சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
*நாகநாதசுவாமி கோவில், திருப்பாதாளீச்சரம்.*
(தற்போது பாமணி என்று வழங்கப்படுகிறது)


தேவாரம் பாடல் பெற்ற சிவ தலங்களில் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் நூற்றி நான்காவது தலமாகப் போற்றப் படுகிறது.


*இறைவன்:* நாகநாதசுவாமி, சர்ப்ப புரீசுவரர்.


*இறைவி:* அமிர்தநாயகி.


*தல விருட்சம்:* மா மரம்.


*தல தீர்த்தம்:* பிரம்ம தீர்த்தம், நாக தீர்த்தம், பசுபதி தீர்த்தம், தேனு தீர்த்தம், ருத்ர தீர்த்தம்.


*ஆகமம்:* காரண ஆகமம்.


*திருமேனி:* சுயம்புவானவர்.


*ஆலயப் பழமை:* ஆயிரத்திலினுந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.


*தேவாரப்பதிகம்:*
திருஞானசம்பந்தர். அப்பர், சுந்தரர்.


*இருப்பிடம்:*
மன்னார்குடிக்கு வடக்கே நகர எல்லையிலிருந்து மூன்றரை கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.


மன்னார்குடியிலிருந்து பாமணிக்குச் செல்லும் சாலையில் சென்று, பாமணியை அடைந்து, அங்குள்ள உரத் தொழிற்சாலையை ஒட்டிய சாலையில் சென்றால் கோயிலையடையலாம்.


கோயில் வரை வாகனங்கள் செல்லும். மன்னார்குடியில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு.


*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு சர்ப்பபுரீசுவரர் திருக்கோயில்,
பாமணி,
பாமணி அஞ்சல்,
வழி மன்னார்குடி,
மன்னார்குடி வட்டம்,
திருவாரூர் மாவட்டம்.
PIN - 614 014


*ஆலயத் திறப்பு காலம்:*
இவ்வாலயம் தினந்தோறும் காலை 9.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்


*கோவில் அமைப்பு:*
இத்தல ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. மனசு எண்ணவோ போலிருந்தது.


ராஜகோபுரத்தை முதலில் கண்டு வணங்கி ஆலயத் தொழுகை செய்வதென்பது மனசுக்கு திருப்தியான சந்தோஷம் கிடைக்கச் செய்வதாகும்.


தோரண வளைவே ராஜகோபுரத்துடடான எண்ணத்துடன் *சிவ சிவ* என மோழிந்து வளைவு வாயில் வழியாக உள் புகுந்தோம்.


திருக்கோயிலின் உள்ளே நுழைந்ததும் தென்புறமாக தல விருட்சமாகிய மாமரமிருக்க கண்டு வணங்கிக் கொண்டோம்.


கொடி மரம் முன்பாக தொழுது கொண்டு, ஆலயத் தொழுகை பூரணமாகி வெளிவந்து உண் முன் விழுந்து சரணடைகிறோம் என நினைத்து நகர்ந்தோம்.


விமானத்துடன் கூடிய நந்தி மண்டபத்தைக் கண்டு, வணங்கித் தொழுதோம்.


வட புறமாய் ஸ்ரீ அமிர்த நாயகி அம்பிகையின் சந்நிதிக்குச் சென்றோம். நாட்டில் நல்வன செழிக்க வேண்டுதலை விண்ணப்பித்து வணங்கிக் கொண்டு, அர்ச்சகர் கொடுத்த குங்குமப் பிரசாதத்துடன் வெளிவந்தோம்.


வெளிவந்து அம்மையின் சந்நிதியை தனியாக திருச்சுற்றும் முறைடன் விளங்குகியதால், திருச்சுற்று ஒன்றை வலம் செய்து வணங்கிக் கொண்டோம்.


