Announcement

Collapse
No announcement yet.

Brahmapureeswarar temple Sirkazhi

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Brahmapureeswarar temple Sirkazhi

    Brahmapureeswarar temple Sirkazhi
    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    *கோவை கு கருப்பசாமி.*


    * பிரம்மபுரீசுவரர் கோவில், சீர்காழி.*
    (நேரில் சென்று தரிசித்ததைப் போல.......)


    *இறைவன்:* பிரம்மபுரீசுவரர், தோணியப்பர், சட்டைநாதர்.


    *இறைவி:* பெரியநாயகி, திருநிலை நாயகி, ஸ்திர சுந்தரி.


    *தல விருட்சம்:* பாரிஜாதம், பவளமல்லி.


    *ஆகமம்:* பஞ்சாத்திர ஆகமம்.


    *ஆலயப் பழமை:*
    ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.


    *தீர்த்தங்கள்:*
    பிரம்ம தீர்த்தம்,
    காளி தீர்த்தம்,
    சூல தீர்த்தம்,
    ஆனந்த தீர்த்தம்,
    வைணவ தீர்த்தம்,
    இராகு தீர்த்தம்,
    ஆழி தீர்த்தம்,
    சங்க தீர்த்தம்,
    சுக்கிர தீர்த்தம்,
    பராசர தீர்த்தம்,
    அகத்திய தீர்த்தம்,
    கெளதம தீர்த்தம்,
    வன்னி தீர்த்தம்,
    குமார தீர்த்தம்,
    சூரிய தீர்த்தம்,
    சந்திர தீர்த்தம்,
    கேது தீர்த்தம்,
    அண்ட தீர்த்தம்,
    பதினெண்புராண தீர்த்தம்,
    புறவ நதி,
    கழுமல நதி,
    விநாயக நதி என, இருபத்திரண்டு தீர்த்தங்கள்.


    *தேவாரம் பாடியவர்கள்:*
    திருநாவுக்கரசர் மூன்று பதிகங்கள்,
    சம்பந்தர் - அறுபத்தேழு பதிகங்கள்,
    சுந்தரர் - ஒரே ஒரு பதிகம்.


    *மேலும் பாடல் பாடியோர்:*
    மாணிக்கவாசகர்,
    அருணகிரிநாதர்,
    நம்பியாண்டார் நம்பிகள்,
    பட்டினத்தார்,
    சேக்கிழார்,
    அருணாசல கவிராயர்,
    மாரிமுத்துபிள்ளை,
    முத்து தாண்டவ தீட்சிதர்.


    *இருப்பிடம்:*
    சீர்காழி நகரின் மையப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது.


    *அஞ்சல் முகவரி:*
    அருள்மிகு பிரம்மபுரீசுவரர் திருக்கோவில்,
    சட்டைநாத சுவாமி தேவஸ்தானம்,
    சீர்காழி.
    நாகப்பட்டினம் மாவட்டம்.
    PIN - 609 110


    *ஆலயப் பூஜை காலம்:*
    நாள்தோறும் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.


    *தலச் சிறப்பு:*
    சீர்காழி முற்காலத்தில் ஸ்ரீகாளிபுரம் என்ற பெயருடன் அழைக்கப் பட்டது.


    பின்பு, அப்பெயர் மருவி சீர்காழி என்று ஆனது.


    சீர்காழியை *'கழுமல வள நகர்'* என்றும் குறிப்பிடுவர்.


    இத்தலத்தின், வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் கொள்ளிடம் ஆறும் , ஊரின் நடுவில் கழுமலையாறும், மற்றும் தெற்கு எல்லையில் உப்பனாறு என்கின்ற ஆறுகள் ஓடி நிலப்பகுதியை வளமானதாகக் கொண்டது.


    *தல அருமை:*
    ஏழு தீவுகள் கொண்டதாகியிருந்த இந்தப் பேரண்டத்தை, ஒரு சந்தர்ப்பத்தின்போது, கடல் பொங்கி அழித்தது.


    அப்போது சீகாழியான இத்திருத்தலம், பிரளய வெள்ளத்திலும் தோணியாக மிதந்து அழியாமல் நிலைபெற்றிருந்தது.


