182.ஒருபதுமிருபது
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன தனதான
ஒருபது மிருபது மறுபது முடனறு
முணர்வுற இருபத முளநாடி
உருகிட முழுமதி தழலென வொளிதிகழ்
வெளியொடு வொளிபெற விரவாதே
தெருவினில் மரமென எவரொடு முரைசெய்து
திரிதொழி லவமது புரியாதே
திருமகள் மருவிய திரள்புய அறுமுக
தெரிசனை பெறஅருள் புரிவாயே
பரிவுட னழகிய பழமொடு கடலைகள்
பயறொடு சிலவகை பணியாரம்
பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி
எழுதிய கணபதி யிளையோனே
பெருமலை யுருவிட அடியவ ருருகிட
பிணிகெட அருள்தரு குமரேசா
பிடியொடு களிறுகள் நடையிட கலைதிரள்
பிணையமர் திருமலை பெருமாளே

-182 ஸ்ரீசைலம்
(கர்நூல் மாவட்டம்)பதம் பிரித்தல் பத உரை
ஒருபதும் இருபதும் அறுபதும் உடன் ஆறும்
உணர்வு உற இரு பதம் உ(ள்)ளம் நாடி


ஒருபதும் ......உடன் ஆறும் = (10+20+60+6) தொண்ணூற்றாறு தத்துவங்களின் உணர்வு உற =தன்மையை உணர்ந்து இரு பதம் = (உனது) இரண்டு திருவடிகளையும் உ(ள்)ளம் நாடி = மனதில் விரும்பி நாடி.


உருகிட முழு மதி தழல் என ஒளி திகழ்
வெளியொடு ஒளி பெற விரவாதே


உருகிட = உள்ளம் உருக முழு மதி = முழுச் சந்திரனின் தழல் என = தீப் போன்ற ஒளி திகழ் வெளியொடு = பர வெளியின் ஒளிபெற = சேருதற்குவிரவாதே = முயற்சி செய்யாமல்.


தெருவினில் மரம் என எவரொடும் உரை செய்து
திரி தொழில் அவம் அது புரியாதே


தெரு தனில் = தெருவில் மரம் என = மரம் போல நின்று.
எவரொடும் உரை செய்து = யாரோடும் பேசிப் பேசி திரி
தொழில் = திரிகின்ற தொழிலை அவம் அது புரியாதே =நான் வீணாக மேற் கொள்ளாமல்.


திருமகள் மருவிய திரள் புய அறு முக
தெரிசனை பெற அருள் புரிவாயே


திரு மகள் = இலக்குமி மகளாகிய வள்ளி மருவிய =அணைகின்ற திரள் புய = திரண்ட புயங்களை உடையவனே அறுமுக = ஆறு முகனே தெரிசனை பெற = உனது தரிசனையைப் பெறுதற்கு அருள் புரிவாயே =அருள் புரிவாயாக

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
பரிவுடன் அழகிய பழமொடு கடலைகள்
பயறொடு சில வகை பணியாரம்


பரிவுடன் = அன்புடனே அழகிய பழமொடு = நல்ல பழங்களுடன் கடலைகள் பயறொடு = கடலை, பயறு
சில வகை = சில வகைப்பட்ட பணியாரம் = பலகாரங்கள் (இவைகளை).


பருகிடு பெரு வயிறு உடையவர் பழ மொழி
எழுதிய கணபதி இளையோனே


பருகிடு = உண்ணும் பெரு வயிறு உடையவர் = பெரிய வயிற்றை உடைய கணபதி பழ மொழி = பழைய மொழியாகிய தமிழில் (பாரதத்தை மேரு மலையில்) எழுதிய கணபதி இளையோனே = எழுதிய விநாயகருக்குத் தம்பியே.


பெரு மலை உருவிட அடியவர் உருகிட
பிணி கெட அருள் தரு குமரேசா


பெரு மலை = பெரிய கிரவுஞ்சம் உருவிட = ஊடுருவ
அடியவர் உருகிட = அடியார்கள் நெஞ்சம் உருக பிணி
கெட = (அவர்களுடைய) பிணிகள் தொலைய அருள் தரு குமரேசா = அருள் செய்கின்ற குமரேசனே.