அம்மையைச் சுற்றிவரும்போது, மண்டபத்தின் சுவர்களில் தான் எத்தனை எத்தனை ஓவியங்கள்? அத்தனை ஓவியங்களும்
தல புராணத்தை விளக்கிக் கூறும் ஓவியங்களாகவே தீட்டப்பட்டிருந்ததைக் கண்டு மெய்மறந்து வலம் செய்தோம்.


அம்பிகையை வலம் வந்து வணங்கிய பின் திருக்கோயில் தரிசனமாக ஈசன் கருவறைக்கு விரைந்தோம்.


திருமூலத்தானத்தினுள் கருணையே வடிவாக எம்பெருமான் காட்சியளித்துக் கொண்டிருந்தார்.


இவர் மணலானான சுயம்புவாக வெளிக்கொணர்ந்து ஐஎழுந்தருளியிருப்பதால் ஈசனுக்கு,வெள்ளிக்கவசம் கொண்டு அலங்கரிக்கப் பட்டிருந்தது.


மனதுக்கு நிம்மதி ஒன்று இல்லாதனால்தான் இவ்வாலயத் தரிசனத்திற்கு வருகைசெய்திருந்தோம். ஆனால், ஈசனின் அலங்காரம் நம் மனதை மயக்கி, மனம் ஆனந்தமாகி, நிம்மதி நம்மிடம் வந்துஅண்டிக் கொண்டது போலிருந்தது........


*"பாசப் பழிகளைக் களையும் பரமன் சூழொளி விளக்கில் ஒளிர்ந்து கொண்டு நம் மனதை பறித்துக் கொண்டான்.*


பார்க்கப் பார்க்க பரவசம் மேலிட்டது. உள்ளத்தில் புத்துணர்வு சூழ்ந்தது. பக்திப் நாக்கால் தேகத்தின் உரோமக் கால்கள் சிலிர்த்து விட்டான. சிவ! சிவ!. திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!! திருச்சிற்றம்பலம்!!!


தீபாராதனையைத் தரிசித்தோம் பின், அர்ச்சகர் தந்த வெள்ளியவிபூதியைப் பெற்று, அப்படியே திரித்து நெற்றிக்கு தரித்து ஆனந்தமாகிக் கொண்டு வெளிவந்தோம்.


வெளி வருகையில், சந்நிதியின் வலப்புறமாக சோமாஸ்கந்த திருமேனியைகண் கண்டு வணங்கிப் பரவசமானோம்.


இதனின் இடப்புறம் வருகையில் இடப்புறம் சிவகாம சுந்தரியுடன் நடராஜப் பெருமான் ஆடல்கலையுடன் தூக்கிய திருவடியைக் கண்டு வணங்கிக் கொண்டோம்.


"உன்னை எத்தனை முறை வணங்கினாலும், தீரா அன்பு மேலிட்டே எழுகின்றன". எங்கு சென்றாலும், எவ்வேலை பளுவுக்கிடையேயும் உன் ஆடலுருவம் எம் கண் முன்னே நிழலாடிக் கொண்டிருக்கிறதே பெருமானை"!


எப்போதும், ஏதொரு சிறு கவலையை, எங்களுக்கு தந்தே வைப்பாயாக'!.. அப்பாடியாக வைத்தால்தான் உன்னை மறவா நிலையுடனிருக்க எங்களுக்கு ஏதுவாகும்!... சிவ!சிவ!!.


அடுத்ததாக தெற்குப் புறமாக ஒரு வாசலுக்கருகில் வந்தோம்.


இந்த வாசலின் அருகிலிருக்கும் ஆதிசேஷனின் திருமேனியைக் கண்டு வணங்கி,
"எந்த வினையானாலும் வந்த வழி ஏகிட வேண்டும்!' என, வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.


திரும்பவும் அதிகார நந்தியைக் காண, மீண்டும் வலம் வந்தோம்.


பின், தெற்குப் பிரகாரத் திருக்கோட்டத்தில் அழகான நர்த்தன விநாயகரைக் கண்டு வணங்கிக் கொண்டோம்.