    இதனால் இவ்வூர் *"தோணிபுரம்''*என்றும் போற்றப்பட்டு வந்தது.


    இவ்வூரைச் சுற்றி பழமை வாய்ந்த பல திருக்கோவில்கள் இருக்கின்றன.


    இதில், சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில் சீர்காழி, செங்கமேடு, திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில் எனப் பல புகழ்மிகு கோவில்கள் அடங்கும்.


    இந்தச் சீகாழியில், ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவபாத இருதயர்-பகவதி அம்மையார் ஆகியோர்க்கு குழந்தையாக பிறந்து தெய்வக்குழந்தையாக ஆகி, திருஞானசம்பந்தர் எனவானார்.


    இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்த சமயம், தன் தந்தையுடன் சிர்காழி சட்டை நாத சுவாமி ஆலய குளத்தில் நீராடச் சென்றார்.


    சம்பந்தர் சிறு குழந்தையாதலால் அவரைக் கரையில் அமர்த்திவிட்டு சிவபாத இருதயர், குளத்தின் ஆழத்திற் சென்று மூழ்கி ஜெபித்து நீராடிக் கொண்டிருந்தார்.


    அப்போது சம்பந்தர், குளத்துநீரில் தந்தையைக் காணாமல் மிரண்டு அழுதார்.


    முற்பிறவி நல்வினைகளால் பார்வதியையும் பரமேசுவரனையும் அம்மையப்பராக உணர்ந்து, *"அம்மே அப்பா''* என அழுதது குழந்தை.


    அழுவதைக் கண்ட இறைவன், கிண்ணத்தில் திருமுலைப்பால் கொடுத்தருள்க என்று தேவிக்குக் கட்டளையிட்டார்.


    அதன்படியே அன்னை உமாதேவி, ஞானப் பாலை அழுத குழந்தைக்கு ஊட்ட, அந்தக் குழந்தையும் சிவ ஞானம் பெற்று திருஞானசம்பந்தரானார்.


    *விஷ்ணுவின் செருக்கு:*
    மகாவிஷ்ணு மாவலி மன்னனின் வேண்டுகோளின்படி தனது மூன்றாவது அடியை அவன் தலை மேல் வைத்து பாதாள உலகில் செலுத்தினார்.


    பின்னர், அகங்காரம் ஏற்பட்டு பூமியை நடுங்கச் செய்தார்.


    இதையறிந்த சிவாம்சமான வடுக பைரவர், அவரின் செருக்கை அகற்ற, தமது திருக்கரத்தால் விஷ்ணுவின் மார்பில் அடித்து பூமியில் வீழ்த்தினார்.


    இதையறிந்த மகாலட்சுமி வடுக பைரவரிடம் மாங்கல்ய பிச்சை கேட்டார்.


    மகாவிஷ்ணுவை மீண்டும் உயிர் பெற்று எழச்செய்தார் பரமேசுவரன்.


    பின்னர் திருமாலின் வேண்டுகோளுக்கிணங்க, இறைவன் அவரது எலும்பைக் கதையாகக் கொண்டும், தோலைச் சட்டையாகப்போர்த்தியும் காட்சி தந்தார்.


    இதனால் சீகாழி பைரவருக்கு *"சட்டை நாதர்''* என்ற திருப்பெயர் ஏற்பட்டது.


    புறாவடிவில் வந்த அக்கினியால் சிபி மன்னன் பேறுபெற்றமை முதலிய அற்புதங்கள் நிகழ்ந்த தலமென்பர் இத்தலத்தை.


    ஞானசம்பந்தர் முதன் முதலாக பதிகம் பாடிய *'தோடுடைய செவியன்'*என்பது உலகம் உய்யத் திருப்பதிகம் பாடியது இத்தலத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.


    *வாருங்கள் திருமுலைப்பால் விழாவுக்குச் செல்வோம்:*
    மாற்றுச் சமயம் வலிமை பெற்று, இந்துச் சமயம் நலிவடைந்து இருந்த காலத்தில்......(சம்பந்தபெருமான் காலத்தில்.)


