Announcement

Collapse
No announcement yet.

Purusha sooktam with tamil meanings Continues

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Purusha sooktam with tamil meanings Continues

    Purusha sooktam with tamil meanings
    Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
    Continues
    9. தஸ்மாத் யக்ஞாத் சர்வஹுத: | சம்ப்ருதம் ப்ருஷத் ஆஜ்யம்|
    பசூன் தான் சக்ரே வாயவ்யான் |ஆரண்யான் க்ராம்யா:ச யே
    ஸர்வஹுத: எல்லாவற்றையும் ஆஹுதியாகக் கொண்ட
    தஸ்மாத யக்ஞாத்- அந்த யாகத்தில் இருந்து
    ப்ருஷத் ஆஜ்யம் –தயிர் கலந்த நெய்( சிருஷ்டிக்கு வேண்டிய வித்து)
    சம்ப்ருதம்- பிரசாதமாக உண்டாயிற்று.
    பசூன்- சாகபக்ஷிணிகாளான் மிருகங்கள்'
    ஆரண்யான்- காட்டு மிருகங்கள்
    வாயவயான்- காற்றில் சஞ்சரிக்கும் அதாவது பறக்கும் ஜீவராசிகள்
    தான் அவைகளை
    யே கிராம்யா: ச – நாட்டில் வாழும் உயிரினங்களையும்
    சக்ரே – பிரம்மா சிருஷ்டித்தார்.
    இவ்வாறு ஸ்ருஷ்டிக்ரமம் வர்ணிக்கப்படுகிறது
    . 10. தஸ்மாத் யக்ஞாத் ஸர்வஹுத: |ருசஸ்ஸாமானி ஜக்ஞிரே தஸ்மாத்|
    ச்சந்தாம்ஸி ஜக்ஞிரே தஸ்மாத்| யஜு: தஸ்மாத் அஜாயத||
    தஸ்மாத்- அந்த
    ஸர்வஹுத:-எல்லாவற்றையும் ஆஹுதியாகக் கொண்ட
    யக்ஞாத் –யாகத்தில் இருந்து
    ருச:- ரிக் வேத மந்திரங்களும்
    ஸாமானி- சாமவேத மந்திரங்களும்
    ஜக்ஞிரே- வெளிவந்தன
    தஸ்மாத்-அதிலிருந்தே
    ச்ச்சந்தாம்ஸி- காயத்ரி முதலிய சந்தஸ்கள்
    ஜக்ஞிரே- வெளிவந்தன
    யஜு :- யஜூர்வேதம்
    தஸ்மாத்-அதிலிருந்தே
    அஜாயத- வெளி வந்தது
    பரமபுருஷனிடம் இருந்து பிரம்மா வேதத்தை அறிந்து அதை வெளிப்படுத்தினார் என்று பொருள். ஏனென்றால் வேதம் அபௌருஷேயம் என்பதனால் அது ஸ்ருஷ்டிக்கப்பட்டது என்பது சரியல்ல.
    " தஸ்ய ஹ வா மஹதஸ்ய பூதஸ்ய நிச்வஸிதம் ஏதத் ருக்வேதோ யசுர்வேதோ ஸாமவேதோ ---"
    அந்த பரமபுருஷனுடைய மூச்சுக் காற்றே வேதங்கள் என்று சொல்லப் பட்டிருப்பதனால் அனாதியான அவற்றை பிரம்மன் வெளிக் கொணர்ந்தார் என்று பொருள்.
    பிறகு எல்லாவிதமான சிருஷ்டியும் தொடங்குகிறது. பிரம்மா வேதத்தில் உள்ளபடியே சிருஷ்டி செய்தார்.
    அதாவது மனிதன், விலங்குகள், பட்சிகள் , பூச்சிகள் முதலிய எல்லா ஜீவராசிகளின் குணமும் ஸ்ருஷ்டிக்கு ஸ்ருஷ்டி மாறுபடுவதில்லை.
