Announcement

Collapse
No announcement yet.

Valivalam temple

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Valivalam temple

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    ________________________________________
    *139*
    * பாடல் பெற்ற சிவ தல தொடர். *


    *சிவ தல அருமைகள் பெருமைகள்.*


    *மனத்துனைநாதர் கோவில், திருவலிவலம்*
    _______________________________________
    தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் நூற்று இருபத்தொன்றாவது தலமாகப் போற்றப் படுகிறது.


    *இறைவன்:* மனத்துனைநாதர், இருதய கமலநாதர்.


    *இறைவி:* மாழையொண்கண்ணி, அங்கயற்கண்ணி, வாளையவக் கண்ணி.


    *தல விருட்சம்:* புன்னை மரம்.


    *தல தீர்த்தம்:* சங்கர தீர்த்தம், காரணர் கங்கை.


    *திருமேனி:* சுயம்பு உருவானவர்.


    *தல விநாயகர்:*
    வலம்புரி விநாயகர்.


    *பதிகம்::** அப்பர், சுந்தரர், சம்பந்தர்.


    *ஆலயப் பழமை:*
    ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.


    *புராணப் பெயர்கள்:*
    திருவலிவலம், வில்வ வனம், ஏகச்சக்கரபுரம், முந்நூற்று மங்கலம், கொன்றை வனம்.


    *வழிபட்டோர்:* சூரியன், வலியன்(கரிக்குருவி), காரண முனிவர்.


    *இருப்பிடம்:*
    திருவாரூருக்கு தென்கிழக்கே ஒன்பது கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்து உள்ளது.


    திருவாரூர் மற்றும் நாகபட்டினத்தில் இருந்து கீவளூர் வழியாக திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் இத்தலம் உள்ளது. சாலையோரத்திலேயே கோயில் உள்ளது.


    திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் புலிவலம், மாவூர் வழியாகவும் இத்தலத்திற்கு வரலாம்.


    இரண்டுமே நல்ல பாதைகள்தான்.


    *அஞ்சல் முகவரி:* அருள்மிகு மனத்துனைநாதர் திருக்கோவில்,
    வலிவலம்,
    வலிவலம் அஞ்சல்,
    திருக்குவளை வட்டம்,
    திருவாரூர் மாவட்டம்,
    PIN 610 207


    *ஆலயத் திறப்பு காலம்:*
    நாள்தோறும் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.


    கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் எழுபதுகளில் இத்தலத்து ஆலயமும் ஒன்று.


    வலியன் என்ற கரிக்குருவி இத்தலத்தை வலம் வந்து பூஜை செய்ததால் திருவலிவலம் என்ற பெயர் ஏற்பட்டது.


    *கோவில் அமைப்பு:*
    பேருந்தை விட்டு இறங்கி ஆலயத்தை நோக்கிச் செல்கையில் ஒரு முகப்பு வாயில் நம்மை வரவேற்கிறது.


    முகப்பு வாயிலின் மேற்புறத்தில் சுதையினாலான ரிஷப வாகனத்தில்மேல் அமர்ந்துள்ள சிவன் பார்வதி, வள்ளி தெய்வானையுடன் மயில் மீதமர்ந்த முருகர், மூஞ்சூறு வாகனத்தில் விநாயகர் ஆகியோரைக் காணக் கிடைக்க கையுர்த்தி வணங்கிக் கொண்டோம்.


    உள்ளே நுழைந்தால் தூண்களுடன் கூடிய முன் மண்டபம் இருந்தது.


    மண்டபத்தில் கொடிமரம் காணக் கிடைக்கவில்லை. (இல்லை)


    பலிபீடத்தருகே வந்து நம் ஆணவமலவொழிய வேண்டிக் கொண்டு, ஆணவத்தை பலியிட்டுவிட்டு தொடர்ந்தோம்.


    அடுத்ததாக, நந்தி மண்டபத்தில் நந்தியாரைக் கண்டு, நம் வருகையை வணக்கமாக அவரிடம் செலுத்திவிட்டு ஈசனை வழிபட அனுமதிக்கக் கூறி வேண்டிக்கொண்டு நகர்ந்தோம்.