    இந்துச் சமயத்துக்கு மறுமலர்ச்சி ஏற்படவேண்டும் என்பதற்காக, பிரளய காலத்திலும் அழியாத பெருமை பெற்ற திருத்தலமான திருத்தோணிபுரம் என்னும் சீர்காழி திருத்தலத்தில் வாழ்ந்திருந்த சிவபாத இருதயர் போராடினார்.


    வேதியர்குலம் விளங்க வந்த சிவபாத இருதயரின் விருப்பமே தன்னுடைய விருப்பமாகவும் கொண்டிருந்தவர் அவர்தம் மனைவி பகவதியுமாவார்.


    கருத்தொருமித்த அந்தத் தம்பதியர் இதற்காகத் தோணியப்பரின் அருள் வேண்டி தவம் இயற்றினார்கள்.


    வேதநெறி தழைத்தோங்கவும் மண்ணுலகம் செழித்துச் சிறக்கவும் பிள்ளை வரம் வேண்டித் தவம் செய்தார்கள்.


    இவர்களின் தவப் பயனாக, சித்திரைத் திங்கள் திருவாதிரை நட்சத்திரத்தில் அவர்களுக்குக் குழந்தைப் பேறு வாய்த்தமைந்தது.


    அந்தக் குழந்தை, திருஞானசம்பந்தர் என்னும் திருப்பெயர் பெற்று தெய்வக் குழந்தையாக வாய்க்கப் பெற்றது.


    அந்தக் குழந்தை தனக்கு வேண்டியதைப் பெற என்ன செய்யவேண்டும் என்பதை, ஈசன் தெரிய வைத்திருந்தான் போலும்!".


    இக்குழந்தை விரும்பிப் பெற்றதும் தன்னுடைய நலனுக்காக அல்ல.


    மண்ணுலக மாந்தர்தம் நலனுக்காக, அது நமக்கு கிடைத்தது என்னவோ, நாம் செய்த தவப்பயனானது எனவும் கொள்ளலாம்.


    புராதன சநாதன தர்மத்தை நிலைநாட்ட அவதரித்த அந்தக் குழந்தை, தன்னுடைய அவதார நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால், சிவஞானம் கைவரப் பெற வேண்டும் என்பதை உணர்ந்திருந்தது.


    எனவே, அதற்கான உரிய நேரத்துக்கு காத்திருந்த. அந்த நேரமும் கூடி வந்தது.


    ஒருநாள் தோணியப்பர் ஆலய திருக்குளத்திற்க்கு நீராடச் சென்றார் சிவபாத இருதயர்.


    சம்பந்தக் குழந்தையும் நானும் வருவேன் என்று அடம்பிடித்தது.


    (இங்கேதான் சநாதன தர்மம் நிலைநாட்டப் பெறும் காலம் ஆரம்பமாகிறது.)


    அடம் பிடிக்கும் மழலையை அலட்சியப்படுத்த முடியுமா என்ன?..


    வேறு வழி இன்றி, வா!" என்று சிவபாதர் குழந்தை சம்பந்தரையும் அழைத்துச் சென்றார்.


    கோயிலுக்குச் சென்றவர், குழந்தையைக் குளத்தின் கரையில் உட்கார வைத்துவிட்டு, குழந்தையைப் பாதுகாக்கும் பொறுப்பை தோணியப்பரிடம் ஒப்படைத்து, நீரில் மூழ்கி மந்திரங்களை ஜபிக்கத் தொடங்கிவிட்டார்.


    சில நொடிகள் நேரத்தில் அந்தக் குழந்தை, தனக்கு வேண்டியதைப் பெற முடிவு செய்யும் ஞானம் உந்தப்பட்டது.


    அதற்காக தன் கொவ்வை செவ்வாயினைத் திறந்து வீறிட்டு அழ ஆரம்பித்துவிட்டது.


    எதிரேயிருந்த அம்மையார், மழலையின் அழுகுரல் கேட்டு மனம் கலங்கிய அன்னை உமையவள் சிவனாரை நோக்க, அவளின் மன ஓட்டத்தைப் புரிந்துகொண்ட சிவனார் தம் கண்களாலேயே சம்மதித்தார்.


