Announcement

Collapse
No announcement yet.

Dasavataram part8-Krishna - Raasaleelai

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Dasavataram part8-Krishna - Raasaleelai

    இப்போது ராஸலீலையைப் பார்க்கலாம்.
    மனதில் இறைவன்மீது பற்று வந்துவிட்டால் உலகப்பற்று அழிந்துவிடுகிறது, அப்போது மனம் புல்லாங்குழல் போல் ஆகிவிடுகிறது. அப்போது அதில் உள்ள துளைகள் ஆகிற இந்த்ரியங்கள் மூலம் கண்ணனின் நினைவாகிய இனிய சங்கீதம் நிறைகிறது. அதனால்தான் புல்லாங்குழலைக் கண்டு கோபியர் பொறாமைப் படுகிறார்கள் என்று சொல்லப் படுகிறது.
    நம் மனம் அவனுடன் இணைய விரும்பினாலும் உலகப் பற்று நம்மை அவனிடம் சேர விடாமல் தடுக்கிறது. இதுதான் ராதையினுடையவும் கோபியருடையவும் விரஹ தாபமாக உருவகப் படுத்தப் படுகிறது.
    இந்த ராஸக்ரீடையைப்போல் கண்ணின் வேறு எந்த செய்கையும் தவறான கண்ணோட்டத்தில் விமரசிக்கப் படவில்லை. அதற்குக் காரணம் கிருஷ்ணனை வாலிபனாக மேடைகளிலும் கவிதைகளிலும் சித்தரிக்கப் பட்டதுதான். பலருக்குத் தெரியாத உண்மை என்னவென்றால் அப்போது கிருஷ்ணனுக்கு பத்து வயது. ராஸலீலையின் உள்ளர்த்தம் தெரியாவிட்டாலும் இந்த உண்மை மறுக்கமுடியாதது.
    பாகவதம் சொல்கிறது, கோபியர் கிருஷ்ணனைத் தேடி இரவில் யமுனைக்கரைக்குப் போகின்றபோது அவரவர் வீட்டில் அவர்கள் இருக்கின்றது போலவே தோன்றிற்று. அதாவது அவர்கள் யோக சரீரம் அங்கே சென்றது. தண்டகாரண்ய ரிஷிகள் தான் கோபியராக உருவெடுத்தனர் என்று ஒரு கொள்கை உள்ளது. அவர்கள் ராமன் அழகில் மயங்கினர் அவனைத்தழுவ ஆசை கொண்டனர். அடுத்த பிறவியில் உங்கள் ஆசையை நிறைவேற்றுவேன் என்று ராமன் கூறினான் என்பது ஓரிடத்தில் காணப் படுகிறது.
    நிற்க, ராஸக்ரீடையின் உள்ளர்த்தத்தை இப்போது பார்க்கலாம்.
    நம் மனதில் ஆயிரம் எண்ணங்கள். அவை எல்லாம் இறைவனைக் குறித்தே இருக்குமே ஆனால் நம் மனதில் நடப்பது ராசக்ரீடை. ஒவ்வொரு எண்ணமும் ஒரு கோபி. எல்லாம் கண்ணனைப் பற்றியே. அதனால் அவைகளின் நாடு நாயகமாய் இருப்பது அவனே. ஒவ்வொரு எண்ணமும் கண்ணனையே பற்றி நிற்பதால் ஒவ்வொரு கோபியின் இடையில் ஒரு கண்ணன். லீலாசுகர் சொல்கிற மாதிரி, 'அங்கனாம் அங்கனாம் அந்தரே மாதவோ ---' அப்போது எழுவது இனிமையான் குழலோசை 'ஸந்ஜகௌ வேணுனா தேவகி நந்தன:'
    இதைப்பற்றி என் சிந்தனையில் உதித்தஸ்லோகம்,
    एकैकमनोरथे माधवे विषयंभूते यदि
    भवति तत् रासलीलागोपीकृष्णसहस्रैः|
    मनोरथानां गोपिकानां वल्लभो नारायणः
    तेषां समाहतिरेव राधा सा हरिवल्लभा
    ஏகைக மநோரதே மாதவே விஷ்யம்பூதே யதி
    பவதி தத் ராஸலீலா கோபீ கிருஷ்ண சஹஸ்ரை:
    மனோரதானாம் கோபிகானாம் வல்லபோ நாராயண:
    தேஷாம் சமாஹதிரேவ ராதா ஸா ஹரிவல்லபா
    ஏகைக மனோரதே – ஒவ்வொரு எண்ணமும்
    மாதவே – மாதவனை
    விஷயம்பூதே ஸதி- பற்றியே இருக்குமானால்
    தத் – அது
    கோபீக்ருஷ்ண ஸஹஸ்ரை : - பல கோபிகளும் பல கிருஷ்ணர்களும் ஆனா
    ராஸலீலா- ராசக்ரீடை
    பவதி – ஆகிறது.