    மூலவரைக் கண்டு வழிபட கோச்செங்கட் சோழன் அமைத்திருந்த மாடக்கோயில் பணிகளைச் காணப்பெற்றோம்.


    படிகள் பதினாறைக் கடந்து மேலே ஏறினோம்.


    அதன் பின் உள்ள மூன்றுநிலை விமானத்தின் உள்ளே கருவறையில்,
    மூலவர் மனத்துனைநாதர் சந்நிதியுடன் கட்டுமலை அமைந்திருந்தது.


    இறைவனை மனமுருகப் பிரார்த்தனை செய்து வணங்கிக் கொண்டு அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை பெற்று வெளிவந்தோம்.


    பின், இதனின் வலதுபுறமாக தெற்கு நோக்கிய அம்பாள் மாழையொண்கண்ணி சந்நிதி அமைந்திருந்தது.


    அம்மையையும் மனமுருகப் பிரார்த்தித்து தொழுது வணங்கி கொண்டோம்.


    பிராகாரத்தில் வலம் வரும்போது, வலம்புரி விநாயகர், சுப்பிரமணியர், இலக்குமி, காசிவிசுவநாதர், நவக்கிரகங்கள் ஆகிய சந்நிதிகள் இருக்க ஒவ்வோருத்தரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டோம்.


    ஆலயத்தைச் சுற்றி நான்கு புறமும் அக்காலத்தில் அகழி இருந்தது என்பது இத்தலத்து தேவாரப் பதிகங்களில் *"பொழில் சூழ்ந்த வலிவலம்"* என்று குறிப்பிட்டிருப்பதின் மூலம் அறியமுடிகிறது.


    இத்தலத்திற்கு ஏகசக்கரபுரம் என்ற ஒரு பெயரும் உண்டு.


    இவ்வாலயத்தில் உள்ள திருமால் ஏகசக்கர நாராயணப்பெருமாள் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.


    சூரியனும், காரணரிஷியும் இத்தல இறைவனை பூசித்துப் பேறுபெற்றுள்ளனர்.


    இத்தல தீர்த்தம் காரண ரிஷியின் பேரால் காரண கங்கை என்றுரைக்கப்படுகிறது.


    இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார்.


    திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது.


    சிவன் சந்நிதிக்கு இடப்பக்கம் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.


    தேவாரப்பாடல் பாடும் ஓதுவார்கள், தேவாரப்பாடல் பாடும் முன் இத்திருப்பாடலுடன்தான் தேவாரம் பாட ஆரம்பிப்பார்கள்.


    தேவாரம் ஓதுவோர் யாவரும் முதன்முதலாக ஓதும்........
    *பிடியதனரு உமை கொள மிகுகரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடிகணபதிவர அருளினான் மிகுகொடை வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே.*.........


    என்ற திருப்பாட்டு திருஞானசம்பந்தரால் முதல் திருமுறையில் இத்தலத்து இறைவன் மேல் பாடப்பெற்ற *பூ இயல் புரிகுழல் வரிசிலை நிகர் நுதல்* என்ற பதிகத்தின் -ஐந்தாவது பாடலாகும்.


    எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஆரம்பிக்கும் முன்பு விநாயகருக்கு வந்தனம் சொல்லிவிட்டுத் தான் ஆரம்பிப்பது நமது மரபு.


    அதன்படி கணபதி வர அருளினான் என்று இப்பாடலில் வரும் கணபதியை தொழுதுவிட்டு தேவாரம் பாட ஆரம்பிப்பார்கள்.


    சுந்தரர் தனது பதிகத்தில் ஐந்தாவது திருப்பாட்டில், சிறந்த இசைத்தமிழைப் பாடிய திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளும், திருநாவுக்கரசு சுவாமிகளும் அருளிச்செய்த பாடலகளைப் பெற்ற இறைவன் வலிவலத்தில் உள்ளான் என்று அவர்கள் இருவரையும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.


