நான் உருப்பட மாட்டேன், உன்னையும் உருப்பட விட மாட்டேன்


'எனக்கு எதுலயும் மனசு ஒட்டல. நல்ல விஷயத்தை தான் எழுதறோம்ன்னாலும் எதுக்கு எழுதணும்ன்னு தான் தோண்றது. எதுவுமே வேண்டியிருக்கல, சந்நியாசம் வாங்கிண்டு போயிடணும் ன்னு தான் இருக்கு. நிறைய தடவை பெரியவா கிட்ட கேட்டாச்சு. இந்த தடவையாவது பெரியவா அதுக்கு அனுக்கிரகம் பண்ணனும்'.


பெரியவா முகத்தில் தவழ்ந்த புன்னகை சிரிப்பாக மாறியது. 'நான் இங்கே ஒக்காந்துண்டு மடத்தை பரிபாலனம் பண்றேங்கற பேர்ல ஏதேதோ காலட்சேபம் பண்ணி, வயிறு வளத்துண்டு உருப்படாம இருப்பேனாம். ஆனா நீ என்னடான்னா என்னை விட்டுட்டு ஓடி போயி ஹிமாச்சலத்திலே உக்காந்துண்டு தபஸ் பண்ணி மோட்சத்துக்கு போகணுமாம், தோ பாரு, நான் உருப்பட மாட்டேன், உன்னையும் உருப்பட விட மாட்டேன்.'


நிதானமாக எழுந்த பெரியவா அந்த இடத்தை விட்டு அகன்றார். தீர்மானத்துடன் வந்த மனிதரின் மனத்தில் தாங்க முடியாத ஏமாற்றம்.
'என்னை ஆங்கில மோகத்தில் வீழ்ந்து விடாமல் சரியான நேரத்தில் தடுத்து ஆட்கொண்ட குருநாதர், எனது ஒவ்வொரு சிறிய பெரிய விஷயத்திலும் என்னை வழி நடத்தி வருபவர், சந்நியாச விஷயத்தில் மட்டும் எனக்கு பிடி கொடுக்காமலேயே பேசி வருகிறாரே' அவர் மனத்தில் தோன்றியது ஏமாற்றம் மட்டுமல்ல, கோபமும் தான்.


'எம் மேலே கோபமா'.


ஆம் என்று எப்படி சொல்வது?


எனவே மௌனம் தொடர்ந்தது.


'எதையும் பத்தி யோசிச்சு குழப்பிக்காதே. ஏன்னா உனக்கு ஒண்ணுமே புரியாது, புரிஞ்சுக்க முடியாது உடம்பை பிழியறதுக்கு ஏதாவது கர்மா பண்ணனும். உனக்கு எழுத்துங்கற கர்மா அமைஞ்சிருக்கு. 'தேமே' ன்னு அதை பண்ணிண்டு இரு. நல்ல விஷயம்தான்னாலும் எழுதறது பிடிக்கல, சரிதான். பிடிக்காட்டா பரவாயில்ல, எழுத முடியற வரைக்கும் எழுதிண்டு இரு. போதும்' கனிவுடன் தொடர்ந்தார் பெரியவா, 'ஒண்ணையும் போட்டு யோசிச்சு கொழப்பிக்காதே. ஒண்ணுமே புரியாது. புரிஞ்சுக்க முயற்சியும் பண்ணாத'.


அந்த மனிதரின் பெயர் ரா.கணபதி

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
நன்றி: கார்த்தி நாகரத்தினம்