    . பிரளய காலத்தில் எல்லாம் அழிந்தாலும் எல்லா உயிர்களும் சூக்ஷ்ம ரூபத்தில் இறைவனிடம் ஒடுங்குகின்றன. ஆனால் மறுபடி ஸ்ருஷ்டி தொடங்கும்போது தனித்தன்மைகளுடன்தான் தோன்றுகின்றன.
    11. தஸ்மாத் அஸ்வா அஜாயந்த |யே கே சோபயாதத:|
    காவோஹ ஜக்ஞிரே தஸ்மாத் | தஸ்மாத் ஜாதா அஜாவய:||
    தஸ்மாத்- அந்த யக்ஞத்தில் இருந்து
    அஸ்வா: - குதிரைகள்
    அஜாயந்த- தோன்றின.
    யே கே ச- ஒரு பக்கம் பற்களை உடைய பிராணிகளும் (எருமை முதலியன)
    உபயாதத: - இரு பக்கம் பற்களை உடைய பிராணிகளும்( கழுதை முதலியன)
    காவோஹ- பசுக்களும்
    ஜக்ஞிரே தஸ்மாத்- - அதிலிருந்து தோன்றின.
    தஸ்மாத் – அதிலிருந்தே
    அஜாவய:- ஆடு முதலியவைகளும்
    ஜாதா:-தோன்றின.
    இவை எல்லாம் சாதுவான வேத காலத்துச் செல்வம் எனக் கருதப்பட்டவை யாகும்.
    இதற்குப்பிறகு மனித சிருஷ்டி சொல்லப் படுகிறது.
    12. யத் புருஷம் விதது: | கதிதா வ்யகல்பயன்|
    முகம் கிம் அஸ்ய கா பாஹூ| காவூரூ பாதாவுச்யேதே||
    யத் – எந்த
    புருஷம் – ஹிரண்யகர்பன் – பிரம்மனின் உடல் பிரம்மாண்டமாக அதாவது பிரபஞ்சத்தை உள்ளடக்கியதாக
    வித்து:- ஆயிற்றோ அது
    கதிதா-எந்தெந்த வடிவாக
    வ்யகல்பயன் – செய்யப்பட்டது ?
    முகம்- இந்த ஹிரன்யகர்பனுடைய முகம்
    கிம் – எதுவாக ஆயிற்று?
    அஸ்ய பாஹூ- அவன் கைகளாக
    கிம் – எவர்கள் ஆனார்கள்
    கா ஊரு – துடைகள் எவர்களாயின
    பாதா- பாதங்கள்
    கா – எவர்களாக
    உச்யேதே- சொல்லப் படுகின்றன
    13. பிராம்மணோ அஸ்ய முகம் ஆஸீத்| பாஹூ ராஜன்ய: க்ருத:|
    ஊரூ ததஸ்ய வைச்ய:| பத்ப்யாம் சூத்ரோ அஜாயத||
    பிராம்மணோ- அந்தண வர்ணம்
    அஸ்ய – இந்த புருஷனுடைய
    முகம்- முகம்
    ஆஸீத்- ஆயிற்று
    பாஹூ –கைகள்
    ராஜன்ய: - க்ஷத்ரிய வர்ணமாக
    க்ருத:- செய்யப்பட்டது
    அஸ்ய- அவருடைய
    தத் – அந்த
    ஊரூ – துடைகள்
    வைச்ய:- - வைசிய வர்ணமாகவும்
    பத்ப்யாம் – பாதங்களில் இருந்து
    சூத்ரோ – நாலாம் வர்ணமும்
    அஜாயத- உண்டாயிற்று.
    . தஸ்மாத் விராட் அஜாயத|விராஜோ அதி பூருஷ:|ஸ ஜாதோ அத்யரிச்யத | பு. சுக். (5)
    மேற்கண்ட மந்த்ரத்தின் படி பரமபுருஷனிடமிருந்து சூக்ஷ்மமான் அப்ரபஞ்சம் தோன்றியது . பிறகு ஸ்தூல வடிவமான ஹிரண்ய கர்பன் பிரபஞ்சத்தை தன்னுள் அடக்கியவராகத் தோன்றினார் என்று பார்த்தோம்.