    *நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக் கரையனும் பாடிய நற்றமிழ் மாலை சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானைத் தொண்ட னேன்அறி யாமை யறிந்து கல்லி யல்மனத் தைக்கசி வித்துக் கழலடி காட்டிஎன் களைகளை அறுக்கும் வல்லியல் வானவர் வணங்கநின் றானை வலிவ லந்தனில் வந்துகண் டேனே* என்று...


    *நூல்:*
    இவ்வூர் இறைவனை, இறைவியைப் பற்றிச் சிறப்பித்துக் கூறும் *'வலிவலமும்மணிக்கோவையும்'*என்னும் நூலொன்றை "தமிழ்த்தாத்தா" திரு. உ.வே.
    சாமிநாத ஐயர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அதைப் பாடியவர் பெயர் தெரியவில்லை.


    *கோவில் சிறப்பு:*
    ஆலயம், மூன்று பக்கமும் நீர் நிறைந்த அகழியால் சூழப் பெற்றிருந்த அமைப்புடன் விளங்கியது. ஆனால், அகழியில் நீர் நிறைந்திருக்கப் பெறவில்லை.


    இத்திருக்கோவிலில், பஞ்சமூர்த்திகள் தோரணவாயில் அமர்ந்திருக்கிறார்கள்.


    கோச்செங்கண் சோழ மன்னனால் கட்டப்பட்டது இந்த ஆலயம்.


    'மாடக்கோவில்' வகையைச் சேர்ந்தது என்பதைக் கூறினாலே, உங்களுக்கு கோச்செங்கட் சோழ மன்னன் நினைவுதான் வரும்.


    ஈசனை, *'மனத்துணையே என்றன் வாழ்முதலே'* என்று மாணிக்கவாசகர் புகழ்கிறார்.


    அன்பருக்கு *இன்னருள் செய்துய்ய வலிவலத்துச் சொன்முடியே'* என்கிறார் ராமலிங்க வள்ளலார்.


    அப்பர்கூட தனது பதிகத்தில் *'மனத்துளானே'* என்று வர்ணித்துக் கூறுகிறார்.


    சுந்தரரும், *'நல்லுடையார் மனத் தெய்ப்பினில் வைப்பை நானூறு குறைஅளித் தருள் புரிவானை'* என்று இத்தல இறைவனை புகழ்ந்துரைக்கிறார்.


    மனம் என்ற ஒன்று இருப்பதால்தான், நமக்கு மனிதன் என்ற பெயர்.


    அந்த மனமுடைய மனிதர்கள் வாழ்வில் இன்ப, துன்பங்கள், ஏற்ற இறக்கங்கள், கஷ்ட, நஷ்டங்கள், நிறை குறைகள் என்று எத்தனையோ நன்மையும் தீமையையும் அனுபவிக்கிறார்கள்.


    மனித மனதிற்கு துன்பம் வரும்போதும் மட்டும் மனம் கனத்துக் கொள்கிறது.


    இந்த மன அழுத்தத்தால் 'ரத்த அழுத்தம்', 'இதய நோய்கள்', 'மாரடைப்பு' போன்றவை உருவாகிறது.


    இன்று கவலை இல்லாத மனிதர்களே இல்லை எனலாம். அவரவருக்குத் தகுந்த கவலையைக் கொண்டிருக்கிறார்கள்.


    அவரவர்கள் மனம் எப்போதும் இலகுவாக இருக்க எல்லாக் கவலைகளையும் விட்டொழிக்க வேண்டும். அதற்கான ஒரு வழி......


    ஆம்! அனைத்தையும் ஈசன்ன் திருவடியில் சமர்ப்பித்து *'நீயே துணை'* என்று நம்பிச் சென்று தொழுதால், உடலும் உள்ளமும் தெளிவாகி நோய்கள் விலகப்பெறும்.


    அந்தப் பெரும்பேற்றைத் தருபவர்தான் இத்தல நாயகர் மனத்துணை நாதர் ஆவார்.


    மனதில் ஏற்படும் விரக்தி, சோர்வு ஆகியவற்றிக்கு இத்தலத்தில் இருக்கும் ஈசனால் தீர்வு கிடைக்கப் பெறுகின்ன்றனர்.