அடுத்து சிங்கங்கள் தாங்குயிருக்கின்ற மண்டபத்தில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியை உருகி மருகி வேண்டிக் கொண்டோம்.


அடுத்துத் திரும்பிய போது, கன்னி மூலையில் என்ற ஸ்தானமான இடத்தில் க்ஷேத்ர விநாயகரைக் கண்டோம். காதைப் பிடித்தித் திருகி,.... பிறகென்ன',..... தோப்புக்கரணந்தான் போட்டுக் கொண்டோம்.


அடுத்ததாக திருமாளிகைப் பத்திக்கு வந்தபோது அங்கே,
வள்ளி தெய்வயானையுடன் ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமியைத் தரிசித்துக் கொண்டு திரும்பிப் பார்க்கையில்......


எதிரில் திருக்கோட்டத்தினுள் அண்ணாமலையாரைக் கண்டு வணங்கிக் கொண்டோம். வணங்கிக் கொள்ளும் போதே,....என்னாலும் வந்து மீண்டுமொரு முறை கிரிவலம் செய்ய ஆவலிருக்கிறது. அதை உறுதியாக்கி எங்களை அவ்விடம் வரவழைக்க அருள்வாயாக!..என நினைந்து கொண்டோம்.


ஸ்ரீ மஹாலக்ஷ்மி சந்நிதி
இங்கே ஸ்ரீ காளியும் ஸ்ரீ சரஸ்வதியும் ஒருங்கே உறைகின்றதைக் கண்டு கைதொழுது வணங்கிக் கொண்டோம்.


வடக்குப் பிரகாரத்தில் செல்லும்போது, திருக்கோட்டத்தில் ஸ்ரீ நான்முகன் ஸ்ரீ துர்கை
ஸ்ரீ சண்டேசர் சந்நிதிகளுக்குச் சென்று பிரார்த்தித்துக் கொண்டோம்.


பின் வெளிவந்து திரும்பி வருகையில், திருமதிலின் ஓரமாக *அமிர்த கூபம்* எனும் கிணறு இருக்க, அருகில் சென்று எட்டிப்பார்த்து வணங்கி நகர்ந்தோம்.


ஈசான்யத்தில் திசையோரம் வரும்போது, மேற்கு முகமாக ஸ்ரீ பைரவ மூர்த்தியைக் கண்டு பயபவ்யத்துடன் வணங்கிக் கொண்டோம்.


ஞாயிற்றுக் கிழமை தேய்பிறை அஷ்டமி ஆனபடியால், வயிரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.


வீடு திரும்பும் அவசரம் ஏதும் நமக்கில்லாததால், சிறப்பு வழிபாடு முழுமையும் கண்டு தரிசித்து வணங்கி, அவரின் அருளைப் பெற்று வெளிவந்தோம்.


அடுத்து..அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்க வாசகருடன், சந்திரனும்
அந்தப் பக்கமாக சூரியனும் இருக்க வணங்கி வெளிவந்தோம்.


கோடிமரத்து முன் வீழ்ந்து சிரம் புஜம் கரம் படிய தேய வணங்கியெழுந்தோம். சொல்லொணாத அமைதி மனதில் ததும்பலுடன் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறோம்.


ஆலயம் முழுமையும் வருகையில் எங்கேயும் குப்பைகளில் இல்லாமல் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படுகின்றதைப் பார்க்க நேர்ந்தது. பராமரிப்பும் பணிசெய்த திருக்கோயில் பணியாளர்களுக்கு அடியேனின் சிரந்தாழ்ந்த வணக்கங்கள்! நன்றி!!


திருஞான சம்பந்தப்பெருமான் இத்தலத்திற்கு திருப்பதிகம் அருளியுள்ளார்..


திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் தம் திருவாக்கில் வைப்புத் தலமாக விளங்குகின்றது..