பிடியொடு களிறுகள் நடை இட கலை திரள்
பிணை அமர் திருமலை பெருமாளே.


பிடியொடு = பெண் யானைகளுடன் களிறுகள் நடையிட = ஆண் யானைகளும் உலவ கலை திரள் = கலை மான் கூட்டங்கள் பிணை அமர் = பெண் மான்களுடன் இருக்கின்ற திருமலை பெருமாளே = திருப்பருப்பதத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

.குகஸ்ரீ ரசபதி அவர்கள் அருளிய விரிவுரை
அளவற்ற சுவை அமைந்து காட்சிக்கு விருந்தாய் உண்டாற்கு உரம் தரும்
இனிய கனி வகைகள் சில உள்ளன. அவைகளை அழகிய பழங்கள் என
அறிகிறோம்.உழைப்பாளிகளுக்கு கடலை வகைகளால் காயம் வலுக்கும்.
மென்மையும், சுவையும், தண்மையும், பசுமையும் தழுவிய பலத்தை பயறு
வகைகள் அளிக்கும். உருவத்தால் , சுவையால் , நிறத்தால் பல வகைப்படும்படி
சுத்தமாகப் பண்ணப்பட்டதை பணியாரம் என்பர். சாத்வீகம் நல்கும்
சத்துள்ள இவ்வுணவுகளை உண்ணவேண்டும். உலகிற்கு பயன் விளைய
உழைக்கவேண்டும். கனிவோடு மக்கட்கு அதைக் காட்டுகிறார் கணபதி.
தெரிகிறதா என்று தேசியவாதிகள் தெரிவிக்கிறார்கள்.


சபாஷ் , அப்படியெல்லாம் உடம்பை பலப்படுத்திக் கொண்டுதான் தோள்
தட்டி தொடை தட்டி கோதாவில் குதி போட்டு கயமுகாசுரனை
கொன்றிருக்கிறார் கணபதி. புரிகிறதா? என தேகபலவாதிகள் தெரிவிக்
றார்கள். இப்படியெல்லாம் பலப்பட பேசுவார் பேசும் பேச்சிலிருந்து
றிவதும் பலவகை. அதனால் விளையும் அவதியும் பலவகை என அறியலாம்
அல்லவா?
பழமும், கடலையும். பயறும், பணியாரமும் அதனால் விளையும் பலமும்
ஆகிய இவைகளை ஆய்வதும் ஆய்ந்ததை பிறருக்கு எழுதியும் பேசியும்
அறிவிப்பதுமான இந்த ஆரவாரத்தில் கடவுள் திருவுருவம் கரைந்து விடுகிறது.
பொல்லாத இப்போக்கு ஜீவபோதம் எனப்படும். இந்தப் போதம் பலவகைப்படும்.
அவைகளை அறிவிக்கின்றது பலவகைப் பண்டங்கள். பழவகை போன்றது ஒருமலர் போதம். கடலைப் பயர் வகை போன்றது இருமலர் போதம். பலவகையான பணியாரம் போன்றது மும்மலர் போதம். நிவேதிப்பவருக்கு நிவேதின காலத்தில் இந்நினைவு இருக்க வேண்டும்.
பிள்ளையார் பெயர் கொண்ட பெரும, நின்னை தரிசிக்க முடியாதபடி இடையில்
தடையிடும் போத அறிகுறியான இவைகளை எதிரில் இட்டோம். பாழும் போதம்
மட்டும் எம்மை பாதிக்காத படி கா கா கா என்று மூன்று குட்டு. மனம் உனது
அடிமை. வாக்கு உனது பணியாள். காயம் உனது ஏவளன் என
அந்நினைவோடு மூன்று தோப்புக்கரணம் போடுவோம்.
அன்பால் நிவேதிப்பைவைகளை எம்மான் கணபதி ஏற்கிறார். பெரு
உலகனைத்தையும் வைத்துக் காக்கும்பெரு வயிறு உடையவருக்கு எவர்
போதத்தையும் ஏற்பது எளிதான செயல் தான். அவரை பரிவுடன் பருகிய பெரு
வயிறுடையவர் என்று பாடுகிறோம். ஜீவ போதங்களை ஏற்கும் சிவசுதர்
அதைக் காண்கிறார். உரியவர்கள் நால்வேதங்களை ஓதட்டும். வாழும்
வழிவகை அறிய ஐந்தாம் வேதமான பாரதத்தை நீங்கள் ஓதுங்கள் என்று
எழுத்து போல் காணுமாறு அதை எடுப்பான மேரு கல் மேல் மலை மேல்
எழுதி வைக்கிறார். அவரை பழமொழி எழுதிய கணபதி எனப் பணிகிறோம்.
பழமொழி மயமான அப்பாரதத்தை உணர்ந்து ஓதுபவர் பாரதர் எனும்
பெயர் பெற்றனர்.