    மனோரதானாம் – எண்ணங்கள்என்கிற
    கோபிகானாம் – கோபிகைகளுடைய
    வல்லப:- பிரியன்
    நாராயண: - நாராயணன் ஆன கண்ணன்.
    தேஷாம் – அவைகளுடைய
    சமாஹதி: ஏவ- ஒருமைப்பாடுதான்
    ராதா- ராதை
    ஸா – அவள்
    ஹரிவல்லபா-ஹரிக்குப் பிரியமானவள்.
    எவ்வாறு சிறிய மீன்களை பெரிய மீன் விழுங்குகிறதோ , எவ்வாறு சிறிய அலைகள் பெரிய அலையுடன் கல்க்கின்றனவோ அவ்வாறு எல்லா எண்ணங்களும் சேர்ந்து அவனை அடையும் ஒரே எண்ணமாய் மாறுகிறதோ அதுதான் ராதை. ஜீவாத்மா பரமாத்ம சங்கமம்தான் ராதாக்ருஷ்ண தத்துவம்.
    கீத கோவிந்த காவியத்தில் ஜெயதேவர் வர்ணிக்கும் ராதையின் விரஹ நிலை ஜீவன் எவ்வாறு பரமாத்மாவைப் பிரிந்து தவிக்கிறது என்பதைக் காண்பிக்கிறது. நாம் அறியாமையினால் அவனைப் பிரிந்து அதனால ஏற்படும் துன்பங்களுக்கும் அவனையே குற்றம் சாட்டுகிறோம். அவன் கருணையினால் நம்மிடம் வந்தாலும் வந்த கண்ணனை ராதை விரட்டியது போல் செய்கிறோம். ஆசார்யன் என்ற சகியின் உபதேசத்தால் மனம் திருந்தி அவனை சரண் அடைகிறோம். இதைச்சொல்வதுதான் கீத கோவிந்த காவியம்.
    இதைக் குறிக்கும் என் ஸ்லோகம் :
    राधायाः विरहं विदूरगमनं च तत्
    अहंकारविमूढात्मनः परमात्मवियोगं |
    भगवान् करोति परिश्रमं तत्पुनरागमने यथा
    चारुशीलायाः प्रियायाः अनुनयने इव प्रियः ||
    ராதாயா: விரஹம் விதூரகமனம் ச தத்
    அஹங்காரவிமூடாத்மன: பரமாத்மவியோகே
    பகவான் கரோதி பரிச்ரமம்தத்புனராகமனே யதா
    சாருசீலாயா: ப்ரியாயா: அனுனயனே இவ பிரிய:
    ராதாயா: - ராதையினுடைய
    விரஹம்- பிரிவுத் துன்பம்
    விதூரகமனம் ச – கிருஷ்ணனை விட்டுப் பிரிந்து வெகு தூரம் போதல்
    தத் – என்ற அது
    அஹங்காரவிமூடாத்மன:- நான் என்ற மயக்கத்தில் உள்ள ஜீவனின்
    பரமாத்மவியோகம் – பரமாத்மாவை பிரிதல் ஆகும்.
    பகவான் – இறைவன்
    தத் புனராகமனே – அந்த ஜீவன் மறுபடி தன்னை வந்தடைய
    பரிஸ்ரமம் கரோதி- இடைவிடா முயற்சியில் ஈடுபடுகிறான்.
    ப்ரிய: இவ – ஒரு காதலனைப்போல்
    சாருசீலாயா: - நல்ல மனம் கொண்ட
    ப்ரியாயா: - தன் ப்ரியை இடத்தில்
    அனுனயனே – சமாதானம் செய்வது போல.
    கோபிகைகளும் உத்தவரும் கீதையில் சொல்லியிருக்கும் பக்தி யோகத்திற்கு உதாரணமாவர்.
    மச்சித்தா மத்கதப்ராணா: போதயந்த: பரஸ்பரம்
    கதயந்தச்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச (ப. கீ- 1௦.9)
    "மனதை என்பால் செலுத்தி என்னையே தம் உயிராகக் கருதி, ஒருவருக்கொருவர் என்னைப்பற்றிக் கூறி என்னைப் ;பற்றியே பேசி மகிழ்ந்து நிறைவடைகிறார்கள்."