*அங்கமும் நான்மறையும் அருள்செய்து அழகார்ந்த அஞ்சொல்
மங்கையோர் கூறுடையான் மறையோன் உறைகோயில்
செங்கயல் நின்றுகளுஞ் செறுவில் திகழ்கின்ற சோதிப்
பங்கயம் நின்றலரும் வயல் சூழ்ந்த பாதாளே! -- திருஞானசம்பந்தர்.


*தல சிறப்பு:*
ஒரு சமயம் நான்முகனுக்கு திருப்பாற்கடலில் இருந்து அமுத மயமான நான்கு மாங்கனிகள் கிடைத்தன..


அவற்றை என்ன செய்வதென்று யோசித்தார்..


நான்கு மாங்கனிகளில் இரண்டினை ஆனைமுகனுக்கும் அறுமுகனுக்கும் வழங்கி மகிழ்ந்தார்..


மீதமுள்ள இரண்டு பழங்களையும் காஞ்சி மற்றும் திருப்பாதாளீஸ்வரம் ஆகிய தலங்களில் செய்த சிவபூஜையில் சமர்ப்பித்து வணங்கினார்...


அதனால், திருப்பாதாளீஸ்வரம் எனும் தலத்தில் ஈசன் எம்பெருமானுக்கு மாங்கனி நிவேதனம் செய்வதனால் தீராத வல்வினைகள் எல்லாம் தீர்கின்றன என்பது ஆன்றோர் வாக்கு..


இங்கே சிவபூஜை செய்வதற்கு நாட்டம் கொண்ட ஆதிசேஷன் -
தனஞ்சயன் எனும் முனிவராக தவமிருந்து வழிபட்டபோது -


அவரது தவத்திற்கு இரங்கிய எம்பெருமான் -
பாதாளத்திலிருந்து பூமியைத் துளைத்துக் கொண்டு வெளிப்பட்டார்..


அதனால் -
திருப்பாதாளீஸ்வரம் என்பது திருப்பெயர்..


ஆனாலும்,
இன்றைக்கு இத்தலம் பாமணி என்றழைக்கப்படுகின்றது..


*தல பெருமை:*
சுகல முனிவர் என்பவர் இத்திருவூரில் இருந்து தவம் புரிந்த வேளையில் அவருடைய பசு மேய்ச்சல் நிலத்தில் ஒரு புற்றினைக் கண்டது.


உள்ளுணர்வினால், புற்று சிவலிங்க வடிவமாக இருப்பதைக் கண்டு தினமும் புற்றின் மீது பால் சொரிந்து வரலாயிற்று..


இதன் பிறகு பசுவின் மடியில் பால் குறைவதைக் கண்ட முனிவர் பசுவின் நடவடிக்கைகளைக பின் தொடர்ந்து கவனிக்கத் தொடங்கினான்.


அப்பசு புல்வெளிகளில் மேய்ந்து சென்று விட்டு, அதன்பின்பு புற்றில் பால் பொழிவதையும் கண்டார்...


எல்லாவற்றையும் கடந்த முனிவர்..
ஆனாலும் ஆய்ந்து அறியாமல் சினங்கொண்டு
புற்றினுள் பாலைச் சொரிந்த பசுவைப் பிரம்பால் அடித்து விட்டார்.


இதனால் மிகுந்த வேதனையடைந்த பசு
புற்றின் மேல் மோதி தனது ஆற்றாமையைக் காட்டியது. திரும்பச் சென்று அங்கிருந்த குளத்தில் வீழ்ந்து தன்னுயிரைத் தியாகம் செய்தது.


அவ்வேளையில் ஈசன் எம்பெருமான் விடை வாகனராக
அந்தப் பசுவிற்குக் காட்சி நல்கி மோட்சத்தை அளித்தார்.


பசு வழங்கும் கொடையாக
என்றென்றும் எப்போதும் பால், தயிர் மோர், வெண்ணெய், நெய் எனும் ஐந்தையும் மங்களப் பொருட்களாக தேவரும் மனிதரும் போற்றி மகிழ்வர் என வரமளித்தார்.