எக்காரணங்களாலும் இடையூறு விளையாதபடி இப்படி எல்லாம் உதவ
முன்னாகும் முதல்வருக்கு பின்னாகும் உன்னை கணபதி இளையோனே
என ஆர்வம் கொண்டு அழைக்கிறோம். அவர் மூத்த பிள்ளையார். நீர்
இளைய பிள்ளை. அவருக்குள் நீ. உன்னுள் அவர். அவர் காட்சி ஆரம்பம்.
அடுத்து சேவை தருவது நீ. ஆ என்ன அருமை. மாதவ முநிவர்களுக்கும்
மருளை விளைத்த க்ரவுஞ்ச மலையை தன்னுள் மறைந்திருந்த ஆணவ
தாரகாசுரனை ரக்ஷித்து வந்த மாயா மலையைப் பிளந்தது உன் அருள்.
- காணரிய மெய்ஞான கண்காட்டி, அடிஞானத்தால் பொருளும் ஆன்மாவும்
காட்டி, அடியார் புவன முற்றும் காட்டி, தெளிமுதம் ஆகி எங்கும் நீக்கமற
நின்ற நிலை காட்டி - அடியார் உள்ளம் பாகாய் உருகுமாறு உதவியது
நின்னருள்.


மருள் அழித்து உள்ளம் உருக வைத்து அவ்வழியே பிறவி நோயை பெயர்த்து
எறிகிறது உனது பேரருள். இவைகளை எண்ணும் போது,
- ஊன் உயிர் வேறு செய்தான் நொடித்தான் மலை உத்தமனே - என
வரும் சுந்தரர் தேவாரம் நினைவில் வந்து நிழலாடுகிறதே. அந்த அனுபவம்
கொண்டே பெருமலை உருவிட அருள் தரு குமரேசா,
அடியவர் உருகிட அருள் தரு குமரேசா, பிணி கெட அருள் தரு குமரேசா
என்று குரல் கொடுத்து உன்னை கூவி அழைக்கிறோம். மருள் தவிர்த்து
உள்ளம் காதலித்து உருகி தவிர்க்க முடியாத பிறவி நோயையும் தவிர்த்த
பின் விடுதலை அடைந்த குமரியான உயிரைக் கூடுபவன் நீ வாழுமாறு
அவளை பேரின்ப செல்வத்துள் வைப்பவனும் நீ. உண்மை அனுபவமான
அவைகளை உணர்ந்து குமரேசா என்று எம்முள்ளம் கூவுகிறது ஐயா.
வன்ன மயில் சிறந்தது. மலை போல் உயர்ந்த யானைகள் தம் இனம் தழுவி
தாமும் வாழும். இந்த நியதி தான் இயற்கை. நெருக்கி நொருக்கி கலப்பகம்
செய்து தாழ்ந்தோரை உயர்த்தினோம் என்று அவைகள் தருக்குவது இல்லை.
அதனால் பெருமிதம் அவைகளின் நடையில் பிறக்கிறது.