    இங்கு கேள்வி பதில் மூலமாக மனித சிருஷ்டி சொல்லப்படுகிறது. இந்த புருஷனின் எந்தெந்த பாகங்களில் இருந்து எந்தெந்த சிருஷ்டி என்பது கேள்வி. அதற்கு பதில், முகத்திலிருந்து அந்தணர்கள் கைகளில் இருந்து க்ஷத்ரியர்கள், துடையில் இருந்து வைசியர்கள் பாதத்தில் இருந்து சூத்ரர்கள் என்ற நாலாம் வர்ணத்தாரும் தோன்றினர் என்பது.
    இதைப் புரிந்து கொள்வதற்கு முன் பகவத் கீதையின் ஸ்லோக்த்தைப் பார்க்கலாமா?
    பகவான் கீதையில் சொல்கிறார்
    'சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகச:' (ப.கீ 4.13)
    'சமூகத்தின் நான்கு பிரிவுகளும் அவரவர் குணத்திற்கும் கர்மத்திற்கும் ஏற்ப என்னால் சிருஷ்டிக்கப் பட்டது.'
    வர்ணம் என்பது வேறு, ஜாதி என்பது வேறு. ஜாதி என்பது மனிதனால் உருவாக்கப் பட்டது.
    வேதகாலத்தில் யக்ஞம் என்பது பிரம்மஸ்வரூபமாக உள்ளது.
    "ஸர்வகதம் பிரம்ம நித்யம் யக்ஞே ப்ரதிஷ்டிதம் " ப.கீ. 3.15
    யக்ஞம் என்பது எல்லாரும் சேர்ந்து சமூகத்தின் நலனுக்காக செய்யப்பட்ட முக்கிய கர்மம். இதில் நான்கு வருணத்தாரும் சேர்ந்து பங்கு கொண்டனர். வருணம் என்பது பிறப்பினால் வந்தது அல்ல. அவரவர் குணங்களுக்கும் கர்மங்களுக்கும் ஏற்ப வகுக்கப்பட்டது.
    வேதம் அறிந்தவர்கள்
    பிரம்மஞானத்தை நாடுபவர்கள் யக்ஞத்தை செய்யும் முறையை அறிந்தவர்கள் பிராம்மணர் அல்லது அந்தணர் எனப் படுவோர்.
    பிராமண என்ற சொல்லுக்கு அர்த்தம் பிரம்மத்தை நாடுவோர் என்பது. ப்ரம்ம என்ற சொல் வடமொழியில் பரப்ரம்மம், வேதம், யக்ஞம் என்று பல பொருள் கொண்டது. ஸத்வ குணம் மிகுந்தவர் பிராம்மணர்கள் என்று அழைக்கப் பட்டனர்.
    க்ஷத்ரியர்கள் மக்களையும் தேசத்தையும் ரக்ஷிப்பவர்கள் . இதற்கு ரஜோ குணம் அதிகமாக இருக்க வேண்டும். ஒரு யக்ஞத்தை நடத்துபவன் பிராம்மணன் என்றால் அதற்கு எஜமானனாக இருப்பவன் , பொறுப்பு எடுத்துக் கொண்டவன் க்ஷத்ரியன்,.
    வைசியர் என்பவர் சமூகத்திற்கு அல்லது யக்ஞத்திற்கு வேண்டிய பொருள்களை வழங்குவோர். அதாவது வர்த்தகர்கள். சூத்திரர் எனப்படுபவர் உழைப்பாளிகள்,(. Manual labourers ).ஆங்கிலத்தில் சொன்னால இந்த நான்கு வருணத்தாரும் சமூகத்தில் ( education, organaisation, commerce and labour என்ற நால்வகை பொறுப்பு உடையவர்கள்
    . யக்ஞத்தின் பிரசாதம் எல்லோருக்கும் சமமாக வழங்கப் படுகிறது.
    இது பிறப்பு சம்பந்தப்பட்டதல்ல என்பது பாகவதத்தில் காணலாம்.