மேலும் அந்தப் பசுவின் வம்சமாக
மகிஷம், நந்தா, பத்ரா, சுமனா, சுபத்ரா -
எனும் இனங்கள் பல்கிப் பெருகவும் வரமளித்தார்..


பொதுவாக சுயம்பு லிங்கங்கள் புற்றுருவானவை.
நித்ய அபிஷேகங்களை அந்த லிங்கங்களிற்கு செய்யப்படுவதில்லை.


விசேஷ காலம் எனில் கவசம் சாத்தியே திருமுழுக்கு செய்விக்கப்படும்.


ஆனால்
இத்திருத்தலத்தில் சிவலிங்கத் திருமேனிக்கு வழக்கமான அபிஷேகங்கள் கவசம் சாத்தப்படாமல் நிகழ்வுறு நடைபெறுகின்றன.


அபிஷேக வேளையில் பசு முட்டியதால் ஏற்பட்ட பிளவினை சிவலிங்கத்தின் திருமேனியில் காணலாம்...


மகா மண்டபத்தினுள் தென்புறமாக அமைந்துள்ள ஆதிசேஷனுக்கு
சிறப்பு அபிஷேகங்களும் வழிபாடுகளும் நிகழ்கின்றன...


சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சிலா ரூபத்தின் முன்பாக நடைபெற்ற பரிகார பூஜைகள் தற்போது முன் மண்டபத்தில் ஆதிசேஷனின் உற்சவ பஞ்சலோக திருமேனிக்கு நடைபெறுகின்றன.


*தேவாரம்:*
☘மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி
மத்தமொடு நல்ல
பொன்னியல் கொன்றையினான்
புனல்சூடிப் பொற்பமரும்
அன்ன மனநடையா ளொருபாகத்
தமர்ந்தருளி நாளும்
பன்னிய பாடலினா
னுறைகோயில் பாதாளே.


மின்னல் போன்ற செஞ்சடைமேல் விளங்கும் மதி, ஊமத்தமலர் பொன் போன்ற நல்ல கொன்றை ஆகியவற்றோடு கங்கையையும் சூடி, அழகு விளங்கும் அன்னம் போன்ற நடையினளாகிய உமையம்மை ஒரு பாகமாக விளங்க, நாள்தோறும் வேத கீதங்களைப் பாடியவனாய்ச் சிவபெருமான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.


☘நீடலர் கொன்றையொடு நிரம்பா
மதிசூடி வெள்ளைத்
தோடமர் காதினல்ல குழையான்
சுடுநீற்றான்
ஆடர வம்பெருக வனலேந்திக்
கைவீசி வேதம்
பாடலி னாலினியா
னுறைகோயில் பாதாளே.


கொத்தாக நீண்டு அலர்கின்ற கொன்றையோடு கலைநிறையாத இளம் பிறையை முடியில் சூடி, ஒரு காதில் வெள்ளைத் தோட்டுடன் மறு காதில் நல்ல குழையையுடையவனாய் விளங்குவோனும், சுட்ட திருநீற்றை மெய்யில் பூசியவனும், ஆடும் பாம்பு அணிகலனாகப் பெருகித் தோன்ற அனல் ஏந்திக் கைவீசி வேதப் பாடல்களைப் பாடுதலில் இனியனாய் விளங்குவோனும் ஆகிய சிவபெருமான் உறையும் கோயில் திருப்பாதாளீச்சரமாகும்.