மென்ன இன மான்கள் தம் இனம் தழுவி ஆணும் பெண்ணும் அச்சமின்றி
இன்புறுகின்றன. அவைகள் தம்மின் உயர்ந்தளரில் உதட்டு உறவு
கொண்டு உயர்ந்தாரை தாழ்த்தினம் என்று முறுவலிப்பது இல்லை.
அவைகளின் வாழ்க்கை அமைதிச் சூழ்நிலை. அவைகள் வாழும் இடத்தைப்
பொருத்தது அச்செய்தி. கண்டார் யாரும் விரும்பும் தன்மை நோக்கத்தை
திரு என்று கூறுவர் தெளிந்த அறிவினர். அந்தத் திரு இருந்த மலை திருமலை
என்றே பேரும் புகழும் பெற்றுள்ளது. அந்த இடத்தின் சாயலால்
அஃரிணைகளிலும் அமைதியான வாழ்வு.
பிடியொடு களிறுகள் நடயிட கலைதிரள் பிணையமர் திருமலை பெருமாளே.
திருமலையே நீர்தானா ?. அல்லது அம்மலை உமது உடைமையா?.
எப்படியானாலும் சரி. பிரபு நீ. பெயரில் பெரியவன். ஊன்றி அந்நிலையை
உணர்கிறோம். திருமாலைப் பெருமாளென தெரிந்தே அழைக்கிறோம்.
பெரும , என் விண்ணப்பத்தை ஏற்று அருளும்.


ஒருபதும் இருபதும் சேர்ந்தால் முப்பது. அத்துடன் ஆறு பத்து சேர்ந்தால்
தொண்ணூறு. அத்துடன் ஆறு சேர்ந்தால் தொண்ணூற்றாறு. இருக்கும்
தத்துவங்கள் இவை. என்ன இது கூட்டல் கதை?. 96 என்று எடுத்த
எடுப்பில் சொன்னால் என்ன ?. இப்படி சிரித்தும் பேசலாம் சிலர்.
மாயாகாரிய முதன்மைத் தத்துவங்கள் 36 . இவைகள் அடங்கிய
தாத்துவீகங்கள் 60 . ஆக 96 என்று அறிஞர்கள் தொகுத்துக் கூறினர்.
வகுத்துக் காட்டினர்.விதித்து விளக்கினர். பெரு முழக்கு எழுப்பி அது
குறித்து மேடைகளில் பேசினர். அது உருப்போட்டு தத்துவங்களை
ஒப்பிப்பது போல தோன்றுகிறது. எம்மனோர்க்கு இது ஒன்றும்
விளங்கவில்லையே.


மண் முதல் நாதம் ஈறாக அவைகள் அகில சராசரங்கள் ஆகி விரு விரு
என்று செயல்களை விரைந்து செய்து கொண்டு இருக்கின்றன.
தத்துவங்களுக்கு உள்ளிருந்து அவைகளின் பிரமாண்டமான ஆக்கத்தை
எவ்விதம் அறிய முடியும்?. தத்துவங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் தான்
அவைகளை அறிய இயலும். அறிவிக்கவும் முடியும்.


வியாபகமான தத்துவங்கள் உம் சன்னதியில் அணு மயமாய் அடங்கும்.
- அண்டங்கள் எல்லாம் அணுவாக, அணுக்கள் எல்லாம் அண்டங்களாக,
பெரிதாய் சிறிதாயினவன் நீ - . பழம் பெரும் பத்து தத்துவங்கள் அருட்
சன்னதியில் நிவேதிக்கும் பழவகை போல அடங்கி விடும். அடுத்த இருபது
தத்துவங்கள் கருணைமிகு உன் திருமுன் கடலை வகைகள் போல
உருண்டு ஒடுங்கிவிடும். பின் சொன்ன 60 தத்துவங்கள், அத்தா, நின்
எதிரில் பயறு வகைகள் போல் பார்க்க இருக்கும். அதன் பின் ஆறு
தத்துவங்கள் பரமா, நின் பலகார வகைகள் அவ்வளவு அரிதாய்
அடங்கிவிடும்.


தத்துவ அதீதன் ஆன தர்ப்பரமா, வித்தக தத்துவ நுட்பங்கள் விளங்குமாறு
அருளால் விளக்குக. புனித, அந்நுட்பங்கள் எளியேன் உணர்விற்கு
புரியுமாறு அரளால் அத்தத்துவ தரிசனை தந்தருள். அது குறித்தே ஒருபதும்
இருபதும் அறுபதும் உடன் ஆறும் உணர்வு அருள் புரிவாயே என்று
வேண்டுகிறோம்.


கல் மேல் பாரதம் எழுதிய கணபதி போல் உமது திருவடிகள் எம் இதய
ஏட்டில் எழுதப்படப் பெற்று, சதா எண்ணப்பெற்று, கல்லான மனம்
கரையுமாறு அருளால் பேறான திருவடி தரிசனம் அடியோம்கள் பெற
அருள் பெரும, உளம் நாடி உருகிட இருபத தரிசனை பெற அருள்
புரிவாயே என்று பிரார்த்திக்கிறோம்.