    *'பிடியதன் உருஉமை கொளமிகு கரியது*


    *வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்*


    *கடிகண பதிவர அருளினன் மிகுகொடை*


    *வடிவினர் பயில்வலி வலம்உறை இறையே'!*


    என்று இந்தத் திருக்கோவில் நிருதி மூலையில் எழுந்தருளியுள்ள வலம்புரி விநாயகருக்கு பாமாலை சூட்டியிருக்கிறார் திருஞானசம்பந்தர்.


    தேவாரப் பண்ணிசைப்போர் புகழ்பெற்ற இத்திருப்பதிகத்தைப் பாடியே, மற்ற பண்களை இசைக்கிறார்கள் என்றால் இத்தலமும் அதில் எழுந்துள்ள விநாயகரும் எத்தகைய சிறப்புடையது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.


    அடியவர்களின் துயர் களைய சிவசக்தியால் உருவாக்கப்பட்ட கணநாதர் இவராவார்.


    இத்திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில், *'அமரர்கள் மதித்த சேவக வலிவலம் நகருறை பெருமானே'* என்று போற்றுகிறார்.


    இவ்வளவு சிறப்பு வாய்ந்த வலிவலத்தில் அம்பிகை *'மழையொண்கண்ணி'* என்ற பெயரில் அருள் பாலிக்கிறார்.


    அம்பிகை சன்னிதிக்கு எதிரில் உள்ள நந்தவனத்தில் தலவிருட்சமான புன்னை மரம் காற்றில் அசைந்து இனிய மணம் பரப்புகிறது. நீங்களும் அங்கு சென்று அம்மனத்தினை உணருங்கள். நல்வன பேறு பேணப் பெறுங்கள்.


    இந்த திருத்தல இறைவனைப் பற்றி திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் புகழ்ந்து பாடியுள்ளனர்.


    திருவலிவலத்துக்கு வடக்கே திருக்கோளிலி என்னும் திருக்குவளை, தெற்கே கைச்சின்னம் எனும் கச்சனம், கிழக்கே திருக்கன்றாப்பூர், மேற்கே திருநெல்லிக்காஆகிய பாடல் பெற்ற சிவத்தலங்கள் சூழ்ந்திருப்பது தனிச் சிறப்பாகும்.


    *தல அருமை:*
    முன்னொரு காலத்தில் ஒழுக்கத்தில் சிறந்த ஒருவன் வாழ்ந்து வந்தான்.


    அவன் முன்வினைப் பயன் காரணமாக சில பாவங்களைச் செய்து வந்திருந்தான்.


    அதனால் அவன் அடுத்தப் பிறவியில் கரிக்குருவியாக பிறவி எடுக்க நேரிட்டது.


    மிகச் சிறியதாக இருந்த அந்தப் பறவையை, சில நேரங்களில், உணவு தேடியலைகையில், பெரிய பெரிய பறவைகள் ஒன்று கூடிப் சேர்ந்து தாக்கியதால் காயங்கள் உண்டாகி ரத்தம் ஒழுகியது.


    காயம் அடைந்த அந்தக் கரிக் குருவி, தனிமையில் அங்கிருந்து நெடுதூரம் பறந்து பயணப்பட்டு ஒரு மரத்தில் போய் அமர்ந்து இழைப்பாறியது.


    அந்தச் சமயத்தில், மரத்தின் கீழ் சிவனடியார் ஒருவர் சீடர்கள் பலர் குழும அமர்ந்திருந்தார்.


    அவர் தன் சீடர்கள் பலருக்கு ஞான உபதேசம் செய்து கொண்டிருந்தார்.


    இதையெல்லாம் இந்த மரத்தின் மீதமர்ந்திருந்த கரிக்குருவி, சிவனடியாரின் உபதேசங்களைக் கேட்டுக்கொண்டிருந்தது.


    சிவனடியார் தன் சீடர்களிடம், *'அன்பர்களே! சிவ தலங்களில் சிறந்தது மதுரை திருத் தலமாகும். தீர்த்தங்களில் சிறந்தது, அந்த மதுரையம்பதியில் இருக்கும் பொற்றாமரைக் குளமாகும். மூர்த்திகளில் சிறந்தவர் மதுரை சொக்கநாதர் ஆவார். மதுரைக்கு சமமான தலம் இந்த உலகத்தில் வேறு இல்லை.