    ஒரு ரிஷபதேவர் என்ற அரசருடைய பிள்ளைகளில் பலர் தவத்தை மேற்கொண்டு பிராமணராகிவிட்டார்கள் என்று வருகிறது,
    ஆதலால் பிறப்பைக்கொண்டு வருணம் என்பது பிந்தைய காலத்தில் ஏற்பட்டது. அப்போதும் நான்கு வருணங்களே இருந்தன. இப்போதுள்ள ஜாதிகள் கலி காலத்தின் மாறுதல்கள்.
    இப்போது இந்த மேற்கண்ட மந்திரத்தின் பொருளைப் பார்ப்போம். பிராமணன் முகத்தில் இருந்து தோன்றினான் என்பதன் அர்த்தம் முகத்தில இருந்துதானே வாக்கு அல்லது வேதம் தோன்றியது. அதனால அதை அறிந்தவர் முகத்தில் இருந்து தோன்றினர் என்பது பொருத்தம்,
    க்ஷத்ரியர்களுக்கு தோள்வலிமை அவசியம் அதனால் கைகளில் இருந்து தோன்றினர் என்று சொல்லப் படுகிறது.
    வைசியர்கள் நான்கு திசையிலும் சென்று பொருளீட்டி வர்த்தகம் செய்ய வேண்டுவதால் அவர்கள் துடையிலிருந்து தோன்றினர்.இது தேகபலத்தைக் குறிக்கிறது.
    சூத்திரர் பாதங்களில் இருந்து தோன்றினர் என்பது அவர்கள் கால்களினால் செய்யும் உடல் உழைப்பைக் குறிக்கிறது.
    நாலாம் வருணத்தார் தவிர மீது மூன்றுபேரும் வேதம் கற்க அதிகாரம் உடையவர்கள். அதாவது அவர்களுக்கு வேதத்தில் சொல்லியுள்ள அவரவர் வருணத்திற்கு ஏற்ற கர்மாக்களை விடாது செய்ய வேண்டும். ஆனால் நாலாம் வருணத்தாருக்கு அது அவசியம் இல்லை.
    ஏனென்றால் அவர்கள் பகவானின் பாதத்தில் இருந்து வந்தவர்கள் ஆயிற்றே. பாதத்தைத்தானே எல்லா வேதமும் வணங்குகிறது!அதனால் பக்தி ஒன்றே போதும்.
    இதைப் பார்த்தால் இப்போதுள்ள சமூகத்தில் யார் எந்த வர்ணம் என்பது கேள்விக்குறியது.
    ஸ்ருஷ்டிக்ரமம் தொடர்கிறது.
    14. சந்த்ரமா மனஸோ ஜாத| சக்ஷோ: சூர்யோ அஜாயத|
    முகாதிந்த்ரச்சாக்னிச்ச | ப்ராணாத் வாயுரஜயாத ||
    15. நாப்யா ஆஸீத் அந்தரிக்ஷம்| சீர்ஷ்ணோ த்யௌ: சமவர்தத|
    பத்ப்யாம் பூமிர்திசஸ்:ஸ்ரோத்ராத் |ததா லோகான் அகல்பயன் ||
    14. சந்த்ரமா- சந்திரன்
    மனஸ: - மனதிலிருந்து
    ஜாத:- பிறந்தான்
    சக்ஷோ: - கண்களில் இருந்து
    சூர்ய:- சூரியன்
    அஜாயத – தோன்றினான்.
    முகாத்- முகத்தில் இருந்து
    இந்திர: ச அக்னி: ச - - அக்னியும் (தோன்றினர்)
    ப்ராணாத் - பிராணனில் இருந்து
    வாயு: - வாயு
    அஜாயத – தோன்றினான்.
    15. நாப்யா: - நாபியில் இருந்து
    அந்தரிக்ஷம்- வானவெளி
    ஆஸீத் – தோன்றிற்று
    சீர்ஷ்ணோ: தலையில் இருந்து
    த்யௌ: - சுவர்க்கலோகம்
    ஸமவர்தத- நன்றாக அமைந்தது.
    பத்ப்யாம் பூமி: - பாதங்களில் இருந்து பூமியும்
    ச்ரோத்ராத் – காதிலிருந்து
    திச: - திக்குகளும் ( தோன்றின.
