
    கரீஷ்மா- கோடை காலம்
    இத்ம:-சமித்தாகவும்
    சரத் – சரத்காலம்
    ஹவி:- ஹவிஸ் ஆகவும்
    ஆஸீத் – ஆயிற்று
    இதில் சொல்லப்பட்டிருப்பது ஸ்ருஷ்டியக்ஞம். புருஷன் என்பது பரமபுருஷன். அவன் மட்டும்தான் ஆதியில் இருந்தான். அவனிடமிருந்து சிருஷ்டி தொன்றியது என்று பார்த்தோம்.
    தேவர்கள் புருஷன் என்ற ஹவிஸ்ஸினால் மானஸயக்ஞம் செய்தார்கள் என்றால் பொருந்திவரவில்லை. ஏனென்றால் தேவர்களே அவனுடைய ஸ்ருஷ்டிதானே . சிருஷ்டிக்கு முன்னால் அவர்கள் இருக்க முடியாதே.
    இதைப் புரிந்துகொள்ள நாம் கீதையின் வாக்கியத்தைப் பார்க்க வேண்டும்.
    'ப்ரம்மார்ப்பணம் பிரம்மஹவி: ப்ரம்மாக்நௌ பிரம்மணாஹுதம்' (பகவத்கீதை- 5.24)
    இதன் பொருள், பிரம்மமே யாகத்தின் இலக்கு. பிரம்மமே ஹவிஸ். ப்ரம்மத்தினால் பிரம்மமாகிற அக்னியில் அர்ப்பணம் செய்யப்படுகிறது.
    அதாவது யக்ஞத்தின் கர்த்தாவும் பிரம்மம் அதாவது பரமபுருஷன் . அவனே ஹவிஸ்ஸை ஏற்கிறான். தேவர்கள் என்பது அவனுடைய உருவகமான இந்திரியங்கள். அவனை அவனே அவனுக்காக அவனிடத்தில் அர்பணிப்பதாக அர்த்தம்.
    இது 'ஆத்மனா அனுப்ரவிச்ய நாமரூபே வ்யாகரவாணி ,' "இந்த பிரபஞ்சத்தின் அந்தராத்மாவாக உல் புகுந்து நாம ரூபங்களை சிருஷ்டிப்பேன்," என்ற உபநிஷத் வாக்கியத்திற்கும் பொருத்தமாக இருக்கிறது.
    ஆஜ்யம் என்பது அக்னியில் இடப்படும் நெய், இது அக்னி பிரகாசமாக எரிவதற்கு அனுகூலமாகிறது.
    வசந்த காலம் என்பது ப்ரஜோற்பத்தியை தூண்டும் காலம் ஆதலால் அது ஆஜ்யம் என்று சொல்லப்படுகிறது.
    கோடைகாலத்தில் சூரியனின் ஒளியால் உலகம் செழிக்கிறது,. ஆதலால் கோடையே சமித்து எனப்படுகிறது சமித்துக்களால் அக்னி வளர்வதால்.
    சரத் காலம் ஹவிஸ் . அதாவது கடைசியில் அக்னியில் போடப்படும் பொருள்கள். ஏனென்றால் சரத் காலத்தில் மழைபெய்த பின்னர் செழிப்பைக்கான்கிறோம். இது பலன் அளிப்பதைக்குறிக்கிறது.
    இவ்வாறாக சிருஷ்டி யக்ஞம் விவரிக்கப்படுகிறது,
    தில் சிருஷ்டியின் தொடக்கம் சொல்லப்படுகிறது.
    7. ஸப்தஸ்யாஸன் பரிதய:| த்ரி: ஸப்த ஸமித: க்ருதா: |
    தேவா யத்யக்ஞம் தன்வானா: அபத்னன்புருஷம் பசும்||
    அஸ்ய இதற்கு
    ஸப்த- ஏழு
    பரிதய: பரிதிகள்
    ஆஸன்- இருந்தன
    த்ரிஸப்த- இருபத்துஒன்று தத்துவங்கள்
    ஸமித: - சமித்துக்களாக
    க்ருதா: - செய்யப்பட்டன.
    இந்த ஸ்ருஷ்டி யக்ஞத்தில் ஏழு பரிதிகள் உபயோகப் பட்டன. பரிதி என்றால் யாகாக்னியை சுற்றி வைக்கப்படுவது. எதையும் இன்னும் ஸ்ரிஷ்டிக்காததால் இந்த பரிதிகள் எது என்றால் ஏழு சந்தஸ்களையுமே பரிதியாக் கூறியுள்ளது என்று கொள்ளலாம்.