    எனவே வாழ்நாளில் ஒரு முறையேனும் மதுரை திருத்தலம் சென்று பொற்றாமரைக் குளத்தில் நீராடி, சொக்கநாத பெருமானை வழிபட்டு வந்தால் பேறு பல விளையக் காணலாம்.


    அங்குள்ள சோம சுந்தரக் கடவுள் தன்னை வழிபடுபவர்களுக்கு, வேண்டும் வரங்களைக் கொடுத்து அருள்வார்' என்று கூறினார்.


    சீடர்களுக்கு உபதேசித்த ஞானாபதேசங்களை, சீடர்களோடு சீடர்களாக, மரக்கிளையில் அமர்ந்தவாறே சிவனடியாரின் உபதேசத்தைக் கேட்டது கரிக்குருவி.


    தானும் மதுரைக்கு சென்று இறைவனை தரிசிக்க முடிவு செய்தது.


    அதன்படி அந்தக் கரிக்குருவி, மதுரையை அடைந்தது.


    சொக்கநாதர் கோவிலைச் சுற்றிச் சுற்றி வலம் வந்தது.


    ஆலயத் துள்ளல் பறந்து புகுந்தது.


    பொற்றாமரைக் குளத்தில் இறங்கி மூழ்கி எழுந்தது.


    பின்னர் அங்குள்ள இறைவனுக்கு நேராய் இருக்கும் தூண்களான ஒன்றில் அமர்ந்து இறைவனைக் கண்டு மனமுருக பிரார்த்தித்து வழிபட்டது.


    இவ்வாறாக பலநாட்களாக தொடர்ந்து வழிபட்டு வந்தது, அந்தக் குருவி.


    அதன் வழிபாட்டைக் கண்டு சொக்கநாதர் மனமிளகினார். அக்கரிக்குருவிக்கு திருவுளம் காட்ட முடிவு செய்தார்.


    கரிக் குருவியின் முன்பாகத் தோன்றி, அதற்கு சில மந்திரங்களை கூறி உபதேசம் செய்தார்.


    இதனால் கரிக்குருவிக்குண்டான சிற்றறிவுகள் நீங்கப் பெற்று, பேரறிவுகள் உணர்வினைப் பெற்றது.


    ஞானம் பெற்ற கரிக்குருவி, *'இறைவா!* உங்களது கருணையால் நான் ஞானம் பெற்றவனானேன்.


    இருந்தாலும் எனக்கு ஒரு குறை உள்ளது. மிகச் சிறிய பறவை நான், மற்ற பெரிய பறவைகளால் துன்புறுத்தப்பட்டு வருகிறேன்.


    பார்ப்பவர்கள் கேலி செய்தும் குச்சி, கழிகள் மூலம் என்னை துரத்தியடிக்கும் நிலையில் உள்ளேன்' என்று முறையிட்டு அழுதது.


    அதற்கு சிவபெருமான், *'எல்லாப் பறவைகளையும் விட நீ வலிமையுடையவனாக மாறுவாய்'* என்று அருளினார்.


    அதற்குஅந்தக் கரிக்குருவி, 'சுவாமி! எனக்கு மட்டுமல்ல,, எனது மரபில் உள்ள அனைவருக்கும், எனக்கீந்த இவ்வரத்தினை தன்இனத்துக்கும் வலிமையுடன் இருக்கும் வரம் தந்தருள வேண்டும்' என்று கேட்டது.


    இறைவனும் அப்படியே அருளினார். இதனால் அந்தக் கரிக்குருவி *'வலியான்'* என்ற பெயரையும் பெற்றது.


    வரம் பெற்ற குருவி திருவலிவலம் திருத்தலத்திற்கு வந்து மனத்துணை நாதரை வழிபட்டு முக்தி அடைந்தது.


    ஆகவே இந்த தலத்திற்கு *திருவலிவலம்'*என்ற பெயர் ஏற்பட்டன என தல புராணம் விவரிவிக்கிறது

    To be continued
Working...
X