☘நாகமும் வான்மதியுந் நலமல்கு
செஞ்சடையான் சாமம்
போகநல் வில்வரையாற்
புரமூன்றெரித்துகந்தான்
தோகைநன் மாமயில்போல்
வளர்சாயற் றூமொழியைக் கூடப்
பாகமும் வைத்துகந்தா
னுறைகோயில் பாதாளே.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
பாம்பு, வானில் விளங்கும் மதி ஆகியனவற்றைச் சூடிய அழகுமிக்க செஞ்சடையை உடையவனும், உரிய காலம் கழிய நல்ல மேருவில்லால் முப்புரங்களை எரித்துகந்தவனும், தோகையை உடைய நல்ல ஆண்மயில் போன்று வளர்கின்ற கட்புலனாய மென்மையை உடைய தூய மொழி பேசும் உமையம்மையைத் தன்னோடு உடனாக இடப்பாகமாகக் கொண்டு மகிழ்ந்தவனும் ஆகிய சிவபிரான் மகிழ்ந்துறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.


☘அங்கமு நான்மறையும் அருள்செய்
தழகார்ந்த வஞ்சொல்
மங்கையோர் கூறுடையான்
மறையோ னுறைகோயில்
செங்கய னின்றுகளுஞ் செறுவிற்
றிகழ்கின்ற சோதிப்
பங்கய நின்றலரும்
வயல்சூழ்ந்த பாதாளே.


பேய்கள் பலவும் உடன் சூழ, சுடுகாட்டை அரங்காக எண்ணி நின்று, தீ, மான்கன்று மழு ஆகியவற்றைக் கைகளில் விளங்குவித்து, தேய்ந்த பிறையும் பாம்பும் விளங்கிய கொன்றை மலரும் உடைய தன் சடைமேல் பாய்ந்து வரும் கங்கையையும் உடையவனாகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.


☘கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச்
சடைதன்மே னன்று
விண்ணியன் மாமதியும்
முடன்வைத் தவன்விரும்பும்
பெண்ணமர் மேனியினான் பெருங்கா
டரங்காக வாடும்
பண்ணியல் பாடலினா
னுறைகோயில் பாதாளே.


கண் பொருந்திய நெற்றியை உடையவனும், சடைமுடி மீது மணம் கமழும் கொன்றை மலரோடு, அழகு பொருந்த வானின்கண் உலாவும் சிறந்த பிறைமதியையும் உடனாக வைத்தவனும், தன்னால் விரும்பப் பெற்ற உமை மங்கை பொருந்திய திருமேனியனும், சுடுகாட்டை அரங்காகக் கொண்டு பண்ணொடு கூடிய பாடல்களுடன் ஆடுபவனுமாகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.


☘கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச்
சடைதன்மே னன்று
விண்ணியன் மாமதியும்
முடன்வைத் தவன்விரும்பும்
பெண்ணமர் மேனியினான் பெருங்கா
டரங்காக வாடும்
பண்ணியல் பாடலினா
னுறைகோயில் பாதாளே.


கண் பொருந்திய நெற்றியை உடையவனும், சடைமுடி மீது மணம் கமழும் கொன்றை மலரோடு, அழகு பொருந்த வானின்கண் உலாவும் சிறந்த பிறைமதியையும் உடனாக வைத்தவனும், தன்னால் விரும்பப் பெற்ற உமை மங்கை பொருந்திய திருமேனியனும், சுடுகாட்டை அரங்காகக் கொண்டு பண்ணொடு கூடிய பாடல்களுடன் ஆடுபவனுமாகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.


☘விண்டலர் மத்தமொடு மிளிரும்மிள
நாகம்வன் னிதிகழ்
வண்டலர் கொன்றைநகு
மதிபுல்கு வார்சடையான்
விண்டவர் தம்புரமூன் றெரிசெய்துரை
வேதநான் கும்மவை
பண்டிசை பாடலினா
னுறைகோயில் பாதாளே.


தளையவிழ்ந்து மலர்ந்த ஊமத்த மலரோடு, புரண்டு கொண்டிருக்கும் இளநாகம், வன்னிஇலை, வண்டுகளால் மலர்த்தப் பெறும் கொன்றை, பிறைமதி ஆகியன பொருந்திய நீண்ட சடை உடையவனும், பகைவரான அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தவனும், நான்கு வேதங்களையும் உரைத்தலோடு அவற்றைப் பண்டைய இசை மரபோடு பாடி மகிழ்பவனுமான சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.