    ததா – இவ்வாறே
    லோகான்- எல்லா உலகங்களையும்
    அகல்பயத்- சங்கல்பத்தாலேயே சிருஷ்டித்தார்.
    தத் ஐக்ஷத பஹுஸ்யாம் பிரஜாயேய
    ஐந்தாவது மந்திர விளக்கத்தில் கீழ்கண்டவாறு பார்த்தோம்.
    'தத் ஐக்ஷத பஹுஸ்யாம் பிரஜாயேய' பிரம்மம் தான் பலவாக ஆக சங்கல்பித்தது. ( சாந்தோக்ய உபநிஷத் 'தத் தவம் அஸி' அத்யாயம்)
    இங்கு விராட் என்பது பிரபஞ்சம் நாம ரூப ஸ்ருஷ்டிக்கு முந்தைய நிலை. இந்தநிலையில் எல்லாம் சூக்ஷ்ம ரூபத்தில் இருக்கிறது .
    பரம்பொருளின் ஸ்ருஷ்டிசக்தியே பிரம்மா. இந்த சிருஷ்டி சக்தியானது பிரபஞ்சம் முழுதும் பரவி பூமியை ஸ்ருஷ்டித்தது.
    பூமி என்ற சொல் பஞ்சபூதங்கலாளான இந்த உலகத்தைக் குறிக்கிறது. அதாவது ஸ்தூல பிரபஞ்சம். அதற்குப்பிறகு சரீரங்களை சிருஷ்டித்தது. அதாவது நாம ரூபம்.
    இதை மனதில் கொண்டு மேற்சொன்ன ஸ்ருஷ்டி க்ரம்த்தை புரிந்து கொள்ளவேண்டும்.
    அடுத்த மந்திரம் இதை தெளிவுறுத்துகிறது. இதைப் பிறகு பார்க்கலாம்.
    பரமபுருஷனின் சிருஷ்டி சக்தி ஹிரண்யகர்பன் அல்லது பிரம்மாவாக ஸ்தூல உருவம் கொள்கிறது. அந்த உடல் சிருஷ்டிக்குக் காரணமாகிறது.
    சாயனாசார்யர் சொல்படி எவ்வாறு வேறுபாடில்லாமல் ஒரே மாதிரி உள்ள பாலில் இருந்து வெவேறு இயல்புடைய வெண்ணை தயிர் முதலியவை தோன்றுகின்றனவோ அதுபோல சந்திரன் முதலிய தேவர்கள் புருஷனிடம் இருந்து தோன்றினர் என்கிறார்.
    சந்திரன் மனதில் இருந்து தோன்றினான் என்பதற்குப் பொருள், மனது குளிர்ச்சி மகிழ்ச்சி முதலிய நல்ல உணர்வுகளுக்கு இருப்பிடம். எதிர்மறையான உணர்வுகளும் மனதில் தோன்றுகின்றனவே என்றால் அது சிருஷ்டிக்குப் பிறகு உலகப் பற்றினால் வருவது. சந்திரன் அதனால் மனதிற்கு அதிபதி.
    சூரியன் கண்களை இருந்து தோன்றினதற்கு பொருள் என்னவென்றால் சூரியன் இருளைப் போக்குபவன். கண்கள் இருந்தால்தான் வெளிச்சத்தைப் பார்க்க முடியும். அக்ஞானமாகிய இருளைப்போக்கும் ஞானம் என்கிற கண்தான் சூரியன் அதனால் கண்களில் இருந்து தோன்றினான் என்று சொல்லப் படுகிறது.
    முகம் உடலின் முக்கியமான உறுப்பு. இந்திரன் தேவர்களில் முக்கியமானவன். அக்னி தேவர்களின் வாய் என்று சொல்லப்படுகிறது. "அக்னிமுகா வை தேவதா:' யாகங்களில் தேவர்களின் ஹவிர்பாகம் அக்னிமூலம்தான் அளிக்கப்படுகிறது .
    வாயு பிராணனில் இருந்து தோன்றியது என்பதற்கு விளக்கம் தேவை இல்லை.