    உடனே அம்பிகை, தங்கக் கிண் ணத்தில் பால் சுரந்து, அத்துடன் சிவஞானம் என்னும் இன்னமுதத்தை யும் சேர்ந்து கலந்து எடுத்து வந்தாள்.


    அழும் குழந்தையைத் தூக்கித் தன் மடியில் இருத்தி, பாலூட்டி விட்டு மறைந்தாள்.


    நீராடி முடித்துக் கரையேறிய சிவபாதர், குழந்தையை நெருங்கினார். குழந்தையின் இதழோரம் பால் வடிந்திருந்தது.


    அதைக் கண்ட சிவபாதவிருதயர்...."யார் கொடுத்த எச்சில் பாலை நீ குடித்தாய்?' என்று அடிப்பதுபோல் மிரட்டினார்.


    தன் மலர் முகத்தை பயந்தது போல் வைத்துக்கொண்ட அந்தக் குழந்தை, தனது தளிர்க்கரங்களை மேலே உயர்த்தி நீட்டி, *'தோடுடைய செவியன்'* என்று பாடத் தொடங்கியது


    *சம்பந்தர் தேவாரம்:*
    சம்பந்தர் ஞானப்பால் உண்டபின் பதிகம் பாடிய முதல் தேவாரம்.


    1தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
    காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
    ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
    பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.


    🏾தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!


    2.முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவைபூண்டு
    வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
    கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப்
    பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.


    🏾வயது முதிர்ந்த ஆமையினது ஓட்டினையும், இளமையான நாகத்தையும், பன்றியினது முளை போன்ற பல்லையும் கோத்து மாலையாக அணிந்து, தசைவற்றிய பிரமகபாலத்தில் உண்பொருள் கேட்டு வந்து என் உள்ளம் கவர்ந்தகள்வன், கல்வி கேள்விகளிற் சிறந்த பெரியோர்கள் தன் திருவடிகளைக் கைகளால் தொழுது ஏத்த அவர்கட்கு அருளும் நிலையில் விடைமீது காட்சி வழங்கும் பிரமபுரத்தில் விளங்கும் பெருமானாகிய இவனல்லனோ!


    3.நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதிசூடி
    ஏர்பரந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்
    ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிதுவென்னப்
    பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.


    🏾கங்கை நீர் நிரம்பி நிமிர்ந்த சிவந்த சடைமுடி மீது ஒரு கலையை உடைய நிலவைப் பொழியும் வெள்ளிய பிறைமதியைச் சூடி வந்து விரகமூட்டிக் கைகளில் அணிந்துள்ள ஓரினமான சங்கு வளையல்கள் கழன்று விழுமாறு செய்து, என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மகாப்பிரளய காலத்தில் ஊர்கள் மிக்க இவ்வுலகில் அழியாது நிலை பெற்ற ஒப்பற்ற ஊர் இஃது என்ற புகழைப்பெற்ற பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவனல்லனோ!


    4.விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலையோட்டில்
    உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர்கள்வன்
    மண்மகிழ்ந்தவர வம்மலர்க்கொன்றை மலிந்தவரைமார்பில்
    பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.


    🏾வானவெளியில் மகிழ்ச்சிச் செருக்கோடு பறந்து திரிந்த மும்மதில்களையும் கணையொன்றினால் எய்து அழித்ததுமல்லாமல், விளங்கிய பிரமகபாலமாகிய தலையோட்டில் மனமகிழ்வோடு பலியேற்க வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் புற்றிடையே வாழும் பாம்பு, கொன்றை மலர் ஆகியவற்றால் நிறைந்த வரை போன்ற மார்பின் இடப்பாகத்தே உமையம்மையை மகிழ்வுடன் கொண்டருளியவனாய்ப் பிரமபுரத்தில் எழுந்தருளிய பெருமானாகிய இவன் அல்லனோ!


    5.ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்மிவனென்ன
    அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
    கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப்
    பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.