☘மல்கிய நுண்ணிடையா ளுமைநங்கை
மறுகவன்று கையால்
தொல்லை மலையெடுத்த
வரக்கன்றலை தோணெரித்தான்
கொல்லை விடையுகந்தான் குளிர்திங்கள்
சடைக் கணிந்தோன்
பல்லிசை பாடலினா
னுறைகோயில் பாதாளே.


செறிந்த நுண்மையான இடையினை உடைய உமையம்மை அஞ்ச அன்று கையால் பழமையான கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின் தலைகளையும் தோள்களையும் நெரித்தவனும், முல்லை நிலத் தெய்வமான திருமாலாகிய விடையை உகந்தவனும், குளிர்ந்த திங்களைச் சடையின்கண் அணிந்தவனும் பல்வகையான இசைப் பாடல்களைப் பாடுபவனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.


☘தாமரை மேலயனும் மரியுந்தம
தாள்வினையாற் றேடிக்
காமனை வீடுவித்தான்
கழல்காண்பில ராயகன்றார்
பூமரு வுங்குழலா ளுமைநங்கை
பொருந்தியிட்ட நல்ல
பாமரு வுங்குணத்தா
னுறைகோயில் பாதாளே.


மன்மதனை எரித்த சிவபிரான் திருவடிகளைத் தாமரை மலரின்மேல் எழுந்தருளிய அயனும், திருமாலும் தமது முயற்சியால் தேடிக்காண இயலாது நீங்கினர். மலர்கள் சூடிய கூந்தலை உடைய உமைநங்கை ஒரு பாகமாகப் பொருந்தியவனும் வேதப் பாடல்களைப் பாடும் நல்ல குணத்தினனும் ஆகிய அப்பெருமான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும். அங்குச் சென்றால் அவன் கழலடி காணலாம் என்பது குறிப்பெச்சம்.


☘காலையி லுண்பவருஞ் சமண்கையருங்
கட்டுரை விட்டன்
றால விடநுகர்ந்தா னவன்
றன்னடி யேபரவி
மாலையில் வண்டினங்கண் மதுவுண்
டிசைமுரல வாய்த்த
பாலையாழ்ப் பாட்டுகந்தா
னுறைகோயில் பாதாளே.


காலையில் சோறுண்ணும் புத்தரும், சமண சமயக் கீழ் மக்களும் கூறும் மெய்போன்ற பொய்யுரைகளை விடுத்து, ஆலகால விடமுண்டு அமரர்களைக் காத்தவனும் மாலைக் காலத்தில்வண்டினங்கள் மதுவுண்டு இசை முரல ஏற்புடையதான பாலைப் பண்ணையாழில் பாடக் கேட்டு மகிழ்பவனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.


☘பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த
பாதாளைச் சேரப்
பொன்னியன் மாடமல்கு
புகலிந்நகர் மன்னன்
தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான
சம்பந்தன் சொன்ன
இன்னிசை பத்தும்வல்லா
ரெழில்வானத் திருப்பாரே.


பலவகையான மலர்களும் பூத்துள்ள பொழில் புடை சூழ்ந்த பாதாளீச்சரத்தைச் சென்று தரிசிக்குமாறு, பொன்னால் இயன்ற மாட வீடுகள் நிறைந்த புகலி நகர் மன்னனும், தன்புகழ் உலகெங்கும் பரவி விளங்குமாறு உயர்ந்தவனுமாகிய தமிழ் ஞானசம்பந்தன் பாடிய இன்னிசை பொருந்திய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர் அழகிய வானுலகின்கண் இருப்பர்.

திருச்சிற்றம்பலம்.


*திருவிழாக்கள்:*
வைகாசி மாதம் பிரமோற்சவம், தைப்பூச தீர்த்தவாரி, கந்தசஷ்டி, திருவாதிரை, மகாசிவராத்திரி.


*தொடர்புக்கு:*
93606 85073