    மைத்ராயணி உபநிஷத்தில் பஞ்ச பூதங்கள் அஹங்காரம் புத்தி என்ற ஏழு குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றுமே ஸ்ருஷ்டிக்கப்படாததால் இவைகளைப் பற்றிய த்யானமே இங்கு சொல்லப்படுகிறது.
    பஞ்ச பூதங்கள் சூக்ஷ்ம ரூபம் , அவைகளின் ஸ்தூல ரூபம் பஞ்ச கர்மேந்த்ரியங்கள் பஞ்ச ஞானேந்த்ரியங்கள் (Senses not sense organs) அந்த;கரணம் ஆக மொத்தம் 21. சமித் என்றால் சிருஷ்டிக்கு காரணப் பொருள்கள் என்று கொள்ளலாம்.
    .
    தேவா: தேவர்கள்
    யக்ஞம்- யக்ஞத்தை செய்பவர்களாகி
    யத் புருஷம் – முன்சொன்ன புருஷனை (. தஸ்மாத் விராட் அஜாயத|விராஜோ அதி பூருஷ:|ஸ ஜாதோ அத்யரிச்யத| என்று முன்னம் சொல்லப்பட்ட பரம்புருஷ்னின் ஸ்ருஷ்டிசக்தியான பிரம்மா)
    பசும்- யாகப்பசுவாக
    அபத்னன்-யூபஸ்தம்பத்தில் கட்டினார்கள்.
    அதாவது பிரம்மாவிடம் இருந்துதான் சிருஷ்டி. (ஸ ஜாதோ அத்யரிச்யத | பச்சாத் பூமிம் அதோ புர:- சூக்தம் 5)
    யூபஸ்தம்பம் என்பது பிரகிருதி. அதாவது சூக்ஷ்ம பிரபஞ்சம். பிரம்மா முதல் சிருஷ்டி அதன் பிறகு பிரகிருதியின் சம்பந்தத்தால் அவரிடம் இருந்து பிரபஞ்சம் தோன்றியது என்று அர்த்தம்.
    'பிரம்மா தேவானாம் பிரதம: சம்பபூவ' _ முண்டகோபனிஷத்.
    பிரம்மாதான் தேவர்களுக்கு முன்னே தோன்றியவர்.
    8. தம் பர்ஹிஷி ப்ரௌக்ஷன் | புருஷம் ஜாதம் அக்ரத: |
    தேன தேவா அயஜந்த| ஸாத்யா ருஷயச்ச யே ||
    தம் – அந்த
    அக்ரத:- முதலில்
    ஜாதம்- தோன்றிய
    புருஷம்- புருஷனை (ப்ரம்மா)
    பர்ஹிஷி – தர்ப்பைமேல் ( பிரகிருதி)
    ப்ரௌக்ஷன் - ப்ரோக்ஷனம் செய்தனர் ( சிருஷ்டிக்குரிய மந்திரங்கள் )
    தேன- அதனால்
    அயஜந்த- யாகத்தை செய்தார்கள்
    ஸாத்யா: தேவா: ருஷய: ச- ஸாத்யர்கள், தேவர்கள் ரிஷிகள் முதலானோர். இவை பிரம்மாவின் சிருஷ்டி சக்தியின் அவயவங்கள்.
    பிரம்மா தான் முதல் சிருஷ்டி. பிரக்ருதியின் சம்பந்தம் தர்ப்பை மேல் வைத்ததைக் குறிக்கிறது.
    ப்ரோக்ஷண மந்த்ரங்கள் வேத மந்த்ரங்கள் பிரம்மா வேதமந்த்ரங்களில் இருந்து சிருஷ்டியை செய்தார் என்று பொருள்.
    வேதம் அபௌருஷேயம் அநாதி . யாராலும் சிருஷ்டிக்கப் பட்டது அல்ல. பரம்பொருளின் மூச்சுக்காற்று.
    பூர்வானுவாகத்தின் கடைசி மந்தரத்தில் 'யத்ர பூர்வே ஸாத்யா: சாந்தி தேவா:' என்று காண்கிறோம்
    . அதனால் ஸாத்யா: தேவா: ருஷய: என்ற சொல் ஸ்ருஷ்டிக்குட்படாத நித்ய சூரிகள் போன்றவர்களைக் குறிக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். (ரங்கநாத முனி)
    To be continued
Working...
X