    🏾ஒரு திருமேனியிலேயே உமையம்மைக்கு இடப்பாகத்தை அளித்தவன் என்றும், சடை முடியை உடையவன் என்றும், விடையை ஊர்ந்து வருபவன் என்றும் அவனது அழகைத் தோழியர் கூற அவ்வுரைப்படியே வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், சர்வசங்கார காலத்தில் கரிய கடல் பொங்கி வந்து உலகைக்கொண்டபோது தோணிபுரமாய் மிதந்த பெருமை பெற்ற பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ.


    6.மறைகலந்தவொலி பாடலோடாடல ராகிமழுவேந்தி
    இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்
    கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர்சிந்தப்
    பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.


    🏾ஒலி வடிவினதான வேதத்தைப் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும், மழுவாயுதத்தைக் கையில் ஏந்திக்கொண்டும் வந்து எனது முன் கையில் உள்ள ஓரினமான வெள்ளிய வளையல்கள் கழன்று விழ என்னை மெலிவித்து உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், இருள்செறிந்த, மணமுடைய பொழில்களிடத்தும் நீண்டு வளர்ந்த மரங்களை உடைய சோலைகளிடத்தும் நிலவைப் பொழியும் பிறையைச் சூடியவனாய்ப் பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!


    7.சடைமுயங்குபுன லன்அனலன்னெரி வீசிச்சதிர்வெய்த
    உடைமுயங்குமர வோடுழிதந்தென துள்ளங்கவர்கள்வன்
    கடன்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிறகன்னம்
    பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.


    🏾சடையில் கலந்த கங்கையை உடையவனும், திருக்கரத்தில் அனலை உடையவனும், ஆடையின் மேல் இறுகக் கட்டிய பாம்பினனுமாய் எரிவீசி நடனமாடித்திரிந்து வந்து என் உள்ளம் கவர்ந்த கள்வன், கடலைத் தழுவிய உப்பங்கழிகளால் சூழப் பெற்றதும், குளிர்ந்த கடற்கரைச் சோலைகளையுடையதும், தம்முடைய பெடைகளை முயங்கித் திரியும் அழகிய சிறகுகளோடு கூடிய அன்னங்களை உடையதும், ஆகிய பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!


    8.வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளைவித்த
    உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர்கள்வன்
    துயரிலங்கும்முல கிற்பலவூழிகள் தோன்றும்பொழுதெல்லாம்
    பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.


    🏾கயிலை மலையைப் பெயர்த்துத் தனது பெருவீரத்தை வெளிப்படுத்திய புகழால் உயர்ந்த இலங்கை மன்னன் இராவணனின் வியர்வை தோன்றும் மலை போன்ற தோள்களின் வலிமையை அழித்த எனது உள்ளம் கவர்கள்வன், துயர் விளங்கும் இவ்வுலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுதெல்லாம் அழியாது தன் பெயர் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!


    9.தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும்
    நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன்
    வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப்
    பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.


    🏾திருமாலும், தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் நான்முகனும், தனது தாளையும் முடியையும் சிறிதே காணுதற் பொருட்டுப் பன்றியாயும் அன்னமாயும் தேடிச் செயலற, அண்ணா மலையாய் நிமிர்ந்தவனாய், என் உள்ளம் கவர்கள்வனாய் விளங்குபவன், ஒளி பொருந்திய நுதலையும் சிவந்த நிறத்தையும் உடைய மகளிர் முதலாக உலகோர் அனைவரும் துதிக்க விரும்புதலைச் செய்யும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!


    10.புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறிநில்லா
    ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
    மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயம்மிதுவென்னப்
    பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.


    🏾புண்ணியம் இன்மையால் புத்தர்களும் அறிவற்ற சமணர்களும் சைவத்தைப் புறங்கூறச் சான்றோர் வகுத்த நெறியில் நில்லாது, தமக்கு ஏற்புடையவாகத் தோன்றிய பிழைபட்ட கருத்துக்களைச் சொல்லித்திரிய, உலகனைத்தும் சென்று பலி தேர்ந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மதயானையை மருளுமாறு செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தது ஒரு மாயமான செயல் என்னுமாறு செய்து, பித்தனாய் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!


    திருச்சிற்றம்பலம்.
    To be continued
Working...
X