    நாபி என்பது உடலில் மத்திய பாகம் , வான வெளி பூமிக்கும் விண் உலகத்திற்கும் மத்தியில் இருக்கிறது,. பூ: புவ: ஸுவ: , பூலோகம் புவர்லோகம் ஸுவர்லோகம்,.அதனால் நாபியில் இருந்து வானவெளி
    அதேபோல தலை உடலின் மேல் இருப்பதால் அதிலிருந்து வானுலகம் தோன்றியது என்ப பொருத்தம். பாதத்தில் இருந்து கீழே உள்ள பூமி .
    திக்குகள் காதிலிருந்து தோன்றின என்பது எப்படி என்றால் திசைகள் சப்தத்திற்கு ஆதாரமாக உள்ளன. நமக்கு ஒரு சப்தம் கேட்கிறது என்றால் அது ஏதாவது ஒரு திசையில் இருந்துதானே வர வேண்டும்.
    அதனால் சப்த இந்த்ரியமான காது திசைகளை தோற்றுவித்தது என்று உள்ளது.
    இவ்வாறே எல்லா உலகங்களையும் பரமபுருஷன் தோற்றுவித்தார் என்று ஸ்ருஷ்டிக்ரமம் சொல்லப் படுகிறது.
    17. தாதா புரஸ்தாத் யமுதாஜஹார |
    சக்ர: ப்ரவித்வான் ப்ரதிசஸ்சதஸ்ர:|
    தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி|
    நான்ய: பந்தா அயனாய வித்யதே ||
    யம் – எந்த புருஷனை
    தாதா – பிரம்மா
    புரஸ்தாத்- ஆதியில்
    உதாஜஹார – பரமாத்மா என்று கண்டுகொண்டு வெளிப்படுத்தினாரோ
    ப்ரதிசஸ்சதஸ்ர:- எல்லா திசைகளிலும்
    சக்ர: - இந்திரன்
    பிரவித்வான் – நன்றாகக் கண்டறிந்தாரோ
    தம்- அவரை
    ஏவம் – இவ்வாறு
    வித்வான் – அறிபவன்
    இஹ- இங்கேயே
    அம்ருத;- முக்தனாக
    பவதி – ஆகிறான்.
    அயனாய – மோக்ஷத்திற்கு
    அன்ய: பந்தா- வேறு வழி
    ந வித்யதே – இல்லை
    பரமபுருஷன் சிருஷ்டியின் பொருட்டு பிரம்மனை ச்ருஷ்டித்தான் என்கிறது வேதம். பிரம்மன் சிருஷ்டி செய்யும் வழி தெரியாது தவம் செய்து அந்த பரமபுருஷனை த்யானித்து சிருஷ்டி செய்யத் தொடங்கினார் என்று அறிகிறோம்.
    இந்திரன் வாமதேவரிடம் இருந்து ஞானத்தைப் பெற்று பரமபுருஷனை கண்டறிந்தான்.
    சதஸ்ர: என்பது கிழக்கு , மேற்கு, வடக்கு, தெற்கு என்ற திசைகளையும் ப்ரதிச: என்பது மற்ற நான்கு திசைகளையும் குறிக்கும். இதன் மூலம் இந்திரனோடு திக்பாலகர்களையும் குறிப்பிட்டதாக ஆகிறது.
    'நாயம் ஆத்மா ப்ரவசநேன லப்ய:ந மேதயா ந பஹுனா ச்ருதேன| யமைவேஷ வ்ருணுதே தேன லப்ய:; என்பது வேத மந்த்ரம்.
    இதற்கு
    இந்த பரமாத்மா ச்ரவணம் மனனம் முதலியவைகளால் அடையத்தக்கவன் அல்லன். அவன் அருள் இருந்தால் மட்டுமே அவனை அறிய முடியும் என்று பொருள்
    . பகவான் கீதையிலும் இதையே 'நாஹம் வேதைர் ந தபஸா ந தானேன ந சேஜ்யயா,' என்ற ஸ்லோகத்தில் வலியுறுத்துகிறார். பிரமன் முதலானவரும் பக்தியின் மூலமே அவனை அறிய முடியும் என்பது இதன் கருத்து.