    இவ்வாறு ராசலீலை என்பது உயர்ந்த வேதாந்தக் கருத்தும் பக்தியின் சாரமும் கொண்டதாகும். இதைச் சொன்னவர் முற்றும் துறந்த ஞானியாகிய சுகர். கேட்டது மரணத் தருவாயில் இருந்த பரீக்ஷித். சுற்றி இருந்தவர்கள் ரிஷிகள். அதிலிருந்து இதன் உயர்வை அறியலாம்.
    கடைசியாக மகாபாரதப் போரில் கண்ணனின் பங்கு என்ன என்பது. அது தருமத்திற்கும் அதருமத்திற்கும் இடையே நடந்த போர். பாண்டவரின் வெற்றிக்கு பாடுபட்டான் கண்ணன் என்பது எப்படியும் தருமமே வெல்லும் என்பதைக் காட்டவே . கண்ணன் செய்தது எல்லாமே மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்டவை ஆகும். ஆதலால் அவன் கர்மபலதாதா , அவரவர் கர்மத்தின் பலனை அளிக்கும் சக்தியாக காரியத்தை நடத்தினான் . அதனால் தான் நான் இவர்களை ஏற்கனவே கொன்றாகி விட்டது அர்ஜுனா , நீ ஒரு கருவி மட்டுமே என்று கூறினான்.அதனால்தான் பீஷ்மர் 'ஆசாரப்ரபவோ தர்ம: தர்மஸ்ய ப்ரபு: அச்யுத:'என்று கூறினார். இதன் பொருள் , கண்ணனே தர்மஸ்வரூபம் அவன் செயலே தர்மம் என்பது.
    பாரதக் கதையிலிருந்து சற்று உள்ளே போனால் பாரதப்போர் என்பது என்ன என்று அறியலாம். நம் உள்ளமே குருக்ஷேத்ரம் . குரு என்றால் 'செய்' என்று அர்த்தம். செயலுக்கு ஆதாரம் எண்ணமே அல்லவா? மனித மனதில் நல்ல எண்ணங்களை விட மற்ற எண்ணங்கள் தான் அதிகம் ஆதலால்தான் கௌரவர் நூறு பாண்டவர் ஐந்து. இவைகளுக்குள் எப்போதும் போர்தான். ஜீவன் உடல் என்ற ரதத்தில் இருக்கிறான். இந்த்ரியங்கள் குதிரைகள், மனம் கடிவாளம் . இதற்கு ஒரு நல்ல சாரதி இல்லை என்றால் குதிரைகள் இஷ்டப்படி ஓடும் மனமும் அவைகள் பின்னால ஓடும். இறைவனை சாரதியாக்கி அவன் கையில் மனம் என்ற கடிவாளத்தை கொடுத்து விட்டால் வாழ்க்கை சீரான பாதையில் ஓடும். தீய சக்திகளை ஒழித்து வெற்றி காணலாம் இதுதான் மகாபாரதப்போரின் கருத்து.
    கிருஷ்ணாவதாரத்தை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் சாராம்சம் இதுதான்.
    கல்கி அவதாரம்
    இதைப்பற்றி ஒன்றும் விரிவான வர்ணனை இல்லை. ஆனால் பகவான் அதர்மம் கட்டுக்கடங்காமல் போகையில் வாட்கை கொண்டு குதிரை மேல் ஏறி கல்கி அவதாரம் எடுத்து கலியுகத்தை அழித்து மறுபடி கிருத யுகத்தை நிலை நாட்டுவார் என்று காணப்படுகிறது. இதன் உள்ளர்த்தம் என்ன என்று பார்த்தோமானால் அறியாமையினால் தோன்றிய எல்லா தீமைக்கும் காரணமான ஆசை என்பதை ஞானம் என்ற வாளினால் அழிப்பதே இந்த அவதாரத்தின் சாராம்சம்.
    இவ்வாறு இதிகாசங்கள் புராணங்கள் இவைகளில் நமக்கு வேண்டிய அறிவுரைகள் கொட்டிக் கிடக்கின்றன. இதை எடுத்து பயன் பெறுவது நம் கையில்.
    அடுத்த பதிவு முடிவுரை. இதில் அவதாரம் என்றால் என்ன? இதிகாசம் புராணம் என்பவை யாவை? இவைகளின் நோக்கம் என்ன? கீதையின் மேன்மை என்ன ? என்பவைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்
Working...
X