தன்மை முழு மதியின் தழல் வெண்மை ஒளியதாய் விண்ணில் விரவி
உள்ளது. அவ்வொளி வெள்ளத்தை தன்னுள் அடக்கி உள்ளது சுத்த வெளி.
- சோம்பல் இருப்பது சுத்த வெளியிலே, சோம்பல் கிடப்பது சுத்த
வெளியிலே, சோம்பல் உணர்வு சுருதி முடிந்திடம், சோம்பல் கண்டார்
அசடசுருதியின் கண் தூக்கமே.- - தூங்கிக் கண்டார் சிவலோகம் தம்முளே,
தூங்கிக் கண்டார் சிவயோகமும் தம்முளே தூங்கிக் கண்டார் நிலை
சொல்வது எவ்வாறே - என அருள் மூலம் தெரிந்த திருமூலர்
அதிரகசியமான இதனை மந்திரப் பெயரால் வாய் மலர்ந்ததனை அறியார்
யார் ?.


அடியவரை உருக வைத்து அவர் தம் பிறவி நோயை தவிர்த்தவாறு போல்
பரவெளியையும் அதனில் உள்ள சிவ ஒளியையும்களிப்புடன் அடியேன்
கண்டு கலக்குமாறு காட்டாயா ? தங்கிய தவத்துணர்வு தந்து அடிமை முத்தி பெற சந்திர வெளிக்கு வழி அருள்வாயே என்று முன்னம் ஒரு தரம் வேண்டியுள்ளேன். முழுமதி தழல் ஒளி திகழ் வெளியோடு ஒளி பெற அருள் புரிவாயே என பின்னம் ஒரு தரம் பிரார்த்திக்கிறேன்.


திருவருள் குறிப்பை அறியாமல் நெடுமரம் போல் வீதிதோறும் நின்று
பயனற்ற கதைகளை பலரிடமும் பேசி அவமே ஊர் சுற்றும் அநியாயம்
செய்யாதபடி களிறினமும் மானினமும் தம் இனம் கலந்தவாறு வீரமகள்
கண்டு கலந்த பன்னிரு தோள்கள் காட்டி என்னை நீ பற்றாயா ?. ஆடுதல்
புரியும் ஆறுமுக சுவாமி, பேறான உன் தரிசனம் அடியேன் பெறுமாறு புனித,
நின் அருள் புரிந்தருள் என்று வீழ்ந்து வணங்கி விண்ணப்பித்தபடி
இளையோனே, குமரேசா, பெருமாளே, திருமகள் மருவிய திரள் புயா,
அறுமுகா, உணர்வுற, உளம் நாடி உருகிட, ஒளி பெற, தெரிசனை பெற,
அருள் புரிவாயே என வரும் இப்பாடல் பொருள் உணர்வோடு ஓத ஓத
இன்னும் ஓதம் காட்டி ஊறுகின்றதே
.
விளக்கக் குறிப்புகள்
பாரத மென்ற பெருங்கதை.பார மேருவி லன்று வருந்தவ னிளையோனே-- -திருப்புகழ், மாய வாடைதிமிர்
பாரதத்தை மேரு வெளி வெளி திகழ்
கோடொ டித்த நாளில் வரைஇ வரைஇ பவர்
பானி றக்க ணேசர்---------------- திருப்புகழ், சீர்சிறக்குமேனி.
இனிமையி னுகருற் றெம்பி ரானொரு கொம்பினாலே
எழுதென மொழியப் பண்டு பாரதம்
வடகன சிகரச் செம்பொன் மேருவில்
எழுதிய-------------------- -- திருப்புகழ், அலகில வுணரை.


.....சண்ட வருமீதே
பழுதறவி யாச னன்றி யம்ப
எழுதியவி நாய கன்சிவந்த----------- --- திருப்புகழ், குகையில்நவ.


வட சிகரிமிசை
பரியதனி யெயிறுகொடு குருநாடர்
கதைமுழுது மெழுது மொருகளிறுபிளி றிடநெடிய-
-திருப்புகழ்,வதைபழக.

பார்க்க : அருணகிரியாரின் கணபதி