    அவ்வாறு அறிந்த ஒருவன் இங்கேயே முக்தியை அடைகிறான் என்றால் இப்பிறவியிலேயே கர்ம பந்தம் தொலைந்து உடலை நீத்த பின் முக்தி அடைகிறான் என்பது பொருள்.
    இதையே கீதையும் " ' 'இஹைவ தை: ஜித: ஸர்க:' , இந்த ஜென்மத்திலேயே ஜனன மரணத்தைக் கடக்கிறான். என்றும்
    ' கச்சந்தி அபுனராவ்ர்த்திம் ஞானநிர்தூத கல்மஷா:' ஞானத்தினால் கர்ம வினைகளில் இருந்து விடுபட்டு மீண்டும் பிறவியில்லா முக்தி நிலையை அடைகின்றனர் என்று கூறுகிறது.
    இதைத் தவிர வேறு வழியில்லை என்பதை கீதையில் 'பக்த்யா து அனன்யயா சக்ய: ,' பகவாநனின் அருளைப்பெற பக்தியைத் தவிர் வேறு மார்க்கம் இல்லை என்று கூறுவதைப் பார்க்கிறோம்.
    18. யக்ஞேன யக்ஞம் அயஜந்த தேவா: |
    தானி தர்மானி பிரதமான்யாஸன்|
    தே ஹ நாகம் மஹிமான:ஸசந்தே
    யத்ர பூர்வே ஸாத்யா: சாந்தி தேவா||
    தேவா: தேவர்கள் (பிரம்மாவின்சூக்ஷ்ம இந்த்ரியங்கள்)
    யக்ஞேன- இந்த மானஸ யக்ஞத்தினால்
    யக்ஞம்- இந்த யக்ஞ புருஷனை
    அயஜந்த- பூஜித்தார்கள்
    தானி தர்மாணி- அதனுடன் சேர்ந்த தர்மங்கள்
    பிரதமானி – முக்கியத்துவம் உடையவையாக
    ஆஸன் – ஆகின.
    யத்ர – எங்கு
    பூர்வே – ஆதியிலிருந்து உள்ள
    ஸாத்யா:தேவா: - ஸாத்யர்கள் , , தேவர்கள் ரிஷிகள் முதலானோர். இவை பிரம்மாவின் சிருஷ்டி சக்தியின் அவயவங்கள்
    ஸந்தி – இருக்கிறார்களோ
    நாகம் – அந்த சுவர்க்க லோகத்தை
    தே மஹிமான: - அந்த உபாசனையால் மகிமை பெற்றவர்களும்
    ஸசந்தே – அடைகிறார்கள்.
    இங்கு ஸ்ருஷ்டிரூபமான் யக்ஞத்தைப் பற்றி சொல்லப்படுகிறது. இந்த யக்ஞ புருஷன் விராட்ரூபமான் பரமபுருஷன்.
    வேதத்தின் மூலம்தான் சிருஷ்டி. ஆதலால் இங்கு சொல்லப்பட்ட தர்மங்கள் புருஷார்த்தங்களை ஒட்டி செய்யவேண்டிய செயல்கள்.
    மனிதர்களை சிருஷ்டி செய்தபின் அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதையும் சொல்ல வேண்டும் அல்லவா? அதுதான் முக்கியமான தர்மங்கள் என்று கூறப் பட்டவை. அதன் பலன் என்ன ?
    புருஷார்த்தங்களை உள்ளபடி உணர்ந்தோர் அதன் மூலம் ஞானம் அடைந்து பரமபுருஷனை வழிபாட்டு மேலான பதவியை அடைகிறார்கள் என்று பொருள்.
    இங்கு நாகம் என்பது இந்திரன் மற்றும் தேவர்களின் சுவர்க்கம் அல்ல.வைகுண்டத்துக்கும் நாகம் என்று பெயர். ஸாத்யர்கள் முதலியோர் நித்யசூரிகள் என்றும் கொள்ளலாம். அதனால் இங்கு நாகம் என்பது பிறவி ஒழிந்த நிலையையே கூறுகிறது.
    அதாவது முக்தி நிலை . அதைவிட பெரிய சுவர்க்கம் ஒன்று உளதோ!

    To be continued
Working...
X